Thursday, April 21, 2011

அதை நாங்கள் சரியாய் செய்வோம்.







சமீபத்தில் மிகவும் பரபரப்பாகப் பேசப் பட்டவர்கள் இரண்டு பேர். அதில்
ஒருவர் இந்த உலகமே இதுவரை நினைத்தும் பார்த்திராத அளவில் 
நடைபெற்ற ஒரு ஊழலோடு சம்பந்தப் பட்ட முன்னாள் அமைச்சர் 
ராசா அவர்கள். இன்னொருவர் ஊழலை உண்ணாவிரதமிருந்து 
கேள்வி கேட்ட அன்னா ஹசாரே.  ஊடகங்கள் ஊதிப் 
பெரிதுபடுத்துவதாக கலைஞர் திரும்பத் திரும்பச் சொன்னாலும் 
ராசா விசயத்தில் அவை முடிந்த வரை மூடிப் பாதுகாக்கவே 
முயற்சித்தன என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஹசாரே 
விசயத்தில் ஊடகங்கள் ஆன மட்டும் ஊதிப் பெரிதாக்கவே செய்தன. 
அதன் தாக்கமாக ஹசாரே மிகப் பெரிய கதாநாயகராகக் கட்டமைக்கப் 
பட்டார். இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளிலும் ஹசாரேவிற்கு 
கவிதைகள் இயற்றப்பட்டன, பல மொழிகளில் அவரை வாழ்த்தி 
பாடல்கள் தோன்றின, படைப்பாளிகள் அனைத்து வடிவங்களிலும் 
அவரை வாழ்த்தியும் ஆதரித்தும் படைப்புகளத் தந்தனர், இயங்கும் 
பெரும்பான்மையான வலை தளங்கள் ஹசாரேவுக்கு ஆதரவாகப் 
பிரச்சாரம் செய்தன. இளைஞர்களும் யுவதிகளும் போட்டிப் 
போட்டுக் கொண்டு அவர் குறித்த குறுஞ்செய்திகளைப் 
பரிமாறினார்கள்.   இந்த இடைப் பட்ட காலத்தில் ஏதேனும் 
குழந்தைகளுக்கு அவரது பெயர் சூட்டப் பட்டதா என்று உறுதியாகத் 
தெரியவில்லை. ஆனால் அதற்கு வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன.

மிகுந்த சிரமம் எடுத்து இயல்பாகவே நடந்ததுபோல காட்டிக்கொள்ளப் 

பட்டாலும் படு செயற்கையாக இவரை இப்படி வலிந்து கட்டிக் 
கொண்டு தூக்கிப் பிடிக்க வேண்டிய அவசியமென்ன?. அவசர 
அவசரமாக அறக்கட்டளைகள் , அவசர அவசரமாக நிதிக் 
குவிப்பு அதைவிட அவசரமாக அவரைப் பற்றி பொது மக்களுக்கு 
எடுத்துச் சொல்லவே இந்தப் பணம் பயன்படும் என்பது மாதிரியான 
அறிவிப்பு,  குவிந்த பணமும் கொட்டிய மனிதர்களும் இதற்குப் 
பின்னால் ஏதோ அரசியல் இருக்கக் கூடும் என்றே சொல்கின்றன.

யார் இந்த ஹசாரே? என்பது குறித்து நாம் அதிக அக்கறை காட்டப் 

போவதில்லை. இவ்வளவு பரபரப்பாகப் பேசப்பட இவர் 
செய்ததுதான் என்ன?



இதை இதற்கு முன்னால் யாருமே செய்தது இல்லையா? ஏற்கனவே 
யாரேனும் இதற்கான உழைப்பைத் தந்திருக்கிறார்கள் என்றால் 
இளைஞர்களும் கிழவர்களும், யுவதிகளும், கிழவிகளும் சில 
அரசியல் வாதிகளும் ,அரசு அலுவலர்களும் ஆசிரியர்களும் 
ஒருவரை ஒருவர் முந்தித் தள்ளிக் கொண்டும், சுவற்றில்
முட்டிக் கொண்டும் உணர்ச்சிக் கொந்தளிக்க அவரைக் 

கொண்டாடுவதேன்? ஜனத்திரளின் உணர்ச்சிகளைக் 
கொந்தளிக்கச் செய்து அவர்களை ஹசாரேவை நோக்கித்
தள்ளுவதற்கு ஊடகங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிக்கும் 

உழைப்பிற்கும் பின்னால் இருக்கக் கூடிய அவசியமும் 
அரசியலும் என்ன?

