Saturday, July 9, 2016

இருங்கலூர் கைகாட்டியில் பேருந்து நின்றது

அந்த நிறுத்தத்தில் நகரப்பேருந்துகளைத் தவிர புறநகர் பேருந்தெதுவும் நிற்காது . மிகவும் வயதான பெரியவர் ஒருவர் கைநீட்டவே மனிதாபிமானத்தோடு ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார்.
"எங்கங்கய்யா?" என்ற நடத்துனரிடம் "இருங்கலூர் கைகாட்டி" என்றார்.
சென்னையிலிருந்து வரும் மதுரை போகும் வண்டி அது.
சென்னையிலிருந்து மதுரை போற வண்டி கைகாட்டியெல்லாம் நிற்க முடியுமா? என்று கேட்ட நடத்துனரிடம் அகரத்துல பஸ் நிக்கும்னா இருங்கலூர் கைகாட்டியிலும் நிக்கனும். அகரத்தவிட எங்க ஊர் எதுல கொறஞ்சு போச்சு? என்றதும் நடத்துனரும் ஓட்டுனரும் சிரித்து விட்டனர்.
இருங்கலூர் கைகாட்டியில் பேருந்து நின்றது

65/66, காக்கைச் சிறகினிலே ஜூன் 16

மும்பை மகாலட்சுமி ரயில் நிலையம். அந்த ரயில் வந்து நிற்கிறது. மக்கள் இறங்கி பயணச்சீட்டு பரிசோதகரிடம் தங்களது பயணச்சீட்டுகளை கொடுத்துவிட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்.

அந்தப் பெண் தன் அருகே வந்ததும் பயணாச்சீட்டைப் பெறவேண்டி கையை நீட்டுகிறார் பரிசோதகர். அந்தப் பெண் நிற்கிறார். பயணச்சீட்டை எடுத்துத் தருவதற்கான எந்த முயற்சியையும் அவர் எடுக்கவில்லை.

“மேடம், டிக்கெட்”

“என்னிடம் இல்லை”

“ஏன்?”

“நான் பயணச்சீட்டு வாங்கவில்லை”

“ஏன் பயணச்சீட்டு எடுக்கவில்லை?”

“ஏன் மேடம் அவசரமாக ஏறிவிட்டீர்களா?”

“இல்லை, எடுக்கக் கூடாது என்பதற்காகத்தான் எடுக்கவில்லை”

“அது குற்றம்”

“அப்படியா. சரி, குற்றமாகவே இருக்கட்டும். என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள்”

அவரை ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்கு அழைத்து செல்கிறார் பரிசோதகர். அவரைப் பார்த்ததும் ஸ்டேஷன் மாஸ்டருக்கு புரிகிறது.

அவர் பிரேமலதா பன்சாரி, குறிப்பிட்டு சொல்லும்படியான ஒரு தொழில் அதிபரின் மனைவி.. பொது ரயிலில் பயணம் செய்யவேண்டிய தேவையே இல்லாதவர்.

ஏன் பயணச்சீட்டு வாங்கவில்லை என்று பரிசோதகர் கேட்ட கேள்வியையே ஸ்டேஷன் மாஸ்டரும் கேட்கிறார். எடுக்கவில்லை, அதற்குரிய தண்டனையை ஏற்கத் தயாராக இருப்பதாகவும் கூறுகிறார். 260 ரூபாய் அபராதக் கட்டணம் செலுத்துமாறு ஸ்டேஷன் மாஸ்டர் கூறுகிறார்.

அபராதக் கட்டணத்தை கட்ட முடியாது என்று உறுதியாக மறுக்கிறார். அபராதக் கட்டணத்தைக் கட்டத் தவறினால் ஒரு வாரமேனும் சிறைப்பட வேண்டி இருக்கும் என்று மிரட்டிப் பார்க்கிறார்கள். அதற்குத் தாம் தயாராய் இருப்பதாகக் கூறுகிறார்.

மிரட்டிப் பணிய வைக்கலாம் என்று முயன்றவர்கள் இப்போது மிரண்டுபோய் நிற்கிறார்கள்.

அவரது கணவரது அலைபேசி எண் பெற்று அவருக்கு தகவல் தருகிறார்கள். அவரது கணவர் பதறிக் கொண்டு வருகிறார். அவரிடம் நடந்தவற்றை எடுத்துக் கூறிய ஸ்டேஷன் மாஸ்டர் 260 ரூபாய் அபராதத்தை செலுத்தி பிரச்சினையை சுமூகமாக முடித்துக் கொண்டு உதவுமாறு கூறுகிறார். பர்சை எடுத்து பணம் எடுக்கப் போனவரை பாய்ந்து தடுக்கிறார் பிரேமலதா. பிரச்சினையை வளார்க்க வேண்டாம் என்றும் தமது குடும்ப கௌரவம் பாதிக்கப் படும் என்றும் கூறுகிறார்.

