Wednesday, August 21, 2013

குதிரைக்கு கொம்புதான் முளைத்திருக்கிறது”




தவறாகவேப் புரிந்து கொள்ளப்படும் பல விஷயங்களைப் போலவேசிறுவர் இலக்கியம்என்பதும் சிறுவர்களைப் பற்றி பேசும் இலக்கியம் என்றே தவறாகக் கொள்ளப்பட்டு விட்டதா என்கிற அச்சம் எனக்கிருக்கிறது.

 சிறுவர்களைப் பற்றிய இலக்கியங்கள் ஏராளம் குவிகின்றன. ஆனால் சிறுவர்களுக்கான எழுத்து என்பது இல்லை என்றே சொல்லுமளவு அருகித்தான் கிடக்கிறது.

ஆனால் இந்தக் குறையை நீக்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியிருக்கிறார்கள் தம்பிகள் விஷ்ணுபுரம் சரவணனும், உமாநாத் செல்வனும்.

வேண்டுமானால் பாருங்கள் இந்த இரண்டு பிள்ளைகளும் இந்தத் தளத்தில் பெரிதாய் வளர்ந்து வருவார்கள். அதை பார்க்காமல் செத்துவிடக் கூடாது. எம தர்மா கொஞ்சம் கருணை வையப்பா

என்பதாக ஒருமுறை முகநூல் நிலைத் தவலில் எழுதினேன். இதை எழுதிச் சரியாக 15 தினங்களுக்குள் உமாநாத் செல்வன் (விழியன்)  தனது குழந்தைகளுக்கான கதை நூல் ஒன்றிற்காக .மு... வின் விருதினைப் பெற்றார்.

மகிழ்ச்சியின் உச்சிக்கே போனேன். ஆனாலும் அந்தப் புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு இன்றுவரை கிடைக்கவில்லை. தோழர் மோகனா அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தபோது கொடுத்த புத்தகங்களுள் அவரது சமீபத்தியப் படைப்பான மாகடிகாரமும் இருந்தது.

ஒரே மூச்சில் வாசித்தாயிற்று.

இந்த உலகம் இயங்குவதற்கான காரணங்களாக அயிரமாயிரம் புனைவுகள் காலம் காலமாக எல்லா சமூகங்களிலும் சொல்லப்பட்டே வந்திருக்கின்றன. எழுத்து கண்டுபிடிக்கப் பட்டு ஆவணப் படுத்தும் முறை அறிமுகமானதும் இந்தப் புனைவுகளும் அச்சாக்கம் பெற்றன. இதில் எந்த மொழியும் விதி விலக்காய் இல்லை. எந்த மதமும் இதைச் செய்யத் தவறியதும் இல்லை.

புராணங்களும், இதிகாசங்களும் இத்தகையப் புனைவுகளை விஸ்தாரப் படுத்தியும் மெருகு கூட்டியும் வெகுமக்களிடம் கொண்டு சேர்த்ததோடு தாமும் தம் பங்கிற்கு சிலவற்றை விதைத்தே சென்றுள்ளன.

ஒரு கட்டம்வரை விஞ்ஞானத்தை வளரவிடாமல் தடுத்ததில் இவற்றின் பங்கு அதிகமாகவே இருந்தது.விஞ்ஞானம் வளர வளர இவற்றின் அழுத்தம் ஒரு பக்கம் குறைவதுபோல் தெரிந்தாலும் அதே விஞ்ஞான தொழில் நுட்பங்களே இவற்றை வெகுமக்களிடம் இன்னும் அதிகமாக கொண்டு சேர்த்தன. கடவுள் மறுப்புக் கொள்ககையை வீதி வீதியாய் பேசுபவர்களின் ஊடகங்களும் இத்தகைய புராணங்களை , இதிகாசங்களை மெகா தொடர்களாக ஒளிபரப்பத் தொடங்கின.

