அமெரிக்க டாலரின் மதிப்பு 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவடைந்திருப்பதாக 13.04.2025 நாளிட்ட தீக்கதிர் கூறுகிறது. இந்த செய்தியை வாசித்ததும் கொஞ்சம் அதிர்ந்துதான் போனேன். சிலருக்கு தலை சுற்றியிருக்கக் கூடும், இன்னும் பலருக்கு மாரடைப்பே ஏற்பட்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அமெரிக்க டாலரின் மதிப்போடு ஒப்பிட்டுத்தான் உலக நாடுகளின் பணத்திற்கான மதிப்பே நிர்ணயம் செய்யப்படுகிறது. அதுபோல, யூரோ மற்றும் பிராங்குடன் ஒப்பிட்டுத்தான் அமெரிக்க டாலரின் மதிப்பு நிர்ணயிக்கப்டுகிறது.
பிராங்கோடு ஒப்பிடுகையில் 2015 ஆம் ஆண்டு இருந்த மதிப்பீட்டின் அளவிற்கு இறங்கி இருக்கிறது அமெரிக்க டாலர். அமெரிக்காவில் சில நகரங்களே திவாலாகிப் போன வரலாறு உண்டு. ஆனால் அப்போதுகூட இந்த அளவிற்கு அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்ததில்லை. அவ்வளவு வலுவான அமெரிக்க டாலருக்கு இப்போது ஏன் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது?
ட்ரம்ப்பின் தீர்வை வெறியே இதற்கான காரணம் என்கிறார்கள். பொருளியல் நிபுணர்கள் இதை “தீர்வைப் போர்” என்று அழைக்கிறார்கள்.
இந்தமுறை பதவி ஏற்றதும் ட்ரம்ப் கீழ்க்காணும் இரண்டு விஷயங்கள் குறித்து மிகவும் தான் கவலைப்படுவதாகக் காட்டிக் கொண்டார்,
1) பொருளாதார ரீதியாக உலக நாடுகள் அமெரிக்காவைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றன
2) அமெரிக்காவின் இறக்குமதி என்பது ஏற்றுமதியைவிட பெருமளவு அதிகமாக இருக்கிறது
என்பதே அவரது ஆதங்கமாக இருந்தது. இதை சரி செய்வதன் மூலம் அமெரிக்காவை மீண்டும் வல்லரசாக்கப் போவதாகவும் பெருமிதம் பொங்க கூறினார். இதை கீழ்க்காணும் இரண்டு வகைகளில் செய்ய இருப்பதாகவும் கூறிக் கொண்டார்,
1) இறக்குமதிப் பொருட்கள் மீதான தீர்வை வரியை அதிகப்படுத்துவது
2) அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் நாடுகள் அதே அளவிற்கு அமெரிக்காவிடம் இருந்தும் இறக்குமதி செய்துகொள்ள வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது
இந்த இடத்தில்தான் ”தீர்வை வரி” என்பது என்ன? அதற்கான தேவை ஏன் ஏற்பட்டது என்பவை குறித்தெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. அவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டுமெனில் உலகமயம் மற்றும் தாராளமயம் குறித்தும் கொஞ்சம் சன்னமாகவும் சரியாகவும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
ஆயிரத்தி தொள்ளாயிரத்தி தொண்ணூறுகளில் உலகமயம் மற்றும் தாராளமயம் துளிர்விட ஆரம்பிக்கின்றன. சுருக்கமாகவும் எளிதாகவும் சொல்ல வேண்டுமெனில் உலக நாடுகள் தங்களது சந்தைகளை தாராளமாக மற்ற நாடுகளின் பொருட்களுக்கு திறந்துவைக்க வேண்டும். உலகில் உற்பத்தியாகும் அனைத்தும் அனைத்து நாடுகளுக்கும் வருவதற்கு எந்தத் தடையும் இருக்கக் கூடாது. இதன் மூலம் உலகில் உற்பத்தியாகும் அனைத்து பொருட்களும் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் என்று கூறப்பட்டது.
