Saturday, August 10, 2013

புதியவன்


பொதுவாக நாம் இரண்டு வகையான குழுக்களிடம் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். தமிழ் போயிருக்க வேண்டிய உசரத்திற்கு கொஞ்சம் தள்ளியே இருப்பதற்கு இவர்கள்தான் காரணம்.

தமிழில் எதுவுமே இல்லை. தமிழை வைத்துக் கொண்டு பத்துப் பாத்திரம் வேண்டுமானால் கழுவலாம்என்று வெறி பிடித்து அலறும் அந்தத் திமிர், இந்தத் திமிர் என்று எல்லா வகைத் திமிர்களையும் கொட்டி நெய் விட்டுப் பிசைந்து தயாரிக்கப் பட்ட மேட்டுக் குடிகள் ஒருபுறம்.

இவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல இரண்டாவது வகையினர். இவர்களைப் பொறுத்த வரைக்கும் , “ தமிழில் எல்லாம் இருக்கிறது. புதிதாய்த் தேவையே இல்லைஎன்று வறட்டுத் தனமாக கத்திக் கொண்டிருக்கும் சில புலமைத் தமிழர்கள்.

எதிரிகளைவிட மோசமானவர்கள் இவர்கள்.

ஏராளம் இருக்கிறது. ஆனால் இன்னும் தேவையும் இருக்கிறது என்ற புரிதலோடும் தாகத்தோடும் எழுதக்கூடிய, பேசக்கூடிய ஒரு எழுத்தாளரின் வலை “ புதியவன் பக்கம்.” ஷாஜஹான் அவர்களது வலை. இணையத்தில் இயங்கும் தமிழர்களுக்கு நன்கு அறிமுகம் இவர்.

21.07.2013 அன்று தில்லி தமிழ்ச் சங்கத்தில் நடந்த ” தமிழ் இலக்கியத்தில் அறிவியல்” என்கிற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் தான் பேசியதை அதே தலைப்பில் தனது வலையில் வைத்திருக்கிறார். அந்த ஒரு பதிவிற்காகவே இவரது வலையை அறிமுகம் செய்யலாம்.

” நீரின்றமையாது உலகெனின் யார் யார்க்கும்
வானின் றமையாது ஒழுகு” 

என்ற குறளை சொல்லிவிட்டு, நீரின்றிப்போனால் யாராலும் வாழ இயலாது என்பதையும் மழையற்றுப் போனால் நீரற்றுப் போகும் என்ற அறிவியல் உண்மைகள் 2000 ஆண்டுகளுக்கு முன்னமே தமிழிலக்கியத்தில்   
பதியப்பட்டிருப்பதை சரியாகவே இவரது வலை பகிர்கிறது. மட்டுமல்ல “water is the matrix of life" என்ற இதற்கு நிகரான ஆங்கில கருத்து நிச்சயமாய் தமிழுக்குப் பிந்தியதே என்பதையும் இவரது வலையில் பார்க்கிறபோது தமிழனாய் சிலிர்க்க நேர்வதைத் தவிர்க்க இயலாது.

“ மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி யுலகிற் கவனளி போல்
மேல்நின்று தான் சுரத்த லான்”

என்ற இளங்கோ அடிகளின் வரிகளும் கூட வேண்டிய அளவு கவனிக்கப் படாத தமிழ் இலக்கியத்தின் அறிவியல் பதிவுகளே ஆகும்.  

நமக்கு தொல்காப்பியர் மீது சாதி சார்ந்தும் வடமொழி சார்ந்தும் அவர் இயங்கினார் என்று கருத இடமிருக்கும் காரணத்தால் விமர்சனம் உண்டு. 

“ ஈ என் கிளவி இழிந்தோன் கூற்றே
தா என் கிளவி ஒப்போன் கூற்றே
கொடு என் கிளவி உயர்ந்தோன் கூற்றே” என்று ஒவ்வொரு படிநிலக்கும் ஒவ்வொரு சொல்லை வைத்ததில் அந்தப் படிநிலைகள் சாதியப் படிநிலைகளோடே ஒத்துப் போவதாலும்,

” இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே” 

திசைச்சொல் என்று சொன்னபிறகு வடசொல் என்பதற்கு என்ன தேவை இருக்கிறது என்பதாலும் நமக்கு அவர்மீது விமர்சனம் உண்டு. அவை யாவும் கடந்து ”மொழி அறிவியல்” தமிழில் மிகச் சிறப்பாக இருப்பதை தொல்காப்பியர் சொல்லியுள்ளதை இந்த வலை சொல்லும் போது தொல்காப்பியரை அதற்காக நினைக்கவே தோன்றுகிறது. “ மொழி அறிவியல்” என்பதைவிட “ ஒலி அறிவியல்” என்பது சரியாக இருக்குமோ என்று தோன்றுகிறது.

