அவள் என்பதே இந்தக் கவிதைக்கு அவள் பெயராகட்டும்
***********************************
அவள்
தனது பெயரை இழப்பதற்குமுன்
பெயரென்னவென்று அவளிடமே கேட்கலாமென்றால்
மொழி புரியவில்லை
அவள் என்பதே
இந்தக் கவிதைக்கு
அவள் பெயராகட்டும்
அந்தப் பேருந்து நிலையத்தில்
தூங்குகிறாள்
மீதிநேரம்
கத்திக் கொண்டிருக்கிறாள்
அவளது சத்தம் பலருக்கு
அருவெறுப்பாகவும்
சிலருக்கு எரிச்சலாகவும்
இருக்கிறது
என்ன பேசுகிறாள் என்று
யாருக்கும் புரியவில்லை
புரிந்துகொள்ள
மெனெக்கெடவும் இல்லை
ஒரு கையில்
பிஸ்கெட் பாக்கெட்டையும்
மறு கையில்
அம்மாவையும் பிடித்தபடி
அவளைக் கடந்த
அந்தக் குழந்தைக்கும்
அவள் சத்தம் கேட்கிறது
அம்மாவின் கை உதறி ஓடுகிறாள்
இரு கன்னங்களிலும்
கைகளை வைத்தபடி
தலையை அப்படியும் இப்படியும் ஆட்டுகிறாள்
அவளும்
அப்படியும் இப்படியும்
தலையை ஆட்டுகிறாள்
பிஸ்கெட் பாக்கெட்டை நீட்டுகிறாள்
ஒரு கையால் பாக்கெட்டை
வாங்கியவள்
மறுகையால் தலைநீவி நெட்டி .
முறிக்கிறாள்
டாட்டா
இருபுறத்திருந்தும் பறக்கிறது
அவளது சத்தம்
பசியின் வலிச் சத்தம்
குழந்தைக்குப் புரிகிறது
குழந்தைக்கு மட்டும் புரிகிறது
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்