Monday, December 21, 2015

4 இது செய்யத்தான் கல்வி


“கல்வி நமது பார்வையை விசாலமாக்க வேண்டும்” என்பதே கல்வியாளர்களின் பொதுக் கருத்தாக இருப்பதாக NCERT யின் முன்னாள் இயக்குனர் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஒரு நேர்காணலில் கூறுகிறார். மாணவர்களின் பார்வையை விசாலப் படுத்துகிறமாதிரியான ஒரு கல்விக் கட்டுமானத்திற்காகத்தான் அவர் நீண்டு போராடி வருகிறார் என்பது அவரைப் பற்றி மேம்போக்காக அறிந்தவர்களுக்கும் நன்கு புரியும்.
எந்த மண்ணைச் சார்ந்தவராகினும், எந்த இனத்தைச் சார்ந்தவராகினும், எந்த மொழியைப் பேசுவபராகினும் இருக்கட்டும், அவருக்கு தன் மக்கள் மீதும் சமூகத்தின் மீதும் உண்மையான அக்கறை இருக்குமானால் அவர் கல்வி கற்பவனின் பார்வையை விசாலப் படுத்த வேண்டும் என்ற கருத்தோடு கடுகளவும் முரண்பட இயலாது.
விசாலப் படுவது என்றால் என்ன?
இந்தக் கேள்விக்கான பதிலாக பாரதிதாசன் அவர்களது கவிதை ஒன்றினை நான் சிபாரிசு செய்கிறேன். கொஞ்சம் நீளமான மேற்கோள்தான் எனினும் அதன் தேவை கருதி அதை அப்படியே தருகிறேன்.
“நாட்டொடு நாட்டை இணைத்து மேலே
ஏறு! வானை இடிக்கும் மலைமேல்
ஏறு! விடாமல் ஏறு மேன்மேல்
ஏறி நின்று பாரடா எங்கும்!
எங்கும் பாரடா இப்புவி மக்களை!
பாரடா உனது மானிடப் பரப்பை
பாரடா உன்னுடன் பிறந்தபட் டாளம்
’என்குலம்’ என்றுனைத் தன்னிடம் ஓட்டிய
மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சிகொள்!
அறிவை விரிவுசெய்; அகண்ட மாக்கு
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
அணைந்துகொள்! உன்னைச் சங்கம்மாக்கு!
மானிட சமுத்திரம் நானென்று கூவு!
பிரிவிலை எங்கும் பேதம் இல்லை!
உலகம் உண்ணஉண்; உடுத்த உடுப்பாய்!
புகழ்வேன் ‘உடைமை மக்களுக் குப்பொது!
புவியை நடத்து; பொதுவில் நடத்து!
வானைப் போல மக்களைத் தாவும்
வெள்ளை அன்பால் இதனைக்
குள்ள மனிதர்க்கும் கூறடா தோழா”
புரட்சிக் கவிஞரும் அறிவை விசாலமாக்கத்தான் சொல்கிறார். மட்டுமல்ல, விசாலப் பார்வை எது செய்யும் என ஒரு பட்டியலைத் தருகிறார்.
1) நாட்டொடு நாட்டை இணைக்கும்
2) தன்னுடன் பிறந்த பட்டாளமாக மானுடத் திரளைப் பார்க்க வைக்கும்
3) மக்களைப் பார்த்தால் மனசை மகிழ்ச்சியால் பொங்க வைக்கும்
4) மானுடத் திரளோடு தன்னை பொருத்திக் கொள்ளச் செய்யும்
5) பிரிவோ பேதமோ இல்லை என்று பிரகடனப் படுத்த வைக்கும்
6) பகிர்ந்து உண்ணவும் உடுக்கவும் பக்குவப் படுத்தும்
7) அனைத்தையும் பொதுப் படுத்தத் தூண்டும்
அறிவை விரிவு செய்தல் என்பது கல்வியின் ஆகப் பிரதானமான நோக்கங்களுள் ஒன்றென்பது கல்வியை சந்தைப் படுத்தியவர்களும் ஒத்துக் கொள்ளும் கருத்தாகவே இருக்கிறது. அதில் கல்வி வியாபாரிகளுக்கும், மாற்றுக் கல்விக்காக போராடிக் கொண்டிருக்கும் கல்வியாளர்களுக்கும் எந்த இடத்திலும் பிரச்சினை இல்லை.
விரிகின்ற அறிவு எதை செய்ய வேண்டும் என்பதில்தான் இரு சாராரும் முட்டி மோதிக் கொள்ள வேண்டியிருக்கிறது.
