Monday, July 7, 2014

நிலைத் தகவல் 50

ஜீவசாந்தி என்றொரு அறக்கட்டளை இருக்கிறது. அநேகமாக எளிய தோழர்களால் நடத்தப் படும் அமைப்பாகத்தான் தெரிகிறது. ஆனால் அவர்கள் செய்யும் காரியம் அவர்களைக் கை எடுத்துக் கும்பிட்ட வாறு வாழ்த்தச் சொல்கிறது.

தெருக்களில், மருத்துவமனைகளில் மரணிக்கும் யாருமற்றவர்களை நெஞ்சு நிறைந்த ஈரத்தோடு அடக்கம் செய்கிறார்கள்.

Jeeva Shanthy Trust பற்றி விரிவாய் எழுத ஆசை. அவர்களைப் பற்றி தெரிந்தவர்கள் 9842459759 இந்த எண்ணில் என்னோடு தொடர்பு கொள்ளுங்கள்.

அவர்களது இணைப்பைத் தருகிறேன். வாசித்து அவர்களோடு தொடர்பு கொண்டு வாழ்த்துங்கள். உதவ முடிந்தவர்கள் உதவலாம். யார் கண்டது நாமே அவர்களோடு இணைந்து வேலை பார்க்கலாம்.

அல்லது நமது பகுதிகளில் இதை செய்யத் துவங்கலாம்.

https://www.facebook.com/jeevashanthy.trust?fref=nf

Sunday, July 6, 2014

9

நனவாகாமல் போன ஒவ்வொரு புள்ளியிலும் 
துளிர்த்துக் கொண்டேதான் இருக்கிறது 
அடுத்த கனவு

8

மலம் அள்ளுவதும்
கீழிறங்கி
சாக்கடை கசடள்ளி சுத்தம் செய்வதும்
என்னை எரித்த பிறகும் தொடருமானால்
இந்தக் கொடுமைக்கு எதிராக
சாராய நெடியும் கோவமுமாய்
கலந்து வரும்
அவனது கெட்ட வார்த்தைகளாகவும்
அவன் காறி உமிழும் எச்சிலாகவும்
மாறியிருப்போம

என் கவிதைகளும் நானும்

நிலைத் தகவல் 49

எந்த ஒரு வேலைக்கும் குறைந்த பட்ச தகுதி என்று ஒன்று உண்டு.

தனது தகுதியை தவறாகக் குறிப்பிட்டோ அல்லது போலிச் சான்றுகளைத் தயாரித்தளித்தோ ஒரு வேலைக்கு வருவது என்பது கிரிமினல் குற்றம்.

ஒரு இளநிலை உதவியாளர் இப்படி ஒரு காரியத்தை செய்து அந்த வேலைக்கு வந்திருப்பார் என்பதற்கான முகாந்திரம் கிடைக்கும் பட்சத்தில் அவர் கைது செய்யப்படுவார். அந்த வழக்கு முடிந்து அவர் நிரபராதி என்று தன்னை நிரூபித்துக் கொள்ளும் வரை பணியிடை நீக்கமும் தவறும் பட்சத்தில் சிறைத்தண்டனையும் நிரந்தரப் பணியிழப்பும் வந்து சேறும்.

இந்தக் காரியத்தை செய்திருப்பவரொரு மதிப்புமிக்க பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர்.

பல்கழைக் கழகத்தில் இவர் செய்த ஊழல், அத்துமீறல், ஊழியர்களை பலி வாங்கியது, மாணவர்களை நசுக்கியது போன்றவற்றை விடுங்கள், கல்யாணி அவர்கள் அவர் கொடுத்த அவர் தகுதி குறித்த பொய்யான விவரத்திற்காகவே கைது செய்யப்பட வேண்டியவர்.

பணிநீக்கமே சாத்தியமில்லாதபோது நீதியாவது கைதாவது ?

