கார்ப்பரேட் அமைப்பின் கோர முகத்தின் ஒரு பகுதியை பெருசாலையோர உணவு விடுதிகள் காட்டத் தொடங்கியுள்ளன.
சாலையோரத்திலேயே ஊழியர்களை நிற்க வைத்திருக்கிறார்கள். அவர்களது வேலை அந்தப் பக்கமாக கடந்து போகும் வாகனங்களை அவர்களது கடைக்கு திருப்புவது. அவர்களது கைகளில் சிறு துணியோ அல்லது ஒரு கழியில் கட்டப்பட்ட துணியோ இருக்கும். அதை அசைத்து கடைக்கு அழைக்கிறார்கள்.
கடும் வெய்யில் மழை எதன் பொருட்டும் அவர்கள் தப்பிக்க இயலாது.
சில இடங்களில் அடுத்தடுத்து கடைகள் இருக்கும் அப்போது இவர்களிடையே கடும் போட்டி நிலவும். போட்டி போட்டுக்கொண்டு சாலைக்குள் வந்து அழைப்பார்கள்.
பெருசாலைகளில் வாகனங்களின் சராசரி வேகம் சுமார் 120 கிலோமீட்டர்.
அதுமாதிரி சாலைகளில் இவர்களின் இந்தப் பணியானது எவ்வளவு ஆபத்தானது என்பது புரியாதௌ அல்ல. இரவு வேளைகளில் இன்னும் பேராபத்தானது இவர்களது வேலை.
சாலைக்குள் வந்தவர்கள் குறித்த சிறு இடைவெளியில் ஓரத்திற்கு திரும்பிவிட வேண்டும். அப்படித் திரும்பும்போது கால்பிசகி விழுந்துவிட்டாலோ அல்லது அந்த நொடியில் ஓட்டுனர்கள் கொஞ்சம் அசந்துவிட்டாலோ அவ்வளவுதான்.
அடுத்தடுத்த கடைகளின் முதலாளிமார்கள் தங்கள் ஊழியர்களுக்கிடையேயான போட்டியை ரசிக்கிறார்கள். அவர்கள் தங்களது பொழுதுபோக்கு கிளபுகளில் இதுகுறித்து சிலாகிக்கக் கூடும். இவ்வளவு போட்டியோடு வியாபாரம் செய்தாலும் அவர்களுக்கிடையேயான சங்கம் அவர்களது பிரச்சினைக்காக முன் நிற்கும்.
முதலாளிகள் சங்கத்தின்மூலம் ஒன்றிணைவது சாத்தியப் படும் இங்கு தொழிலாளிகள் இணைவது சாத்தியப்படாது போகிறது. இது சாத்தியப் படக்கூடாது என்பதில் முதலாளிகள் கவனமாக இருக்கிறார்கள்.
இதுமாதிரி வேலையில் ஊழியர்களுக்கு ஏதேனும் நடந்தாலும் கடைகள் தொடர்ந்து இயங்கவே செய்யும்.
ஏதேனும் செய்ய வேண்டும்
முதலில் இது குறித்து மனம் திறந்து உரையாடுவோம்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்