Wednesday, February 8, 2017

அரசியல் படி

”எங்க வீட்டயெல்லாம் காலி செஞ்சு ஜாமனையெல்லாம் மூட்டகட்டி வெளிய வச்சுட்டோம். பாவம் இந்த பொம்பளப் பசங்க. ஓரமா ஒதுங்கியெல்லாம்  ஒன்னுக்கு ரெண்டுக்கு போயி ச்பழக்கமிருக்காது. இந்தா இந்த சேலைங்கள எடுத்துப்போயி வீடுங்கள மறச்சு கக்கூசா வச்சுக்கோங்க”

இதுதான் நான் ஆகச் சமீபத்தில் கண்ட மனிதாபிமானத்தின் உச்சம். இதை இந்தச் சமூகத்தின் மீது அக்கறையோடும் ஆர்வத்தோடும் தொலைக்காட்சியில் மின்னும் சமூக ஆர்வலர்கள் யாரும் சொல்லவில்லை. இதைச் சொன்னது எழுதப் படிக்கத் தெரியாத, புயலுக்கு புயல் மட்டுமே பள்ளிக்குள் ஒதுங்கும் ஒரு மீனவத்தாய். தங்களது குடிசைகளை காலி செய்து அந்த மூத்தத் தாயின் வாக்கை ஆமோதித்து தங்களது குடிசைகளை மறைத்து கக்கூசுகளாக்குவதற்காக தங்களது கிழிந்த சேலைகளை மாணவப் பிள்ளைகளுக்கு எடுத்துக் கொடுத்தவர்கள் எல்லோரும்கூட அந்த மீனவக் குப்பத்தைச் சேர்ந்த தாய்மார்கள்தான்.

நேற்று இரவுவரை தந்தையாய், தாயாய், சகோதரனாய், சகோதரியாய் தம்மேல் அன்பையும் பாசத்தையும் பொழிந்த காவலர்கள் ஒரு சொடுக்கும் பொழுத்துக்குள் இவ்வளவு கொடூரமாகவும், மூர்க்கமாகவும், மனிதத் தன்மையற்றும் மாறிப்போவார்கள் என்று அந்த மாணவப் பிள்ளைகள் ஒருபோதும் எதிர்பார்த்திருக்கவில்லை.

விடிந்ததும் கூட்டத்திற்குள் நுழைந்து கலைந்துபோகுமாறு கோரிய காவலர்களிடம் லத்திகள்கூட இல்லை. முந்தையநாள் காவலர்களாகவே அப்போதும் அவர்களைப் பார்த்த சில பிள்ளைகள் அவர்களை ‘அண்ணா’ என்றும் ‘அங்கிள்’ என்றும்கூட விளித்திருக்கிறார்கள்.

அவசரச் சட்டம் பிறப்பிக்கப் பட்டுவிட்டதாலும் அன்று மாலையோ அல்லது அடுத்தநாளோ நிரந்தரச் சட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறிய காவலர்கள் ஆகவே இனி அவர்களை அங்கு அனுமதிக்க முடியாதென்றும் உடனே கலைந்து செல்ல வேண்டுமென்றும் கூறிய தொனி பிள்ளைகளுக்கு புதியதாக இருந்தது. சடாரென கலைந்து போவதில் உள்ள சிரமங்கள்ளை எடுத்துக் கூறி கலைந்து செல்வதற்கு இரண்டுமணிநேரம் அவகாசம் கொடுங்கள் என்று கூறிக் கொண்டிருந்தபோதே லத்தியை சுழற்றியபடி மாணவர்களை சிதறடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். தங்களைக் கலைந்து செல்லுமாறு கோரியபோது அவர்கள் கைகளில் இல்லாத லத்திகள் ஒரு வாக்கிய இடைவெளிக்குள் அவர்களது கைகளுக்குள் எப்படி வந்தன? என்பது இன்னமும் அந்தக் குழந்தைகளுக்குப் புரியவில்லை.