ஹசாரேவின் சொந்த வாழ்க்கைக் குறித்து மாதவராஜின் பதிவில் 

இருப்பதைத் தவிரக் கூடுதலாய் ஒரு ஐந்து வார்த்தைகள் 
அளவுக்குக் கூடத் தெரியாது. அதுத் தேவையுமில்லை. ஹசாரே 
என்ன செய்தார்? ”தீராத பக்கங்களிலும்” மற்ற செய்தி 
ஊடகங்களிலுமிருந்து நான் தெரிந்து கொண்டவகையில்
 லோக்பால் வரைவுக் குழுவில் பொது சேவகர்களையும் சேர்க்க 
வேண்டும் என்பதே இவரது கோரிக்கை. இது நிராகரிக்கப் படவே 
உண்ணாவிரதத்திற்கு பந்தல் போட்டு விட்டார். எனக்குத் தெரிய 
அன்னா ஹசாரே செய்தது இவ்வளவுதான். இது அவரது உரிமை.
எங்கள் ஊருக்குப் பக்கத்தில் அவர் பந்தல் போட்டிருந்தால் ஒருக்கால்
நானும் கூட சென்று வாழ்த்திவிட்டு வந்திருக்கக் கூடும். லோக் பால்
வேண்டும் என்றுகூட அவர் என்றைக்கும் போராடியதாகத் 

தெரியவில்லை. லோக்பால் வரைவுக் குழுவில் பிரதிநிதித்துவம் 
கேட்ட அளவில் மட்டுமே அவரது போராட்டம்.

அவருக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து பயந்துபோன மத்திய அரசு 

அவரது பெயரையும் கபில் சிபில், நம்ம ப.சிதம்பரம், பிரணாப் முகர்ஜி 
போன்ற ஊழல் எதிர்ப்பாளர்களை உள்ளடக்கிய குழுவில் இவரையும் 
இணைக்கிறது.  பழரசம் குடித்து போரை முடித்துக் கொள்கிறார்.  
இதைவிட நகைச்சுவை என்னவெனில்அடுத்தநாள் 
வரைவறிக்கையை நாடாளுமன்றம் நிராகரிக்கும் என்றால் அதை 
நான் ஏற்பேன். இதில் இறுதி முடிவெடுக்க வேண்டிய இடம் அதுதான் 
என்பதை தான் உணர்ந்தே இருப்பதாக சொல்கிறார்.

இதில் நாமென்ன சொல்ல இருக்கிறது? ஒரே கேள்விதான், இதற்கு ஏன் 

இத்தனை ஆர்ப்பாட்டம்?

உண்ணாவிரதம் இருந்த போது வசூலானத் தொகை ஏறத்தாழ 

தொண்ணூறு லட்சத்தைத் தாண்டும் என்றும் அதில் ஜிண்டால் 
மட்டும் இருபத்தி ஐந்து லட்சம் வழங்கியுள்ளதாகவும், பந்தல் 
செலவுக்கு பத்து லட்சம் வரை செலவானது என்றும் மீதித் 
தொகயைக் கொண்டு மேலும் நிதி வளர்த்து அது கொண்டு 
ஹசாரேவை மக்களிடம் கொண்டு செல்லும் 
எண்ணத்தோடு செயல் படுவதாகவும் மாதவராஜின் 
பதிவிற்கு பின்னூட்டமிட்ட காஸ்யபன் சொல்கிறார்.

 நாடாளுமன்றம் நிராகரித்தால் அதை தான் ஏற்பதாக 

சொன்னவரை, ஊழலை வாய்ப்புக் கிடைத்த 
போதெல்லாம் கொண்டாடியவர்களோடு இணைந்து 
ஊழலுக்கெதிராக செயல் பட சம்மதித்த ஒருவரை 
இப்படி வம்படித்து மல்லு கட்டிக் கொண்டு பெரிய
போராளியாய் சித்தரிக்க வேண்டிய அவசியம் 

ஊடகங்களுக்கு ஏன் வந்தது?