இது தனது சொந்தப் பிரச்சினை என்றும் இதில் தனது கணவர் தலையிடுவதை தான் விரும்பவில்லை என்றும் கூறிய பிரேமலதா, பயணச்சீட்டு எடுக்காமல் பயணிப்பவர் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கூறுகிறார்.

ஏன் இப்படி முரண்டு பிடிக்கிறார் என்று கேட்டபொழுது ஒரு காரணமாகத்தான் என்று கூறுகிறார். ஏன் என்று கேட்டபொழுது ஒன்பதாயிரம் கோடி ரூபாய் பணத்தை கடன் வாங்கி ஊதாரித்தனமாக செலவளித்த்துவிட்டு திருப்பி கட்ட இயலாது என்று சொன்ன மல்லையாவை தப்பவிட்ட அரசுக்கெதிராக மக்களது கவனத்தை ஈர்க்கவே தான் சிறை செல்வதாக கூறி ஒரு வாரம் சிறைப்படுகிறார் பிரேமலதா.

பழைய போராட்ட வடிவங்கள் நீர்த்துப் போகிறபோது புதிய வடிவங்களிலான போராட்டங்கள் தேவைப்படவே செய்கின்றன. அதில் ஒன்றுதான் இது.

தனது சுதந்திரத்திற்கு மத்திய அரசு உத்திரவாதமளித்தால் தான் இந்தியா தயாராக இருப்பதாக மல்லையா தெரிவித்துள்ள நிலையில் விஷயத்தை ஆறப்போட்டு அவரை பத்திரமாக உள்ளூர் அழைத்து வந்து அவர் கேட்டுக் கொண்அபடி அவரது சுதந்திரத்தை உத்திரவாதப் படுத்தவே மத்திய அரசு முயலும்.

பெரிய விளைவுகளை ஏற்படுத்தாது என்றபோதிலும் மத்தியதர மற்றும் உயர் மத்தியதர மக்களின் கவனத்தை பிரேமலதாவின் போராட்டம் ஈர்க்கவே செய்திருக்கிறது,

நன்றியும் வணக்கமும் பிரேமலதா.

**************************************************************************** 

எதிர்பார்த்தபடியே கேரளாவில் மீண்டும் இடதுசாரிகளின் ஆட்சி மலர்ந்திருக்கிறது. தோழர் பிரணாயி விஜயன் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

தேர்வு செய்யப்பட்டவுடன் அவர் நேராக முன்னால் முதல்வர் அச்சுதானந்தன் அவர்கள் வீட்டிற்கு சென்று அவரது வாழ்த்துக்களைப் பெற்றிருக்கிறார்.. இதில் ஆச்சரியப் படுவதற்கு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. தனது கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரிடம் சென்று வாழ்த்துக்களைப் பெறுவது என்பது வழமையான ஒன்றுதான்.

ஆனால் அதற்கு அடுத்ததாக அவர் செய்த காரியம்தான் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. தோழர் அச்சுதானந்தன் வீட்டிலிருந்து வெளியே வந்ததும் நேராக அவர் சென்றது கேரளாவின் விடைபெறும் முதல்வர் மரியாதைக்குரிய உம்மன்சாண்டி அவர்களின் வீடிற்குத்தான்.

வாழ்த்துக்களைப் பெறுவதற்காக தம் இல்லம் வரும் விஜயன் அவர்களை உம்மன்சாண்டியும் அவரது மனைவியும் வாசலில் காத்திருந்து அகம் மலர ஒரு நண்பனை அழைத்துப் போவதுபோல அரவனைத்து அழைத்துச் செல்கிறார்.

கொஞ்சமும் போலியில்லாத மேன்மையான பண்பாடு. மேற்கு வங்கம் உள்ளிட்டு எல்லா இடங்களிலும் இந்தப் பண்பாடு மலர வேண்டும் என்றே விரும்புகிறேன்.

*******************************************************************************************

“என் சிவப்பு பால் பாயிண்ட் பேனா” என்ற தோழர் மாடசாமியின் குறுநூலை அவசியம் அனைவரும் வாசிக்க வேண்டும். குறைந்த பட்சம் ஆசிரியர்கள் அனைவரும் வாசிக்க வேண்டும்.

“திருத்தித் தரப்படும் தேர்வுத் தாள்களுக்காக தன் மாணவர்கள் பசியோடு காத்திருக்கத் தொடங்கினார்கள்” என்று ஒரு இடத்தில் போகிற போக்கில் எழுதிப் போகிறார்.

எவ்வளவு ஆழமான வரி இது. திருத்தித் தரப்படும் தேர்வுத் தாள்களுக்காகவும் தேர்வு முடிவுகளுக்காகவும் மாணாவர்கள் பசியோடு காத்திருக்கக் கூடிய நிலை வரவேண்டும்.

குழந்தைகளின் உயிரை காவு கேட்கும் தேர்வுமுறை அய்யோ என்று போகட்டும்.