ஊர் ஊராய் எவற்றுக்கு எதிராக பரப்புரை செய்கிறார்களோ அவற்றையே தங்களது தொலைக் காட்சிகளில் ஒளி பரப்பினார்கள். அவர்களது பரப்புரைகளை இத்தகைய மெகாத் தொடர்கள் வெற்றி கொள்ளவே செய்தன.

விஞ்ஞானத்திற்கு எதிரான இத்தகைய விஷயங்கள், தவறிப் போய் கிடைக்கிற சொற்பமான சிறுவர் இலக்கியங்களில் ஏராளமாய் கிடக்கின்றன. தேவதைக் கதைகளாகட்டும், புராணங்களில் இருந்து குழந்தைகளுக்கு பரிமாறப் படுகிற கதைகளாகட்டும், அவை விஞ்ஞானத்திற்கு அருகில் குழந்தைகளை அண்டவிடாமல் பார்த்துக் கொண்டது மட்டுமல்ல, அந்தப் பிஞ்சுகளின் மனதில் விஞ்ஞானத்திற்கு எதிரான விஷ விதைகளையும் விதைத்தே போயின.

குழந்தைகளுக்கான நல்ல எழுத்தாளர்களுக்கான பஞ்சம் ஒரு புறம். அப்படியே தப்பித் தவறி எழுத யாரேனும் வந்தாலும் நல்ல பதிப்பகங்கள் அவர்களுக்கு வாய்ப்பது மிக அபூர்வம். இவை கடந்து நல்ல குழந்தை எழுத்தாளனும், நல்ல பதிப்பகமும் கை கோர்ப்பது குதிரைக்கு கொம்பு முளைப்பதுபோல்தான்.

மாகடிகாரம்என்ற அற்புதமான குழந்தை இலக்கியத்தோடு வந்திருக்கிற இளைஞனை பாரதி புத்தகாலயம் அரவணைத்திருப்பது இந்தத் தளத்தில் நல்ல விளைவுகளை நிச்சயமாய் கொண்டு வரும்.

தீமனது வகுப்பறையிலிருந்துதான் கதை தொடங்குகிறது. தீமன் காகிதத்தில் பறவைகளை உருவாக்குவதிலும் , அவற்றிலிருந்து பறவைகளின் ஒலியினைக் கொண்டு வருவதிலும் தேர்ந்தவன்.

அன்றைய வகுப்பிலும் அவன் அதை செய்து கொண்டிருக்கிறான். குழந்தைகள் மகிழ்ந்து சத்தமிட்டு கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைகிறார்.

காரணம் தெரிகிறது. “நீயெல்லாம் எங்கப் படிச்சு நல்ல மார்க் வாங்கி என்னப் பண்ணப் போறியோ?” என்று சொல்லி வீட்டுக்கு விறட்டி விடுகிறார்.

குழந்தைகளின் குதூகலத்தைக் கொண்டாடக்கூட வேண்டாம், ஒரு புன்னகையோடு ரசிக்கக் கூட வேண்டாம் குழந்தைகளின் குதூகலத்திற்கு எதிர்நிலையில் எப்படி ஒரு ஆசிரியரால் நிற்க முடியும்?

குழந்தைகளுக்கான ஒரு கதைதான். ஆனால் இத்தகைய வகுப்பறை அவலத்தை அது எள்ளலோடு கேள்வி கேட்கிறது.

ஆசிரியர்களும் அப்படி ஒன்றும் இறுக்கத்திற்குப் பிறந்தவர்கள் இல்லைதான். ஆனாலும் அவர்கள் என்னதான் விரும்பினாலும் புன்னகையோடு வகுப்புக்குள் நுழைந்து புன்னகையோடு வகுப்பைவிட்டு வெளியேற இயலாது.  இறுகி இறுகி கல்லாய்ப் போன கட்டமைப்பு அவர்களது புன்னகையைக் களவாண்டு போனது.

