கீழே காணும் ஏழு அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் 83 கௌரவ மற்றும் மணிநேர விரிவுரையாளர்களும் 33 அலுவலகப் பணியாளர்களும் ஆக 116
பேர் கடந்த 14 நாட்களாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகிறார்கள் என்ற செய்தி நெஞ்சை அறுக்கிறது.
1)
அரசு கல்லூரி, பெரம்பலூர்
2)
அரசு கல்லூரி, லால்குடி
3)
அரசு கல்லூரி,ஒரத்தநாடு
4)
அரசு கல்லூரி, இனாம்குளத்தூர்
5)
அரசு கல்லூரி, வேப்பூர்
6)
அரசு கல்லூரி, அறந்தாங்கி
7)
அரசு கல்லூரி, நன்னிலம்
உள்ளிருப்பு போராட்டம் நடத்த வேண்டிய தேவை ஏன் இவர்களுக்கு வந்தது?
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களும் உறுப்பு கல்லூரிகளை நடத்தி வந்தன. இந்த வகையில் 41 உறுப்பு கல்லூரிகள் இயங்கி வந்தன.
1)
நிரந்தர விரிவுரையாளர்கள்
2)
கௌரவ விரிவுரையாளர்கள்
3)
மணிநேர விரிவுரையாளர்கள்
என்கிற மூன்று வகையினராக இந்த கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் பணியாற்றி வந்தனர். இவர்களில் நிரந்தர விரிவுரையாளர்கள் குறித்து இங்கு பேசுவதற்கு ஏதும் இல்லை.
இதில் கௌரவ விரிவுரையாளர்கள் 17,500 ரூபாயில் இருந்து
25,000 ரூபாய் வரைக்கும் தங்களது கல்வி தகுதிக்கேற்ப ஊதியம் பெற்று வந்தார்கள்.
மணிநேர விரிவுரையாளர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 400
ரூபாய், அதிகபட்சமாக ஒரு மாதத்திற்கு 40 மணி நேரம் என்கிற அளவில் பணி வழங்கப்படுகிறது.
இதன்படி மணிநேர விரிவுரையாளர் ஒருவர் ஒரு மாதத்திற்கு அதிக பட்சம் 16,000 ரூபாய் மட்டுமே ஊதியமாகப் பெற முடியும்.
இதைவிட அதிகமான ஊதியத்தை சில கடை ஊழியர்களே வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
மண் எடுக்கும் ஊழியர்களுக்கும் அச்சாபீசில் கம்போசிடர்களாக ஊழியம் பார்ப்பவர்களுக்கும் 4 ரூபாய் தினக் கூலி என்பது அநியாயம் என்றும் கம்போசிடர்களுக்கு அதிகம் வழங்க வேண்டும் என்றும்
17.08.1973 அன்று தந்தை பெரியார் பேசியதை 25.08.1973 அன்றைய விடுதலை வைத்திருக்கிறது.
எனில், 10 ஆம் வகுப்பு மட்டுமே முடித்த குழந்தைகள் கடைகளில் 15,000 ரூபாய் பெறும்போது, காலத்தையும் பொருளையும் செலவழித்துப் படித்து,
Phd முடித்து வரும் விரிவுரையாளர்களுக்கு 16,000 ரூபாய் ஊதியம் என்பதே கண்டிக்கத் தக்கது.
இந்த ஊதியம் குறைவானது என்றும் 50,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும் UGC
அறிவுறுத்தி உள்ளது. இதை 2019 இல் இருந்து நிலுவைத் தொகையோடு வழங்க வேண்டும் என்றும் அது உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இதன்படி ஊதியம் வழங்க வேண்டும் என்று சிலர் மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறார்கள். வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
அதை நடைமுறைப் படுத்தாத அரசிற்கு எதிராக நீதிமன்ற வழக்கும் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் இவர்கள் உள்ள ஊதியத்தையாவது கொடுங்கள் என்று போராட வைத்தது எது?
ஏன் எட்டு மாதங்களாக இவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை?
2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அரசாணை
எண் 36 இன்படி 14 கல்லூரிகள் மற்றும் அரசாணை எண்
186 இன்படி 27 கல்லூரிகள் என்று 41 உறுப்பு கல்லூரிகளையும் அரசு கல்லூரிகளாக அறிவிக்கிறார் அன்றைய முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள்.
.இதுவரை பல்கலைக் கழகங்களிடம் இருந்து வந்த இந்த விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்களின் சம்பள செலவினம் நேரடியாக அரசின் கைகளுக்கு செல்கிறது.