********************************************************************** 

பிரச்சாரத்திற்காக சென்றுகொண்டிருக்கிறார் திருமாவளவன். ஒரு இடத்திலே பெருங்கூட்டமாய் நிற்கிறார்கள்.எட்டிப் பார்க்கிறார்.இரு சக்கர வாகனத்தில் பயணித்த ஒரு தம்பதியினர் விபத்திலே சிக்கி போராடிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறார்.

உடனே வண்டியிலிருந்து இறங்கி அவர்களாஇ வண்டியிலேற்றி ஜிப்மர் மருத்துவ மனைக்கு கொண்டுபோவதற்கு ஏற்பாடு செய்கிறார். அப்போது கூட்டத்திலிருந்த சிலர் 108 ற்கு போன் செய்து ஒரு மணி நேரமாகிறது இன்னும் வரவில்லை என்று சொல்கிறார்கள். ‘பாவிகளா ஒரு மணிநேரமா வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருந்தீர்களா?’ என்று கடிந்து கொண்டிருக்கிறார்.

வண்இயில் ஏற்றப் போனபோது அந்த மனிதன் பாட்டாளிமக்கள் கட்சி கறைபோட்ட வேட்டி கட்டியிருப்பதை அவரது கவனத்திற்கு கொண்டு போகிறார்கள்.

“ஆமாம், இப்ப அதுதான் ரொம்ப முக்கியமா?” என்று கோவப் பட்டிருக்கிறார்.

தோழர் திருமாவளாவன் அவர்களின் இந்தக் கோவத்தின் ரசிகனாயிப் போனேன் நான்

**************************************************************************** 

வண்டியில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.ஒரு பிள்ளை நிறுத்தி லிஃப்ட் கேட்கிறான். ஏற்றிக் கொள்கிறேன்.

தேங்க்ஸ் அங்கிள் என்றவன் கொஞ்ச நேரம் கழித்து கேட்டான்,

“முன்னாடி போற வண்டிக்கும் நம்ம வண்டிக்கும் இடையில இருக்கிற கேப் கூடவோ குறையவோ இல்லையே. எப்படிங்க அங்கிள்?”

ரொம்ப புத்திசாலித் தனமாக பதில் சொல்வதாக நினைத்துக் கொண்டு சொன்னேன்,

“ரெண்டு பேரும் ஒரே வேகத்தில் போகிறோம் அல்லவா அதனால்தான்பா”

கேட்டான்,

“ ஆனா அது 50 சிசி, இது 125 சிசி அங்கிள்”

அதுக்குமேல பேசுவேன்
********************************************************************************       

நான் ராம் தனது கூரிய நறுக்குகளால் என்னை அடிக்கடி கட்டிப் போடுகிறார்.

“தண்டவாளம்
குறுக்கிடும்
தாண்டிச்செல்வோம்”

என்று நம்பிக்கை விதைகளை போகிற திசை எங்கும் தூவிப் போகிறார். ஆம். தாண்டுகிற அளவுதான் தண்டவாளம் என்பதை உறுதிபடுத்துவோம்
******************************************************************************************************  

