சில மாதங்களுக்கு முன்னர் சம்பல் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு மசூதியை கிருஷ்ணர் கோவில் என்று சங்கிகள் போகிற போக்கில் கொளுத்திப் போட்டார்கள். அதற்கான எந்தவித முகாந்திரமும் அவர்களிடம் இல்லை. ஆனாலும் அவர்கள் தைரியமாக நீதிமன்றத்திற்குப்
போனார்கள். நீதிமன்றமும், நீதிமன்றத்தின்
வழிகாட்டுதலை ஏற்று இந்திய தொல்லியல் துறையும் அவர்களுக்கு சாதகமாக இருந்தன. பள்ளத்தாக்கு பற்றி எரிந்தது. ஏறத்தாழ நூறுபேர் கொல்லப்பட்டார்கள்.
இதேபோல இந்தியாவில் இன்னும் 40,000 மசூதிகளும், தர்ஹாக்களும், தேவாலயங்களும் இருப்பதாக அவர்கள் அப்போது கூறினார்கள். கலவரமும் செய்வோம் நீதிமன்றங்களுக்கும் போவோம்
என்றும் அப்போது அவர்கள் கூறினார்கள். இவை இரண்டிலும் அவர்களுக்கு அப்படி ஒரு நம்பிக்கை
இருக்கிறது.
நாம் ”அவர்கள்”
என்று இங்கு குறிப்பிடுவது
தமிழ்நாட்டில் உள்ள சங்கிகளையும் சேர்த்துதான். இப்போது அவர்கள்
திருப்பரங்குன்றத்தில் அதே வேலையை ஆரம்பித்து இருக்கிறார்கள். நீதிமன்றமும்
அவர்கள் ஆசைப்பட்டபடிதான் நகரவும் ஆரம்பித்தது. ஆனால் திருப்பரங்குன்றத்து
மக்களும், மாநில அரசும், அதன் காவல் துறையும் நியாயத்தின் பக்கம் நிற்கவே சங்கிகள்
எதிர்பார்த்ததுபோல் கலவரமோ சேதாரமோ எதுவும் இதுவரை ஏற்படவில்லை.
திருப்பரங்குன்றம் என்பது கந்தன் மலை. அதை சிக்கந்தர் மலையாக்கி விட்டார்கள் இஸ்லாமியர்கள். அதை மீட்டெடுக்க வேண்டியது இந்துக்களின் கடமை என்று தொடர்ந்து கொளுத்திப் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள் சங்கிகள்.
கார்த்திகையின்போது வழக்கமாக குன்றத்தில்
இருக்கும் வினாயகர் கோவிலின் முன்பு தீபத்தை ஏற்றுவார்கள். இந்த ஆண்டு அந்த தீபத்தை
சிக்கந்தர் தர்ஹாவிற்கு மிக அருகில் உள்ள தூணில் ஏற்ற வேண்டும் என்று
நீதிமன்றத்திற்குப் போகிறார்கள். நீதியரசர் மாண்பமை G.R.சாமிநாதன் அவர்களும் மனுதாரர்
குறிப்பிடும் தீபத்தூணில்தான்
தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிடுகிறார்.
கோவில் நிர்வாகம் வழக்கம்போல் வினாயகர்
ஆலயத்தின் அருகில் தீபத்தை ஏற்றிவிடுகிறது. குன்றத்து மக்கள் பக்திப் பரவசத்தோடு
கொண்டாடித் தீர்க்கிறார்கள். சங்கிகள் கொதித்துப் போகிறார்கள். சங்கிகளை விடவும்
கொதித்துப் போகிறார் நீதியரசர். நீதிமன்ற அவமதிப்பு வழக்காக அடுத்த நாளே
எடுக்கிறார். சில மணி நேரத்திற்குள்ளாக உரிய அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும்
நீதிமன்றம் வரவேண்டும் என்கிறார். இல்லாதுபோனால் மிகக் கடுமையாக நடவடிக்கை
இருக்கும் என்கிறார்.
தமிழ்நாடு அரசு அவரது உத்தரவிற்கு எதிராக
மேல்முறையீடு செய்கிறது. எனவே ஒரு அதிகாரியும் நீதிமன்றம் செல்லவில்லை. இன்னும்
கொதித்துப் போகிறார் நீதியரசர்.
நீதிமன்ற பாதுகாப்பிற்காக இருக்கும் ராணுவ
அதிகாரிகளின் பாதுகாப்போடு மனுதாரர் தர்ஹா அருகில் உள்ள தூணில் தீபம் ஏற்றவேண்டும்
என்று உத்தரவிடுகிறார். மட்டுமல்ல, தான்
மட்டும் நீதிபதியாக இல்லாவிட்டால் ”நானே அத்தனை தடைகளையும் மீறி அந்த தூணில் தீபம்
ஏற்றி இருப்பேன்” என்றும் கூறுகிறார்.