Saturday, July 5, 2014

7

நீரோடியதற்கான தடயங்களே காணக் கிடைக்காத 
காவிரியெங்கும் 
விரவிக் கிடக்கின்றன 
டயர்த் தடங்கள்

Thursday, July 3, 2014

6

சடச் சட என்ற சத்தம் கேட்டு 
வெளியே வருவதற்குள் 
நனைகிற ஆசையை 
உலர்த்திவிட்டுப் போயிருந்தது 
மழை

நிலைத் தகவல் 48

அவர்களும் நம்மைப் போலவே ஒரு தாய் தந்தைக்குப் பிறந்தவர்கள்தான்.

மகனாகவோ, மகளாகவோ வீட்டிற்குள் வளைய வளைய வந்தவர்கள்தான்.

ஏதோ ஒரு புள்ளியில் தாம் ஆணும் இல்லை பெண்ணும் இல்லை என்பதை கண்டறிந்த நொடியில் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். 

வளர்த்த நாய்க்குட்டி காணாமல் போனாலே பதறிப் போய் தெரு தெருவாய் தேடுபவர்கள் காணாமல் போன தாங்கள் பெத்து வளர்த்த இவர்களைத் தேடுவதே இல்லை.

வீட்டை விட்டு வெளியேறும் அந்தக் கணத்தில் வாக்குரிமை உள்ளிட்ட சகல உரிமைகளும் இவர்களுக்கு இல்லாமல் போகிறது.

சமீபத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய சாசாதகமான ஒரு தீர்ப்பின் உதவியோடு ஏழாண்டு கால போராட்டத்தின் விளைவாக ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்கிறார் அக்கய் பத்மஷாலி.

இந்த வகையில் ஓட்டுனர் உரிமம் பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமையை பெருகிறார்.

வாழ்த்துக்கள் அக்கய்.

எனக்கு ஒரு தம்பி ஒரு திருநங்கை என்று எந்த வித நெருடலுமின்றி சொல்லும் காலம் என் மரணத்திற்குமுன் வந்தால் மகிழ்வோடு சாவேன்

Wednesday, July 2, 2014

நிலைத் தகவல் 47

இரண்டு விஷயங்கள் என்னை நெகிழ்த்திப் போட்டன இன்று.

ஒன்றை தோழர் Shah Jahan தந்திருந்தார். இன்னொன்றை எங்கள் மாவட்ட ஆட்சியர் செய்திருந்தார்.

ஷாஜி பகிர்ந்திருந்தது தனக்கும் மருத்துவர் அசோகனுக்கும் இடையில் நடந்த உரையாடல் குறித்த M.m.அப்துல்லா அவர்களின் பதிவின் சாரம்.

மூளைச் சாவு அடைந்திருந்த தனது மகனின் உறுப்புகளை தானமளித்து உயிர்களைக் காப்பாற்றிய ஈர மனிதர் மருத்துவர் அசோகன்.

அவர் இறந்து போன தனது உறவினரின் கண்களைத் தானமாகப் பெற்று மருத்துவ மனைக்கு அனுப்ப, அவை அன்றே பயன்படுத்தப் பட இறந்தவரின் சடலம் புதைக்கப் படும் முன்பே இருவருக்கு பார்வை கிடைத்ததைப் பற்றிய அப்துல்லாவினுடைய உரையாடலைத்தான் ஷாஜி தந்திருந்தார்.

அதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் அன்று பார்த்து மழை. குழி தோண்ட சாக்கடை நீர் ஊற்றெடுக்கிறது. வேறு வழியின்றி சாக்கடை நீருக்குள்ளேயே புதைக்கிறார்கள். அப்போது மருத்துவர் சொன்னாராம்,

“ நல்ல வேளை அவரது கண்களை இந்த சாக்கடை நீரிலிருந்து காப்பாற்றி விட்டேன்”

#

பெரம்பலூருக்கு அருகே பிச்சை எடுத்துக் கொண்டிருந்த சிறுவர்களைப் பற்றிய தகவல் கிடைத்ததும் அதிகாரிகளை அனுப்பி அந்தச் சிறுவர்களை மீட்டு உண்டு உறைவிடப் பள்ளியில் சேர்த்திருக்கிறார் எங்கள் மாவட்ட ஆட்சியர் தரேஷ்.

