Monday, August 11, 2014

குட்டிப் பதிவு 4

நான் வழக்கமாக பயணிக்கும் பேருந்து மழையில் குளித்து வந்தது. அந்தப் பக்கம் நல்ல மழையா என்ற என் கேள்விக்கு சங்கரா புரத்திலிருந்து இருந்து கிருஷ்ணாபுரம் வரைக்கும் சரி மழை என்றார் நடத்துனர்.

ம்ம்ம்... எங்கெங்கையோ பெய்யுது. எங்க ஊருலதான் பெய்ய மாட்டேங்குது என்றவனிடம் மழை எங்க பேஞ்சாலும் சந்தோஷப் படனும்பா. மழைனாலே சந்தோஷம்னுதான் அர்த்தம் என்றார் பக்கத்தில் அமர்ந்திருந்த கிராமத்து பெரியவர்.

ஆஹா, நானும் வழிமொழிகிறேன்,

மழைனாலே சந்தோஷம்னுதான் அர்த்தம்.

Sunday, August 10, 2014

கவிதை 12

கொத்தாமல் போனதால் குடும்பத்திற்காகாதாம்
கொத்த இறைஞ்சிடத் தேடிக் கொண்டிருக்கிறேன்
நேற்றென் கனவில் வந்தப் பாம்பை

Saturday, August 9, 2014

குட்டிப் பதிவு 3

சராசரியாக வருடத்திற்கு ஒரு லட்சம் குழந்தைகள் காணாமல் போவதாகவும், அவர்களில் பெரும்பான்மையோர் பெண் குழந்தைகள் என்றும் மத்திய அரசு கூறியுள்ளதாக இன்றைய BETAவிகடன் செய்திகள் சொல்கிறது.

இப்பிரச்னையில் அரசு அக்கறையற்று இருப்பதாக கடுமையாக சாடியதோடு, காணாமல் போகும் குழந்தைகள் குறித்து யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை என்றும் உச்சநீதி மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தி சொல்கிறது.

என்ன சொல்லுங்கள், பல நேரங்களில் உச்சநீதி மன்றம் நல்ல எதிர்க் கட்சியாக செயல்படுகிறது. அது வீசிய ஒரு கேள்வியின் சூடு நெஞ்சைக் கிழிக்கிறது

”காணாமல் போகும் குழந்தைகள் குறித்து யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை”

Friday, August 8, 2014

அவனுக்கே முந்திப் பிறந்தவர்கள்....

மஹாராஸ்ட்ரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ளது மலின் என்ற பழங்குடிகள் வாழும் கிராமம். இன்று அது உலகெங்கும் பரபரப்பாய் பேசப்படுவதறது. அதற்கான காரணம் மிகவும் சோகமானதும் வலியினைத் தருவதுமாகும்.

சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் இந்த கிராமத்தில் வாழ்ந்த ஏறத்தாழ 250 பழங்குடி இன மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.

இந்த நிலச்சரிவு இயற்கையாய் ஏற்பட்டது அல்ல என்றும், மாறாக சில மனிதர்களால் உருவாக்கப் பட்ட பேரழிவு என்றும் என்றும் தெரிய வருவதாக மார்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழுவின் அறிக்கை கூறுவதாக இன்றைய தீக்கதிர் ( 02.08.2014) சொல்கிறது.

மலினுக்கு அருகில் உள்ள திண்டா அணையிலிருந்து வெள்ளக் காலங்களில் நீர் திறந்து விடப் பட்டபோது நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் சேதம் இந்த அளவிற்கு இல்லை. ஆனால் இப்படி நிகழக் கூடும் என்ற எச்சரிக்கை மாநில மற்றும் மத்திய அரசுக்கு தரப் பட்டிருக்கிறது.

இங்கு பழங்குடிகளுக்கு நல்லது செய்வதாக சொல்லிக் கொண்டு
ஜே பி சி இயந்திரங்கள் அதிக அளவில் பயன்படுத்தப் பட்டுள்ளன. இதுதான் பேரழிவிற்கான பெருங்காரணமாக சொல்லப்படுகிறது.

பழங்குடிகளை எப்படியேனும் அப்புறப் படுத்திவிட வேண்டும் எனும் நோக்கமே என்றும் தெரிகிறது. உள்ளூர் அரசியல் வாதிகள் , இயந்திர உரிமையாளர்கள் மற்ரும் பேராசை பிடித்த அதிகாரிகள் இணைந்து இதை செய்திருக்கக் கூடும் என்றும் தீக்கதிர் சந்தேகப் படுகிறது.

அந்த சந்தேகத்தில் நியாயம் இருப்பதாகவே படுவதால் தீவிர விசாரனையும் நிரூபனமானால் கடுந்தண்டனையும் உரியவர்களுக்கு போய் சேரவேண்டும்.