Friday, July 8, 2016

28. மைதானத்தில் நின்றபடி சூரியனை

‘அப்பா, இந்தப் பள்ளிக்கூடம் நல்லாவே இல்ல. திரும்பவும் நம்ம ஊர் பள்ளிக்கூடத்துலேயே என்ன சேர்த்துfவிடு’
இப்படிக் கூறிய குழந்தை படித்துக் கொண்டிருந்த அந்தப் பள்ளி சென்னையின் மிக உயர்தரமான பள்ளிகளில் ஒன்று. அவன் மீண்டும் படிக்க விரும்பிய, இதற்கு முன் அவன் படித்துக் கொண்டிருந்த பள்ளி இரண்டே இரண்டு மினி பேருந்துகள் மட்டுமே போய்வரக்கூடிய ஒரு கடைக்கோடி கிராமத்தின் ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளி.
இன்னொரு தகவலையும் இப்போது கூறிவிட வேண்டும். அந்தக் குழந்தையின் தந்தை பள்ளிக்கல்வித் துறையின் மிக உயரிய பொறுப்பில் இருக்கக்கூடிய மிக நேர்மையான அதிகாரி.
ஒருக்கால் இத்தனை ஆண்டுக்காலம் ஒரு கிராமத்துப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த குழந்தையை திடீரென மெட்ரோபாலிடன் நகரத்து நவீனப் பள்ளியில் சேர்த்ததால் பிரமாண்டத்தைக் கண்டு மிரண்டு போனானோ என்ற ஐயம் அவனது தந்தைக்கும் எனக்கும் எழுந்தது.
அதுகுறித்து அவனிடமே பேசினோம். அந்தக் குழந்தை மிகவும் தெளிவாக இருந்தான். அவனுடனான உரையாடலில் இருந்து நாங்கள் தெரிந்து கொண்டவை,
1.    இப்போது படிக்கும் பள்ளியின் பிரமாண்டம் அவனை மிரட்டவோ ஈர்க்கவோ இல்லை.
2.    அவனது கிராமத்துப் பள்ளியில் இல்லாத எதுவும் இந்த நவீனப் பள்ளியில் இல்லை.
3.    அந்த கிராமத்துப் பள்ளியில் ஏதோ ஒன்றை அவன் இங்கு இழந்த நிலையில் இருந்தான். அதாவது, ஒரு போதாமையை அந்தக் குழந்தை இங்கு உணர்ந்தான்.
23 குழந்தைகள் மட்டுமே ( இப்போது பத்தை ஒட்டிய எண்ணிக்கைதான் ) படித்துக் கொண்டிருந்த அவனது கிராமத்துப் பள்ளியில் ஒன்பது கணினிகளும் எல்லாக் கணினிகளுக்கும் UPS களும் இருந்தன. இருபத்திமூன்று குழந்தைகள் மட்டுமே படித்துக் கொண்டிருந்த அந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஏறத்தாழ இரண்டு லட்சம் ரூபாய் செலவில் ஆண்டு விழாவை நடத்தினார்கள். வேலு சரவணனது நாடகத்தைக்கூட நான்தான் ஏற்பாடு செய்திருந்தேன். அது குறித்து ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் நான் கல்கியில் ஒரு கட்டுரைகூட எழுதினேன். ஆகவே இந்தப் பள்ளியின் பிரமாண்டம் அவனை அச்சப்படுத்தாமல் போனதாலோ ஆர்வப் படுத்தாமல் போனதினாலோ ஆச்சர்யம் இல்லை.
சரி, புதிய இடத்தில் நண்பர்கள் கிடைப்பதில் பிரச்னை போல என்று யோசித்தோம். இருபது நண்பர்களின் அப்பாக்களின் அலைபேசி எண்களைக் கொட்டினான்.
என்னதான் பிரச்னை என்று கேட்டால் இங்கு பாடம் நடத்தும் முறை சரியில்லை என்றான். மொழிப் பிரச்சினையைத்தான் இப்படி சொல்கிறான் என்று யோசித்தோம். எல்.கே.ஜி குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பதுபோல எங்களுக்கு வகுப்பெடுத்தான்.
‘இங்கே என்னப்பா, சூரியனக்கூட படத்தக் காட்டியும் ஸ்மார்ட் சிஸ்டத்துலயும்தான் நடத்துறாங்க. இதையே நம்ம ஊர்லனா சின்னம்மா எப்படி நடத்தியிருப்பாங்க தெரியுமா?’
அந்தக் கிராமத்து பள்ளி ஒரு ஈராசிரியர் பள்ளி. தலைமை ஆசிரியை அவனது சின்னம்மா. தொடர்ந்து தனது சின்னம்மாவிடமே படித்துக் கொண்டிருந்த குழந்தையை திடுமென இங்கு தள்ளியதால் இந்தப் பள்ளியின் ஆசிரியைகளோடு ஒட்டவில்லைபோல என்று நினைத்தோம்.
’சூரியன நடத்த சார்ட் எதுக்கு, ஸ்மார்ட் சிஸ்டம் எதுக்கு?
மைதானத்துக்கு கூட்டிட்டுபோயி, அண்ணாந்து பாருடா அதுதான் சூரியன்னு சொல்லித் தர வேணாமா?’
அப்படியே பொட்டில் அறைந்தது போலிருந்தது.
