Sunday, February 19, 2017

65/66 காக்கைச் சிறகினிலே ஜனவரி 2017


இந்த வருடத்தின் முதல்நாளை தோழர் முத்தையாவுடன் செலவு செய்ய நேரிட்டது மிகவும் தற்செயலானதும் மகிழ்ச்சியானதும் ஆகும். எங்களுடைய அன்றைய பயணம் ஒரு மிக நல்ல உப விளைச்சலைத் தந்ததும்கூட தற்செயலானதும் மகிழ்ச்சியுமானதுமே ஆகும்.

அடுத்தநாள் பள்ளிக்கூடம். விடுப்பெடுக்க முடியாது. எனவே விரைவாக ஊர் திரும்ப வேண்டும் என்று நான் சொல்வதை காதுகொடுத்தே கேட்கவில்லை தோழர் முத்தையா. சரி, வருடம் முழுவதும் அவர் சொல்வதை நாம் கேட்கிறோமா என்ன என்பதாக கட்டுப்பட்டேன்.

தோழர் சந்திரசேகர் வீடு சென்று அவரைப் பார்த்துவிட்டு ஊருக்கு போகலாம் என்ற அவரது திட்டத்திற்கு உடன்பட்டாயிற்று. தோழர் புஷ்பராஜ் சவாரிக்கு போய்விட்ட படியால் அவருக்காக வெகுநேரமாகக் காத்திருந்து அவர் வந்ததும் கிளம்பினோம்.

பள்ளிக்கரணை கடந்து நகர்ந்த பொழுது ஒரு சிக்னலில் நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டது. அப்போது நல்ல வெயில். சாலையின் குறுக்கும் நெடுக்குமாக பல குழந்தைகள் சிக்னலில் காத்திருந்த கார் மற்றும் ஆட்டோக்களில் பொம்மை, காது குடையும் பட்ஸ், துடைப்பான் போன்ற பொருட்களை விற்றுக் கொண்டிருந்தனர். இந்த வெயிலில் குழந்தைகள் இப்படி நோகிறார்களே என்ற கவலையோடே தொடர்ந்தோம்.

சந்திரசேகருக்கும் அவரது குடும்பத்தினருக்கும்புத்தாண்டு வாழ்த்துக்களைப் பகிர்ந்து த்நீரை முடித்துக் கொண்டு கிளம்பும்போது முத்தையா அடுத்த தாக்குதலைத் தொடங்கினார். தோழர்கள் துர்கா சரவணன் மற்றும் விவேகானந்தன்  இருவரும் எங்களுக்காக காத்திருப்பதாகவும் அவர்களோடு மதிய உணவு முடிந்த பிறகுதான் ஊர் கிளம்ப அனுமதி என்றும் கூறினார்.

அவர்களையும் பார்த்துவிட்டு திரும்பினோம். அந்த சிக்னலை நெருங்கும் போதே அந்தக் குழந்தைகளின் முகம் நினைவிற்கு வந்தது. இப்போதும் அதே காட்சிதான். இந்தமுறை பொருட்களை விற்கும் குழந்தைகளுக்கிடையே ஒரு விதமான ஒத்திசைவு இருப்பதைப் பார்க்க முடிந்தது. இது ஏதோ ஒருவித எச்சரிக்கையைத் தந்தாலும் அடுத்த நாள் பள்ளிக்கு போக வேண்டும் எனில் உடனே ஊருக்கு கிளம்ப வேண்டும் என்ற பதைபதைப்பே அதிகமாக இருந்ததால் அனைத்தையும் அடக்கிக் கொண்டு நகர வேண்டியதாயிற்று.

அறை சென்று பைகளைத் தூக்கிக் கொண்டு கோயெம்பேடு கிளம்பினோம்.
வழக்கம்போலவே வடபழனி சிக்னலில் சிக்கினோம். இங்கும் அதேபோல குழந்தைகள் விற்பனை செய்வதைப் பார்த்தேன். ஆட்டோ புறப்படும் நேரம் ஒரு வெளிமாநிலப் பெண் மறைவில் நின்று இந்தக் குழந்தைகளை இயக்குவது தெரிந்தது. ஏற்கனவே  முந்தைய சினலில் குழந்தைகளிடம் கண்ட ஒத்திசைவும் இந்தக் காட்சியும் பதைபதைப்பை அதிகமாக்கின.

இந்தக் குழந்தைகளுக்கும் அந்த அம்மாவிற்கும் பொருத்தமே இல்லை. ஆனால் அந்த அம்மாவின் இயக்கத்திற்கு குழந்தைகள் கட்டுப் படுகின்றனர். அந்தக் குழந்தைகளுக்குள் ஒத்திசைவு இருக்கிறது. ஒருக்கால் பெற்றோரிடமிருந்து களவாடப்பட்ட குழந்தைகளாக இருக்குமோ என்றச் என் அச்சத்தை அடுத்தநாள் பள்ளி வென்றது.