காவல்துறை தரப்பில் அப்படியொரு திட்டமிடல் நடந்திருக்கிறது.
கொடூரமான லத்தியடி மாணவர்களை நாலாபக்கமும் சிதறியடித்திருக்கிறது. அதில் ஒருபகுதி தங்களையறியாமல் கடல்நோக்கி ஓடியிருக்கிறார்கள். அப்போது காலை நேரம் என்றபடியால் சில பிள்ளைகளுக்கு இயற்கை உபாதை ஏற்பட்டிருக்கிறது. சில பெண் குழந்தைகளுக்கு மாதாந்திர சுழற்சி ஏற்படவே  அங்கிருந்த பயோ டாய்லட்டை கொஞ்சம் பயன்படுத்திக் கொள்வதற்காக அனுமதி கேட்டிருக்கிறார்கள். அப்போது தடித்த வார்த்தைகளால் அவர்களை ஏசியபடியே தொடர்ந்து விரட்டியடித்திருக்கிறார்கள். அதற்குமேல் அங்குலம்கூட நகரமுடியாத பெண்பிள்ளைகள் தங்களது வயிற்றைப் பிடித்தபடி அப்படியே அமர்ந்திருக்கிறார்கள்.

அவர்களை அரணாக வளைத்து நின்று லத்தியடிகளில் இருந்து அவர்களைக் காப்பாற்றிய தாய்மார்கள்தான் முதலில் உள்ளபடி தங்களது வீடுகளை கக்கூசாக மாற்றிக் கொள்ளுமாறு மாணவர்களிடம் சொன்னது.

மீண்டும் மீண்டும் எத்தனைமுறை வேண்டுமானாலும் சத்தியமாய் சொல்கிறேன் ஆகச் சமீபத்தில் என்னை மெய்சிலிர்க்க வைத்த மனிதாபிமானத்தின் உச்சம் இதுதான்.

இந்தப் புள்ளியிலிருந்துதான் நான் போராடிய மாணவக் குழந்தைகளோடு, அவர்களோடு சேர்ந்து போராடிய ஒரு பிள்ளையின் தகப்பன் என்ற உரிமையில் கொஞ்சம் உரையாட விரும்புகிறேன்.

அவர்கள் கொடுத்த சேலைகளைக் கொண்டு குடிசைகளை மறைத்தபடி நீங்கள் நிற்க பெண்பிள்ளைகள் உள்ளே சென்று ரிஃப்ரெஷ் செய்து கொண்டு வந்திருக்கிறார்கள். இதைப் படிக்கும்போது ஒரு பெற்றோன் என்ற வகையில் திமிறே எனக்கு.

ஆனால், இதில்கூட எதைப் பேச வேண்டுமோ அதை பேச மறுக்கிறார்கள், எவை வெறும் அபத்தமோ அவற்றை மட்டுமே சிலாகித்து பேசுகிறார்கள் என்பதை மாணவர்களாகிய நீங்கள் உணர வேண்டும். உங்களையும் உங்களது போராட்டத்தையும் கௌரவப் படுத்துவதாக காட்டிக் கொள்ளவேண்டும்  அதே நேரத்தில் அந்தப் பாராட்டுதல் என்பது இந்தப் போராட்டத்தின் உன்னதமான விழுமியத்தை நீங்கள் உணராதபடி செய்துவிடவேண்டும் என்பதில் அவர்கள் எவ்வளவு அக்கறையாய் இருந்திருக்கிறார்கள் பாருங்கள். அவர்கள் கூறுகிறார்கள்,”

’பார்த்தீர்களா, பார்த்தீர்களா இந்தப் போராட்டத்தில்  பெண் பிள்ளைகள் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறார்கள்” என்பதாக ஒரு பெரும்பிம்பமாக இதை கட்டமைக்க முயல்கிறார்கள். முதலில் பெண்கள் பாதுகாப்பாய் இருக்கிறார்கள் என்பதே அபத்தம். அது இயல்பானது. கட்டமைக்கப்படும் இந்த பிம்பத்துள் நீங்கள் கரைந்துவிடுவீர்கள் என்றால் ஏதோ இந்த போராட்ட களத்தில் மட்டும்தான் பெண்பிள்ளைகள் ஆண் பிள்ளைகளிடம் பாதுகாப்பாக இருப்பதுபோலவும் பள்ளிகளில், கல்லூரிகளில், தெருக்களில் அப்படியெல்லாம் இல்லை என்பதும்போலல்லவா அமைந்துவிடும்.