வெறுமனே கரும்பலகையை மட்டுமே பயன்படுத்தாமல் துணைக் கருவிகளையும் பயன்படுத்த வேண்டும். கற்றல்உபகரணங்களை போதுமன அளவிற்கு பயன்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள். காணொலிக் கருவிகளையும் முடிந்த அளவு பயன்படுத்த வேண்டும் என்றும் கல்வித்துறையாலும் தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது. அது மிகவும் அவசியம்தான். கற்றலை அது எளிமைப்படுத்துவதுடன் சுவாரசியமாக்கவும் செய்யும்.
ஆனால் அதன் அபத்தமான உச்சம் என்பது சூரியனை ஒரு படத்தைக் காட்டி சொல்லித் தருவதில் வந்து நிற்கிறது.
‘மைதானத்துக்கு கூட்டிட்டுபோயி, அண்ணாந்து பாருடா அதுதான் சூரியன்னு சொல்லித் தர வேணாமா?’
பெரியப் பெரிய கல்வியாளர்களின் வாயிலிருந்து வந்திருக்கவேண்டிய கூற்று ஒரு குழந்தையின் வாயிலிருந்து வந்திருக்கிறது. தெய்வ நம்பிக்கையுள்ளவர்கள் இதை தெய்வத்தின் குரலாகவே கொள்ள வேண்டும்.
மைதானத்திற்கு மேலே கொண்டு நிறுத்தி சூரியனை அண்ணாந்து பார்க்க சொல்லிவிட்டு அவர்களிடம் சின்ன சின்னதாய் கேள்விகளை கேட்டுப் பார்த்தால் விஷயம் எவ்வளவு அழகாக விரியும்.
ஒரு சின்னக் குழந்தையிடம் சூரியன் எங்கே இருக்கிறது என்று கேட்டால் ‘அங்கே’ என்று வானத்தைக் காட்டுவான். ‘அங்கே என்றால் எங்கே? என்று கேட்டால் ’மேலே’ என்பான். ‘மேலே என்றால்…?’ என்று நீட்டினால் ‘வானத்துல’ என்பான். ‘எவ்வளவு தூரம்?’ என்றால் LKG குழந்தை அகலக் கைகளை விரித்து ‘இவ்வளவு தூரம்’ என்பான். குழந்தைகளின் வயதிற்கு ஏற்ப ‘ரொம்ப தூரம்’ என்று ஆரம்பித்து இத்தனை கிலோமீட்டர் என்பதுவரை சொல்லிக் கொடுக்கலாம்.
’சூரியன் குளிரும்தானே?’ என்று சொல்லிப் பாருங்கள், ‘இல்ல, பொய்யி, சூரியன் சுடும் ‘ என்பான். ஏன் சுடும் என்று கேட்டுவிட்டு ‘காரணம் அது நெருப்பு’ என்று ஆரம்பித்து அது ஒரு நெருப்பு பந்து என்பதை சொல்லித் தரலாம்.
கிழக்கில் தோன்றி மேற்கில் மறைவதாக சொல்வதெல்லாம் பொய். சூரியன் நிலையாய் நிற்கிறது, அது பயணிப்பதெல்லாம் இல்லை. பூமி தன்னைத் தானே சுழற்றிக் கொள்வதால் அப்படித் தோன்றுகிறது என்பது வரை சொல்லிக் கொடுத்துவிட்டு, அது எப்படி என்பதற்குத்தான் கற்றல் கருவிகளையும் காணொலிக் காட்சியையும் பயன்படுத்தினால் கற்றல் எத்தனை பயனுள்ளதாக அமையும்.
கல்லணை குறித்து பாடம் நடத்தும் போது ஒரு சராசரி ஆசிரியர் கல்லணை கரிகாலன் என்கிற சோழ மன்னனால் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டது என்றும் இத்தனை ஆண்டு காலத்திற்கு முன்னால் கட்டப்பட்டிருந்தாலும் இன்னும் எந்தவித கீறலுமின்றி இருப்பதாகவும் சொல்லித் தருவார்.
அதைவிட நல்ல ஆசிரியர் கல்லணையின் படத்தை கரும்பலகையில் மாட்டி நடத்துவார். வெறுமனே கல்லணையைப் பற்றி லெக்சர் அடிக்கும் பொழுதைவிட படத்தைக் காட்டி நடத்துவது கூடுதல் புரிதலைத் தரும். அதைவிட இன்னும் கொஞ்சம் நல்ல ஆசிரியர் காணொலியைப் பயன்படுத்தி நடத்துவார். இப்போது இன்னும் கொஞ்சம் கூடுதலாகப் புரியும்.
அக்கறையுள்ள ஒரு ஆசிரியர் குழந்தைகளை கல்லணைக்கு அழைத்துப் போக முயற்சிப்பார்.
இதை எழுதும்பொழுது திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மற்றும் கரூர் போன்ற திருச்சிக்கு அருகில் உள்ள எத்தனை பள்ளிகள் தங்கள் மாணவர்களை கல்லணைக்கு அழைத்துப் போயிருப்பார்கள் என்ற என் ஐயம் வலியினைத் தருகிறது.
உலகின் மிகச் சிறந்த சிலைகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார் கோவிலில் உள்ளன . இந்தத் தகவல்களையும் அதன் சிறப்புகளையும் நரம்புகள் புடைக்க சொல்லித் தருகிறோம். ஆவுடையார் கோயில் சிற்பங்களையும் உலகின் மிகச் சிறந்த குகை ஓவியங்களுள் ஒன்றாகத் திகழும் சித்தன்னவாசல் ஓவியங்களையும் பார்த்திராத புதுக்கோட்டை மாவட்டக் குழந்தைகள் எத்தனை பேர்?
