மனம்போன போக்கில், தனக்கு சரி என்று தோன்றியவற்றை எல்லாம் தந்தை பெரியார்
செய்துகொண்டிருந்த காலம். ”மைனர் கணக்காக” தான் திரிந்து கொண்டிருந்த காலம் என்று அவரே அந்தக் காலம்
குறித்து பலமுறை வெளிப்படையாகக் கூறி இருக்கிறார்.
மைனர் கணக்காக
என்றால் சமூக அக்கறையே இல்லாதவராக பொறுப்பற்று இருந்தார்
என்பதெல்லாம் இல்லை. தனக்கு சரி என்று பட்டதை செய்துகொண்டுதான் இருந்தார். ஆனால், ஒரு ஒழுங்கான வரையறையற்று எதையும் செய்தபடி இருந்தார்.
ஒரு தெளிவான இலக்கற்று தன்போக்கில் நகர்ந்துகொண்டு இருந்தவரை ஒரு வரையறைக்குள்
கொண்டு வந்தவர் ராஜாஜி.
சரியாக சொல்வதெனில்
ஒரு முழுநேர அரசியல் ஊழியனாக பெரியாரை மாற்றியவர் ராஜாஜி. பிறகு,
அரசியல் வேண்டாம் என்றும் சமூக விடுதலைக்காக மட்டுமே உழைப்பது என்றும் தனது போக்கை அவர் மாற்றிக் கொள்கிறார். சமூக விடுதலைக்கான உழைப்பும் அரசியலின் ஒரு
கூறுதான். இதை இன்றளவும் பலர் உணராமல் இருப்பதற்காக நாம் துயரப்படப் போவதில்லை.
இன்னும் மிகச் சரியாக சொல்வதெனில் பெரியாரின் உசரத்தை முதன் முதலில் மிகத் துள்ளியமாக கணித்தவர் ராஜாஜி.
பெரியாரின்
செயல்பாட்டின் மீதும் தலைமைப் பண்பின்மீதும் வேறு எவரைவிடவும் அதிக நம்பிக்கை கொண்டிருந்தவர்
ராஜாஜி.
அதனால்தான் அவரை ஈரோடு ஜில்லா காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக்குகிறார்.
சிறிது காலத்திற்குள்ளாகவே அவரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக்கியும்
அழகு பார்க்கிறார்.
தன்னால் உருவானவர்தானே என்று பெரியாரை ஒருபோதும் அவர் அலட்சியமாகப்
பார்த்ததில்லை.
அன்றையத் தேதியில் ஒரு சாதாரன, சூத்திர மனிதராக இருந்த பெரியாரை “தலைவர் நாயக்கர்” என்று அழைத்து மகிழ்ந்தவர் ராஜாஜி.
அதுமட்டும் இல்லை ,வழக்கமாக சூத்திரர்களை தங்களது அடிமைகளாகவே பாவிக்கும்
பார்ப்பனர்களையும் சூத்திரரான பெரியாரை “தலைவரே” என்று அழைக்க வைத்தவர்.
இவை அனைத்தையும் தந்தை பெரியார் அவர்களே 26.12.1972 நாளிட்ட ”விடுதலையில்” எழுதுகிறார்.
தன் தகுதிக்கு மேலாகத் தம்மைப் பற்றி கவர்னரிடத்திலும் பார்ப்பனர்களிடத்திலும்
ராஜாஜி பிரச்சாரம் செய்து வந்ததாகவும் அதே கட்டுரையில் பெரியார் கூறுகிறார்.
ஆக,
பெரியார் குறித்த ராஜாஜியின் மதிப்பீடும் அதை மற்றவர்களிடத்தில் கொண்டுபோய்
சேர்த்த விதமும் பெரியாரை நெகிழச் செய்திருக்கிறது என்பதில் துளியும் அய்யம் இல்லை.
தன் வாழ்நாள்
முழுவதும் ராஜாஜிக்கு விசுவாசியாக இருந்துவிட வேண்டும் என்று தான்
எண்ணியிருந்ததாகக் கூட பெரியார் ஓரிடத்தில் கூறுகிறார்.
ராஜாஜி முதலமைச்சர் ஆகிறார் என்ற செய்தி வந்ததும் தமிழ்நாட்டில் அவர்மீது
ஒருவித வெறுப்பு ஏற்படுகிறது. கொல்லைப்புற வழியாக ஆட்சிக்கு வருகிறார் ராஜாஜி என்றெல்லாம்
அவர்மீது ஒருவிதமான அருவெருப்பான வசைகள்கூட வீசப்பட்டன. அது உண்மையும்கூட.