லோக்பால் வரைவு கமிட்டியில் இடம் கேட்டல்ல , 

லோக்பால் மசோதாவைக் கொண்டுவருவதற்காக 
பல ஆண்டுகளாகப் போராடி வரும் இடது சாரிகளை 
நீங்கள் கண்டு கொள்ளாமல் போனதற்கு என்ன 
காரணம்?

அதைக் கூட விடுங்கள், இடது சாரிகள் செய்வதை 

சொல்லிவிட்டால் அமெரிக்கா பணப்பையை இறுக்கி 
மூடிக் கொள்ளும், இன்னும் சில வெறுப்புகளையும்
இழப்புகளையும் சம்பாரிக்க வேண்டும் என்று நீங்கள் 

அச்சப் படுவதில் கூட ஒரு நியாயம் இருக்கிறது.







சகாயம் மாதிரி ,சங்கீதா மாதிரி ஊழலுக்கெதிராய்ப் போராடிக் கொண்டிருக்கும்
அதிகாரிகளை நீங்கள் ஏன் கொண்டாடவில்லை?

கூறியது கூறல் குற்றமென்பார்கள். திரும்பத் திரும்ப, சலிக்க சலிக்க, 

அருவருப்பாய் தோன்றுமளவுக்கு நீங்கள் எல்லோரும் ஹசாரேயை 
கொண்டாடியதால் நான் ஒரே ஒருமுறை  இதை சொல்வது நியாயம் 
என்றே படுகிறது. மகளுக்கு உடல் நலம் மோசமாகிறது. உடனே 
அவளை மருத்துவமனையில் சேர்க்க சொல்கிறார்கள். அந்தக் 
குழந்தையின் தந்தையிடம் பணம் இல்லை. ஒரு நண்பரிடம் கடன் 
பெற்று மகளை மருத்துவ மனையில் சேர்க்கிறார். சம்பளம் வந்ததும் 
அந்தக் கடனைத் திருப்பி விடுகிறார். இவ்வளவு நேர்மையான அதிகாரி 
கிடைப்பது எவ்வளவு அரிது.

இவர் யார் என்பது தெரியும் உங்களுக்கு. தெரிந்தும் அந்தக் 

குழந்தையின் தந்தையும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவருமான 
சகாயம் அவர்களை ஏன் நீங்கள் கண்டு கொள்ளவே இல்லை.





பின்னிரவில் , தன்னந்தனியாக சென்று வாக்களர்களுக்கு கொடுப்பதற்காக
வைக்கப் பட்டிருந்த ஐந்தேகால் கோடி ரூபாயை , அது பெரிய இடத்துப் 
பணம் ,கை வைப்பதால் மோசமான பின் விளைவுகளை சந்திக்க 
வேண்டி வரும் என்று தெரிந்திருந்தும் அதைக் கைப் பற்றி நடவடிக்கை 
எடுத்த சங்கீதா என்ற இளம் அதிகாரியை நீங்கள் ஏன் 
கண்டுகொள்ளவில்லை?

இதற்கெல்லாம் காரணம் என்னவென்று மண்டையைப் போட்டுக் 

குடைந்துகொண்டிருந்த போது ஹசாரே, தான் குஜராத் முதல்வர் 
மோடியை பெரிதும் சிலாகித்து மதிப்பதாகக் கூறினார். அப்பாடா,  
நம்மருகே இருக்கும் சகாயத்தை, சங்கீதாவைக் கொண்டாடாத 
நீங்கள் ஹசாரேவை ஏன் கொண்டாடுகிறீர்கள் என்று புரிந்து 
போனது.