இது ஜனநாயகத்தின் முக்கியமான கூறு என்றார்கள். எல்லாவகையான பொருட்களும் கிடைக்கும்போது தரமான, தங்கள் பட்ஜெட்டிற்குத் தகுந்த மாதிரி பொருட்களை அனைத்து நாட்டு மக்களும் தேர்ந்தெடுக்க முடியும் என்றார்கள்.
மேலோட்டமாகப் பார்த்தால் இது மிகச் சரியான விஷயம் என்பதாகவே படும். நுகர்வு என்கிற ஒரு பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டால் இது மிகவும் சரியானதும் ஆகும்.
நாம் எளிதாகப் புரிந்துகொள்வதற்காக இதை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். ஏதோ ஒரு சிறிய நாடு இருக்கிறது என்று கொள்வோம். அந்த நாட்டில் வாழை நன்கு விளைகிறது. அவர்களுக்கு போதுமான அளவில் விளைகிறது.
இப்போது உலகமயம் தாராளமயத்தின் விளைவாக அந்த நாட்டிற்கு பக்கத்து நாட்டில் இருந்தும் வாழை வருகிறது என்று கொள்வோம். கெடு வாய்ப்பாகவோ நல்வாய்ப்பாகவோ இறக்குமதியாகும் வாழையின் விலை உள்ளூர் வாழையின் விலையைவிட மலிவாகவும் இருக்கிறது எனக் கொள்வோம். உள்ளூர் நுகர்வோர் எது மலிவோ அதை வாங்குவர். இது சரிதானே என்றும் நினைக்கத் தோன்றும். ஆனால் உள்ளூர் வாழை விவசாயிகளை இது பாதிக்கும் அல்லவா?
எனவே வளரும் நாடுகள் இதை மூர்க்கமாக எதிர்த்துப் பார்த்தன. ஏற்பதைத் தவிர வேறு வழி இல்லை என்பதைப் புரிந்துகொண்டவுடன் இதை ஏற்பதற்கு ஒரு கால அவகாசத்தைக் கேட்டன. அந்த நாடுகள் இந்த சிக்கலை ஈடுகட்டுவதற்கு தங்களைத் தகவமைத்துக் கொள்வதற்காக அவர்கள் கேட்ட கால அவகாசம் இது.
இந்த அவகாசத்திற்குப் பிறகும் வெளியூரில் இருந்து வரும் சில பொருட்கள் சொந்த நாட்டின் பொருட்களுக்குப் போட்டியாக வரக்கூடிய வாய்ப்பு உண்டு. அப்படி இறக்குமதியாகும் பொருட்களினால் தங்களது பொருட்கள் பாதிக்கும்போது அந்தத் தொழில் நசியும். வேலைவாய்ப்பு பாதிக்கும். இதில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அத்தகையப் பொருட்களின் மீது தீர்வை வரி போடப்பட்டது
சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பேனாவின் சந்தை விலை மூன்று ரூபாய் என்று கொள்வோம். இந்தியாவில் தயாராகும் அதே பேனா மூன்றரை ரூபாய் என்றால் இந்தியப் பேனா விற்காமல் முடங்கும். அப்போது அதில் இருந்து மீட்க சீனப் பேனாவிற்கு 50 அல்லது 60 பைசா தீர்வை வரியாகப் போடுவது வழக்கம்.
இந்தத் தீர்வை வரிக்கு ஒரு அளவையும் உலகநாடுகள் தீர்மானித்திருந்தன. ட்ரம்ப் இரண்டாவது முறையாக வந்ததும் உலகநாடுகள் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கான தீர்வையை குறைக்க வேண்டும் என்று மிரட்டினார். அல்லது அந்த நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வரும் பொருட்களுக்கான தீர்வையைக் கூட்டுவேன் என்றார். இந்தியா உடனடியாக சில பொருட்களுக்கான தீர்வையை மிகக் கனிசமாகக் குறைத்தது.
அமெரிக்கா தீர்வையை ஏற்றினால் தாங்கள் இறக்குமதி செய்யும் அமெரிக்க பொருட்களுக்கான தீர்வையை அதே அளவு உயர்த்துவோம் என்று பல நாடுகள் ட்ரம்ப்பை எச்சரித்தன. மெக்சிகோவே எச்சரித்தது. நமது நாடு மட்டும் பம்மியது.
