Monday, April 18, 2011

வசூலுக்குக் கூடவா?

யாரும் விரும்பி அழைக்காமலே எல்லோர் வீடுகளுக்கும் அலுவலகங்களுக்கும்
அடிக்கடி வந்துவிடுகிறார் அமைச்சர் ஆற்காடு வீராசாமி. விரும்புவது
விரும்பாதது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், அவரது வருகையை எரிச்சலோடும்
அருவருப்போடும்தான் எல்லோரும் எதிர்கொள்கிறார்கள். அவர் உள்ளே வந்தால்
வீடுகளில் உள்ளவர்கள் வெளியே மரத்தடிக்கு வந்து விடுகிறார்கள். ஏறத்தாழ
புழுக்கத்தின் குறியீடாகவே மாறிப் போய்விட்டார். ஆனால் இவற்றில்
எதனையும் அவர் பொருட் படுத்துவதாகவோ, இல்லை கவலைப் படுவதாகவோ
தெரியவில்லை.

இவ்வளவு எதிர்ப்பலை வீசுகிறது. இது குறித்து அக்கறையே இல்லையா என்றால்
“அடப் போங்கப்பா, எனக்கு சீட்டே இல்லை. நீங்க என்னமோ கரண்ட் இல்லாதத
பெரிசாப் பேச வந்துட்டீங்க” என்றும் அவர் சொல்லக் கூடும். அவரது கட்சி தோற்கிற
பட்சத்தில் அதற்கான காரணங்களுள் ஸ்பெக்ட்ராமிற்குப் பிறகு
இவராகத்தானிருப்பார். இதை இவர் மறுக்க மாட்டார் என்பதை விட அவரே ஒரு முறை
ஒருக்கால் தனது கட்சி தோற்றுப் போனால் அதற்குத் தானும் தனது துறையும்தான்
காரணமென்று பேசியிருக்கிறார். அந்தப் பெருமையில் பெரும் பகுதியை ராஜா
அள்ளிக் கொண்டு போய்விட்டார் என்பது வேறு விஷயம்.

அன்று காலையும் யாரும் அழைக்காமலே எங்கள் ஊருக்கு வந்துவிட்டார். அந்த
நேரம் பார்த்து கிஷோர் அவனது துணிகளைத் தேய்த்துக்
கொண்டிருந்தான். ஏகத்துக்கும் கடுப்பானப் பிள்ளை திட்டித்
தீர்த்துவிட்டான்.

இனி சுத்தி வளைத்துப் பேசுவதில் பயனில்லை. என்னைப் பொருத்தவரை ஆற்க்காடு
வீராசாமி வேறு மின் தடை வேறு என்று கொள்வதற்கு வாய்ப்பே இல்லை. இதை
ஆற்காடு வீராசாமி அவர்களே மறுக்க மாட்டார்.

வழக்கமாக எரிச்சலையும் கோபத்தையும் அறுவறுப்பையுமே ஏற்படுத்தும் அவரது
வருகை அன்று ஒரு நல்ல விளைவியும் தந்தது.

“இவனுங்க உறுப்படவே மாட்டானுங்க. எப்ப உடுவானுங்க எப்ப
நிறுத்துவானுங்கன்னே தெரியல,” என்று கொதிக்கத் தொடங்கியவன் “ஆனா ஆயிரம்,
ஆயிரத்தி ஐனூறுன்னு பில்ல மட்டும் தீட்டிப் புடறானுங்க” என்று சத்தமாய்த்
தொடரவே விக்டோரியாவிற்குப் பொறித் தட்டி விட்டது.

"ஏண்டா தம்பி, இன்னிக்கு கடைசி நாளுடா. கொஞ்சம் கோவிச்சுக்காமப் போயி
கரண்டு பில்ல கட்டிட்டு வந்துடுடா”

ஆஹா! ஆர்காடு வீராசாமி (மின் தடை) மட்டும் வராது போயிருந்தால் இன்று
கடைசி நாள் என்பது மறந்து போயிருக்கும். உடனே கட்டயப் புடுங்கிட்டுப்
போயிருப்பாங்க. அந்த வகையில எங்க வீட்டுக் கட்டயக் காப்பாத்துனது ஆற்காடு
வீராசாமி (மின் தடை) தான்.