உடைத்தே ஆக வேண்டும் என்று நாங்கள் போராடிக் 

கொண்டிருக்கும் ஜாதியைக கவ்விப் பிடித்து பாதுகாக்கும் 
மதத்தை வெறியோடு கைக்கொண்டு அலையும் ஒரு மனிதரை 
சிலாகிக்கும் ஒருவரை நீங்கள் மக்களிடத்திலே கொண்டு 
போவோம் என்று கிளம்பும் போது ஜாதியை அழித்தொழிக்க
 அதைப் பாதுகாத்து வரும் மதக் கட்டுமானத்தை எதிர்க்கும் நாங்கள் 
அதற்கெதிராய் இயங்க வேண்டியது அவசியம்.

அது உங்கள் அரசியல். அதை எதிர்த்து போராடவேண்டிய 

எதிர் அரசியல் எங்களுடையது. 


அதை நாங்கள் சரியாய் செய்வோம்.


( நேற்று நள்ளிரவுக்கு பத்துப் பதினைந்து நிமிடங்கள் இருக்கும் 
போது பேசிய ப்ரியாவிடம் ஹசாரேவைப் பற்றிய மாதவராஜ் 
பதிவு குறித்து பேசிக் கொண்டிருந்த போது சரி, நீ ஒன்னு போடு 
என்று என்னை விரட்டி எழுதச் சொன்ன ப்ரியாவிற்கு இந்தப் பதிவு)

25 comments:

  1. நல்ல பதிவு.
    சகாயம் மாதிரி ,சங்கீதா மாதிரி ஊழலுக்கெதிராய்ப் போராடிக் கொண்டிருக்கும்
    அதிகாரிகளை நீங்கள் ஏன் கொண்டாடவில்லை?

    ReplyDelete
  2. //அதை நாங்கள் சரியாய் செய்வோம்.//

    எதை.? பாக்குறேன்..

    ReplyDelete
  3. //சம்பந்தப் பட்ட முன்னாள் அமைச்சர் ராசா //

    மறக்ககூடிய விசயமா அது.?

    //கேள்வி கேட்ட அன்னா ஹசாரே.//

    இவரு அவரைவிட கம்மி தான்..

    ReplyDelete
  4. //ராசா விசயத்தில் அவை முடிந்த வரை மூடிப் பாதுகாக்கவே முயற்சித்தன //

    உங்களுக்கு ஜூனியர் விகடன் படிக்கும் பழக்கம் இருக்கா.? ஸ்பெக்ட்ரம் விவகாரம் ஆரம்பித்து தேர்தல் சூடு பிடிக்கும் வரை ஸ்பெக்ட்ரம்மை விடவே இல்லையே.!!! இண்டு இடுக்கு மூளை முடுக்கு எல்லாத்தையும் கிண்டி எடுத்தார்களே.!!

    ReplyDelete
  5. //ஹசாரே விசயத்தில் ஊடகங்கள் ஆன மட்டும் ஊதிப் பெரிதாக்கவே செய்தன. //

    இல்லை உங்கள் கண்ணோட்டம் தவறானது.. ஹசாரேவுக்கு கொடுத்ததை விட ராசா பிரச்சனைக்கு பல மடங்கு பெரிய பில்டப் தான் கொடுத்தார்கள்..

    ReplyDelete
  6. //இளைஞர்களும்
    யுவதிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு அவர் குறித்த குறுஞ்செய்திகளைப்
    பரிமாறினார்கள். //

    இதில் எதிலுமே நான் கலந்துகொள்ளவில்லை..

    ReplyDelete
  7. //லோக் பால்
    வேண்டும் என்றுகூட அவர் என்றைக்கும் போராடியதாகத் தெரியவில்லை. //