நீங்கள் உணர்ந்துவிடக் கூடாது என்று அவர்கள் அக்கறைப் பட்டதும் நீங்கள் உணர்ந்துகொண்டே ஆகவேண்டும் என்று நாங்கள் அக்கறைப்படுவதும் இதுதான்,

தங்களது வசிப்பிடங்களை நீங்கள் கழிவறறையாய்ப் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்ததை நாம் மனிதத் தன்மை என்று சொல்லலாமா? அல்லது பெருந்தன்மை என்று சொல்லலாமா? யோசித்துப் பாருங்களேன், அவர்களது அந்த செயலுக்கு உலகில் எந்த மொழியில் உள்ள எந்த வார்த்தையும் சரியாய்ப் பொறுந்தாது.

வீடு கோயில் மாதிரி என்றுதான் சொல்லக் கேட்டிருக்கிறோம். வீட்டை காலி செய்து அடுத்தவர்களுக்கு கழிவறையாகக் கொடுத்ததது இருக்கிறதே இதற்கு ஒப்புமை வரலாற்றில் புராணத்தில் எங்கேனும் இருக்கிறதா?

1) தங்களது வீடுகளையே உங்களுக்கு கழிவறையாகத் தாரை வார்த்திருக்கிறார்கள்.
2) அவர்களது வீடுகளை சேலைகள் கொண்டு மறைத்தால்தான் உங்களுக்கான கழிவறைகளாகவே அவை மாறியிருக்கின்றன
3) நீங்கள் கழிவறையாய்ப் பயன்படுத்திய இடங்களை அவர்களே சுத்தம் செய்து அவற்ரில் அவர்கள் மீண்டும் குடியேறினார்கள்
4) இதற்காகத்தான் அவர்கள் மிகக் கொடூரமாகத் தாக்கப் பட்டிருக்கிறார்கள்
5) இதற்காகத்தான் உங்களது கழிவறைபோல இருந்த அவர்கள் வீடுகள் தரைமட்டமாக்கப் பட்டிருக்கின்றன

உங்களிடம் வினவுவதற்கும் உரையாடுவதற்குமான எனது வெளி இந்தப் புள்ளியில்தான் தொடங்குவதாக நினைக்கிறேன்.

உங்களது கோரிக்கைகளை நீங்கள் பொதுமக்கள் நலன் சார்ந்து, கார்ப்பரேட் ஸ்தாபனங்களுக்கு எதிராக என்று நீங்கள் களத்திலிருந்தபடி விஸ்தரித்தீர்கள். அதுவேதான் உங்களோடு களமேகிய அல்லது அரசியலற்றவர்கள் என்று கருதி களத்திற்குள் உங்களால் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு எரிச்சலாய் இருந்தது. ஆனால் நீங்கள் ஒன்றுதிரளத் தொடங்கியபோது “ஜல்லிக்கட்டு” என்பதுதான் உங்களது ஒற்றைக் கோரிக்கையாகவும் இருந்தது. நாடெங்கிலும் போராடிய லட்சக்கணக்கான உங்களில் எத்தனைபேருக்கு ஜல்லிக்கட்டு என்றால் புரியும். உங்களில் பெரும்பான்மை குழந்தைகளுக்கு தெரியாது என்பது எனக்குத் தெரியும்.

நீங்கள் மெரினாவில் கூடத் தொடங்கிய சற்று நேரத்திற்கெல்லாம் பெரம்பலூர் பாலக்கறையில் பிள்ளைகள் திரளத் தொடங்கினார்கள். அவர்களுள் கிஷோரும் ஒருவன். தொண்டை கிழிய அவர்கள் போட்ட கோஷம் “ வேண்டும் வேண்டும் ஜல்லிக்கட்டு வேண்டும்” என்பது.