அனைத்து நாடுகளுக்குமான தீர்வையை கண்களை மூடிக்கொண்டு ட்ரம்ப் ஏற்றினார். மற்ற நாடுகளும் ஏற்றின. ஏற்றியதை இறக்கினார். மற்ற நாடுகளும் இறக்கின. இப்படியானதொரு கண்ணாமூச்சி விளையாட்டை ஆடுவதன் மூலம் அமெரிக்காவின் வருமானம் பெருகும் என்று நினைத்தார் ட்ரம்ப். மாறாக,
1) அமெரிக்காவில் இறக்குமதிப் பொருட்களின் விலை கணிசமாக ஏறியது
2) வெளிநாடுகளில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்கப் பொருட்களின் விலையும் ஏறியது
இதனால் அமெரிக்கப் பொருளாதாரம் சரிவைச் சந்திக்க ஆரம்பித்தது. இதில் உச்சம் என்னவெனில் ட்ரம்ப் சீனாவோடு விளையாடியதுதான். சீனப் பொருட்களுக்கு 125 விழுக்காடு வரியை விதித்தார். சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கு 125 விழுக்காடு தீர்வை விதித்தது. இதில் சீனப் பொருளாதாரத்தோடு அமெரிக்க டாலரும் சரிவைச் சந்தித்தது.
சீனாவில் சீனாக்காரர்கள் மட்டுமே முதலீடு செய்வதில்லை. இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். வெளிநாடுகளில் முதலீடு செய்பவர்கள் அங்கிருந்து கிளம்பி வந்து அமெரிக்காவில் முதலீடு செய்யுங்கள். தீர்வையில் இருந்து தப்பலாம் என்கிறார் ட்ரம்ப். இது பைத்தியக்காரத்தனமானது. இதையே சீனாவும் சொல்லலாமே.
அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் நாடுகள் அதே அளவிற்கு அமெரிக்காவில் இருந்தும் இறக்குமதி செய்துகொள்ள வேண்டும் என்கிறார். இதில் என்ன தவறு என்று தோன்றும்.
இந்தியா அமெரிக்காவிற்கு ஏறுமதி செய்வது அங்கிருந்து இறக்குமதி செய்வதைவிட அதிகம். அந்த இடைவெளியை அமெரிக்காவில் இருந்து கோதுமையை இறக்குமதி செய்யச் சொல்கிறார் ட்ரம்ப்.
நம் ஊரில் கோதுமையின் சந்தை விலை இரண்டாயிரம் ரூபாயில் இருந்து இரண்டாயிரத்து இருநூறு ரூபாய்வரை இருக்கிறது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்தால் அதன் விலை 1,600 ரூபாயாக இருக்கும். மக்களுக்கு நல்லதுதானே என்று தோன்றும். ஆனால் கோதுமை விவசாயிகள் பிழைப்பு கெட்டு தற்கொலை செய்துகொள்ளும் சூழல் வரும்.
மட்டுமல்ல, விவசாயப் பொருட்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையையும் மானியத்தையும் இந்தியா நிறுத்த வேண்டும் என்கிறது. இது இந்திய இறையாண்மையில் மூக்கை நுழைப்பதற்கு ஒத்ததாகும்.
இந்தியாவும் அதை செய்யத்தான் ஆசைப்படுகிறது. அதற்கு எதிராகத்தான் உழுகுடிகள் டில்லியில் வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்தினார்கள்.
உழுகுடிகளின் வீரஞ்செறிந்த போராட்டமும் ஆயிரம் பேரை பலி கொடுத்த தியாகமும்கூட ஒரு வகையில் அமெரிக்க பொருளாதார கட்டுப்பாடுகளுக்குக்கு எதிராக நடந்ததுதான்.
உலகத்தின்மீதான வர்த்தகப் போருக்கு எதிராக அமெரிக்க மக்களே ஒன்று திரண்டுகொண்டு இருக்கிறார்கள். அவர்களே இந்த அசிங்கமான போரை முடிவிற்கு கொண்டு வருவார்கள்.
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்