“ பிச்சைப் புகினும் கற்கை நன்றே” என்றாள் கிழவி

பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாலும் படி என்கிறாள்.

பிச்சையிலிருந்து மீட்டெடுத்து படிக்க வாய்ப்பளித்திருக்கிறார் தரேஷ்.

#

1. நல்லதைப் பகிர்ந்த ஷாஜஹான்
2. அப்துல்லா
3. மருத்துவர். அசோகன்
4. மாவட்ட ஆட்சியர் தரேஷ்

#

நாலு பேருக்கும் நன்றி.

17 ஆழ்மனக் குறிப்புகள்




“மெர்லின்
நீ சபிக்கப்பட்ட வாழ்க்கை வாழ்ந்ததற்காய்
இங்கே ஒரு ‘டாடி’ அழுகிறான்”

ஏறத்தாழ எண்பத்தி எட்டு வயதான ஒரு மனுஷியின் மரணத்திற்காக முப்பதே ஆன ஒரு இளைஞனின் கண்ணீர் இது. இருபதுகளின் தொடக்கத்தில் பிறந்த ஒரு மனுஷியை, எண்பதுகளின் இறுதியிலோ தொண்ணூறுகளின் தொடக்கத்திலோ பிறந்த ஒரு இளைஞன் மகளே என்று விளிக்கிறான்.
”தாயே” என்றோ “பாட்டியே” என்றோ விளித்திருந்தால் பொறுத்தமாயிருந்திருக்கும். தொண்ணூறை நெருங்கும் ஒரு கிழவிக்கு முப்பதே முப்பது ஆன ஒரு இளைஞன் தந்தையாகிப் போகிறானே, இதைப் பக்குவம் என்பதா? இல்லை பித்துக்குளித் தனம் என்பதா? உதயகுமாரின் வலைதளமான “ஆழ்மனக் குறிப்புகள்” உள்ளே பயணித்துப் பார்த்தால் இது வறட்டுத் தனமான பக்குவமோ, பித்துக் குளித்தனமோ இல்லை ஈரஞ்சொட்டும் உண்மை என்பது புரியும்.

”உலக ஆண்களின் கனவுக் கன்னியாக,கவர்ச்சிக் குறியீடாக பாலுணர்ச்சியை வடிக்கும் வடிகாலாக உலகத்தால் மிகத் தவறாக அறியப்பட்ட துரதிர்ஷ்டக்காரி மெர்லின்” என்று உதயகுமார் எழுதுவது கொஞ்சமும் கலப்படமற்ற உண்மை.

உலகமே அகலமாய் கண்திறந்து பார்த்த அந்த அழகு தேவதை மரித்தபோது கேட்க ஆளற்று அனாதையாய் மூன்று நாட்கள் பிணவறையில் கிடந்த மெர்லினது உடல் குறித்து உதயகுமார் எழுதுவதைப் படிக்கும்போது நம்மை அறியாமல் நம் கண்கள் சுரக்கும்.

“பெருக்கெடுத்து ஓடத்தொடங்கிய நதி பாதி வழியில் ஆவியானதைப் போல் காணாமல் போன வாழ்க்கைக்கு சொந்தக்காரி” என்று உதயகுமார் எழுதுவதைவிட மெர்லினது வாழ்க்கையை சொல்லிவிட முடியாது.
தினமும் தினமும் கடித்துக் குதறப்பட்ட போதும் தான் சந்திக்கும் ஒவ்வொரு ஆணிலிருந்தும் தந்தையைத் தேடியிருக்கிறாள் மெர்லின். இன்னும் சொல்லப்போனால் தான் மணந்துகொண்ட அனைத்து ஆண்களையுமே அவள் “ டாடி “ என்றே அழைத்திருக்கிறாள். மெர்லினின் தாய்க்கே இவளது தந்தை யாரெனத் தெரியாது. அதனால்தான் தந்தைக்காக ஏங்கி அலைந்திருக்கிறாள். வாழ்ந்த காலமெல்லாம் தந்தையின் பாசத்திற்காக ஏங்கி அலைந்த ஒரு பெண்ணிற்கு அவளது பேரன் வயதில் ஒரு தந்தை வாய்த்தது அவளுக்குத் தெரியாது போனதுதான் கொடுமையினும் கொடுமை.