“ போம்மா, இன்னைக்கு மேச் இருக்கு. அப்பாவ கட்டச் சொல்லு.”

“ அப்பாவுக்கு பள்ளிக்கூடம்டா. பில்லு கட்டுறதுக்காக லீவு போட சொல்றதாடா?”

“எதுக்கும்மா லீவு?. அதான் பள்ளிக்கூடத்துக்குப் போறாங்கள்ள. இப்பத்தான்
எந்த வகுப்பும்  இல்லையே. இடையில போயி கட்டச் சொல்லும்மா.”

“ ஏண்டா, கிறுக்காடா நீ?. பெரம்பலூரு பில்ல சமயபுரத்துல எப்படிடா கட்ட
முடியும், கட்டையில போறவனே?”

“அதெல்லாம் நாம வாங்குறப்பதான் சரியா அந்தந்த ஊருக்கு அலஞ்சு வாங்கனும்.
கட்டுறதுன்னா தமிழ் நாட்டுல எங்க வேனாலும் கட்டலாம். வசூல்
மன்னனுங்கம்மா,” என்று சொல்லிக்கொண்டே போய்விட்டான்.

அப்புறமென்ன? கட்டணம் கட்ட வேண்டிய பொறுப்பு நம் தலையில். சரி என்று,
மறக்காமல் நம்பரைக் குறித்தெடுத்துக் கொண்டு கிளம்பினேன்.

இவ்வளவு ஆன் லைன் வசதி வந்த பிறகும் எந்தக் காவல் நிலையத்தில்
வேண்டுமானாலும் புகாரைப் பதியலாம் என்றாகவில்லை. நாட்டில் எந்த ஊரில்
வேண்டுமானாலும் உரிய ஆவணங்களைக் காட்டி ஏதேனும் சான்றிதிழ்களை வாங்கலாம்
என்ற நிலை வரவில்லை. ஆனால் அரசுக்கு கட்டவேண்டிய பணத்தை மட்டும் தமிழ்
நாட்டில் எங்கு வேண்டுமானாலும் கட்டலாம்.

ஏறத்தாழ எல்லா வகுப்புகளுக்கும் தேர்வுகள் முடிந்த நிலையில் பள்ளியில்
அவ்வளவாய் வேலையுமில்லை.எனவே சுந்தரமூர்த்தியை அழைத்துக் கொண்டு மின்சார
வாரிய அலுவலகத்திற்கு சென்றேன். ஒரே கூட்டம். வரிசை இருக்கிற நிலையைப்
பார்த்தால் மூன்று மணிக்கும் மேலாகும் போல இருந்தது. என்ன செய்வது என்று
குழம்பிக் கிடந்தபோது “ ஏறுங்க சார், பேசாமப் போய் போஸ்ட் ஆபீஸ்ல
கட்டிட்டுப் போயிடலாம்.” என்கிறார் சுந்தரமூர்த்தி.

தமிழ் நாட்டில் உள்ள எல்லா மின்சார அலுவலகங்களிலும் கட்டணம் கட்டலாம்
என்பதே அன்றுவரை எனக்குத் தெரியாத நிலையில் இது நம்பவே முடியாத
ஆச்சரியத்திற்குரிய செய்தியாயிருந்தது. அது குறித்துக் அவரிடமே கேட்டேன்.

“ கட்டலாம் சார். சேவைக் கட்டணமாக ஐந்து ரூபாய் மட்டும் சேர்த்துக் கட்ட
வேண்டும்.” அவ்வளவுதான் என்பதுமாதிரியாகப் பேசினார். அப்படியே அதிர்ந்து
போனேன். மாநில அரசின் கஜானாவை நிரப்புவதற்காக மத்திய அரசு
அலுவலகங்களில் வசூலா?, என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போதே தபால்
நிலையம் வந்து சேர்ந்திருந்தோம். இங்கும் ஒரே கூட்டம். அவரது மனைவி
பக்கத்து தபால் நிலையத்தில் அதிகாரியாக வேலை பார்ப்பதால் இங்குள்ள
அலுவலர் பணத்தையும் எண்ணையும் பெற்றுக் கொண்டு கூட்டம் குறைகிறபோது
ரசீதினைப் போட்டு வைப்பதாக சொன்னார். சரி என்று நன்றி சொல்லித்
திரும்பினோம்.