மிகப் பெரிய பேரழிவை நிகழ்த்திவிட்டு ஒன்றும் தெரியாத பச்சைக் குழந்தையைப் போல் அரவமே இல்லாமல் கிடக்கும் பாக் ஜலசந்தியை, ராமர் பாலம் என்றழைக்கப்படுகிற மணல் திட்டை தனுஷ்கோடி சென்று பார்க்காத ராமனாதபுரம் குழந்தைகள் எத்தனை பேர்?
தனுஷ்கோடி கடற்கரையில் நின்றுகொண்டு கல்லூரி மாணவர்களுக்கு சேதுசமுத்திரம் திட்டம் பற்றி விளக்கமாக புரிய வைத்தால் மாணவத்திரள் என்றேனும் ஒருநாள் அந்தத் திட்டத்தை தங்களது போராட்டத்தின் வழி சாத்தியமாக்கிவிட மாட்டார்களா?
இந்தியாவின் தொன்மையான நாகரீகம் சிந்து சமவெளி நாகரீகம் என்கிறோம். இந்தக் கருத்தோடு நமக்கிருக்கும் முரண்பாட்டை இந்தத் தொடரிலேயே ஒருமுறை எழுதிவிட வேண்டும் என்பதே என் விருப்பம். அதைவிடவும், ஏன், உலகின் ஆகத் தொன்மையான நாகரீகமாக சொல்லப்படும் மெசபடோமியா நாகரீகத்தைவிடவும் ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகள் அதிகத் தொன்மையான நாகரீகம் தமிழ்நாட்டில் காரைக்காலுக்கு அருகே இருந்ததாக தனது ஆழ்கடல் ஆராய்ச்சி மூலம் கிரஹாம் ஆன்ஹூக் அவர்கள் நிறுவியதையும் அவரது ஆய்வு முடிவுகள் வெளிச்சம் பெறாமல் போனதற்கான காரணங்களையும் அதன் பின்னனியில் விரவிக் கிடக்கும் அரசியலையும்கூட எழுதிவிட முடியும் என்றே நம்புகிறேன்.
சிந்துச்சமவெளி நாகரீகத்திற்கான சான்றுகள் மொஹஞ்சதாரோ, மற்றும் ஹரப்பா நகரங்களில் பூமியை அகழ்வாராய்ச்சி செய்தபோது கண்டடையப் பட்டதாக சொல்லித் தரப்படுகிறது. அவ்விடங்களில் பூமிக்கு கீழே புதையுண்டுப் போயிருக்கிற நகரங்கள் கண்டுபிடிக்கப் பட்டதாகவும் அந்த நகரங்களின் கட்டமைப்பினைக் கொண்டு அந்த மக்களின் நாகரீகம்தான் இந்தியாவின் தொன்மையான நாகரீகம் என்று சொல்லித் தரப் படுவதை எல்லாம் விட்டு விடுவோம்.
இதைப் படிக்கிறபோது பூமிக்கு கீழே புதையுண்டு கிடப்பதாக சொல்லப்படும் நகரங்கள் எப்படி இருக்கும்? என்ற சந்தேகம் குழந்தைகளுக்கு எழுமே, அதை அந்த இடங்களுக்கு கொண்டுபோய் காட்டினால் புதையுண்ட நகரங்கள் எப்படி இருக்கும் என்ற பிம்பங்கள் குழந்தைகளுக்கு கட்டுடையுமல்லவா?
மொஹஞ்சதாரோவும் ஹரப்பாவும் என்ன போய்வரக் கூடிய தூரத்திலா இருக்கிறது என்று கேட்பவர்கள் இருக்கவே கூடும். அது இல்லைதான், ஆனால் உட்கோட்டை நமக்கு கைக்கெட்டிய தூரத்தில்தானே இருக்கிறது. உட்கோட்டையிலும் பூமிக்கு அடியில் புதையுண்டு போயிருக்கிற ஒரு நகரம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதே. போதிய கவனிப்பாரற்று அழிந்துகொண்டிருக்கிறதே.
இதில் வருத்தம் என்னவெனில் கங்கைகொண்ட சோழபுரம் வரைக்கும் சுற்றுப் பயணத்தைத் திட்டமிடும் பள்ளிகள் அதற்குப் பக்கத்தில் நான்கு கிலோமீட்டர் நடை பயணத்தில் இருக்கக் கூடிய உட்கோட்டையை கண்டு கொள்வதில்லை என்பதுதான்.
தமிழ்நாட்டில் உள்ள உட்கோட்டையில் தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டில் புதையுண்ட நகரம் ஒன்றிருப்பது தமிழ்நாட்டில் உள்ள பலருக்கு ஏன் சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கே தெரியாது.
இந்தச் சூழலில் சென்ற ஆண்டு மதுரை மாவட்டத்தில் ஒரு புதையுண்ட நகரத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள். இவற்றைப் பற்றிய போதிய அறிவு என்பது அந்த இடங்களை பார்வையிடுவதன் மூலமே கிடைக்கும். அது நீண்ட ஆய்வுகளுக்கு வித்திடும். நீண்ட ஆய்வுகள் வரலாற்றையே புரட்டிப் போடும்.
மாணவர்களுக்கு எத்தனையோ விலையில்லாத் திட்டங்களைத் தரும் அரசு மாணவர்களை அவர்களுக்கு அருகில் இருக்கக் கூடிய இடங்களுக்கு அழைத்துப் போகிற திட்டத்தை கட்டமைக்க வேண்டும்.