இயந்திரங்களாய் கல்லாய், மண்ணாய் பள்ளிக்குள் வரும் குழந்தைகளை மனிதனாய் மாற்றிய காலமெல்லாம் மலையேறிப் போனது. குழந்தைமையோடு வரும் பிள்ளைகளை இயந்திரமாக்க வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அப்போதுதான் மதிப்பெண் பெற முடியும். கல்வி நுகர்பொருளான இந்தக் காலத்தில் மதிப்பெண்களைக் குவிக்கவைத்தால்தான் முதலாளியின் கல்லா நிரம்பும்.

இதன் விளைவு முன்பெல்லாம் செருப்பை வெளியே கழட்டிப் போட்டுவிட்டு புன்னகையோடு குழந்தைகள் உள்ளே நுழைவார்கள். இப்போது புன்னகையைக் கழட்டி வெளியே வைத்துவிட்டு செருப்போடு உள்ளே போகிறார்கள்.

இவ்வளவையும் இந்த கதை பேசவில்லைதான். ஒரே ஒரு வாக்கியம்தான். ஆனால் படிக்கும் பெற்றோர்களை இவ்வளவையும் சிந்திக்க வைக்கிறது.

இவன் பள்ளியை விட்டு பள்ளி விடும் நேரத்திற்கு முன்பே கடைக்கு வந்துவிட்டதைப் பார்த்த அவனது தந்தையின் அணுகுமுறை இருக்கிறது பாருங்கள். அப்பாபா.

ஆசிரியர் விரட்டி விட்டிருக்கிறார் என்பது புரிந்த பின்பும் அது குறித்து அவனிடம் கண்டிக்கவோ, விசாரிக்கவோ இல்லை. வாடா, போய் கடைக்கு சரக்கு வாங்கி வரலாம் என்கிறார். இது மாதிரி சூழ்நிலைகளில் ஒரு தந்தை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அழகாய் ரசணையாய் பாடம் எடுக்கிறார் விழியன்.

தந்தைகளுக்கான இன்னொரு இடமும் இருக்கிறது.   ஏலகிரி மலையில் படகு சவாரி முடிந்த பின்பு தீமன் தனியாக போய்வர அனுமதி கேட்கிறான். தனியாகப் போனால்தான் கற்றுக் கொள்வான் என்பதால் அனுமதிக்கிறார் அவனது அப்பா. ஒரு தந்தை எப்படி இருக்கவேண்டும் தன் குழந்தையிடம் என்று சொல்லாமல் சொல்கிறார்.

தீமன் போகிறான். ஒரு விலங்கின் அழுகை சத்தம் கேட்கிறது. போகலாமா வேண்டாமா என்கிற அவனது அச்சத்தை, குழப்பத்தை அது என்ன என்று அறிந்து கொள்ளும் அவனது ஆவல் தூக்கி சாப்பிட்டுவிட்டது என்று எழுதுகிறார் விழியன். பொதுவாகவே எல்லாக் குழந்தைகளிடமும் இந்தக் குணம் இருக்கவே இருக்கும். இதை வளர்த்தெடுப்பதக்த்தான் கல்வி இருக்க வேண்டும் . ஆனால் அதற்கு நேரெதிர் திசையில் கல்வி பயணப்படும் போது அதனோடு வறட்டுத் தனமாக மோதிக்கொண்டிருக்காமால் அதற்கான ஒரு மாற்றை இந்தக் கதை வாசகனுக்குத் தருகிறது.

கொண்டாடப் படவேண்டிய குழந்தைகளின் குணம் இதற்கு அடுத்த பாராவிலேயே கிடைக்கிறது.

பயத்தோடு நின்றுகொண்டிருப்பவனின் கையை ஹெர்குலெஸ் பிடிக்கிறார். கேட்கிறார்,

தம்பி, உன் பேரென்ன?”

தீமன்” 

சொல்லிவிட்டு கொஞ்சமும் பிசிறாமல் கேட்கிறான்,

உங்கள் பெயர் என்ன?”