அதிகாரிகளோடு அந்த மனுதாரர் மலையை நோக்கி
செல்கிறார். காவல்துறை குவிக்கப்படுகிறது. பத்தாயிரத்திற்கும் அதிகமான குன்றத்து
மக்கள் குவிகிறார்கள். வாசலில் வைத்து ராணுவ அதிகாரிகளையும் மனுதாரரையும் மறிக்கிறார்கள்
காவல்துறை அதிகாரிகள்.
“ We are not allowing you sir” என்கிறார்கள்
காவல்துறையினர்.
“High court order sir” என்கிறார்கள்
ராணுவ அதிகாரிகள்.
“No problem. We are not allowing” என்று மீண்டும் மறுக்கிறார்கள்.
மீண்டும் அவர்கள் நீதிமன்ற ஆணையை
நீட்டுகிறார்கள்.
“We are not allowing. And we will face the
consequences” என்று அவர்களை காவல்துறை அதிகாரிகள் தடுத்து திருப்பி
அனுப்புகிறார்கள்.
அங்கு கூடியிருந்த குன்றத்து மக்கள் ஓவென்று
பெருங்குரலெடுத்து கரவொலிக்கிறார்கள். சிலர் மகிழ்ச்சியில் குதிக்கிறார்கள். சிலர்
ஆனந்தத்தில் கண்ணீர் சொரிகிறார்கள். இன்னொன்றையும் சொல்ல வேண்டும். அங்குத்
திரண்டிருந்தவர்களில் 99 சதவிகிதம்
தீவிரமாக கந்தனை நேசிக்கக்கூடிய இந்துக்கள்.
”உங்களிடம் நீதிமன்ற உத்தரவு
இருக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். ஆனாலும் நாங்கள் உங்களை அனுமதிக்கப் போவதில்லை.
அதன் விளைவுகளை சந்திப்பதற்குத் தயாராகவும் இருக்கிறோம்” என்ற காவல் துறையினரின் குரல்
அரசாங்கத்தின் குரல் மட்டுமோ காவல்துறையின்ன் குரல் மட்டுமோ அல்ல. அது அந்த முருக பக்தர்களின்
குரல். அதனால்தான் அத்தனை பெரிய ஆரவாரம்.
வழக்கமாக வினாயகர் கோவில் அருகில்தானே தீபம்
ஏற்றுகிறோம் என்கிறார்கள் கோவில் நிர்வாகிகள். அதற்கும் முன்பு சிக்கந்தர் தர்ஹா
அருகில் இருந்துதான் தீபம் ஏற்றினோம் என்கிறார்கள் சங்கிகள். ஏவ்வளவு காலத்திற்கு
முன்பு என்று கேட்டால் நீங்கள் எப்போது தொடங்கி வினாயகர் கோவிலருகில் ஏற்றுகிறீர்களோ
அதற்கு முன்பிருந்து என்கிறார்கள்.
அதற்குமேல் அவர்களிடம் இது குறித்த ஆதாரம்
எதுவுமில்லை.
அது தீபத்தூண் அல்ல, சர்வே தூண் என்றால் அது தீபத்தூண்தான்
என்கிறார்கள். அது சர்வே தூண் என்பதற்கான ஆதாரத்தைக் காட்டுகிறார்கள்.
இருந்துவிட்டுப் போகட்டும் என்றும் தாங்கள் அதை தீபத் தூண் என்று நம்புவதால் அது
தீபத்தூண்தான் என்றும் உளறுகிறார்கள்.
கோவலன் நடந்துபோன மதுரை தெருக்கள் குறித்து
இளங்கோ இப்படி சொல்வார்,
”பால் வேறு தெரிந்த நால் வேறு
தெருவும்
அந்தியும், சதுக்கமும்,
ஆவண வீதியும்
மன்றமும், கவலையும்,
மறுகும் திரிந்து”
மக்கள் வாழ்ந்த பகுதிகளான அந்தி தெரு, நான்கு சாலை, மக்கள்
கூடும் மன்றங்கள் நிறந்த தெரு, ஆவணங்களை சேமித்துப்
பாதுகாக்கும் தெரு, வளைந்து நெளிந்து செல்லும் குறுகிய
சந்துகள் வழியாக கோவலன் நடந்து சென்றான் என்கிறார் இளங்கோ.