ஆனால் இந்தச் செய்தி தன்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதாக பெரியார் கூறுகிறார்.
“தோழர் ஆச்சாரியார் அவர்கள் இந்த ராஜியத்தின் முதலமைச்சர் ஆகிறார் என்ற செய்தி
வந்தவுடன் உள்ளபடியே மகிழ்ச்சியடைந்தேன். காரணம் என்னவென்றால் உள்ளபடியே ஆட்சியில் நாணயம் இருக்கும்,” என்று 11.08.1953 நாளிட்ட விடுதலையில்
பெரியார் எழுதுகிறார்.
தன் வாழ்நாள் முழுதும் ஆச்சாரியாருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று
ஆசைப்பட்ட தந்தை பெரியார்,
அவர் முதலமைச்சர் ஆனபோது விமர்சனம் செய்தபோது அது அறத்தின்பாற்பட்ட செயல் அல்ல
என்று பெரும்பான்மையினர் கடும் விமர்சனங்களை வைத்தபோது அவர் பதவி ஏற்பது கண்டு
மகிழ்ச்சியடைகிறார் பெரியார்.
கொஞ்ச காலத்திற்குள்ளாகவே ஆச்சாரியாரை பெரியவர் என்று அழைப்பதற்கு அவர்
வயதானவர் என்பதைத் தவிர வேறெந்தக் காரணமும் தெரியவில்லை என்று கூறுகிறார்.
”ஆச்சாரியார் அவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். அது நம்மால் கூடுமோ. இல்லை காமராஜரால் கூடுமோ எனக்குத் தெரியவில்லை. ஆனால் இதைத்தவிர வேறுவழி எனக்குத் தெரியவில்லை”
என்று குத்தூசி குருசாமி அவர்கள் 28.05.2023 நாளிட்ட “விடுதலை”யில் எழுதுவதை தந்தை பெரியார் அனுமதிக்கிறார்.
ராஜாஜி பதவி ஏற்பது அநீதியானது என்று காங்கிரஸ்காரர்களே முகம் சுளித்தபோது அதை ஏன் மகிழ்ந்து கொண்டாடுகிறார் பெரியார்?
அப்படி மகிழ்ந்து கொண்டாடிய அவர் சொற்ப காலத்திற்குள்ளாகவே வயதைத் தவிர பெரியவர் என்று மதிப்பதற்கு ராஜாஜியிடம் ஏதும் இல்லை என்று ஏன் விமர்சிக்கிறார்? எந்த அளவிற்கு அவரது விமர்சனம் கடுமை கொள்கிறது என்றால்,
19.08.1953 விடுதலைத் தலையங்கத்தில்,
“கலெக்டராக இருந்தவன் கர்ணம் வேலையை ஒப்புக்கொண்ட்து போல கவர்னர் ஜெனரலாக இருந்து 1,000 ரூபாய்க்கு பென்ஷனுடன் ரிட்டையரான இவர் கொல்லைப்புறமாக ஏறிக் குதித்து முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்திருப்பதற்கு கொஞ்சமும் வெட்கப்படவில்லை” என்று எழுதுகிறார்.
எல்லோரும் ”கொல்லைப்புற வழியாக” பதவிக்கு வருகிறார் என்று முகம் சுளித்ததை ஏற்காமல் அவரது பதவியேற்பைக் கொண்டாடியவர் இவ்வளவு கடுமையாக சாடும் அளவிற்கு அவ்வளவு மோசமாக ராஜாஜி என்ன செய்தார்.
இதுவரை நூற்றுக்கணக்கான இடங்களில் எழுதியும் பேசியும் வந்த்துதான். ஆனால் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டிய செய்தி இது என்பதாலும் ஏன் ராஜாஜியை இவ்வளவு கடுமையாக பெரியார் எதிர்க்க ஆரம்பிக்கிறார் என்பதற்கான ஆரம்பப் புள்ளி இது என்பதாலும் இதை இங்கும் வைக்க வேண்டியது அவசியமாகிறது.
29.06.1952 அன்று திருவாண்மியூரில் சலவைத் தொழிலாளிகள் மாநாடு நடைபெறுகிறது. அதில் ராஜாஜி கலந்து கொள்கிறார். அவரை யாரும் அழைக்கவில்லை என்றும், தனது உரையைக்கூட “அழையா விருந்தாளியாக அந்த மாநாட்டில் தான் கலந்து கொள்வதாகவும்” என்றே தொடங்கியதாகவும் தோழர் சாரோன் கூறுகிறார்.