கடவுள் என்றொருவன் இருந்தால் அவனுக்கே முந்திப் பிறந்தவர்கள் பழங்குடிகள்.

Thursday, August 7, 2014

கவிதை 11

நாய் வாலை நிமிர்த்த முடியாதென்ற
நாய் பாஷை புரியாதவனுக்கு
எப்படி புரியும்
எதற்கு நிமிர்த்தனுமென்ற 
நாயின் எதிர்க் குரல்

Wednesday, August 6, 2014

வன்கிர்க்

ஹிரோஷிமாவில் குண்டு வீசப்பட்ட தினம் இன்று








தியோடர் வன்கிர்க் தனது 93 வது வயதில் சென்ற வாரம் காலமானார்.

அது சரி, யார் இந்த தியோடர் வன்கிர்க்?

இரண்டாம் உலகப் போரின் நாயகன் என்று தியோடர் வன்கிர்க்கை அழைப்பார்கள். நெதர்லாந்தில் பிறந்த அவர் பிறகு அமெரிக்கக் குடியுரிமை பெற்றார். அமெரிக்க ராணுவத்தில் விமானியாகப் பொறுப்பேற்றார்.

இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்க அரசு அவரை “ எனோலா கே “ (enola gay ) என்ற இருபத்தி நான்குபேர் கொண்ட விமானக் குழுவில் ஒருவராக நியமித்தது.

”லிட்டில் பாய்” என்ற அந்தக் கொடூரமான அணுகுண்டை ஹிரோஷிமாவில் அவர்தான் வீசினார். அதன் விளைவாக இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது.

அவர்தான் இப்போது மரணமடைந்திருக்கிறார்.

சற்றேரக் குறைய இரண்டு லட்சத்து இருபதாயிரம் பேரை பழிவாங்கிய, இன்றுவரை சபிக்கப் பட்டப் பகுதியாகவே அதை மாற்றிப் போட்டதைப் பற்றி அவர் எள்ளளவும் வருத்தப் பட்டதில்லை. மாறாக இரண்டாம் உலகப் போர் முடிவு பெற தான் ஒரு கருவியாக இருந்ததற்காக மகிழ்ச்சியோடே இருந்தார் என்று அவரது மகன் தோம் வன்கிர்க் தெரிவித்ததாக 31.07. 2014 ஜனசக்தி சொல்கிறது.

அவர் அணுகுண்டு வீசியதை விடவும் அதை அவர் நியாயப் படுத்திப் பேசியது கொடூரத்தின் உச்சம்

Tuesday, August 5, 2014

நிலைத் தகவல் 62

தில்லியைச் சேர்ந்த நடத்துனர் ஒருவர் 15 பைசாவிற்கு தரவேண்டிய பயணச்சீட்டிற்கு பதிலாக 10 பைசா பயணச்சிட்டு கொடுத்தமைக்காக பணிநீக்கம் செய்யப்பட்டு அந்த வழக்கு ஏறத்தாழ 40 வருடங்களுக்கும் மேல் நடந்துள்ளதாக போன வாரம் பத்திரிக்கைகளில் பார்க்க முடிந்தது.

அரசுக்கு 5 பைசா இழப்பு ஏற்படுத்திருக்கிறார் எனவே ஓய்வூதியப் பலன்கள்கூட அவருக்கு வழங்க இயலாது என்று தில்லி அரசு போக்குவரத்துக் கழகம் சொல்லிவிட்டதாகவும் தெரிகிறது.

மாண்பமை அருண் ஜேட்லியோ தினம் தினம் 200 ரூபாய் சம்பாரிக்கும் செல்வந்தன் மானிய விலையில் சமையல் எரிவாயு வாங்குவது எப்படி சரியாகும். அரசுக்கு இழப்பல்லவா? என்கிறார்.

இப்படி மானிய விலையில் எரிவாயு வாங்குவது தேசத் துரோகமென்றும். அதை விடுத்து தேசப் பற்றாளர்களாக மாறுமாறும் சித்தாள்களுக்கும் தள்ளு வண்டி வியாபாரிகளுக்கும் எங்கிருந்தோ அசிரீரி குறுஞ்செய்திகள் வருகின்றன.

தேவையற்ற செலவுகளில் இருந்து அரசைக் காப்பாற்றும் தேச பக்தர்களைப் பார்த்து நெசத்துக்குமே புல்லரிக்கத்தான் செய்கிறது.

2007 ஆம் ஆண்டு தொலை தூரத்தில் உள்ள 27 மாநிலங்களைச் சார்ந்த 500 மாவட்டங்களுக்கு தொலை தொடர்பு இணைப்பு கொடுக்கும் திட்டம் தனியாருக்கு தாரை வார்க்கப் பட்டது.

