Friday, December 25, 2015

5 போனவன் வந்ததும் போ

‘  சார்
ஒரு விரல் தூக்கியபடி எழுந்தான்
அனுப்பினேன்.

சார்
உடனே மற்றொருவன்
அதட்டினேன்.

நொடிகள் நகர
உள்ளேயே ஈரம்
வகுப்பு முழுவதும் நாற்றமடித்தது
என் அதிகாரம்.’

புகழேந்தியின் இந்தக் கவிதையை முதன் முதலில் வாசித்தபோது ஒரு நூறு முறையேனும் இந்தக் கவிதை என் முகத்தில் அறைந்தது. காரணம் வகுப்புகளும் , பள்ளிகளும் அவற்றினூடே இந்தச் சமூகமும் ஈரப்பட்டு ஆற்றமெடுக்க காரணமான அதிகார வர்க்கத்தின் ஒரு பிரதிநிதி நான் என்பதாலும் இருக்கலாம்.

அநேகமாக புகழேந்தி எனக்கு அடுத்த தலைமுறையைச் சார்ந்த ஆசிரியராக இருக்க வேண்டும். காரணம் புகழேந்தி குறிப்பிடுமளவிற்கு அதிகாரம் மையப்பட்டிருக்கவில்லை எங்கள் தலை முறையில். இன்றைய தேதியில் நிலைமை புகழேந்தி சொல்வதையும் தாண்டி வரம்பு மீறி நகர்ந்திருக்கிறது. வரும்போது சிறுநீர் கழிக்கப் போவதற்கான குழந்தைகளின் சுதந்திரம் பறிபோனதோ அல்லது வேறு பாஷையில் சொல்வதானால் எங்களின் அதிகாரம் கெட்டி பட்டதோ ஏதோ தற்செயலாகவோ அல்லது ஏதேனும் ஒரு புள்ளியில் தடாலடியாகவோ ஏற்பட்ட ஒன்றல்ல. நன்கு திட்டமிட்டு கட்டமைக்கப் பட்ட நடைமுறைத் தொடர்ச்சி அது.

நாங்கள் ஆசிரியராய் உள்ளே நுழைந்தபோதுடேய் ஒவ்வொருத்தரா போஅல்லதுஅவன் வந்ததும் போகலாம்என்று சொல்லுமளவில்தான் இருந்தது. அப்போதெல்லாம் கூட்டமாக நான்கைந்துபேர் சேர்ந்தமாதிரிதான் ஒற்றை விரலை உயர்த்தியபடி எங்களை அணுகுவார்கள். அப்போதுதான்டேய், இப்படி கூட்டமா போகக் கூடாது. ஒவ்வொருத்தனா போஎன்போம். அப்படியும் விட மாட்டார்கள். முதலில் போனவன் ஓரிடத்தில் நின்றுகொண்டு உள்ளிருக்கும் குழந்தைகளோடு சைகையால் உரையாடி அழைத்தபடியே நிற்பான். மெல்ல தயங்கியபடியே அடுத்த இரண்டுபேர் அணுகுவார்கள். அப்போதுதான்போனவன் வந்ததும் போஎன்று சொல்வோம்.

இதற்கு அடுத்த கட்டம்தான் புகழேந்தி குறிப்பிடுவது. இந்தக் காலகட்டத்தில் மாணவர்கள் குழுவாய் இதற்காக ஆசிரியர்களை அணுகும் நிலை இல்லாது போனது. ஆசிரியர்களை அணுகும் சுதந்தரமே இந்த நேரத்தில் அநேகமாக அவர்களிடமிருந்து களவாடப் பட்டிருந்தது. இதுவும் தற்செயலானதல்ல. இதற்குள் இருக்கும் அரசியலை இனங்காணாமல் அதனை சரி செய்வதென்பது எளிதானதல்ல.