ஆங்கிலத்தில் 44 ஒலிகளை 26 எழுத்துக்களைக் கொண்டே பயன்படுத்த வேண்டி இருக்கும் போது தமிழில் எல்லா ஒலிகளுக்கும் எழுத்துக்கள் இருக்கும் உயர்வை ஷாஜஹான் அழகாக சொல்கிறார்.

மிகைப்படுத்தல்களைத் தவிர்த்து, இலக்கியத்தில் இருக்கிற ஆதாரபூர்வமான தகவல்களிலிருந்து தமிழரின் அறிவியல் சாதனைகளை ஆராய வேண்டும். தமிழில் அறிவியல் சொற்களை உருவாக்க வேண்டும். தரப்படுத்த வேண்டும், அவற்றைப் பரப்ப வேண்டும், பரவலாகப் பயன்படுத்த வைக்க வேண்டும்.” என்று மிகச் சரியாய் சொல்கிறது இந்தப் பதிவு.

" off side " என்ற ஈரானியப் படம் பற்றிய விமர்சனம் அதைக் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. ஈரானில் கால்பந்தாட்டம் பிரபலமானது. இரானிய இளைஞர்களுக்கு கால்பந்தாட்டத்தில் வெறியே உண்டு. இரானிய யுவதிகளுக்கும் அப்படியேதான் என்பதையும். அவர்கள் அதைப் பார்க்கக் கூடாது என்பதால் ஆண் வேடமணிந்து மைதானத்திற்குள் நுழைவதையும், காவலரிடம் மாட்டிக் கொள்வதையும் இறுதியில் வெற்றிக் கொண்டாட்டத்தில் காவலர்களும் திளைத்துக் கொண்டிருக்கும்போது அவர்கள் நழுவித் தப்பிப்பதையும் விமர்சிக்கும் போது காட்சிகள் அப்படியே கண்முன் வந்து போகின்றன.

எந்த வகையிலான ஆணாதிக்கக் கொடுமைகளையும் ஏதோ ஒரு புள்ளியில் ஏதோ ஒரு வடிவத்தில் அந்தந்த மண்ணின் பெண்கள் சாய்த்துப் போடவே செய்வார்கள் என்பதற்கான ஈரானிய செல்லுலாய்ட் சாட்சியம்தான் இந்தத் திரைப்படம்.

“ உளவையும் களவையும் நிந்தனை செய்வோம்” என்று ஒரு பதிவு. அவசியம் படிக்க வேண்டும்.

எல்லோரது இணைய தளங்களையும் அமெரிக்கா உளவு பார்ப்பதை எல்லோரும் கடுமையாக சாடிக் கொண்டிருந்த போது அதை அப்படியே ஏற்றுக் கொண்ட அதே வேளையில் இந்தியக் குடிகளையே இந்திய உளவுத்துறை வறுத்தெடுத்ததை இவர் அழகாகப் பதிகிறார்.

ராஜீவ் கொலை செய்யப் பட்டபோது இவர் கண்காணிக்கப் பட்டதை சிரிக்க சிரிக்கப் பதிந்திருக்கிறார்.

பாபர் மசூதிப் பிரச்சினை உச்சத்தில் இருந்த போதும் இவர் இவரது பெயரினிமித்தம் இவர் கண்காணிக்கப் பட்ட தகவல்களும் சுவையாக இந்த வலையில் இருக்கின்றன.

தமிழை இணையத்தின் வழி அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தப் போகும் வலைகளுள் “ புதியவன் பக்கமும்” ஒன்று”

பாருங்கள்,

http://pudhiavan.blogspot.in/

நன்றி : புதிய தரிசனம்


15 comments:

 1. மிகைப்படுத்தல்களைத் தவிர்த்து, இலக்கியத்தில் இருக்கிற ஆதாரபூர்வமான தகவல்களிலிருந்து தமிழரின் அறிவியல் சாதனைகளை ஆராய வேண்டும். தமிழில் அறிவியல் சொற்களை உருவாக்க வேண்டும். தரப்படுத்த வேண்டும், அவற்றைப் பரப்ப வேண்டும், பரவலாகப் பயன்படுத்த வைக்க வேண்டும்.” என்று மிகச் சரியாய் சொல்கிறது இந்தப் பதிவு.