    உங்களுக்கு தெளிவுபடுத்தும் அளவுக்கு எனக்கு திறமை கிடையாது.. இருந்தாலும் ஒன்று சொல்கிறேன்.. இப்போது சமீப காலமாக உலக நாடுகளில் போராட்டங்களும், மக்கள் எழுச்சியும் அதிகமாகி போயிருக்கிறது.. இதை கண்ட நம் மக்களுக்குள் ஒரு வேகம் வந்திருக்கிறது.. இந்த சமயத்தில் ஹசாரே உண்ணாவிரதம் இருந்து மக்களை தன் பக்கம் இழுத்தார். அவர் உண்ணாவிரதம் இருந்த போது கேட்ட பேட்டியில் நீங்கள் சொன்னவாறு சமூக பொறுப்பாளரையும் லோக் பால் மசோதாவில் இணைக்கவேண்டும் என்றே அவர் கூறினார். ஆனால் லோக் பால் மசோதாவை ஏற்படுத்தாமல் அது எப்படி சாத்தியமாகும்.? லோக் பால் என்ன என்பதே இதுவரையில் பல மக்களுக்கு தெரியாமல் தான் இருந்தது என்பது உங்களுக்கு தெரியாதா.? நான் நிச்சயமாக அடித்து சொல்வேன் இந்த போராட்டத்தின் நியதி தெரிந்து போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 10% மக்கள் மட்டுமே இருப்பர்.. ஊழல் அழியபோகுது அழியபோகுதுன்னு நினச்சு பல பேர் கலந்துகிட்டாங்க.. போராட்டத்தில் கலந்துகிட்ட எத்தனை பேருக்கு லோக் பால் பற்றி முழுதாய் தெரியும்.. அதெல்லாம் ஒரு வேகம்.. அந்த வேகத்தில் எழுந்த கிளர்ச்சியில் லோக் பால் உறுதியானது.. இப்போது அதை நினைத்து மகிழலாமா.? இல்லை அவர் அதற்காக போராடவில்லை என குத்தம் சொல்லலாமா.? இப்போது என்னை பொருத்தவரையில் அவர் மீது குத்தம் சொல்லாமல் இனி அவரும் ஊழல் பக்கம் போய்விடாமல் பாதுகாக்கவேண்டும் என்பதே.. அவ்வ்வ்...

    ReplyDelete
  8. // பெரிய
    போராளியாய் சித்தரிக்க வேண்டிய அவசியம் ஊடகங்களுக்கு ஏன் வந்தது?//

    எனக்கும் இந்த கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தது.. ஆனால் ஒண்ணுமே இல்லாத விசயத்துக்கு, அவரது தனிப்பட்ட விசயத்துக்கு இந்தியாவையே எழுந்து வர வைத்த இவரை போராளியாக சித்தரிக்கவில்லை.. ஒரு பிரபலமாக சித்தரித்திருக்கின்றனர்..

    ReplyDelete
  9. //இடது சாரிகளை நீங்கள் கண்டு
    கொள்ளாமல் போனதற்கு என்ன காரணம்?//

    ஒன்று புரிந்துகொள்ளுங்கள்.. இங்க ஒருத்தரும் பாட்டி சொன்னா கேக்க மாட்டாங்க.. புதுசா வந்த லவ்வர் சொன்னா தான் கேப்பாங்க.. ரொம்ப நாளா பாட்டி சொல்லியிருப்பாங்க.. ஆனா அதையே கொஞ்சம் ஆல்ட்டர் பண்ணி லவ்வர் சொன்னா கேப்பாங்க.. அது தாங்க இது.!! அதேசமயம் இடது சாரிகள் சொல்லுறதுக்கும், ஒரு சமூக பொறுப்பாளர் சொல்றதுக்கும் வித்யாசம் இருப்பது ஏன் உங்களுக்கு தெரியாமல் போனது.? அதுவும் எந்த சமயத்தில் இடது சாரிகள் ஆரம்பித்தனர் எந்த சமயத்தில் ஹசாரே ஆரம்பித்தார் என்பதையும் கவனிக்க வேண்டும்.. உலகமே புரட்சி வெடித்த சமயத்தில் இவர் நம் மக்களையும் தூண்டி விட்டார் என்பதே உண்மை..

    ReplyDelete
  10. //சகாயம் மாதிரி ,சங்கீதா மாதிரி ஊழலுக்கெதிராய்ப் போராடிக் கொண்டிருக்கும்
    அதிகாரிகளை நீங்கள் ஏன் கொண்டாடவில்லை?//


    யார் கண்டு கொள்ளவில்லை.?? இன்றும் இந்தியாவின் பல மூலைகளில் ஹசாரே யார் என்று தெரியாமல் தான் இருக்கிறார்கள் என உங்களுக்கு தெரியுமா.?