எவ்வளவுதான் குறைத்து மதிப்பிட்டாலும் சிலம்பை
கி.பி ஐந்தாம் நூற்றாண்டிற்கு
கீழே கொண்டுவர இயலாது. அந்த வகையில் சிலம்பின் வயது குறைந்தபட்சம் 1500 ஆண்டுகள். எனில், 1500 ஆண்டுகளுக்கு முன்பே
மதுரையில் ஆவணங்களை சேமித்து பாதுகாப்பதற்கென்றே ஒரு தெரு இருந்திருக்கிறது. சிக்கந்தர்
தர்ஹா அருகில் தீபம் ஏற்றப்பட்டிருப்பின் நிச்சயம் அது ஆவணப்படுத்தப்
பட்டிருக்கும். எனவே அவர்கள் சொல்வது பொய் என்பது தெளிவாகிறது.
கந்தன் மலையை மீட்பது அல்ல அவர்களது நோக்கம்.
இன்னும் சரியாக சொல்லப்போனால் அது கந்தன் மலையா இல்லையா என்பது குறித்த எந்த
அக்கறையும் அவர்களிடம் இல்லை. மக்களை பதட்டத்தில் வைத்திருக்க வேண்டும். கலவரங்களை
ஏற்படுத்த வேண்டும். மக்களை மதத்தின் பெயரால் பிளவுபடுத்த வேண்டும். அன்பால்
நிறைந்திருக்கும் தமிழ் மண்ணை வெறுப்பால் நிறைப்பதும் வெறுப்பின் விளைச்சலை பாஜகவிற்கான
வாக்குகளாக மாற்றுவதும்தான் அவர்களது நோக்கம்.
இடதுசாரிகள் உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகள்
மதநல்லிணக்கப் பேரணி ஒன்றினை நடத்தினார்கள். முருக பக்தர்களால் நிரம்பி வழிந்தது
அந்தப் பேரணி. “முடிந்தால் தர்ஹாவை தொட்டுப் பார்” என்பதே அந்த மக்களது முழக்கமாக
இருந்தது.
உண்மை இப்படி இருக்க திருப்பங்குன்றத்து மக்கள் ஏதோ கொந்தளித்து தெருவிரங்கி மலையை மீட்பதற்காகப் போராடிக் கொண்டிருப்பதாக சங்கிகள் சித்தரிக்க முயன்றுகொண்டிருக்கிறார்கள்.
வட இந்தியாவிலும் அயல்நாடுகளில் உள்ள சங்கிகள் மத்தியிலும் இவர்களது கூப்பாடு ஓரளவு சென்று சேர்கிறது. அல்லது அவர்களும் சேர்ந்துதான் இதனைத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார்கள். போக, அதன் மூலமாக தமிழ்நாட்டு சங்கிகள் கொஞ்சம் கல்லா கட்டிக்கொள்ளவும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது.
திருப்பரங்குன்றத்து மக்கள் சிக்கந்தரும் கந்தனும் தங்களது வலது கண்ணும் இடது கண்ணும் என்று பிரகடனம் செய்கிறார்கள். உண்மையை சொல்லப்போனால் குன்றத்தை மீட்பதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்று சங்கிகள் கூறும் குன்றத்து மக்கள் சங்கிகளிடம் இருந்து
தர்ஹாவைக் காப்பாற்றுவதற்காகத்தான் களமாடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஊடகங்களில் கதையாடும் சங்கிகள் சிலவற்றை
முன்வைக்கிறார்கள்,
1) முன்னொரு காலத்தில் தர்ஹா அருகில் உள்ள தூணில்தான் தீபம்
ஏற்றப்பட்டது
2) நீதிமன்றமே அங்கு ஏற்ற வேண்டும் என்று சொல்கிறது
3) அங்கு ஏற்றினால் என்ன கேடு விளைந்துவிடப் போகிறது
முதல் ஒன்றிற்கு அவர்களிடம் ஆதாரம் இல்லை. அது
சர்வே தூண் என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. ஆகவே அந்த வாதத்தை தள்ளிவிடலாம்.
இரண்டாவது வாதத்தைப் பொறுத்தவரை நீதியரசர்
மாண்புமிகு G.R.சாமிநாதன் அவர்களது
தீர்ப்பைத்தான் அவர்கள் இங்கு குறிப்பிடுகிறார்கள். நீதியரசர் பல நேரங்களில்
மனுவாதியாகவே நடந்துகொண்டிருக்கிறர். அதுமட்டுமில்லாமல் தான் மட்டும் நீதியரசராக
இல்லாது இருந்தால் சிக்கந்தர் தர்ஹா அருகில் தன்னாலே தீபம் ஏற்றப்பட்டிருக்கும்
என்கிறார். எனவே அந்த இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது அவரது விருப்பம்.