சொல்கிறார்,

ஹெர்குலஸ்

அடடா, அடடா என்னஒரு உரையாடல். ஒரு குழந்தையின் கேள்விக்கு மரியாதையோடு பதில் சொல்லும் தாத்தா.

அதன் பிறகு மாகடிகாரத்திற்கான சாவியை எடுப்பதற்கும் பிறகு மாகடிகாரம் நோக்கியும் அவனது பயனமானது குழந்தைகளை வேறொரு தளத்திற்கு கொண்டு செல்லும்.

வேறொன்றுமில்லை. மாகடிகாரம் இயங்கினால்தான் இந்த உலகம் இயங்கும். அது பழுதடைந்தால் ஏதோ விபரீதம் நடக்கும். அப்படி நிகழ்ந்ததுதான் டிசம்பர்  2004 ஆம் ஆண்டு சுனாமி என்று நம்புகிறார்கள். அந்த மாகடிகாரம்மடாகஸ் பொறுப்பில் இருக்கிறது. ஆனால் அவர் சாவி கொடுக்க முடியாது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஹெர்குலஸ்தான் வந்து சாவி கொடுக்கவேண்டும் . ஹெர்குலஸிற்கு வயதாகி விட்டதால் அவரது வாரிசாக தீமன் வருகிறான்.

எப்படி சாவி கொடுப்பது என்று மடாகச் சொல்லித் தருகிறார்.

நான் கதையை வாசிக்கத் தொடங்கியபோது என்ன நினைத்தேன் என்றால் நீர் மூழ்கிக் கப்பலில் பயணப்படும் போது அவன் சந்திக்கப் போகும் இடர்களையும் அதிலிருந்து அவன் மீள்வதையுமே இந்தக் கதை பேசும் என்றுதான். இல்லை. இந்த இடம் வந்த பிறகு சாவி கொடுக்கும் முன் அவன் ஏதோ பிரச்சினைகளை சந்தித்து சாகசங்களால் நிரப்புவான் என்று. ஏன் எனில் நாம் வாசித்த பெரும்பாலான குழந்தைக் கதைகள் அப்படித்தான் இருந்தன

ஓரிடத்தில் மாடகஸ் ஒரு தட்டைக் காட்டி நாளை இதில் சுத்தியலால் 112 முறை தட்டவேண்டும் என்று சொல்வார். ஏன் 112 தடவை என்று கேட்டபோது தனக்கு அப்படித்தான் சொல்லித்தரப் பட்டது என்று சொல்வார். மூடத்தனத்தி போகிற போக்கில், அவர் சாடாமல் ஒரு புன்னகையோடு வாசகனை அந்தக் காரியத்தை செய்யவைக்கிற யுக்தி விழியனுக்கு வசப்பட்டிருக்கிறது.

அடுத்த நாள் டிசம்பர் 21. அன்றுதான் உலகம் அழிந்துவிடும் என்று பெரும்பான்மை மக்களால் நம்பப்பட்டது.

நம் எதிர்பார்ப்பு அனைத்தையும் மீறி தீமன் கடிகாரத்தை செயல் இழக்கச் செய்கிறான். எல்லோரும் அழுகிறார்கள். இதன் பொருட்டே உலகம் நாளை அழிந்துவிடும் என்று அஞ்சுகிறார்கள்.

எதுவும் நடக்கவில்லை. நேற்றைப் போலவே, முந்தாநாளைப் போலவே அன்றும் வழக்கம் போல விடிந்தது.

மடாகஸ் குழம்புகிறார். கடிகாரம்தானே சூரியனை இயக்குவதாக நம்பினேன். அப்புறம் எது?

தீமன் சொல்கிறான் இதே கேள்வியை முன்னமே யாரேனும் கேட்டிருப்பின் இத்தனை ஆண்டுகால இந்த மனித உழைப்பு இந்தக் கடிகாரத்தின் பொருட்டு வீணாகியிருக்காதே.