ஃப்ராய்ட், ஷேக்ஸ்பியர் என்று வாசித்துக் குவித்து யாரேனும் அது குறித்தெல்லாம் தம்மிடம் பேசமாட்டார்களா என்ற அவளது ஏக்கத்தை ஒரு முப்பது வயது இளைஞன் புரிந்துகொண்டு அது குறித்து அவளது தொண்ணூறு வயது மகளோடு அசைபோடத் தயாராயிருக்கிறான். அவள்தான் இல்லை.
தொண்ணூறு வயது கிழவிக்கு முப்பது வயது இளைஞன் தந்தயாக முடியும் என்பதை உரத்து சொல்கிறது “ ஆழ்மனக் குறிப்புகள் “
” சடசடவென பொழிகிறது மழை

ஆங்கோர் மரத்தில் கூடுகட்டி வாழும்
ஊர்க்குருவியைப் பற்றி
மழைக்கு எந்த லட்சியமும் இல்லை

அடித்து வீசுகிறது காற்று

மெல்லிய மல்லிக்கொடி
ஒடிந்து வீழ்வது பற்றி
காற்றுக்கென்ன விசனமிருக்கப் போகிறது

எது ஒன்றும் அதன் அதன்
தன்னியல்பிலேயே இருக்கிறது

இதோ என் கூட்டின் மரக்கதவுகளை
கூர்மூக்கால் சுரண்டிக் கொண்டிருக்கும் அந்தப் பறவைக்கு சொல்லுங்கள்
கதவை மூடிக் கொண்டழுவது என் இயல்பென”

அன்பை எப்படி வெளிப்படுத்தலாம்? இதமான ஸ்பரிசம், கனிந்து கசியும் ஒரு சன்னமான பார்வை, அன்பொழுகும் ஒரு கடிதம், ஒரு முத்தம், இப்படி ஏதேனும் ஒன்றின் மூலம் நமது அன்பை வெளிப்படுத்த முடியும். உதயகுமார் அழுகையை தனது அன்பைக் கொண்டு சேர்க்கும் ஊடகமாகக் கையாள்கிறார்.

இவரது படைப்புகளை மேம்போக்காகப் பார்ப்பவர்களுக்கு அவை இவரது காதலிக்காக எழுதப் பட்டவையாகத் தோன்றும். ஆனால் அவை அவரது நண்பர்களுக்கானவை. நண்பர்களுக்கான தனது அன்பை கண்ணீரில் கறைத்துத் தருகிறார்.

நம்மாழ்வார் மறைந்த பொழுது இவர் எழுதிய ஒரு பதிவு குறிப்பிட்டுப் பேசவேண்டிய ஒன்று.

வேப்பமரத்தை அமெரிக்கா சொந்தம் கொண்டாடி ஒவ்வொரு வேப்ப மரத்திற்கும் அவற்றை வைத்திருக்கும் நாடு தனக்கு கணக்கிட்டு கப்பம் கட்டவேண்டும் என்று சொன்னபோது சர்வதேச நீதிமன்றம் சென்று அதன் உரிமையை நமக்கு மீட்டெடுத்துக் கொடுத்தவர் நம்மாழ்வார் என்ற உண்மையை சொல்கிறார்.

காடும் அதன்வழியே பெருக்கெடுத்து ஓடும் நீருமே மக்களுக்குப் பாதுகாப்பு..அவற்ரை அழித்து சாலைகளைப் போடுவதென்பது எந்த விதத்திலும் சரியாகாது என்பதை நம்மாழ்வார் ஊடாக இந்த வலை நமக்கு சொல்கிறது.