இந்தக் காலகட்டத்தில் மாணவர்கள் அனுமதி கிடைக்கிறதோ இல்லையோ குழுவாக ஆசிரியரை அணுகி ஒற்றை விரலைத் தூக்கும் சுதந்திரத்தை இழந்திருந்தனர். சிறுநீர் கழிப்பதற்கு அனுமதி கேட்கும் குழந்தைகளை வறட்டுத்தனமாக நிராகரித்து அமரச் செய்யும் ஒரு ஆண்டைத் தனத்திற்கு ஆசிரியர்கள் வந்திருந்தனர். சிறுநீர் கழிக்க மாணவனை அனுமதிப்பது என்பது அவரது கருணை என்றாகிப் போனது.

வேண்டுமானால் ஒருவனை அனுப்பலாம். அதையே சாக்காக வைத்து எல்லோரும் கேட்டுவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் வகுப்பறை மேலாண்மை கவனம் குவிக்கத் துவங்கியிருந்த நேரம் இது.

ஒருவனை அனுப்பினால் அடுத்தவனும் கேட்பான். எனவே ஒருவரையும் அனுப்புவதில்லை என்பது வகுப்பறை மேலாண்மையின் அடுத்த கட்டமாக இருந்தது.

இப்போது மாணவர்கள் கேட்பதையே ஏதோ ஒரு வித பயத்தில் நிறுத்திக் கொண்டார்கள். தவிர்க்கவே முடியாமல் சிறுநீர் கழிப்பதற்காக அனுமதி கேட்கும் மாணவர்கள் படும் பாடு எழுத்தில் சொல்லி மாளாது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஆசிரியர் சங்க வேலையின் பொருட்டு ஒரு ஆசிரியத் தோழரைப் பார்க்க ஒரு பள்ளிக்கு சென்றிருந்தேன். ஆசிரியர் அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு மாணவன் ஆசிரியர் அறைக்கு வந்து ஒரு ஆசிரியரிடம் தயங்கித் தயங்கி கால்களை இறுக்கியபடியே ஒற்றை விரலை ஒரு புன்னகையோடே தூக்கினான். அவன் கால்களை இறுக்கியபடி நின்ற நிலையே அந்த ஆசிரியருக்கு அவன்மீது கோவத்தை கொண்டு வந்திருந்தது. சிறுநீர் முட்டிக் கொண்ட நிலையில் கால்களை இறுக்கியபடி நிற்கும் அந்தக் குழந்தையின் அவஸ்தையை அவரால் உணர்ந்துகொள்ள இயலவில்லை. இத்தனை ஆசிரியர்கள் இருக்கும் ஒரு இடத்தில் கொஞ்சமும் பயமின்றி வளைந்து நெளிந்து அலட்சியமாக நிற்கிறான் என்பது அவரது பார்வை.

இப்பதானடா இன்ட்ரவல் முடிந்தது?’ என்றார்.

ஆமாம் சார்இந்த அவஸ்தையிலும் புன்னகை மாறாத அந்தக் குழந்தையின் முகம் எனக்கு ஒருவித பொறாமையையே கொண்டு வந்திருந்தது.

அப்ப போயிருக்க வேண்டியதுதானே?’

அப்ப வரலீங்க சார்

அவனது புன்னகையும், பதிலும் அவன் எதிர்த்துப் பேசுவதாக அவரை யோசிக்க வைத்திருந்தது. ’வர வர வாத்தியாங்களுக்கு கொஞ்சமும் மரியாதையே இல்லாமப் போச்சு. சின்னதா ஒரு தட்டு தட்டினாலும் தெருவே திரண்டு வந்துடறானுங்க. எப்படி டிசிபிளின மெயிண்டெய்ன் பன்றது, எப்படி ரிசல்ட்ட கொடுக்கறதுஎன்பதாக அலுப்பின் உச்சிக்கே நகர்ந்து விட்டார். இதற்கிடையில் மிகுந்த சலிப்புக்கிடையே அவனுக்கான அனுமதியை சைகை மூலம் வழங்கி விட்டார். ஒரே துள்ளலும் சிரிப்புமாக அந்தக் குழந்தை ஓடி விட்டான்.