மின்சாரக் கட்டணத்தை தபால்அலுவலகத்தில் கட்ட வேண்டிய நிலை ஏன் வந்தது?

இதற்கு ஒரே காரணம்தான் இருக்க முடியும். ஆள் பற்றாக் குறை. எனில் , தபால்
 நிலையங்களில் போதுமான அளவு ஆள் இருக்கிறார்களா?

அவர்கள் பணியோடு கூடுதலாக, மாநில அரசுக்கான வேலையை மத்திய அரசு ஊழியர்கள்
பார்க்கிறார்களே, குறைந்த பட்சம் கூடுதலாக வசூலிக்கப் படுகிற சேவைக்
கட்டணத்திலிருந்து ஏதேனும் அவர்களுக்கு வழங்கப் படுகிறதா?

விசாரித்த வகையில் அப்படி எதுவுமில்லை.

 எல்லா ஊர்களிலும்தான் புதுப் படத்திற்கு டிக்கெட் வாங்க அலைவது போல்
கட்டணத்தைக் கட்டுவதற்கு இத்தனைக் கூட்டம் அலைமோதுகிறதே!

சேவைக்குத்தான் ஆள் எடுக்க மாட்டீர்கள். வசூலுக்குக் கூடவா?

10 comments:

  1. என்னைப் பொருத்தவரை ஆற்க்காடு
    வீராசாமி வேறு மின் தடை வேறு என்று கொள்வதற்கு வாய்ப்பே இல்லை. //

    அவ்வளவு மோசமானவரா அவரு...

    ReplyDelete
  2. அதெல்லாம் நாம வாங்குறப்பதான் சரியா அந்தந்த ஊருக்கு அலஞ்சு வாங்கனும்.
    கட்டுறதுன்னா தமிழ் நாட்டுல எங்க வேனாலும் கட்டலாம். வசூல்
    மன்னனுங்கம்மா,” என்று சொல்லிக்கொண்டே போய்விட்டான்.//

    யதார்த்தம் யதார்த்தம்...
    ஹி...ஹி...

    ReplyDelete
  3. இக் கட்டுரையினை பத்திரிகை அல்லது சஞ்சிகை ஒன்றிற்கு அனுப்பினால் மின் கட்டண பில் தொடர்பான ஆள் பற்றாக்குறை காரணமாக நேரத்தை விரயமாக்கும் பல மக்களின் பிரச்சினைகளுக்கான பதிலாகவும்,

    அதே நேரம் மின் கட்டண பில் தொடர்பான பல விடயங்களை விளக்கும் கட்டுரையாகவும் இது இருக்கும் என்பதில் ஐயமில்லை.

    ReplyDelete
  4. ஆள் பற்றாக்குறையினை வைத்து மின் கட்டணம் வசூலிக்கும் அரச நிறுவனங்களில் பிழைப்பினை ஓட்டுகிறார்கள் என்பதனை அனுபவ வெளிப்பாடாய் அலசியுள்ளீர்கள்.

    ReplyDelete
  5. எங்கள் ஊரில் (ஸ்ரீ வில்லிபுத்தூர்) தினம் சாயங்காலம் மூன்று முதல் ஆறு மணி வரை மின்சாரம் இருப்பதில்லை.

    ReplyDelete
  6. நம் ஊர்களின் இயல்நிலையை ஆதங்கத்தோடு சொல்லியிருக்கிறீர்கள் !

    ReplyDelete
  7. @நிரூபன்
    அய்யோ, ஆமாம் நிரூபன்.

    ReplyDelete
  8. @Rathnavel
    அன்பின் அய்யா,
    வணக்கம். வருகைக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க அய்யா.

    பல ஊர்ல அவ்வளவு நேரம்தான் மின்சாரமே இருக்கு

    ReplyDelete
  9. @ஹேமா
    அன்பின் ஹேமா,
    வணக்கம்
    வருகைக்கும் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

    ReplyDelete
  10. @நிரூபன்
    அனுப்பலாம்தான் நிரூபன்

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...