Thursday, July 7, 2016

தாயாகவே பாவிப்பதும்

உள்ளே அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று வெளியே விக்டோரியாவின் குரல் உரத்துக் கேட்டது.
“ இதெல்லாம் உங்க அப்பாகிட்ட வச்சுக்கனும். நம்மகிட்ட கத ஆகாது. கரியப் பிச்சுப் புடுவேன் பிச்சு”
கீர்த்தி ஏதாவது செய்து வாங்குகிறாளா?
” சொன்னா கேக்க மாட்டியா? ஒரே திருகு வீசம் கரிய எடுத்துடுவேன். இதெல்லாம் உங்க அப்பாகிட்ட”
சத்தம் உரக்கவே வெளியே எட்டிப் பார்த்தேன்.
கீர்த்தியில்லை.
தோனி விக்டோரியாவை உள்ளே விடாமல் தொத்துக் கால் போட்டு மறித்துக் கொண்டிருந்தான்.
ஒரு புன்னகையோடு உள்ளே திரும்பினேன். திரும்பும் போது எதிர்த்த வீட்டு பாட்டியும் சேட்டுவும் சிரித்துக் கொண்டே உள்ளே போவதைப் பார்த்தேன்.
புரிந்தது,
என்னை மட்டுமே அப்பாவாய் சொல்லிக் கொண்டிருக்கும் விக்டோரியாவை தோனி தாயாகவே பாவிப்பதும் விக்டோரியாவும் தோனிக்கு தாயாகவே இருப்பதும்.

நெஜமா பொய்தானே

மூன்றிலிருந்து நான்கு இருக்கலாம் அவனுக்கு. வெண்கலக் குரலில் தெளிவாய் இருந்தது அவனது பேச்சு. பேருந்தில் யார் எதைப் பேசினாலும் அதை திருப்பி சத்தமாய் பேசிக் கொண்டிருந்தான்.
‘பஸ் ஸ்டாண்ட் வந்துட்டு கூப்பிடுறேண்டா மாப்ள’ என்றால் அச்சு பிசகாமல் இவனும் சத்தமாக ‘பஸ் ஸ்டாண்ட் வந்துட்டு கூப்பிடுறேண்டா மாப்ள’ என்கிறான். அவனது தந்தையும் தாயும் அவனை வாயடைத்து உட்கார வைக்க என்னென்னமோ செய்து விட்டார்கள்.
ஒரு கட்டத்தில் பிஸ்கட் கேட்டு நச்சரிக்க ஆரம்பித்தான். அது பையின் அடியில் இருந்ததால் எடுப்பதில் சிரமப் பட்ட அவனது தந்தை ‘பெரம்பலூர் வந்துடுச்சுடா. வீட்டுக்கு போயி சாப்பிடலாம்’ என்றார்.
உடனே, ’ஓல்டேன், பஸ்ஸ நிறுத்துங்க’ என்று கத்த ஆரம்பித்தான்.
இப்படி கத்தினால் பஸ்ஸை நிறுத்திவிடுவார்கள் என்று மிறட்டியவரிடம் அதான் பெரம்பலூர் வந்துடுச்சுல்ல என்றான்.
இல்லடா, பெரம்பலூருக்கு கொஞ்சம் நேரம் ஆகும் என்றவரிடம் ‘அப்ப பொய் சொன்னியா’ என்கிறான்.
ஏதேதோ சுற்றி வளைக்க ஆரம்பித்தவரிடம் கேட்டான், நெஜமா சொல்லுப்பா பொய்தான சொன்ன?’
பேருந்தே சிரித்தது.

நேற்றிருந்தார்...


நண்பர் கனகராஜ் பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் பேருந்துகளுக்கு பேருந்து நிலைய பயன்பாட்டுக் கட்டணம் வழங்கிக் கொண்டிருக்கும் நகராட்சி ஊழியர். பேருந்துக்கு காத்திருக்கும் நேரத்தில் அவரோடு பேசிக்கொண்டிருப்பேன். பேருந்து இருப்பின் ஒரு வணக்கம் மற்றும் புன்னகையோடு ஏறிவிடுவேன்.
கடந்த திங்களோ செவ்வாயோ அவரைப் பார்த்து பேசிக் கொண்டிருந்தேன். நகராட்சி அலுவலகத்தில் காவிரி குடிநீருக்கு யாரைப் பார்க்க வேண்டும் எப்போது பார்க்கலாம் என்று கேட்டேன்.
அந்த நேரத்தில் நான் வழக்கமாக பயணிக்கும் பேருந்து நகரத் தொடங்கியது. அவரது பதிலுக்காக காத்திருந்த என்னிடம் நகரும் பேருந்தை சுட்டிக் காட்டி போங்க சார் போய் ஏறுங்க என்றார்.
நான் தயங்கியபடி நிற்கவே,
“நீங்க எங்க ஓடிறப் போறீங்க, இல்ல நான் எங்க ஓடிறப் போறேன். இங்கதான இருப்போம். சனிக்கிழமை பார்த்துக்கலாம்”
என்றார்.
இப்போது கடை வீதிக்குப் போனால் அவர் நேற்றே இறந்துபோனதாய் போஸ்டர்கள் சொல்கின்றன.
அய்யோ என்பதைத் தவிர ஏதும் செய்ய இயலாதவனாய் நான்

