மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் பெரம்பலூர் புத்தகத் திருவிழாவில் உரையாற்றும்போது வறட்சியின் அடையாளமாகவே பொதுவில் அறியப்படும் பெரம்பலூர் மாவட்டம் தொன்மக் குவியல்களின் தொகுப்பிடம் என்று குறிப்பிட்டேன். அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் பெரம்பலூர் மாவட்டத்தின் வரலாறு உள்ளது உள்ளபடி எழுதப்பட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக் கூறி அதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு அன்றைய மாவட்ட ஆட்சித் தலைவர் திரு தரேஷ் அகமது அவர்களிடம் கோரினேன். உரையாற்றிவிட்டு மேடையைவிட்டு இறங்கும்போது திரு தரேஷ் அவர்கள் என்னை நோக்கி கைகளை நீட்டியவாறே எழுந்து நின்றார். எப்போது வேண்டுமானாலும் தன்னை வந்து சந்திக்குமாறும் இதற்காக வேண்டிய அனைத்தையும் செய்து தருவதாகவும் கூறினார். என்னவோ தெரியவில்லை அவர் போகிற வரைக்கும் இதற்காக அவரை ஒருபோதும் சந்திக்க இயலாமலே போனது. நானும் அதுகுறித்து ஒரு சிறிய பதிவுகூட எழுதாமலே போனது.
தங்கள் ஊருக்கு அருகில் கடல் இருந்தாலே அது அவர்களது பெருமைக்குரிய விழுமியங்களுள் ஒன்றாகக் கொள்ளப்படும். அவர்களது ஊரிலே கடல் இருக்குமானால் சொல்லவே தேவையில்லை, நிச்சயமாய் அது அவர்களது பெருமைக்குரிய அடையாளம். ஆனால் எங்கள் ஊரே, இன்னும் சரியாக சொல்வதெனில் எங்கள் மாவட்டத்தின் பெரும்பகுதியே கடலாக இருந்திருக்கிறது. இதை எங்கள் மண்ணின் தொண்மையை வறட்டுத் தனமாக பதியும் ஆர்வக் கோளாறு அல்ல. எங்கள் மண்ணின் மூத்தகுடிகளில் யாரோ ஒருவர் இது குறித்து என்னிடம் கூறியிருந்தால்கூட நான் அதை இங்கு குறிப்பிடுமளவிற்கான தரவாகக் கொள்பவன் அல்ல.
இந்திய அரசிற்கு சொந்தமான ‘இந்திய புவியியல் இலாகா’ பெரம்பலூரில் உள்ள சாத்தனூர் கல்மரப் பூங்காவில் ஒரு பலகையை வைத்திருக்கிறது. அந்தப் பலகையிலிருந்து நம்மால் கீழே உள்ளவாறு நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது,
சாத்தனூருக்கு கிழக்கே 100 கிலோமீட்டர் தூரத்தில் தற்போது கடல் இருக்கிறது. 12 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் இது சாத்தனூருக்கும் மேற்கே 10 கிலோமீட்டர் தூரம் வரைக்கும் பரவிக் கிடந்தது. 12 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் ஏதோ ஒரு பொழுதில் இங்கிருந்து 100 கிலோமீட்டர் தொலைவிற்கு கடல் உள் வாங்கியது.
இந்தியப் புவியியல் துறை கூறுவதை சரியாகக் கணித்தால் ஏறத்தாழ பெரம்பலூர் வரைக்குமான இன்றையப் பூமிப் பரப்பு அப்போது கடலாக இருந்திருக்கிறது..
அதே பலகை கல்மரங்கள் எப்படித் தோன்றுகின்றன என்ற விவரத்தையும் தருகிறது.
கடலில் வாழும் உயிரனங்கள் இறந்து ஆறுகள் கொண்டுவரும் மணலில் புதைந்து இறுகி பிற்காலத்தில் கடல் உட்கொள்ளப்படும்போது கடல் பகுதிக்கு அருகில் நிலக்கரியாகவோ அல்லது நீர்த்த நிலையில் எண்னெயாகவோ கிடைக்கிறது. பலநேரங்களில் மரங்கள் ஆற்று வெள்ளத்தினால் அடித்து வரப்பட்டு கடலுக்கடியில் புதைந்து போய்விடுவதுண்டு. அவை இறுகி கல்மரங்களாவதும் உண்டு. சாத்தனூரில் இருக்கும் 18 மீட்டர் நீளமுள்ள கல்மரமும் இப்படியாகத் தோன்றியதுதான் என்றும் அந்தப் பலகையிலிருந்து நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.