அப்படி அழையா விருந்தாளியாக கலந்து கொண்டவர், “அவனவனும் அவனவன் ஜாதித் தொழிலை செய்ய வேண்டும். வண்ணார் வீட்டுப் பிள்ளைகள் படிக்க வேண்டியது இல்லை” என்றும் பேசியிருக்கிறார் “கிலக்கல்வியை ஒழித்த பெரியார் இயக்கம்” என்ற தமது நூலின் பக்கம் எண் 60 இல் வைத்திருக்கிறார்கள்.
அதுவரை ஆச்சாரியார் தமது மக்களுக்கு நல்லது செய்வார் என்று நம்பிக் கொண்டிருந்தவர் பெரியார். ராஜாஜியின் இந்த உரை அவரது நம்பிக்கையை நார் நாராய்க் கிழித்துப் போட்டிருக்கிறது.
20.03.1953 நடந்த சட்டசபைக் கூட்டத்தில் அன்றைய கல்வி அமைச்சரான திரு M.V.கிருஷ்ணராவ் அவர்கள் அரசு ஒரு புதியக் கல்விக் கொள்கையை அமல்படுத்த தீவிரமாக வருவதாகக் கூறுகிறார்.
அதன்படி கிராமப் புறங்களில் உள்ள பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் மூன்று மணிநேரம் பள்ளிக்கு வந்து படித்தால் போதும். மீதி மூன்றுமணி நேரத்தை தங்களது தந்தைகள் செய்து வரும் குலத்தொழிலை அவர்களிடம் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என்று கூறுகிறார்.
நகரங்களில் படிக்கும் குழந்தைகள் முழு நேரமும் வழக்கம்போல ஆறுமணி நேரமும் கல்வி பயில்வார்கள் என்றும் கல்வி அமைச்சர் தொடர்ந்து கூறுகிறார்.
இதுதான் தந்தை பெரியாரை மிகவும் கொதிப்படையச் செய்கிறது.
மேட்டுக் குடிகளின் வீட்டுக் குழந்தைகள் அனைவரும் நகர்ப்புறப் பள்ளிகளில் படிப்பதால் அவர்கள் குழந்தைகளுக்கு கல்வியில் எந்தவிதமான சேதாரமும் ஏற்படப் போவதில்லை.
கிராமப்புறத்தில் படிக்கும் குழந்தைகள் பெரும்பாலும் அடிமட்டத்தைச் சார்ந்தவர்களின் குழந்தைகள்.
ஆக, செருப்புத் தைக்கும் தொழிலாளியின் குழந்தை ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் செருப்புத் தைக்கும் தொழிலைக் கற்க வேண்டும்.
ஏற்கனவே 29.06.1952 அன்று ”அவனவனும் அவனவன் குலத்தொழிலை செய்ய வேண்டும்” என்று ராஜாஜி கூறியதை இந்தக் கல்வித் திட்டத்தோடு பொருத்திப் பார்க்கிறார் பெரியார். இது புதியக் கல்வித் திட்டம் அல்ல. இது குலக்கல்வித் திட்டம் என்பதைப் புரிந்து கொள்கிறார்.
தான் பார்க்கும் வேலைக்கு வந்துவிடக் கூடாது என்றுதானே அவனவனும் தன் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்புகிறான். அவர்களை அப்பன்மார்கள் பார்க்கும் வேலையையே கற்றுக்கொள்ள ஒரு கல்வித்திட்டம் அனுப்புமானால் அது அயோக்கியத் தனமானது அல்லவா என்று கொதிக்கிறார்.
இடதுசாரிகளோடு இணைந்தும் தனித்துமாக தொடர்ந்து இயக்கங்களை முன்னெடுக்கிறார். மாநாடுகளை நட்த்துகிறார்.
பள்ளிகளைப் புறக்கணிக்க வைக்கிறார்.
காங்கிரஸ் கட்சியில் உள்ள காமராஜர் உள்ளிட்ட தலைவர்களை பையப் பைய இந்தத் திட்டத்திற்கு எதிராகப் போராட வைக்கிறார். சட்டசபை முற்றுகை இடுகிறார்.
ராஜாஜியை வீட்டிற்கு அனுப்புகிறார்.
அதே குலக்கல்வித் திட்டத்தின் புதிய வடிவம்தான் இன்றையப் புதியக் கல்வித் திட்டமும்.
இது ஒரு காரணம் போதும் இன்றைய ஒன்றிய அரசை வீட்டிற்கு அனுப்ப.
செய்வோம்
உயிர்வனம்
ஆகஸ்ட் 2024
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்