தோன்றி வெறும் முன்னூறு ஆண்டுகளேயான அமெரிக்காவிடம் பதினைந்தாயிரம் ஆண்டுகால விவசாயப் பாரம்பரியமுள்ள நாம் விவசாய ஆலோசனைகள் கேட்பது நியாயமா என்ற நம்மாழ்வாரின் கேள்வியை இந்த வலை நம்முள் தொடர்ந்து விதைத்துக் கொண்டே இருக்கிறது.

விவசாயிகள் விவசாயத்தைக் கைவிட்டு வேறு தொழிகளுக்குத் தாவ வேண்டுமென பொருளாதாரப் புலி மன்மோகன் சொன்னபோது அது தற்கொலைக்கு சமம் என்று நம்மாழ்வார் சொன்னதை சொல்லி சிலாகிக்கிறார். அவரே தற்கொலைகளை நியாயப் படுத்துவது வலிக்கச் செய்கிறது. ஆத்மநாமின் தற்கொலையையோ அல்லது ஸ்டெல்லா ப்ரூசின் தற்கொலையையோ நாம் கொச்சைப் படுத்தவில்லை. ஆனால் இருவரும் மரணம் வரை வாழ்ந்திருக்க வேண்டும் என்றே ஆசைப் படுகிறோம். போகிற போக்கில் அன்பின் உச்சத்தை ஒரு தற்கொலையின் மூலம் வெளிப்படுத்தலாம் என்று உதயகுமார் என்ற இளைஞன் முடிவெடுத்துவிடுவானோ என்று இந்த அப்பனுக்கு கவலை இருக்கிறது.

”அதிகபட்ச எதிர்பார்ப்பு வேறொன்றுமில்லை
நேசம் ததும்ப ஒரு சொல்
இந்நாளை அழகாக்க ஒரு புன்னகை
இவ்வாழ்வுக்கு அர்த்தம் சேர்க்கவென கொஞ்சமே கொஞ்சம் பிரியம்
இதுதான்
இவ்வளவேதான்”

என்று ஒரு கவிதை இருக்கிறது இந்த வலையில்.

சற்றும் உலராத ஈரம் சொட்டும் அன்பின் பாய்ச்சலும், அன்பிற்கான யாசித்தலுமே இந்த வலை நெடுகத் தென்படுகிறது.

அன்பை நேசிக்கும் அனைவரும் பார்க்க வேண்டிய வலை
http://nichalanam.blogspot.in/




Tuesday, July 1, 2014

நிலைத் தகவல் 46

இன்று ஶ்ரீஹரிகோட்டாவில் பிரதமர் இந்தியைத் தவிர்த்து ஆங்கிலத்தில் பேசினார். இது பிரதமர் சன்னமாக மாறியிருப்பதைக் காட்டுவதாகவும், இதை அவர் தொடர வேண்டும் என்றும் தோழர் ஞாநி சங்கரன் கூறியுள்ளார்.

எதிலும் வலிந்து இந்தியை திணித்துவிட வேண்டும் என்று அரசே முயலும் போது அதன் தலைவர் அதிலிருந்து சற்றே விலகி நின்று பேசியது அவரை இப்படி எழுத வைத்திருக்கும்.

மோடியின் தாய் மொழி இந்தி எனில் அதில் அவர் பேசுவதுதான் முறை. அல்லது குஜராத்தி எனில் அதில் பேசலாம்.அதே போல அங்கு பேசும் அண்ணா மயில்சாமி உள்ளிட்ட ஒவ்வொருவரும் தத்தமது தாய்மொழியில் பேசவும், அதை அனைவருக்கும் கொண்டு சேர்க்க உரிய மொழி பெயர்ப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டியதும்தான் அவசியம் எனப் படுகிறது.

முகநூலில் வாசிக்க...
https://www.facebook.com/eraaedwin/posts/730027670372079

5

தெரிந்திருக்க நியாயமில்லைதான்
சிரிக்கவே மாட்டாயா 
எனக் கேட்கும் நண்பனுக்கு
சிரிக்கத்தான் செய்கிறேன்
இலங்கை கடற்படை
தமிழ் மீனவனை
கைது செய்த செய்தி வராத
தினத்தந்தி பார்க்கும் ஒவ்வொரு முறையும் என்பது

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...