பெரம்பலூர் வரும் வரைக்கும் அதே நினைவு. வந்ததும் என் அய்யத்தை முகநூலில் பதிந்து தோழர்கள் கவனிக்குமாறு சொன்னேன்.

அடுத்த நாளே தோழர் வளவன் சித்தார்த்தன் என்னைத் தொடர்பு கொண்டு சில விவரங்களைக் கேட்டார். கூறினேன். தான் வெளி மாநிலத்தில் இருப்பதாகவும் ஆனால் இந்தத் தகவலை தனது நண்பர்களிடம் கூறியுள்ளதாகவும் மேலதிகத் தகவல் கிடைத்ததும் அறியத் தருவதாகவும் கூறினார்.

மூன்று நாட்களுக்குப் பிறகு மூன்றே மூன்று குழந்தைகளை மட்டுமே தனது நண்பர்களால் மீட்க முடிந்ததாகவும், அவர்களை பாதுகாக முகாமொன்றில் விட்டிருப்பதாகவும் கூறினார். அவர்களது ஊர், தாய் தந்தை குறித்த விவரங்களைப் பெற முடியுமா என்று அவர்கள் முயற்சித்துக் கொண்டிருப்பதாகவும் குழந்தைகளின் நினைவில் விவரங்கள் இருக்குமானால் அவர்களை அவர்களது பெற்ரோரிடம் சேர்த்துவிடல்லம் என்றும் அல்லது ஏதேனும் அரசு விடுதியில் சேர்க்கலாம் என்றும் கூரினார்.

நிச்சயமாக குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பப் படுவார்கள் என்றும் கூறியபொழுது சத்தியமாய் கண்கள் ஈரப்பட்டன.


இந்த முயற்சியில் பங்கெடுத்த அனைவரையும் நன்றி சொல்லி வாழ்த்துகிறேன்.

சிக்னல்களில்  இந்தப் பக்கமும் கொஞ்சம் கவனம் திருப்புவோம்

****************************    

மாணவர் போராட்டத்தில் நெகிழ்ச்சியான பல சம்பவங்கள் நடந்தன. அவற்றில் இஸ்லாமியப் பிள்ளைகளின் தொழுகையும் ஒன்று.

போராட்டத்தில் பங்கெடுத்த இஸ்லாமியக் குழந்தைகள் தொழுவதற்காக சிரமப்பட்டபோது அவர்களுக்காக தனி இடம் ஒதுக்கி அவர்களது தொழுகைக்கு உதவி இருக்கிறார்கள் மற்ற சமூகத்தை சார்ந்த குழந்தைகள்.   

இதை அனைவரும் நெகிழ்ச்சியோடும் மகிழ்ச்சியோடும் பார்க்கையில் மரியாதைக்குரிய மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் இதுகுறித்தும் வழக்கம்போலவே விஷத்தைக் கக்கியிருக்கிறார்.

இந்துக்கள் நல்லவர்கள் . மற்ற சமூகத்தின் மத வழிபாடுகளில் குறுக்கிடாதவர்கள் மட்டுமல்ல அவற்றை சாத்தியப்படுத்த துணை நிற்பவர்கள். இத்தகைய குழந்தைகளுக்காகப் பெருமைப் படுகிறேன் என்று அதை அவர் தனது மதத்தின் பெருமையாகக் கொண்டாடி இருந்தால்கூட விட்டிருக்கலாம்.

மாணவர்கள் போராட்டத்தின்போது இஸ்லாமியர்கள் மட்டும் எப்படி தொழுகையை நடத்தலாம்?  இது மதவெறியல்லவா என்பதுமாதிரி கொதித்திருக்கிறார்.

இதுமாதிரி கடைந்தெடுத்த ஒரு மத வெறியர் கூறினால் போகட்டும் என்று விட்டுவிடலாம். அவர் மரியாதைக்குரிய ஒரு மத்திய அமைச்சர்  என்பதை யாரேனும் அவரிடாம் புரிகிறமாதிரி எடுத்துச் சொன்னால் தேவலாம்.

சரி,அவரவரும் தங்கள் தங்கள் வார்த்தைகளாலும் அறியப் படுவார்கள்.

கேரளாவில் திருநங்கைகளுக்கான பள்ளி துவக்கப் பட்டுள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது. இதுமாதிரியான பள்ளிகள் தவிர்க்க இயலாத அவசியங்கள். மேற்கத்திய நாடுகளில் இத்தகைய பள்ளிகள் ஏற்கனவே உள்ளன.

எல்லா ஆணுக்குள்ளும் பெண்ணும் உண்டு. அப்படியேதான் எல்லாப் பெண்களுக்குள்ளும் ஆணும் உண்டு.