    உண்மையில் சகாயம் பற்றி பதிவுலகில் எழுந்த அளவு பெருமையும், மிகுதியும் ஹசாரேவுக்கு கம்மி தான்.. முக்கியமாக மதுரை மக்களிடம் சகாயம் ஒரு அரும்பெரும் ஹீரோ தான்..

    உங்களுக்கு ஒரு விசயம்.. சகாயம் கடைமையை செய்வதாய் மக்கள் அவருடன் பயணிக்கவில்லை.. நாளைக்கே சகாயத்திற்கு ஏதாவது அரசியல் ரீதியான பிரச்சனை என்றால் எத்தனை மக்கள் வருவார்கள் என பாருங்கள்..

    ஹசாரே வெளியில் தெரிந்தது அந்த போராட்டம் மூலம்.. ஆனால் சகாயம் ஒரு நல்ல அதிகாரியாக, நல்ல மனிதராக எப்போதோ அடையாளம் காணப்பட்டவர்..

    அம்மா அப்பா கூப்டா போகமாட்டோம்.. பக்கத்து வூட்டுக்காரன் சொன்னாதான் போவோம்.. அதெல்லாம் நம்ம இயல்பு..

    ReplyDelete
  11. பிறகு சங்கீதா.? அவரை பாராட்டாத எவராவது இருக்காரான்னு காட்டுங்க.. இவ்வளவு பெரிய விசயம் செய்தும் அவர் மீது இன்னும் அரசியல் ஆட்டம் காணவில்லையே காரணம் என்ன.? அவர் மீது கை வைத்தால் தமிழகத்தில் புரட்சி வெடிக்கும்.!!!

    ReplyDelete
  12. //போராடிக் கொண்டிருக்கும் ஜாதியை//

    கல்வித்துறையில் எந்த விண்ணப்ப படிவத்திலும் CASTE என்ற பெட்டியே இல்லையா.?

    ReplyDelete
  13. இறுதியாக ஒன்று.. இம்முறை தேர்தலில் தேர்தல் ஆணையம் அதிகம் காட்டம் காட்டியது.. அப்போது இவர்களது பணியை செய்தபோது சகாயமும், சங்கீதாவும் பெரிய அளவில் பேசபடாமல் போயிருக்கலாம்..

    சகாயம் இதற்கு முன்னரும் சிறப்பாகவே செயல்பட்டார்.. ஆனால் சகாயம் ஒரு பொறுப்பில் இருப்பவர் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்..

    இன்னொரு முக்கியமான விசயம்.. ஹசாரே வயதானவர்.. அதனால் நமக்கொரு காந்தி தாத்தா கிடச்சிட்டாருன்னு கிளம்பிட்டாங்க பயபுள்ளைங்க.. அதுக்காக நீங்களும் கிளம்பிடாதீங்க.. ஹி ஹி.. சும்மா சும்மா..

    அருமையான அலசல்.. பாப்போம்.. பொறுத்திருந்து பாப்போம்,, ஹசாரேவும் மாறிவிட்டால் அவருக்கு எதிராய் போர்க்கொடி பிடிக்கும் சமயமும் வரும்.. ஹி ஹி..

    ReplyDelete
  14. நல்ல பதிவு அண்ணன்... நீங்க சொல்வதுபோல இணையத்தில் தொடர்ந்து எழுதுவது நல்ல விசயம்தான்., ஆனால் நல்ல கட்டுரையாக , கதையாக, கவிதையாக வரவேண்டிய விஷயங்கள், கருக்கள் வெறும் செய்தி பகிர்வு போல ஆகிவிடும் எனும் அச்சமும் கூடவே தலை நீட்டுகிறது.

    ReplyDelete
  15. @தம்பி கூர்மதியன்
    பதிவுகளுக்கு நன்றி கூர்மதி. ஒன்றிரண்டு பதிவுகளில் தந்தால் பதில் சொல்லலாம். என்றாலும் மீண்டும் நன்றிகள்.

    ReplyDelete
  16. @விஷ்ணுபுரம் சரவணன்
    உண்மைதான் சரவணன்.ஆனாலும் இந்த அளவில் இதையேனும் செய்வோம்.