18 மீட்டர் நீளமுள்ள கல்மரங்கள் என்பது உலகில் மிக அபூர்வமாகத்தான் உள்ளன என்றும் கலிஃபோர்னியா மற்றும் அமெரிக்கா போன்ற சில இடங்களில் மட்டுமே இதனையொத்த கல்மரங்களைக் காணமுடியும் என்றும் செய்திகள் கூறுகின்றன. அதுவும் உலகின் அனைத்துப் பகுதி கல்மர ஆராய்ச்சியாளர்களுக்கும் சாத்தனூர் கல்மரம் முக்கியமான ஒன்றாகத் தெரிகிறது.
இவ்வளவு தொண்மச் சிறப்பு மிக்க இந்தக் கல்மரத்தைக் காணவேண்டும் எனில் அதற்காக நாம் மிகவும் சிரமப் பட்டாக வேண்டும். அவ்வளவு மோசமான சாலை வசதி. வெளியூரிலிருந்து வருபவர்களுக்கான ஓய்விடம் ஒன்று கட்டப்பட்டு இன்னமும் திறக்கப்படாத நிலையில் அவர்கள் படும் துயரம் சொல்லொன்னாதது. குடிநீர் வசதி கழிவறை போன்றவை ஏதுமற்ற நிலையில் அந்தக் கல்மரமும் அநாதையாக அந்த இடத்தில் படுத்துக் கிடந்திருக்கிறது. சிறுவர்கள் அதன்மீது ஏறி விளையாடுவது ஆடு மாடுகள் அதன்மீது ஏறிப் போவது மூத்திரம் போவது சாணி போடுவது என்கிற நிலையில் இருந்த கல்மரம் திரு.ரமேஷ் கருப்பையா உள்ளிட்ட சில இளைஞர்களின் முயற்சியால் தற்போது சுற்று வேலியிட்டு பாதுகாக்கப் பட்டிருக்கிறது.
ஒரு காவலர் பணியிலிருக்கிறார். அவருக்கு அந்தப் பஞ்சாயத்து மூலம் மாதம் 4000 ரூபாய் சம்பளம் தரப்படுகிறது. அதுவே அந்தப் பஞ்சாயத்திற்கு அதிகப்படியான செலவுதான். ஒரு நல்ல விஷயம் என்னவெனில் அவர் கல்மரத்தைப் பார்க்க வருகிறவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியோடும் ஆர்வத்தோடும் அவர் அறிந்த தகவல்களை தருவதுதான். நாம் ஏதேனும் கல்மரத்தைப் பற்றிக் கூறினாலும் அக்கறையோடு கேட்டுக் கொள்கிறார். பிறகு புன்னகை கசிய, ‘அடுத்தாப்ல வரவங்களுக்கு சொல்ல உதவும்’ என்று அவர் சொல்லும் போது நமக்கு சிலிர்க்கிறது.
இதுமட்டும் பெரம்பலூரின் தொண்ம அடையாளம் அல்ல. பெரம்பலூர் அரியலூர் பகுதிகளில் டையனோசர் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. டையோனசர் முட்டைகள் இறுகிய நிலையில் ஏராளமாக கிடைத்திருக்கின்றன. அவை அருங்காட்சியங்களில் பாதுகாக்கப்பட்டும் வருகின்றன.