பகுத்தறிவு வாதிகள் இதை மூடநம்பிக்கை மறுப்பு கதை என்று சொல்லக் கூடும்.

இடதுசாரிகள் மனித உழைப்பை வீணடிப்பதை கேள்வி கேட்கும் கதையாக இதைப் பார்க்கக் கூடும்.

ஆனால் இது பெற்றோர்களுக்கான செய்தியோடு கூடிய குழந்தைகளின் கதை.

நீர்மூழ்கிப் பயணத்தையும், தீமன் சாவி எடுக்கும் இடத்திலும், கடிகாரத்தினுள் தனியனாக தீமன் செல்லும் இடத்திலும் இன்னும் கொஞ்சம் நீட்டியிருந்தால் குழந்தைகள் இன்னும் குதூகலித்திருப்பார்கள் என்பதைத் தவிர இந்தக் கதையைப் பற்ரி சொல்வதெனில்,

அற்புதம்! அற்புதம்! அற்புதம்

சிறு பிள்ளைகளுக்கான பாடதிட்டத்தில் சேர்ப்பதற்கு எல்லாத் தகுதிகளும் கொண்ட நூல்.

ஏற்கனவே சொன்னதுதான்,

“நல்ல குழந்தை எழுத்தாளனும், நல்ல பதிப்பகமும் கை கோர்ப்பது குதிரைக்கு கொம்பு முளைப்பதுபோல்தான்.”

இந்தக் கதையை வாசித்ததும் தோன்றுகிறது,

“குதிரைக்கு கொம்புதான் முளைத்திருக்கிறது”

 நூலின் பெயர்: மாகடிகாரம்
ஆசிரியர்: விழியன் (உமாநாத் செல்வன்)
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
விலை: 30 ரூபாய்

நன்றி : மாற்று

7 comments:

  1. நல்லதொரு நூல் அறிமுகம்... நன்றி...

    இனி குழப்பமே இல்லை...! : http://dindiguldhanabalan.blogspot.com/2013/04/There-is-no-confusion.html

    ReplyDelete
  2. வாசிக்கத் தூண்டும் அறிமுகம். நன்றி தோழர்

    ReplyDelete
  3. விழியனின் விளிப்புணர்வுக் கதையை மிக அழகாக தாங்களுக்கு உரியப் பாணியில் மிக கவனமாகவும், ஆழமாகவும் அறிமுகம் செய்த பாங்கு மிக அழகு...குதிரைக்கு கொம்பு முளைத்தால்தான், இது போன்ற நூல்களை அரசு வாங்கும் அவல நிலை..."இக் குதிரைக்கு கொம்புதான் முளைத்திருக்கிறது " என்ற நூலுக்காவது "நூல்" பார்க்காது நூலகத் துறை கொள்முதல் செய்ய உங்கள் முகவுரை அறிவுறுத்தட்டும்..நன்றி தழர் அவர்களே...விழியனின் எழுத்துக்கள் தொடரட்டும்...

    ReplyDelete
  4. உங்கள் நூல் அறிமுகமே நிறைய சிந்திக்கவும் பேசவும் வைக்கிறது.பகிர ஏராளம் உண்டு.

    நீயெல்லாம் எங்கப் படிச்சு நல்ல மார்க் வாங்கி என்னப்பண்ணப் போறியோ?” இப்படிபட்ட சூழ்ல்கள் குழந்தைகளின் மனதில் அவநம்பிக்கை விதைக்கின்றன.