விரிந்த அறிவு அதிக மதிப்பெண்ணை அறுவடை செய்ய உதவ வேண்டும். அதன் மூலம் நல்ல உதவிச்சம்பளத்தோடு உயர் கல்வியை முடிக்க உதவ வேண்டும். கல்வியை முடிக்கும் வரை எது நடப்பினும், யாரை எவர் எதுபொருட்டு வெட்டினும், கண்ணெதிரே ஒரு பெண் வன்முறைக்கு ஆளாக்கப் படினும், அல்லது அது ஒரு இன அழிப்பே ஆயினும், அவற்றிற்கும் தனக்கும் சம்பந்தம் எதுவும் இல்லை என்று கடந்துபோகும் பக்குவத்தை விரிந்த அறிவு வழங்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் தான் ஒருவன் தலையிட்டு இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடப் போவதில்லை, எனவே மௌனமாக அதைக் கடந்துவிட வேண்டும் என்கிற ஞானத்தை அவனுக்கு அந்த அறிவு கற்றுத்தர வேண்டும். அவனால் கல்வித் தந்தைகள் கல்லா நிறம்ப வேண்டும். கைமாறாக அவன் நல்ல வேலைக்கு சென்று கை நிறைய கார் நிறைய சம்பாரிக்க வேண்டும். தாங்கள் பிழைப்பதுபோல் அவனையும் அவனது விரிந்த அறிவு பிழைக்க வைக்க வேண்டும்.
”தேசம் வல்லரசாக பாடுபட வேண்டும்” என்று உயிர் கசிய பேசுவது தாண்டி சமூகம், பொதுவெளி குறித்தெல்லாம் அலட்டிக் கொள்வதற்கெல்லாம் அவன் பெற்ற கல்வியும் ஞானமும் அனுமதிக்காதபடி விரிந்த அறிவு அவனை சுறுக்கிப் போட வேண்டும், என்பதாக விரியும் கல்வி வியாபாரிகளின் கனவு.
மாற்றுக் கல்வியாளர்கள் கல்வி என்பது மக்களுக்கானது என்பதில் புரட்சிக் கவிஞரோடு ஒத்துப் போகிறார்கள். கல்வியை பொதுப்படுத்த வேண்டும் என்று போராடுகிறார்கள். எல்லோருக்கும் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று போராடுகிறார்கள். இதற்கு ஒரே வழி அரசுப் பள்ளிகளே என்பதால் அரசுப் பள்ளிகளை காப்பதற்காகப் போராடுகிறார்கள்.
அரசுப் பள்ளிகள் வளர்ந்து செழிப்படைந்து விட்டால் வசதி படைத்தவர்களும் அதன் பக்கம் சாய்ந்துவிடக் கூடும் என்ற அச்சம் கல்விச் சந்தையாளர்களை இதற்கு எதிராக மிகுந்த நுணுக்கத்தோடும் நரித்தனத்தோடும் காய் நகர்த்த வைக்கிறது.
மாடு மேய்ப்பவனுக்கெல்லாம் கல்வியா என்று அவர்கள் ஆரம்பிக்கிறார்கள். உழைக்கும் திரள் கொதித்தால் சட்டென இறங்கி படிப்பு வருகிறவன் படிக்கட்டும்., படிப்பே ஏறாதவனையும் பள்ளிக்கு கட்டாயப் படுத்துவதால் என்ன விளைந்துவிடப் போகிறது என்று ஆரம்பித்து அது படிக்கிறவனையும் பாழடித்து விடும் என்று நஞ்சைக் கக்கத் தொடங்குகின்றனர்.
இவர்கள்தான் பையப் பைய நகர்ந்து எல்லோரையும் பாஸ் போடுவது எப்படி நியாயம் என்று ஆரம்பிக்கிறார்கள். எட்டாம் வகுப்பு வரைக்கும் எல்லோரையும் பாஸ் போடுவதால்தான் கல்வி குட்டிச் சுவரானது என்று புலம்புகிறார்கள்.
ஆபத்து என்னவென்றால் மேம்போக்காய் பார்க்கும்போது இது நியாயம் என்றே படும். எனவேதான் இந்த இடத்தில் நாம் மிகுந்த எச்சரிக்கையோடு களமாட வேண்டிய அவசியம் இருக்கிறது.
எட்டாம் வகுப்பு வரைக்கும் தேர்வு வைத்தால் தேர்ச்சி பெறாத மாணவர்களில் பெரும்பகுதியினர் இடைநின்று போவார்கள். இவர்களில் பெரும்பான்மையினர் ஒடுக்கப் பட்ட உழைக்கும் திரளைச் சார்ந்தவர்களாகவே இருப்பார்கள். இதைத்தான் பிழைப்பு வாதிகள் விரும்புகிறார்கள்.