ரசனை 20

நா. திங்களன் தனது மனதை ஜோலார்பேட்டை ரயிலடியில் குடி வைத்திருப்பவன். ஜோலார்பேட்டை ரயிலடியைப் பற்றி பேசாமல் அவனால் எதுகுறித்தும் உரையாட முடியாது.
அந்த ரயிலடி குறித்து அத்துனை தகவல்களை வைத்திருக்கிறான்.
இவன்தான் அப்படி என்றால் இவனது மகனோ ரயில்களோடே வளர்கிறான்.
ரயிலைக் காட்டிக்கூட அல்ல ரயிலில் உட்காரவைத்துதான் சோறூட்டுகிறான்.
அந்தக் குழந்தையின் மழலையை கவிதையாக்கியிருக்கிறான். ஜானகி (நந்தன் ஸ்ரீதரன்) நெகிழ்ந்து பகிர்ந்திருக்கிறான்
பயணம் முடித்து
இறுதியாக
எங்கள் நிலையம் வந்து
தங்கியிருக்கும் இரயிலைப் பார்த்து
"அப்பா ட்ரயின் தூங்குது"
என்கிறான் மகன்.

அப்ப எட்வின் இல்லையா?

கீர்த்தனா சாப்பிட அழைத்ததை கவனிக்கவில்லை நான்.
கோவத்தோடு கத்தினாள்,
“ இரா எட்வின் சாப்பிட வாங்க “
“ ஏண்டி அப்பா இல்லையா நான்? “
“ அப்ப எட்வின் இல்லையா நீங்க? “
அதானே.

Sunday, July 3, 2016

ரசனை 19

கொஞ்சம்
அண்ணாந்து பாருங்களேன்..
அந்த மேகத்தை நிச்சயம்
ஒரு குழந்தை தான்
வரைந்திருக்க வேண்டும்.
இத்தனை அலங்கோலமாய்.
இத்தனை அழகோவியமாய்


என்று நான் ராம் எழுதுகிறான். எப்படித்தான் இப்படி எழுத வருகிறதோ இந்தப் பசங்களுக்கு. இதை இன்னும் செதுக்கினால் இதன் உசரம் எங்கேயோ போகும். இதை இவனது உள்டப்பியில் போய் சொன்னாலே போதும். அதுதான் நாகரீகமும்கூட. ஆனாலும் இங்கேயே சொல்வது வளரும் பிள்ளைகளுக்கு உதவும் என்பதால் இங்கேயே வைக்கிறேன்.

ஒரு குழந்தைதான்
வரைந்திருக்க வேண்டும்
அந்த மேகத்தை

இது போதும் என்று பார்க்கிறேன். இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன். எழுதியதை சரி செய்வது எளிது. எழுதுவது கஷ்டம்

பொறாமையா இருக்குப்பா ராம்.

கடிதம் 17

அன்பின் தோழர்களே, 

வணக்கம். ஒரு கடிதத்திற்கும் மறு கடிதத்திற்கும் இடையே ஒரு காலண்டரே காலாவதியாகிவிடுகிறது. ஒரு மகிழ்வான செய்தியை பகிர்ந்துகொள்வதற்க்காகவே இந்தக் கடிதம்.

இந்தப் பிறந்த நாளின் பின்னிரவில் அந்த தோழன் அழைத்தான். எல்லோரையும் போல வாழ்த்த வரவில்லை என்றும் பரிசோடு வந்திருப்பதாகவும் சொன்னவன் எனது அடுத்தப் புத்தகத்தை அந்த பதிப்பகத்தார் கேட்பதாகவும், தர வேண்டும் என்றும் கோரினான்.
அடுத்த நாள் அழைத்து கட்டுரைகளை மெயில் செய்ய சொன்னான்.
ஒரு மணி நேரம் கழித்து லே அவுட் முடியும் தருவாயில் இருப்பதாக சொல்கிறான்.
ஆக, எனது எட்டாவது நூல் வருகிறது. ஈரோடு புத்தகத் திருவிழாவிற்கு தயாராகிவிடும் என்கிறார்கள்.
வழக்கத்திற்கு மாறாக இந்த நூலைக் கொஞ்சம் கொண்டாடினால் என்ன என்று தோன்றுகிறது.
எழுதி ஈரம் காயும் முன்னே அச்சுக்கு கொண்டுவரும் பத்திரிக்கைத் தோழர்களையும் பதிப்பகத் தோழர்களையும் அணைத்துக் கொள்கிறேன்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...