  # முதலில் நாம் நம் இளம்தலைமுறையினருக்கு தமிழை மதிக்க கற்றுக்கொடுக்கணும் சார் !
  "கொஞ்சம் நுனி நாக்கில் இங்கிலிஷ் பேசினாலே ஒரு ரிச் லுக் வந்திடும்" என்கிற சினிமாத்தனத்திலிருந்து
  வெளியே கொண்டுவரணும்

  ReplyDelete
  Replies
  1. மிகச் சரியாகவும் நச்சென்றும் சொன்னீர்கள் அய்யா. மிக்க நன்றி

   Delete
 2. நண்பர் ஷாஜஹான் எதை எந்த முறையில் வெளிப்படுத்தவேண்டுமோ அதை அந்த முறையில் வெளிப்படுத்தும் திறனும் பயிற்சியும் பெற்றவர்! பூக்கடைக்கு விளம்பரம் வேண்டியதில்லை என்பதுபோல அவருடைய எழுத்தையும் கருத்தையும் செதுக்க வேண்டிய வேலையை அதிகமாக விமர்சகர்களுக்குக் கொடுக்க மாட்டார்! அதனால் அவர்பற்றிய உங்கள் கருத்துக்களில் மணம் மட்டும் வீசுவது தவிர்க்கமுடியாததே!

  ReplyDelete
  Replies
  1. தோழர் ஷாஜஹானைப் பற்றிய உங்களது அபிப்பிராயத்தோடு நூறு விழுக்காடு ஒத்துப் போகிறேன். மிக்க நன்றி தோழர்.

   Delete
 3. அந்தத் திமிர், இந்தத் திமிர் என்று எல்லா வகைத் திமிர்களையும் கொட்டி நெய் விட்டுப் பிசைந்து தயாரிக்கப் பட்ட மேட்டுக் குடிகள் ஒருபுறம்.// இந்த வரிகளை வாசிக்கும் போது சில ஆண்டுகளுக்கு முன்னர் அண்ணல் அம்பேத்கரின் "Annihilation of caste" கட்டுரையின் தமிழாக்கமான “சாதியை ஒழிக்கும் வழி என்ன” கட்டுரையில் வாசித்த சில பகுதிகள் நினைவிற்கு வருகிறது. அந்த கட்டுரையில் தலீத்கள் உணவில் நெய் ஊற்றி சாப்பிட்டதற்காக சாதி இந்துகளால் “நெய் ஊற்றி சாப்பிடும் அளவிற்கு திமிர் ஏறிவிட்டதா” என கூறி தாக்கப்பட்டது பதியப்பட்டுள்ளது. தமிழ் மொழியை ஏளனப்படுத்திவரும் மேட்டுக்குடி திமிரை நெய்விட்டு பிசைந்தது என்று பதிந்துள்ளது நாகரீமான நறுக். அதே போல் தொல்காப்பியரின் மேல் விமர்சனம் இருப்பினும் தமிழ் மொழியின் சிறப்பு பற்றிய அவர்தம் கூற்றை ஏற்றல் சிறப்பு. ஆணாதிக்கம் அதற்கு அறைகூவல் விடுக்கும் பெண்ணிய செயல்பாடுகள்.உளவையும் ,களவையும் தன் தனி உரிமையாகக் கொண்ட அரசுகளின் முன் பாவம் அதன் குடிமக்கள் என கட்டுரை முழுவதும் அடக்குமுறைக்கும்,ஒடுக்குதலுக்கும் எதிரான முற்போக்கு கருத்துக்களை முன்வைக்கிற அறிமுக பதிவு. இணைய தமிழ்க்கு இன்னொரு வளர்ச்சியூக்கியை அறிமுகப்படுத்திய பாங்கு அருமை.

  ReplyDelete
  Replies
  1. என் மனதுக்கு மிகவும் பிடித்த பின்னூட்டமாக அமைந்தது தோழர் இது. மிக்க நன்றி

   Delete
 4. உங்கள் அறிமுகம் அந்த வலைப்பக்கத்தின் மீது ஆவலை ஏற்படுத்துகிறது.. அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி ...

  ReplyDelete
 5. பகிர்விற்கு நன்றி ... சக பதிவரின் சிறப்புகளை அழகாக பட்டியலிட்டுள்ளீர்கள்... தமிழுக்கு புதியவனின் பங்களிப்பை இந்த புதியவனுக்கு அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள் பல ...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழர்

   Delete
 6. மிகைபடுத்தப்படாத அறிமுகம்...

  ReplyDelete
 7. இணைந்துவிட்டேன் அவர் வலைப்பூவில்.... நன்றி தோழர்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி கார்த்திகேயன் தோழர்

   Delete
 8. நானும்தான் எட்வின். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. அய்யோ அண்ணா. ஒரே ஆச்சரியம். மிக்க நன்றி.

   Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

Labels