இதில் நடந்த முறை கேடுகள் கண்டு பிடிக்கப் பட்டு அந்த 14 நிறுவனங்களுக்கும் 600 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப் பட்டது. 600 கோடியிலிருந்து அபராதமானது 5 கோடிக்கு இறங்கிவிட்டதாகவும் இந்த வகையில் அரசுக்கு 595 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் மத்திய தலைமை கணக்காயர் (சிஏஜி) கூறியுள்ளார் என்ற தகவல் இன்றைய (03.08.2014) தீக்கதிரில் கிடைக்கிறது.

மாண்பமை ஜேட்லி அவர்களுக்கு இந்தத் தகவலை ஃபார்வர்ட் செய்கிறேன்.

இது கண்டுபிடிக்கப் பட்டால் காங்கிரஸ் கட்சிக்குத்தான் பிரச்சினை.

ஆனாலும் செய்யமாட்டார். காரணம் அந்த நிறுவனங்கள் காங்கிரசுக்கும் வேண்டியவர்கள், இவர்களுக்கும் வேண்டியவர்கள்.

Monday, August 4, 2014

கவிதை 10

மௌனப் படுத்தி சட்டைப் பையில் போடப்பட்ட
அவரது எத்தனையோ அழைப்புகளைப் போலவே
இன்றைக்கும் செய்திருக்கலாம்
எடுத்ததால் 
ராமசாமிக்கு எழுபத்தியெட்டு பைசாவும்
எனக்கு ராமசாமியும் இழப்பு

Sunday, August 3, 2014

சிசுக்கொலை போய் கருக்கொலை

முற்றிலும் ஒழிந்த பாடில்லை என்றாலும் தற்பொழுது சிசுக் கொலைகள் பெருமளவு குறைந்திருக்கின்றன.

ஆனால் பெண் கருக்கொலைகள் வளர்ந்திருக்கின்றன என்கிற அதிர்ச்சி தரும் தகவலை ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி சங்கத்தின் இயக்குனர் ஜீவா அவர்கள் வேதனையோடு சொல்கிறார்.

தமிழகத்தில் உள்ள ஏறத்தாழ 550 ஸ்கேன் செண்டர்கள் பெண் கருக்கலைப்புக்கு உடந்தையாக இருப்பதாகவும் அது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்திருப்பதாகவும் அவர் கூறுகிறார். 

பெண் கருக்கொலை என்ன விலை கொடுத்தேனும் தடை செய்யப்பட வேண்டியது.

காவல்துறையும் அரசும் கவனம் குவிக்க வேண்டும்.

Saturday, August 2, 2014

குட்டிப் பதிவு 2

வீட்டில் ஒரு செல் இருக்கும். அது முழுக்க முழுக்க கீர்த்தியின் கட்டுப்பாட்டில். விக்டோரியா பெயரை அம்மா என்றும் கிஷோர் பெயரை அண்ணன் என்றும் தீபா பெயரை அத்தை என்றும் என் பெயரை எட்வின் லூசு என்றும் பதிந்து வைத்திருக்கிறாள்

Friday, August 1, 2014

உசிரையாவது....

முதலாளிகளுக்கும் பணக்காரர்களுக்குமேயான அரசு தங்களது அரசு என்பதை நி்ருவ இவர்களுக்கு 100 நாட்கள்கூட தேவைப்படவில்லை.

ஏழைகளும் நடுத்தர மக்களும் பயணிக்கும் இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் ஒன்று எடுக்கப் பட்டு அதற்குப் பதிலாக மூன்றடுக்கு ஏசி பெட்டி ஒன்று இணைக்கப் படும் என்று ரயில்வே திட்டமிட்டுள்ளதாக இன்றைய தினகரன் செய்தி சொல்கிறது

பணக்காரர்கள் காத்துக் கிடக்க ஏழைகளுக்கு ரயில் பயணம் ஒரு கேடா? நடந்து போங்கள் பித்துக்குளிகளா என்றிருக்கிறார்கள்.

ஏழைகளுக்கான ரயில் பெட்டி இன்று....

மருத்துவம் நாளை....

கல்வி நாளை மறுநாள்....

எல்லாம் ஒவ்வொன்றாய் பிடுங்கப் படும்....

அரசைப் பற்றி விமர்சிக்க ஆறு மாதமேனும் அவகாசம் கொடுங்கள் என்றவர்களிடம் ஒரு கேள்வி,

ஆறுமாதம் கழித்து உங்களது அரசை விமர்சிக்கவேனும் அதுவரை ஏழைகளின் உயிரையாவது விட்டு வைத்திருப்பீர்களா?

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...