அந்த பொம்மை மக்குவதற்குள்
****************************************
இப்போதெல்லாம்
கொன்றுபோட்ட
லாரியில் கொட்டுவதற்குமுன்
ஏதேனும் அவர்கள்
எழுதி வைத்திருக்கிறார்களா என்று
அவர்களது பாக்கெட்டுகளைத் துழாவுகிறார்கள்
இஸ்ரேலிய துருப்பினர்
அந்தக் குழந்தைகளின் துயரத்தில்
சிலர் கொக்களிக்கிறார்கள்
சிலர் புன்னகைக்கிறார்கள்
யாருமறியாமல்
கண்களைத் துடைத்துக் கொள்பவர்களும்
அவர்களில் இருக்கவே செய்கிறார்கள்
அப்படிப்பட்ட ஒருவனிடம்
ஒரு குழந்தையின் பாக்கெட்டில்
ஒரு கடிதம் கிடைக்கிறது
அன்புள்ள இஸ்ரேலிய மாமாவிற்கு
என்று தொடங்கிய அந்தக் கடிதத்தில்
தன் கரடி பொம்மையை
தன்னோடு சேர்த்து
புதைத்துவிட வேண்டாமென்றும்
அந்த பொம்மை மக்குவதற்குள்
பாலஸ்தீனம் மலருமென்று
தான் நம்புவதால்
தங்கள் கல்லறைமேல்
அதைப் போட்டுவிடுமாறும்
பாலஸ்தீனம் எழும் நாளில்
தம் கல்லறைக்கு வரும்
யாரோ ஒரு குழந்தைக்கான
தனது பரிசு அதுவென்றும்
எழுதி இருந்தாள்
தன் வாழ்நாளுக்குள்
அது நடந்துவிடுமென்று
அந்த இஸ்ரேலிய துருப்புக்காரனும்
நம்பினான்
அந்த நாளில்
தானே
ஒரு பாலஸ்தீனக் குழந்தைக்கு
அதைக் கொடுத்துவிடலாம் என்று
அந்தக் குழந்தையின் அணைப்பிலிருந்த
பொம்மையை பத்திரத்திரப்படுத்திய
அந்த இஸ்ரேலிய துருப்புக்காரன்
தன் சகாக்கள் யாரும்
பார்க்க வாய்க்காத ஒரு நொடியில்
அந்தக் குழந்தைக்கு முத்தமிட்டான்
தீக்கதிர்
25.08.2024
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்