முன்பு ஏர்டெல் சார்பாக ஒரு விளம்பரம் வரும்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே எல்லையாக கம்பி வேலி இருக்கும். வேலிக்கு அந்தப் பக்கம் ஒரு பாகிஸ்தானியக் குழந்தை. இந்தப் பக்கம் ஒரு இந்தியக் குழந்தை. இரண்டுக் குழந்தைகளுக்கும் இடையே ஒரு உதை பந்து. பந்தை வேலிக்குள் இருக்கும் இடைவெளி வழியே பாகிஸ்தானுக்கு அனுப்புவான் இந்தியப் பிள்ளை. அதை அதே மாதிரி இந்தியாவிற்குள் அனுப்புவான் பாகிஸ்தானியப் பையன். இப்படியே கொஞ்சநேரம் இரண்டு குழந்தைகளும் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.
இந்த வேலி மட்டும் இல்லேனா எவ்வளவு நல்லா இருக்கும் என்று நினைப்பேன். எல்லைக் கோடுகளே இல்லாத உலகத்திற்காக ஏங்கும் லூசுகளுள் நானும் ஒருவன்.
மெக்சிகோவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே 2240 கோடி அமெரிக்க டாலர் செலவழித்து தடுப்பு சுவர் எழுப்பப் போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருப்பது கண்டு நெஞ்சு பதைபதைக்கிறது. அவர் இதை சொல்லித்தான் வாக்கு கேட்டார். அவர் வந்துவிடக்கூடாது என்று நாம் ஆசைப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம்.
மட்டுமல்ல, அதற்கான செலவையும் மெக்சிகோ பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்றும் ட்ரம்ப் கேட்டுக் கொண்டுள்ளார்.
மனிதர்களைப் பிரிக்கும் சுவரில் தமக்கு நம்பிக்கை இல்லை என்றும் ஆகவே அதற்கான செலவைப் பங்கிட்டுக் கொள்ள இயலாது என்றும் மெச்சிக் அதிபர் என்ரிக் பீனா நீட்டோ கூறியிருக்கிறார்.
உடனே ட்ரம்ப் மெக்சிகோவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 20% இறக்குமதி வரி விதித்திருக்கிறார். வருடத்திற்கு 5000 கோடி டாலருக்கு அமெரிக்காவில் மெச்சிகோ பொருட்கள் இறக்குமதியாகின்றன. எனில், இந்த புதிய வரியின்மூலம் வருடத்திற்கு 1000 கோடி டாலர் மெச்சிக் பணம் அமெரிக்கா வரும். இரண்டரை ஆண்டுகளில் காம்பவுண்ட் சுவருக்கான செலவுத்தொகை அமெரிக்காவிற்கு வந்து விடும்.
இதன்மூலம் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட மெக்சிகோ ஒருக்கால் விலையைக் கூட்டக் கூடும். அது நிகழ்ந்தால் அமெரிக்க மக்கள் தலையில் விழும்.
இரண்டு வீடுகளுக்கிடையே காம்பவுண்ட் சுவர் கட்டுவதென்று இருவரும் முடிவெடுத்தால் செலவினை இருவரும் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். ஒருவருக்கு விருப்பமும் மற்றவருக்கு விருப்பமில்லை என்றால் விருப்பப் பட்டவர்தானே செலவு செய்ய வேண்டும் திரு ட்ரம்ப்.
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்