நீதிபதியின் விருப்பம் ஒருபோதும் நீதியாகாது.
வெகுமக்களாகிய இந்துக்கள் விரும்புகிற இடத்தில்
தீபமேற்றினால் என்ன குடிமுழுகிவிடும் என்பது அவர்களது மூன்றாவது வாதம்.
1) தமிழ்நாட்டில் வெகுமக்கள் இந்துக்கள்தான். ஆனால்
வெகுமக்களில் வெகுவாசிப்பேர் அதை விரும்பவில்லை. அவர்கள் வழமையான இடத்தில்
தீபமேற்றுவதையே விரும்புகிறார்கள்
2) வினாயகர் ஆலயம் அருகில் தீபமேற்றினால் என்ன கெட்டுவிடும்
என்பதே 99.9 விழுக்காடு இந்துக்களின்
கேள்வி
அவர்களது நோக்கம் தீபம் அல்ல, சிக்கந்தர் தர்ஹா என்பதை தமிழ் மக்கள் தெளிவாக புரிந்துகொள்கிறார்கள்.
வன்மமான தாக்குதலை எல்லா மட்டத்திலிருந்தும் சங்கிகள் தொடுக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள் இதை எதிர்த்து போராடாமல் இயல்பான வாழ்க்கையில் எப்போதும்போல் இருக்கிறார்கள். இஸ்லாமியர்களுக்கு எதிராக
நூறு சங்கிகள் தாக்குதலைத் தொடங்கினால் பத்தாயிரம் இந்துக்கள் இஸ்லாமியர்களின் கேடயமாக
மாறுகிறார்கள்.
தர்ஹாவை குறிவைத்தால் பாய்மார்கள் மௌனமாக
இருக்கிறார்கள். மாறாக நாத்திகர்கள் உள்ளிட்ட அனைவரும் தெரு இறங்குகிறார்கள். இது
சங்கிகளை குழப்புகிறது. இதை எப்படி புரிந்துகொள்ள இயலாமல் பதறுகிறார்கள்.
ஒரு நேர்காணலில் இது குறித்து நாகை சட்டமன்ற
உறுப்பினர் ஆளூர் ஷானவாசிடம் கேட்கிறார்கள். அங்கு அவர் சொன்ன பதில்தான்
ஒட்டுமொத்த தமிழக இஸ்லாமிய சமூகத்தின் கருத்தாக இருக்கிறது.
பாபர் மசூதி சங்கிகளால் இடிக்கப்பட்ட போதும் இந்தியாவில் உள்ள இஸ்லாமிய சமூகமும் கொந்தளித்து தெருவிற்கு வந்தது. அப்போதும் தமிழக இஸ்லாமியர்கள் அமைதியாகத்தான் இருந்தார்கள் என்று தனது பதிலைத் தொடங்குகுகிறார் ஷானவாஸ்.
தங்களுக்காக தாங்கள்தான் போராட வேண்டும் என்கிற பலவீனமான் நிலைக்கு ஒருபோதும் தங்களை தங்களது இந்து சகோதரர்கள் தள்ளியதே இல்லை என்கிறார்.
சிக்கந்தர் தர்ஹா தொடர்பாக எழுந்திருக்கிற பிரச்சினை என்பது இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்குமான பிரச்சினை இல்லை என்றும் இது சங்கிகளுக்கும் இந்தியாவிற்குமான சண்டை என்றும் அவர் கூறுகிறார்.
இது மிக முக்கியமான இடம். இந்த இடத்தில்
சங்கிகள் முன்வைக்கும் முக்கியமான கேள்வி ஒன்று இருக்கிறது.
இது தர்ஹா சம்பந்தமான பிரச்சினை. இஸ்லாமியர்களே
அமைதியாகத்தான் இருக்கிறார்கள். பெரியாரிஸ்டுகளுக்கும், இடதுசாரிகளுக்கும், சிறுத்தைகளுக்கும் பிறருக்கும் என்ன வந்தது? அவர்களுக்கு
நாம் சொல்லி முடிப்பதற்கு ஒன்று உண்டு.
இது இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்குமான
சண்டை இல்லை. இன்னும் சரியாக சொல்வதெனில் இது சங்கிகளுக்கும் இஸ்லாமியர்களுக்குமான
சண்டையும் இல்லை. இது சங்கிகளுக்கும் இந்தியாவிற்குமான சண்டை.
இந்தியாவின் ஆன்மாவைக் கிழிக்க யார் முயன்றாலும், அது
இந்திய சங்கியே ஆனாலும் களமாடி நொறுக்குவோம்.
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்