இப்போது நமக்கு இயல்பாகவே ஒரு கேள்வி பிறக்கும். ‘இவர்களுக்கு எல்லாம் பிள்ளைகளே கிடையாதா?’

பிள்ளைகள் இருக்கும் பட்சத்தில் நேரம் பார்த்து, சரியாக இண்ட்ரவல் விடும் நேரத்திற்கு குழந்தைகளுக்கு சரியாக மூத்திரம் முட்டாது என்ற உண்மை புரியாதா?    

ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்க முடியாது என்பது ஆசிரியர்கள் அறியாத்தா?

ஆயிரக் கணக்கான மாணவர்கள் இண்ட்ரவலாக விடப்படும் பத்து நிமிடத்திற்குள் சிறுநீர் மற்றும் மலம் கழித்துவிட்டு வருகிற அளவிற்கு எத்தனைப் பள்ளிகளில் கழிப்பறை வசதி உள்ளது?

ஒரு மாணவன் போய் வந்ததும் அடுத்த மாணவன் போவதற்குள் உரிய முறையில் கழிவறை சுத்தப் படுத்தப் படுகிறதா என்றால் அதற்கான வசதியோ நிதிக் கட்டுமானமோ எந்தப் பள்ளியிலும் இல்லையே. அப்படி இருக்க, நிறைய மாணவர்கள் ஒரே நேரத்தில் அதே கழிவறைகளை பயன்படுத்தும்போது அந்தக் குழந்தைகளுக்கு சிறுநீர் தொற்று ஏற்படாதா?

டிஜிட்டல் இந்தியாவந்த பிறகும் பள்ளிக் கழிவறைகளை சுத்தம் செய்வதற்கு இயந்திரங்களைப் பயன் படுத்தாமல் மனிதர்களைத்தானே இன்றளவும் பயன் படுத்துகிறோம். அதுவும் ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சார்ந்த தோழர்களை மட்டும்தானே பயன் படுத்துகிறோம். அதுவும் அதிக பட்சமாக 750 ரூபாயை அவர்களது ஊதியம் தாண்டவில்லையே என்பதெல்லாம். இந்தக் கட்டுரையினூடாக நாம் கவலைப் பட வேண்டிய உபரி பிரச்சினைகள்.

இதைவிட சுவாரிசியமான ஒரு தகவல் உண்டு. இரண்டாவது பிரிவேளைக்கும் மூன்றாவது பிரிவேளைக்கும் இடையில்தான் இந்த இடைவேளை வரும். மணி அடித்தவுடன் குழந்தைகள எழுந்து வெளியே வந்துவிட முடியாது. இரண்டாவது பிரிவேளை ஆசிரியர் வகுப்பை முடித்திருக்க மாட்டார். அவசரத்தில் எழும் குழந்தைகளுக்கு கிடைக்கும் அர்ச்சனைகள் தனி ரகம்.

தாமதமாகப் போனதால் திரும்ப கொஞ்சம் தாமதமானால் மூன்றாவது பிரிவேளை ஆசிரியர் பிடித்துக் கொள்வார்.

மூத்திரத்தை அடக்கக் கூடாது. வரும்போது கழித்துவிட வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். மணி அடிக்கும் வரைக்கும் மூத்திரத்தை அடக்கு என்கிறது பள்ளி.

இதை மருத்துவத்திற்கும் கல்வித்துறைக்கும் இடையிலான முரண்பாடாக பார்த்துவிடாமல் ஒரு ஒழுங்குப் பிரச்சினையாக அணுக நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது கார்பரேட் யுகம்.
இது ஒழுங்குப் பிரச்சினையா அல்லது மாணாவர்களின் உரிமைப் பிரச்சினையா என்பது குறித்து விவாதிப்பதிலிருந்து சற்றே நழுவி இது குழந்தைகளின் உடல் நலத்தைப் பாதிக்கக் கூடிய சுகாதாரப் பிரச்சினை என்பதை நாம் உணரவேண்டிய தருணமிது.