இந்த ஆபத்து நிகழ்ந்து விடக் கூடாது என்பதால்தான் யுனெஸ்கோவின் ஒரு அறிக்கை “The purpose of education is the inclusion of the excluded” என்கிறது. கல்வி மறுக்கப் பட்டவர்களை பள்ளியில் வைத்திருப்பதே கல்வியின் நோக்கம் என்றும் கொஞ்சமாய் சாய்த்து இதை மொழி படுத்தலாம்.
ஏதோ ஐந்து அல்லது ஆறு பாடங்களில் மட்டும் தேர்ச்சி பெறுவதல்ல கல்வியின் நோக்கம்.
சக மனிதனின் துயர் கண்டு அவனை துயறுறச் செய்ய வேண்டும். மக்களோடு மக்களாய் அணைந்து அவனை சங்கமிக்கச் செய்ய வேண்டும். சாதி இல்லை பேதமில்லை என்றுணரச் செய்ய வேண்டும்.
இதை செய்ய பொதுக்கல்வி அவசியம் என்பதை சமீபத்தில் நிகழ்ந்த இரண்டு சம்பவங்கள் உறுதி செய்கின்றன, இரண்டுமே பொதுப் பள்ளிகள் என்பது தற்செயலானது அல்ல.
1) திருவாரூர் முத்துப்பேட்டை புதுத் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கருகில் உள்ள பேருந்து நிலையத்தில் ஒரு வயதான பாட்டி யாரும் கவனிப்பாரற்று கிடந்திருக்கிறார். அந்தப் பள்ளியில் ஆறு மற்றும் ஏழாம் வகுப்புகளில் படிக்கும் உமர் முக்தர், ஆகாஷ், கமருதீன், விக்னேஷ்வரன், மற்றும் முகம்மது பயாஸ், என்ற ஐந்து குழந்தைகளும் அவருக்கு தண்ணீர் கொடுப்பது ரொட்டி கொடுப்பது, இட்லி, தோசை என்று தாம் கொண்டு வரும் உணவுகளை கொடுப்பது என்று அவரோடு உறவாடத் தொடங்கியிருக்கிறார்கள். சமீபத்தில் பெய்த மழை அவரது உடல் நலத்தை பெரிதும் பாதித்திருக்கிறது. இதைக் கண்டதும் உடைந்தே போயிருக்கிறார்கள் குழந்தைகள். தங்களது கைச் செலவு காசிலிருந்து மருந்துக் கடையிலிருந்து மருந்து வாங்கி வந்து தந்திருக்கிறார்கள்.
குணமாகவில்லை. ஐந்து குழந்தைகளும் தங்களது பள்ளி ஜூனியர் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் செல்வ வினாயகத்தை அணுகி அவரது ஒத்துழைப்போடும் ரோட்டரி சங்கத்தினரின் உதவியோடும் பாட்டியை மருத்துவ மனைக்கு அழைத்துப் போகின்றனர். குணமடைந்ததும் அருகில் உள்ள பாரத மாதா ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் பாட்டியை சேர்க்கின்றனர்.
2) காலாண்டுத் தேர்வில் பெரும்பான்மை பாடங்களில் தேர்ச்சி பெறாத ஒரு பிள்ளையிடம் பேசிக் கொண்டிருந்தேன். விரக்தியின் உச்சத்தில் கேட்டேன்,
”இந்தப் பள்ளிக்கூடத்திற்கு வந்து என்னதாண்டா கத்துக்கிட்ட?
:”உங்களுக்குத்தான் தெரியுமே சார், எங்கத் தெருவுக்கும் அவங்க தெருவுக்கும் (இன்னொரு பையனின் பெயரை சொன்னான்) ஏகத்துக்கும் பிரச்சினை. எப்பவும் வெட்டுக் குத்துதான். இருபது வருஷமா ரெண்டு தெருக்காரங்களும் கோர்ட்டும் கேசுமா அலையறாங்க சார். ரெண்டு தெருக்காரங்களும் ஜெயிலிலும் இருக்காங்க.
ஆனா, நாங்க ரெண்டுபேரும் அடிச்சுக்காம ஒன்னா இருக்கோம் சார். பள்ளிக்கூடத்துக்கு வெளில எங்களால ஒன்னா அலைய முடியாது சார். பெரியவங்களா ஆனதும் அதையும் செய்வோம். இதுதான் பள்ளிக் கூடத்துனால எங்களுக்கு கிடைச்சது சார்”
ஆமாம், தெரியாமல்தான் கேட்கிறேன், இதைவிட பெரிதாய் எதை படித்துக் கிழிப்பதாம்?

2 comments:

  1. புத்தகங்களை தாண்டிய படிப்பும் அவசியம் என்பதை பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இன்று பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு வந்தேன். அங்கு சில மாணவர்களைப் பற்றி ஆசிரியர்கள் கூறியது உங்கள் பதிவை படித்ததும் நினைவுக்கு வருகிறது. அருமை!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...