டையனோசர் வாழ்ந்தது நிறுவப்படுமானால் இங்கு வேறு என்ன வகையான விலங்குகள் வாழ்ந்தன என்பன பற்றியும் ஆய்வு விரியும். அது மட்டுமல்ல சென்ற ஆண்டு பெரம்பலூரின் வீடுகள் நிறைந்த பகுதியில் சிறுத்தைப் புலி ஒன்றின் நடமாட்டம் தென்படவே கூண்டு வைக்கப்பட்டு பிடிபட்டது. பக்கத்தில் காடுகளெதுவும் இல்லாத நிலையில் ஊருக்குள் சிறுத்தை வருகிறதென்றால் பக்கத்தில் உள்ள சிறுகாடுகளில் அவை இருக்கவும்கூடும் என்ற உண்மையை நாம் உள்வாங்க வேண்டும். அப்படி ஒரு ஆய்வு மேற்கொள்ளப்படுமானால் பெரம்பலூர் மாவட்டத்தில் இன்றைக்கும் சிருத்தைகள் உள்ளனவா என்பது நிறுவப்படும். அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு சரணாலயம் அமைவதற்கான வாய்ப்பும் இந்த பூமிக்கு கிடைக்கும்.
மட்டுமல்ல மனிதனின் தொன்மம் டையனோசரோடு தொடர்புடையது என்றும் கொள்ளப்படுகிறது. அது உண்மை எனில், பெரம்பலூர் பகுதியில் டையனோசர் வாழ்ந்தது நிறுவப்படுமானால் உலகின் ஆதிக்குடிமகன் வாழ்ந்த மண்ணும் எனது மண்ணாகும்.
வாலிகண்டபுரமருகில் ஒரு ஆங்கில ராணுவத் தளபதியின் சிறு குழந்தையின் கல்லறை ஒன்றினை அரும்பாவூரைச் சேர்ந்த தோழர் செல்வபாண்டியன் அவர்கள் கண்டறிந்திருக்கிறார். 1800 களின் முற்பகுதியில் கட்டப் பட்ட கல்லறை அது.
இன்றைய நிலையில் அந்தப் பகுதியில் ஆங்கில வம்சாவழியைச் சேர்ந்தவர்களோ அல்லது ஆங்க்லோ இந்தியர்களோ யாரும் இல்லாத சூழலில் ஒரு ஆங்கிலத் தளபதியின் குழந்தையின் கல்லறை அங்கு இருப்பதால் அந்த காலக் கட்டத்தில் அந்தப் பகுதியில் தற்காலிகமாக ஆங்கில ராணுவத்தினர் முகாமிட்டிருக்க வேண்டும். எனில், இந்த மண்ணில் ஒரு போர் நடந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
எங்கள் அடையாளங்களின் மற்றுமொரு விழுமியம் ரஞ்சன் குடிகோட்டை. ஒரு இஸ்லாமிய மன்னரால் கட்டப்பட்ட இந்தக் கோட்டை இஸ்லாமிய மன்னர்களின் மதசார்பின்மைக்கு ஆகச் சிறந்த சான்றாக விளங்குகிறது. ஒரு சிறிய குன்றின் மேல் அமைந்த இந்தக் கோட்டையில் நாம் ஏறத்தொடங்கும் போது ஒரு சிவலிங்கம் நம்மை வரவேற்கும் வலதுபுறமாகத் திரும்பினால் பெருமாள் கோயில், அது கடந்து கொஞ்சம் உள்ளே சென்றால் ஒரு மசூதி.
1972 ஆண்டு முதல் ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கும் மேல் அந்தக் கோட்டையில் காவலராகப் பணியாற்றிய திரு ஹசீம்பாய் அந்தக் கோட்டையைச் சுற்றி அகழ்வாராய்ச்சி செய்தால் நிறைய அறிய வரலாற்றுத் தகவல்கள் கிடைக்கும் என்கிறார். கோட்டையை சுற்றி தான் நிறைய செப்புக் காசுகளைக் கண்டெடுத்ததாகவும் அவற்றில் பெரும்பான்மையானவற்றை தனது அதிகாரிகளிம் கொடுத்து விட்டதாகவும் அவர் கூறியதாக 24.09.2014 அன்றைய ‘தி இந்து’ எழுதியுள்ளது.
தான் உயிரோடிருக்கும்போது அகழ்வாராய்ச்சி நடக்குமெனில் தன்னால் நிறைய ஒத்துழைக்க இயலும் என்றும் தன்னிடமுள்ள தகவல்களை தொல்லியல் துறை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறுவதாகவும் அதே நாளிதழ் கூறுகிறது.
இவ்வளவு தொண்மப் புராதனம் மிக்க பூமி எங்கள் பூமி. சோகம் என்னவெனில் எங்கள் மண்ணின் சிறப்பை முனைவர் பட்டத்திற்கு ஆராய்ச்சி செய்யும் எம் பிள்ளைகளில் பலரும் அறிந்திருக்கவில்லை என்பதுதான்.