    ReplyDelete
  17. அன்பின் எட்வின் வணக்கம்.
    சமீபத்தில் படித்த ஹசாரே குறித்த பதிவுகளில் இது மிகமுக்யமானதாகக்கருதுகிறேன்.
    உரைக்கிற மாதிரி விழுகிறது எழுத்து.

    ReplyDelete
  18. @காமராஜ்
    அன்பின் காமராஜ்,
    வணக்கம். பெருந்தன்மையோடு கூடிய தாராளம் இது. ஆனாலும் நான் பெரிதும் மதிக்கிற காமராஜ் பின்னூட்டமிட்டது மிகுதியாய் உற்சாகப் படுத்துகிறது. மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  19. சொல்ல வார்த்தை இல்லை...
    வளருங்கள்...எங்களையும் வாழ்த்துங்கள் !

    ReplyDelete
  20. ஆஹா! மிக்க நன்றி தோழர்.

    ReplyDelete
  21. ச‌ங்கீதா, ச‌காய‌ம் இவ‌ர்க‌ள் தாங்க‌ள் செய்ய‌ வேண்டிய‌ க‌ட‌மையைத்தான் செய்ததாக‌ நினைக்கிறேன். நேர்மையாக‌ கட‌மை செய்வ‌தை பெரிதுப‌டுத்தி காட்ட‌ வேண்டிய‌ பேர‌வ‌லத்தில் நாம் இருக்கின்றோம்!!!!. ஹசாரே ஒரு குறீயீடு.ஊழ‌லுக்கு எதிராக‌ காட்ட‌ப்ப‌டும் ஒரு க‌த‌ர் ச‌ட்டை. அதற்கு முன் இருந்த‌ இட‌து,வ‌ல‌தெல்லாம் நேர்கொண்டு நிற்க‌வில்லை ஊழ‌லுக்கு எதிராய். தேர்த‌ல் வ‌ரும்போதெல்லாம் ச‌ம‌ர‌ச‌மே செய்துகொண்டிருந்தார்க‌ள். அத‌னால்தான் அன்னா. அவ‌ரால் இந்திய‌ ச‌முதாய‌த்தில் ஒரு பெரிய‌ விழிப்புண‌ர்வு வ‌ந்த‌தாய்தான் நான் பார்க்கிறேன்

    ReplyDelete
  22. லோக்பால் வரைவு கசாரே
    இந்த பின்னனியில் உயர் சாதியினர்.

    நீங்கள் கொடுத்துள்ள விவரங்கள்
    எந்த பத்திரிக்கையிலும் முழுமையாக
    வரவில்லை.
    இராஜாஜி முதல் மந்திரியாக இருந்தபொழுது கொண்டு வந்த குலக்கல்வி திட்டம் தங்களுக்கு தெரியும்.
    தற்பொழுது தமிழ் நாட்டில்(15.6.11)
    பள்ளிகளில் காலையில் புத்தகமில்லாத படிப்பு.
    மதியம் என்ன நடக்கிறது.

    தமிழகம் அமைத்துள்ள கமிட்டியில்
    மேல் தட்டு மக்கள்.
    அரசியல்வதிகள்,மக்கள் எதுவும்
    சொல்லாமல் அமைதியாக உள்ளனர்.
    எனக்கு மனதில் உள்ளதை முலுமையாக சொல்லத் தெரியவில்லை.
    இதைப்பற்றி தாங்கள் விமர்சனம் எழுதிவீர்கள் என்ற நம்பிக்கையுடன் நிறைவு செய்கிறேன். நன்றி.
    அ.இராதா கிருஷ்ணன்.

    ReplyDelete
  23. ஹசாரே குறித்த பதிவு ஒரு தெளிவை ஏற்படுத்தியது நன்றி எட்வின்

    ReplyDelete
  24. ஹசாரே குறித்த பதிவு ஒரு தெளிவை ஏற்படுத்தியது . தெரியாத நல்ல விஷயங்கள் இந்த பதிவின் மூலம் அறிந்து கொண்டேன் நன்றி எட்வின்

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...