நிறைய தண்ணீர் குடியுங்கள். நிறைய என்றால் குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு ஐந்து லிட்டர் தண்ணீராவது குடியுங்கள். விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இதில் சிரமமே இருந்தாலும் குடியுங்கள். சிறுநீர் வருகிறபோதெல்லாம் தவிர்க்காமல் கழித்துவிட்டு வாருங்கள். சிறுநீரை அடக்கி வைப்பது ஆபத்தானது. அது சிறுநீரகத் தொற்றுகளுக்கு வழிவகுக்கும்.
தேவையான அளவு தண்ணீர் குடிப்பதும் சிறுநீரை வெளியேற்றுவதும் மிகவும் அவசியம். பள்ளிக்கூடத்துப் பசங்களை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறதுஎன்பதுமாதிரி ஒரு நிலைத் தகவலை தனது முகநூல் பக்கத்தில் வைத்திருந்தார் தோழர் நல்லினா.

நல்லினா ஒரு மருத்துவர், இரண்டு பள்ளிக்கூடத்துப் பசங்களின் தாய், என்கிற வகையில் மேற்காணும் கருத்து இரட்டை முக்கியத்துவம் பெறுகிறது.

இரண்டு லிட்டர் தண்ணீரேனும் குடிக்க வேண்டும், இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறையேனும் அவசியம் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று (18.10.2015) திண்ணை இணைய இதழில் மருத்துவர் ஜான்சன் எழுதுகிறார்.

ஒரு நாளைக்கு நான்கு லிட்டர் தாண்ணீர் பருக வேண்டும் என்று ஒரு மருத்துவ குறிப்பும், தாகம் அடங்கும்வரை தண்ணீர் பருக வேண்டும் என்று மற்றொரு மருத்துவக் கட்டுரையும் சொல்கின்றன.

ஒருவிரல் காட்டிப்போகத்
துணிச்சலற்று
அடக்கியடக்கி
சாப்பாட்டு மணியில்
ஒன்னுக்குப் போனபோது
இரண்டுக்கும் வந்து தொலைய
யாருக்கும் தெரியாமல்
டவுசரில் துடைத்து
வீட்டுக்குப் போகையில்
அம்மா உணர்ந்தாள்
படிப்பு வாசனை

என்று சரியாய் எழுதுவார் இரா.காமராசு.

இப்படி இயற்கை உபாதைகளை அடக்குவது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்க்க் கூடியது. அதுவும் சிறுநீரை அடக்குவது மிகவும் ஆபத்தானது. உயிர்பறிக்கும் தன்மையுடையது என்கின்றனர் மருத்துவர்கள். அதுவும் குழந்தைகள் இதனால் இன்னும் மிக அதிகமாக பாதிக்கப் படுவார்கள் என்கின்றனர்.

அதிகநேரம் சிறுநீரை அடக்குவதால் தாதுக்கள் சேர்ந்து படிகமாகி சிறுநீரின் அடர்த்தியை அதிகரிக்கும். சிறுநீரின் அடர்த்தி அதிகரிக்கும் போது குழந்தைகள் பேரதிகமாய் சிறுநீர் கழிக்கும்போது சிரமப் படுவார்கள். இது நீர் கடுப்பில் கொண்டுபோய் சேர்க்கும். நீர்க்கடுப்பு என்பது கழிவறையிலேயே குழந்தைகளை நிறுத்தி வைக்கும். ரத்தத்தோடு சிறுநீரைக் கொண்டு வரும் சிலருக்கு. சிறுநீரகத்தில், சிறுநீர்ப் பாதையில் கற்கள் உருவாகும். இது அறுவை சிகிச்சைக்கு அந்தக் குழந்தைகளைத் தள்ளும்.