நான் சாத்தனூர் கலமரப் பூங்காவிற்கு சென்றிருந்த அன்று வந்திருந்த குடும்பம் ஒன்று மிக ஆர்வமாக கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களது குழந்தை என்னோடு ஒட்டிக் கொண்டாள். இங்க சீ (கடல்) இருந்துச்சாமே என்றவளிடம் ஆம் என்றேன். அடுத்ததாக ’எதுவரைக்கும் இருந்துச்சு’ என்றாள். மேற்குப் புறமாக கைநீட்டி ’அதுவரைக்கும் ‘ என்றேன். அதுவே அவளுக்கு அது விஷயத்தில் போதுமானதாக இருந்தது. என் கை சுட்டிய திசையில் மலைகள் இருக்கவே ‘அப்ப இந்த மலை எல்லாம் கடல்ல இருந்துச்சா அங்கிள்’ என்றாள். “ ஆமாம்” என்றவுடன் , “அப்ப, இப்பவும் கடலுக்குள்ள மலையெல்லாம் இருக்குமா அங்கிள்” என்றாள்.
அய்யோ, அப்படியே மிரண்டுப் போய்விட்டேன். எந்த ஊரிலோ இருந்து வந்திருந்த குழந்தைக்கே இவ்வளவு ஆர்வம் வருகிறது என்றால், எங்கள் பிள்ளைகளுக்கு இதை சொல்லிக் கொடுத்தால் எப்படி இருக்கும்.
தன் மண்ணின் தொண்மை அறிந்தவனுக்கு மண்ணின்மீது பற்று ஏற்படும். அதைக் காக்கவும் மென் மேலும் கொண்டு செல்லவும் அக்கறை ஏற்படும். இத்தகையதொரு தொன்ம விழுமியங்களுக்கு சொந்தக்காரன் தான் என்பதை உணர்ந்து கொள்வான் எனில் அவனால் குறைந்த பட்சம் கீழ்மையானவனாக மாற முடியாது.
பெரம்பலூர் கல்வி நிலையங்கள் நிறைந்த பகுதி. இங்கிருக்கக் கூடிய பள்ளிக் குழந்தைகளுக்கு மாரல் இன்ஸ்ட்ரெக்ஷன் பிரிவேளைகளில் இந்த விழுமியங்களை கொடுத்தாலே போதும். அதற்கு இங்குள்ள ஆசிரியர்களுக்கு இவற்றைப் பற்றிய புரிதலை ஏற்படுத்த வேண்டும். இது விஷயத்தில் அக்கறையோடே இருக்கும் இன்றைய ஆட்சித் தலைவர் கல்வி அதிகாரிகளை இதில் கவனம் செலுத்தச் செய்தால் இது நூறு விழுக்காடு சாத்தியப் படும்.
கல்லூரிகளில் இதுகுறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். அதற்கேற்ப நிகழ்வுகளைத் திட்டமிட வேண்டும். NSS முகாம்களை இந்த இடங்களில் அமைக்க வேண்டும். இரண்டு மூன்று கல்லூரிகளிலிருந்து ஒரே நேரத்தில் இவற்ரிலொரு இடத்தில் முகாம் ஏற்பாடு செய்து இவைகுறித்த அறிஞர்களைக் கொண்டு மாணவர்களுக்கு இவற்றின் தொன்மை, விழுமியம் மட்டுமல்லாது இவற்றைப் பாதுகாப்பது எப்படி என்பதையும் கொண்டு சேர்க்க வேண்டும்.
கால்லூரி அளவிலும் பள்ளிகள் அல்ளவிலும் இவை குறித்த பேச்சுப் போட்டி மற்ரும் கட்டுரைப் போட்டிகளை நடத்தலாம்.
இவை போக இருக்கும் உள்ளூர் சேனல்களை இந்தத் திசையில் மடைமாற்றம் செய்யலாம்.
மாணவர்களிடம் சேர்த்துவிட்டால் போதும் மக்களிடம் அவர்கள் கொண்டு சேர்ப்பார்கள்.
நன்றி; நிலவளம் அக்டோபர் 2016
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்