“வாடி வாசல்னா என்னப்பா?” என்று இரண்டு நாட்கள் கழித்து அவன் கேட்டான். விளக்கினேன். அவன் வேறு நீங்கள் வேறு அல்ல. எனில் உங்களில் பெரும்பான்மையோருக்கு ஜல்லிக்கட்டு பற்றி விவரம் தெரியாது. பிறகு ஏன் இப்படியொரு வலிமையான போராட்டத்தை கை எடுத்தீர்கள்.

ஜல்லிக்கட்டு  என்பது தொன்மையான தமிழ் கலாச்சாரம் என்றும் அது இனத்தை அழிப்பதன் பொருட்டு தடை செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டவுடன் இன அழிவை அனுமதிக்கக் கூடாது என்று எழுச்சியோடு திரண்டீர்கள். அநீதி என்று நீங்கள் கருதிய ஒன்றிற்கு எதிராக நீங்கள் போராட வந்ததே மகிழ்ச்சியான விஷயம்.

ஜல்லிக்கட்டு தமிழ்க் கலாச்சாரத்தின் விழுமியமான கூறுதான். அதைத் தடை செய்வதென்பது இனத்தின்மீதான தாக்குதல்தான். உங்கள் போராட்டம் நியாயமானதுதான். ஆனால் குழந்தைகளே தங்களது வீட்டையே உங்களுக்கு கழிப்பிடமாகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்த இந்த மீனவர்களும், யார் யாரெனப் பகுத்துணரமுடியாதபடி உங்களில் ஒரு பகுதியினர் தமிழர்களின் கலாச்சார விழுமியம் என்று அழைக்கப் படுகிற ஜல்லிக்கட்டில் பங்கேற்க முடியாது என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?

பொதுவாக போராடுவார்கள், அடி படுவார்கள், வெற்றி பெருவார்கள். நீங்கள் போராடினீர்கள், வெற்றி பெற்றீர்கள், வெற்றி பெற்றபின்தான் உங்களை அவர்களால் தாக்க முடிந்தது. இது போராட்டக் களத்தில் புதிது.

ஜல்லிக்கட்டிற்கான தடை நீங்கியதும் தடையை நீக்கிய அரசுக்கு நன்றி சொன்னார்கள் உங்களுக்கும் நன்றி சொன்னார்கள். உங்களுக்காக கேலரி அமைப்பதாகவும் வந்திருந்து வேடிக்கைப் பார்க்குமாறும் அழைத்தார்கள்.

ஜல்லிக்கட்டு உங்களுடையது எனில் அதை நீங்கள் அல்லவா நடத்தியிருக்க வேண்டும்? போராட்டம் வெற்றி பெற்றதும் நீங்கள் விருந்தாளியாகிப் போனீர்கள்.

இந்த ஜல்லிக்கட்டிற்கான காரணிகளாக நான் பார்ப்பது

1) உங்களின் போராட்டம்
2) மீனவர்களின் கடுமையான போராட்டம்

அதற்கான விலையாக நான் பார்ப்பது

1) உங்கள் மீதான தாக்குதல்
2) நம்பப்படுகிற சில உயிரிழப்புகள்
3) நடுக்குப்பம் தரை மட்டமானது

இவற்றிற்கு எதிராக ஜல்லிக்கட்டு நடத்தக்கூடிய யாரேனும் கொதித்திருக்கிறார்களா? குறைந்தபட்சம் ஒரு அறிக்கையேனும் கொடுத்திருக்கிறார்களா? ஒருபோதும் மாட்டார்கள். காரணம் அவர்களைப் பொறுத்தவரை அவர்களுக்குத் தேவையான ஜல்லிக்கட்டு அவர்களுக்கு கிடைத்துவிட்டது. ஒரு நன்றி சொல்லுதலோடு அவர்கள் நகர்ந்து விட்டார்கள்.

இப்போது பலநூறு மாணவர்கள் மீது வழக்குப் பதிந்திருக்கிறது அரசு. மீனவ இளைஞர்களையும் பெண்களையும் குறிவைத்து தாக்குகிறது காவல்துறை.

