மலைகள் விலகி
நீர்த்தடுக்கி
கெட்டிச் சாந்தாகி
கண்ட திக்கில் பாய்கின்றன
ஆழக்
காலம் போட்டு பில்லரிட்ட
கெட்டிக் கட்டிடங்கள்
வாவென்று
தண்ணீர் அழைத்த மாத்திரத்தில்
சகலமும் அடங்கி
ஆர்ப்பரிக்கும் நீர்வழி மிதக்கின்றன
மலைகளே மிதக்கையில்
அவை என்ன செய்யும் பாவம்
எந்தத் திசையிருந்து
எந்தத் திசைநோக்கி பாய்கிறதென்று அறிய இயலாத
காட்டாறொன்றின் மேல்
கரையிருந்து நீளும்
கிளைபற்றித்
தொங்கிக் கொண்டிருக்கிறார்
கடவுளொருவர்
வெள்ளத்தின் இரைச்சலில்
வெள்ள இரைச்சலே அவருக்கு கேட்கவில்லை
நம் வேண்டுதலெப்படி கேட்கும்
ஈரம்
இவ்வளவு பொல்லாததென்று
எமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது
இந்தப் பேரிடர்
மக்களைக் காக்க போராடிக் கொண்டிருக்கிற
மக்களைப் பார்க்கிறேன்
பிழைத்தவர்கள் அறிவார்கள்
பிழைக்க வாய்க்காது போனாலும் நானும் அறிவேன்
மக்கள்...
மக்களைக் காக்கப் போராடுவார்கள்
யாரேனும் கடவுளைப் பார்ப்பதற்குள்
அந்தக் கிளை முறியலாம்
உறைந்து
அவர் கைபிடி நழுவலாம்
அவரே இறக்கலாம்
அநேகமாக
நானும்
காக்கப்படலாம்
அல்லது
நானும்
செத்துப் போகலாம்
இரண்டாவதற்கே
வாய்ப்பதிகம்
புரிந்து கொண்டது
இதுதான்
இயற்கையும்
மனிதமும்
மகத்தானவை
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்