ஆணுக்குள் பெண் அதிகமானால் திருநங்கை. பெண்ணிற்குள் ஆண் அதிகமானால் திருநம்பி..

ஆணும் பெண்ணும் மாதிரியே பெற்றோருக்கு திருநங்கையும் திருநம்பியும் குழந்தைகளே. இதுமாதிரிப் பள்ளிகள் அவர்களுக்கான கல்வியை உத்திரவாதப் படுத்தும். பிச்சை எடுப்பதிலிருந்தும் பாலியல் தொழிலிலிருந்தும் அவர்களைக் காப்பாற்றும்.

இதுவிஷயத்தில் நமக்கு சில கோரிக்கைகள் உண்டு.

1)   இதுமாதிரிப் பள்ளிகள் தேசம் முழுக்க தேவைக்கு ஏற்ப ஏற்படுத்தப்பட வேண்டும்.
2)   கல்லூரிகளும் தொழில்நுட்பக் கல்லூரிகளும் ஏற்படுத்தப்பட வேண்டும்
3)   திருநங்கைகளைவிடவும் திருநம்பிகளின் வாழ்க்கை சிக்கலானது என்ற உண்மையைக் கணாக்கில்கொண்டு திருநம்பிகளுக்கான பள்ளிகளும் துவக்கப்பட வேண்டும்
********************************************************************************

பேசிக்கொண்டிருந்தபோது தோழர் வளவன் ஒரு உருக்கமான சம்பவத்தை சொன்னார்.

சில வருடங்களுக்கு முன்னால் தெருவில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பிள்ளைகளை மீட்கிறார்கள். மீட்கப்பட்ட குழந்தைகளில் ஒருவனுக்கு தமிழ் தெரிகிறது. ஆனால் அவனது ஊர் தமிழ்நாடல்ல. ஊரைப் பற்றிக் கேட்கும்போதெல்லாம் ஏதோ ஒரு வார்த்தையைக் கூறிக்கொண்டே இருந்திருக்கிறான்.

அந்த வார்த்தை எந்த மொழி என்று கண்டுபிடிக்க முயற்சித்திருக்கிறார்கள். மிகுந்த சிரமத்திற்குப் பிறகு அது வங்க மொழி வார்த்தை என்று தெரிந்திருக்கிறது. உடனே வளவனுக்கு ஒரு திட்டம் தோன்றியிருக்கிறது. ஊரைக் கேட்டால் அந்த வார்த்தையை சொல்கிறான். ஒருக்கால் அதுதான் ஊரின் பெயராக இருக்கக் கூடும். எனவே அந்த ஊரின் போஸ்ட் மாஸ்டருக்கு ஒருகடிதம் எழுதலாம் என்று.

அந்தக் குழந்தையைப் பற்றி வங்கம் தெரிந்த நண்பரைக் கொண்டு கடிதம் எழுதி ‘போஸ்ட் மாஸ்டர்’ என்றெழுதி அந்தப் பையன் சொன்ன வார்த்தையை எழுதி, மேற்கு வங்கம் என்று எழுதி அனுப்பி விட்டனர்.

இரண்டு நாட்கள் கழித்து அந்த போஸ்ட் மாஸ்டரிடமிருந்து தொலைபேசி வந்திருக்கிறது. அந்தப் பையன் தங்கள் ஊர்தான் என்றும் அவனது பெற்றோர்கள் தம்மோடுதான் இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். வங்கம் தெரிந்த தோழரின் உதவியோடு அவர்களோடு பேசியிருக்கிறார்கள்.   

வந்து குழந்தையை அழைத்துப் போகுமளவு வசதியில்லை என்று கூறியிருக்கிறார்கள். இவர்களே அழைத்துப் போய் விட்டுவிட்டு வந்திருக்கிறார்கள். தொடர்ந்து உதவுகிறார்கள்.

சென்னையில் பிச்சை எடுத்துக் கொண்டும் தெருவில் பொருள்களை விற்றுக் கொண்டும் இருந்த அந்தப் பிள்ளை இன்று நல்ல நிலையிலும் தொடர்போடும் இருப்பதாகச் சொன்னார்.

கவனம் வைப்போம்.

கிராமத்து அஞ்சல் நிலையங்களைக் காப்பாற்ற வேண்டும்.
*********************************************** 




4 comments:

  1. குழந்தைகளை இழந்து தவித்த குடும்பத்திற்கு பேருதவி புரிந்துள்ளீர்கள் தோழர்
    வாழ்த்த வார்த்தைகள் மட்டும் போதாது என்பது புரிகிறது

    ReplyDelete
    Replies
    1. நானென்ன தோழர் செய்தேன். எல்லாப் புகழும் தோழர்களுக்கே

      Delete
  2. நெகிழவைத்த பதிவு. இன்று தினமணியில் கலாரசிகன் தங்களைப் பற்றிக் கூறியிருந்ததைக் கண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க அய்யா

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...