அதுவரை பல்கலைக் கழகங்களிடம் இருந்து ஊதியத்தை பெற்றுவந்த விரிவுரையாளார்களும் ஊழியர்களும் தங்களது ஊதியத்தை கருவூலம் வழியாக பெறத் தொடங்குகிறார்கள்.
இது ஒரு வகையில் மிக நல்லதொரு ஏற்பாடு. இனி அரசாணை எண் 56 மூலமாக நமது பணியிடங்கள் நிரந்தரமாவதற்கு வாய்ப்பு பிறந்திருக்கிறது என்று விரிவுரையாளர்களும் ஊழியர்களும் கொஞ்சம் மகிழ்ந்தும் போனார்கள்.
பல்கலைக் கழகத்தின் வசம் இருந்து சம்பள செலவினம் அரசின் கைகளுக்கு மாறுகிறபோது,
1)
கல்லூரிகளின் நடத்தப்படும் பாடப் பிரிவுகள்
2)
பிரிவுகள் வாரியாக பணியாற்றும் விரிவுரையாளர்கள் பட்டியல்
3)
பிரிவு வாரியாகப் பணியாற்றும் ஊழியர்களின் பட்டியல்
போன்ற விவரங்களை பல்கலைக் கழகங்கள் அரசிற்கு வழங்க வேண்டும்.
இந்த விவரங்களை அரசிற்கு அனுப்பும்போது பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் உள்ள மேற்காணும் ஏழு கல்லூரிகளும் சில பிரிவுகளை குறிப்பிடத் தவறிவிட்டன. செலவினத்தை திட்டமிடுவதற்கு அனுப்பும் போது இப்படியான தவறுகளைச் செய்வது குற்றம்.
தம்மிடம் வழங்கப்பட்ட பட்டியலுக்கேற்றபடி செலவினத்திற்கு அனுமதி அளிக்கிறது.
இந்த இடம் வரைக்கும் இதில் அரசின் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.
பல்கலைக் கழகத்தன் கவனப் பிசகால் விடுபட்ட பிரிவுகளுக்கு பாடம் எடுக்கும் 83 விரிவுரையாளர்களுக்கும் 33 ஊழியர்களுக்கும் தவிர ஏனைய ஆசிரியர்களுக்கும் ஊழியர்களுக்கும் கருவூலம் வழியாக மாதா மாதம் சரியாக ஊதியம் வந்து விடுகிறது.
இதை சரி செய்வதற்கான நடவடிக்கைகளையும் உரிய அவசரத்தில் இந்தக் கல்லூரிகளோ அல்லது பல்கலைக் கழகமோ எடுக்கவில்லை. மாறாக இந்த 116
பேருக்குமான ஊதியத்தை பல்கலைக் கழகமே வழங்க ஆரம்பிக்கிறது.
பல்கலைக் கழகத்தின் நிதிச்சுமையின் காரணமாகவோ என்னவோ கடந்த எட்டு மாதங்களாக இவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.
பல்கலைக் கழகத்தின் முக்கியமான செலவினம் என்பது பாடம் நடத்துபவர்கள் மற்றும் ஊழியர்களின் ஊதியம்தான் என்பதை பல்கலைக் கழகம் மறந்துவிடக் கூடாது.
விரிவுரையாளர்களும் ஊழியர்களும் அவரவர் கல்லூரிகளில் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்துகிறார்கள்.
அரசிற்கு வந்த செலவினத்தை அரசு விடுவித்திருக்கிறது. இதில் அரசின் பிழை இல்லை என்பதை ஆண்டுக் கணக்காக அரசு கூறக் கூடாது.
அதுவும் கல்வியில் மிகுந்த அக்கறையோடு கவனம் குவிக்கும் திரு ஸ்டாலின் அவர்களது அரசாங்கம் இதைத் தவிர்த்தே ஆக வேண்டும்.
பிழை பல்கலைக் கழகத்தினுடையது. தவறு இழைத்தவர்களைத் தண்டித்துக் கொள்ளுங்கள்.
விரிவுரையாளார்களுக்கும் ஊழியர்களுக்கும் ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யுங்கள். மாதா மாதம் இவர்களுக்கு ஊதியம் கிடைப்பதை உத்தரவாதப் படுத்துங்கள்.
இவர்களை நிரந்தரப்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள அரசாணை எண் 56 ஐ உடனடியாக நடைமுறைப்படுத்தப் பாருங்கள்.
கடின உழைப்பிற்கு ஈடு இணை இல்லை என்பது சரி, ஊதியமும் இல்லை என்றால் எப்படி?
தீக்கதிர்
10.08.2024
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்