    70களின் இறுதியில் கற்றலை துவங்கிய என்போன்றோருக்கு, நீ படிச்சாலும் படிக்காவிட்டாலும் என் சம்பளம் ஒன்னும் குறைந்திடாது .எக்கேடும் கெட்டுப்போ என தன் மாணவனை எப்படியேனும் பண்புள்ள படிப்பாளியாக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் தன் பணியை ஒரு வேலைவாய்ப்பாக மட்டுமே கருதி கடமையாற்றும் ஆசிரியர்களை கடந்து சென்ற வாய்ப்பமைந்திருக்கும். இன்று அது இன்னும் அதிகரித்திருக்கிறது. ஆனாலும் ஆசிரியர்களின் மேன்மையை புனிதத்தை காப்பற்றுவதற்காகவே கடவுளால் அனுப்பட்டவர்களும் இன்னும் மிச்சமிருகிறார்கள்.

    மட்டுமல்ல ப்ளு பிரிண்ட்டை மட்டுமே படித்து 98 சதம் மதிப்பெண் பெற்றால் போதும் என ஈந்து பெரிதுவக்கும் பெற்றோர்.

    முன்பெல்லாம் தெருகூத்திலும்,நாடகத்திலும் பின் திரையிலும் குழந்தைகளிடமும் வளர்ந்தவர்களிடமும் திணித்த மூடநம்பிக்கையை இன்று கார்ட்டுன் .போகோ தொலைகாட்சிகள் குழந்தைகளிடம் திணிப்பதையே தொழிலாக கொண்டுள்ளன. போதாகுறைக்கு பகுத்தறிவுவாதிகளின் சின்ன திரையில் புராண தொடர்கள்.

    உழைப்பு சுரண்டலுக்கு பலியாக்கப்படும் குழந்தைகள். என பல தரப்பட்ட செய்திகளை முன் வைத்த விதம் விவாதிக்கவும் உருபடியாக ஏதேனும் செய்யவும் தூண்டுகிறது.

    குழந்தைகளுக்கான இலக்கியத்தில் இப்படியொரு மாற்றம் இன்னொரு தளத்திற்கு நம்மை பயணிக்க செய்கிறது. இந்நூலை வாசிக்கும் குழந்தையின் சிந்தணையை நேரிய வழியில் மடைமாற்றம் செய்ய இந்நூலோடு உங்களை போன்ற வளர்ந்தவர்களின் வழிகாட்டலும் தேவைபடும் எனபது உறுதி.

    பாட புத்தகத்தையும் தாண்டி குழந்தைகள் வாசிக்கவும் அவர்களுக்கு வழிகாட்டவும், சிந்தணையை தூண்டும் கருத்துபகிர்வுகளுக்கான தளத்தை உருவாக்கவும் வேண்டிய கடமை ஆசிரியர்களையும் தாண்டி சமூக மாற்றத்திற்கு உழைக்கும் அனைவருக்கும் உள்ளது எனற எண்ணத்தை உருவாக்கி உள்ளது .

    இன்னும் வரவேண்டும் இது போன்ற குழந்தைகளுக்கான இலக்கியங்களும், சிந்தனையை தூண்டும் உங்களுடைய அறிமுகங்களும்.இன்னும் வளர வேண்டும் நூல் ஆசிரியர்கள் விஷ்ணுபுரம் சரவணனும், உமாநாத்செல்வனும்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் அருமையான கருத்துகள். மகிழ்ச்சியாயிருந்தது . மிக்க நன்றி தோழர்

      Delete
  5. மாகடிகாரம் என்ற மகத்தான நூலை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.. குழந்தை இலக்கியமாக மட்டுமல்ல இது பெரியவர்களுக்கான கருத்துகளையும் தாங்கியே உள்ளது.. புத்தக ஆசிரியருக்கு பாராட்டுகள். அறிமுகப்படுத்தியவருக்கு நன்றி...இது போன்ற அறிமுகப்படுத்தல்கள் வாசிப்பை நேசிப்பானதாக மாற்றும் என்பதில் ஐயமில்லை. மாகடிகாரம் என்ற குழந்தையை கையில் ஏந்தும் ஆவலை ஏற்படுத்தியுள்ளீர்கள்.. தங்கள் பணி சிறக்கட்டும்- வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நிலா தமிழன்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...