சிறுநீரை அடக்குவதால் சிலருக்கு சிறுநீரகங்கள் பழுதுபடும். இது உயிருக்கே ஆபத்தாக முடியும்.

இது விஷயத்தில் ஆசிரியர்களை மட்டும் குற்றம் சுமத்திவிடக் கூடாது என்பதை ஏதோ நானும் ஒரு ஆசிரியன் என்பதால் சொல்லவில்லை. இன்றைய கல்வித்துறையும் அதிகாரிகளும் இடைப்பட்ட நேரத்தில் எதற்காகவும் மாணவர்கள் வகுப்பைவிட்டு வெளியே வரக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். வகுப்புநேரத்தில் எதன் பொருட்டும் மாணவனை வகுப்புக்கு வெளியேஅனுமதிக்கும் ஆசிரியரை நாயினும் கேவலமாகவே அவர்கள் அணுகுகிறார்கள்.

எதோ ஒரு மாணவன் வகுப்பு நேரத்தில் வெளியே வருவதை அதிகாரிகள் பார்த்து விட்டால் அந்த ஆசிரியரின் நிலை அவ்வளவுதான். இதை அந்தப் பள்ளியோடும் முடித்துக் கொள்ள மாட்டார்கள். ‘நான்அந்தப் பள்ளிக்கு போயிருந்தேன். அங்க…’ என்று எல்லா ஆசிரியர்கள் கூட்டங்களிலும், தலைமை ஆசிரியர்கள் கூட்டங்களிலும் சொல்லி நாறடித்து விடுவார்கள்.
அதன்பிறகு அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அந்தக் குறிப்பிட்ட ஆசிரியரை வறுத்து எடுத்து விடுவார்.

ஆசிரியர்களின் வறட்டுத் தனத்திற்கு இப்படியான ஒரு கார்ப்பரேட் சூழலுக்கு கல்வி போனதுதான் என்பதை பெற்ரோர்களும் கல்வி குறித்த அக்கறை கொண்டவர்களும் அவசியம் உணர்ந்து சரிசெய்ய முயல வேண்டும்.

1)   பள்ளிகளில் போதுமான அளவில் கழிப்பறை வசதிகள் வேண்டும்
2)   கழிவறைகளின் தூய்மையை உறுதிப் படுத்த வேண்டும்
3)   ஒழுங்குப் பிரச்சினையாகப் பார்க்காமல் குழந்தைகளின் இயற்கை உபாதைகளைக் கணக்கில் கொண்டு அவர்களை கழிவறை செல்ல அனுமதிக்க வேண்டும்.
4)   இப்படி மாணவர்கள் அனுமதிக்கப் படுவதால் பள்ளியின் ஒழுங்கு கெட்டுப் போகிறது என்பது உண்மை எனும் பட்சத்தில் பள்ளியின் ஒழுங்கை பாதிக்காத அதே நேரத்தில் மாணவர்களை சிரமப் படுத்தாத ஒரு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.


  

4 comments:

  1. ஆசிரியர்களின் வறட்டுத் தனத்திற்கு இப்படியான ஒரு கார்ப்பரேட் சூழலுக்கு கல்வி போனதுதான் என்பதை பெற்ரோர்களும் கல்வி குறித்த அக்கறை கொண்டவர்களும் அவசியம் உணர்ந்து சரிசெய்ய முயல வேண்டும்.

    உண்மைதான் தோழர்
    தம +1

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete
  2. சிறுநீர் கழித்தல் என்பதானது அவ்வப்போது முடிக்கவேண்டியது. இல்லாவிட்டால் உடல் நிலை சீர்கெட்டுவிடும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க அய்யா.
      ஆனால் இந்த உண்மையை அரசும், கல்வித் துறையும்,பெற்றோரும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...