போராட்டத்திற்குப் பிறகான தாக்குதல் என்பது போராட்ட அரசியலில் ஒரு கூறு. அதை எதிர்கொள்வதற்கு தியாகத் தளும்பேறிய ஒரு அரசியல் வேண்டும். அந்த அரசியலை நீங்கள் கையிலெடுக்க வேண்டியதும் கற்றுத் தெளிய வேண்டியதும் அவசியம்.

இந்தப் போராட்டத்தில் எங்கு அரசியல் ஈலை என்று நினைக்கிறீர்கள்?

ஒரு வாரமாக வாடி வாசலைத் திறக்க வேண்டும் என்று நீங்கள் போராடினீர்கள்.. அவர்கள் மறுத்தார்கள். அந்தத் திங்களன்று அவர்கள் வாடி வாசலைத் திறந்துவிட வேண்டுமென்று துடித்தார்கள். நீங்கள் திறக்கவிடாது தடுத்தீர்கள்.

இதுதான் அரசியல்.

உங்களிடம் வந்து பேசுமாறு முதல்வரை அழைத்தீர்கள். அவரும் அதையே விரும்பியதாகவும் சொல்கிறார்கள். அவர் அலங்காநல்லூருக்கு அன்று போகவே விரும்பவில்லை என்றும் சொல்லப்படுகிறது. ஒருக்கால் அவர் உங்களிடம் நேரில் வந்து அவர் உரையாற்றி இருந்தால் பிரச்சினை அன்றோடு சுமூகமாக முடிந்திருக்கும். ஆனால் நேர் மாறாக எல்லாம் நடந்ததுதான் வெகுஜன கார்ப்பரேட் அரசியலின் நுட்பம்.

நீங்கள் பெப்சி கோலாவைத் தடை செய்ய வேண்டும் என்று கோரியவுடன் இதற்காக நாம் கூடவில்லை என்று சொன்னார்களே அவர்கள் யார் பிள்ளைகளே? அவர்கள் எல்லாம் பெரும்பாலும் ஆதிக்கப் பகுதியில் இருந்து வந்திருப்பவர்களும் பெரு முதலாளிகளும் கார்ப்பரேட்களும்தான்.

அரசியல் என்பது கரைவேட்டியும், தேர்தல் நேரத்து வாக்கு சேகரிப்பும் ஆட்சியைப் பிடித்தலும் அல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். வெகுஜன முதலாளித்துவ அரசியல் கட்சிகளை இயக்குவதும் ஆட்சிகளை இயக்குவதும் கார்ப்பரேட்கள்தான்.

சமையல் எரிவாயுவிற்கான மானியத்தை பொதுமக்கள் திருப்பித் தரவேண்டும் நாளும் பொழுதும் போராடிக் கொண்டிருக்கிற நமது பிரதமர் பல்லாயிரம் கோடிக்கணக்கிலான சில பெரு முதலாளிகளின் கடனை தள்ளுபடி செய்தபோது மௌனம் காத்தாரே அதுவும் கார்ப்பரேட்  அரசியல்தான்.

வரி கட்ட மாட்டேன் என்று வம்படிக்கும் அம்பானிக்கு கடன் வசூலிக்கும் உரிமையை கொடுத்ததும் அதன்மூலம் நிகழ்ந்த மாணவனின் தற்கொலையும்கூட முதலாளித்துவத்தின் அரசியல்தான்.

கட்டணக்கொள்ளையும் அரசியல்தானே.

இந்த மோசமான அரசியலை எதிர்கொள்ள நல்ல மாற்று அரசியல் தேவை இல்லையா? அந்த மாற்று அரசியலை யார் செய்கிறார்கள் என்று நீங்கள் தேட வேண்டும். அவர்களோடு இணைய வேண்டும்..

பாதிக்கப்பட்ட மீனவர்களுக்காக யார் போராடிக் கொண்டிருக்கிறார்களோ அவர்களோடு இணையுங்கள். இப்பொழுதும் சொல்கிறேன் அவர்கள் கட்சியில் இணையக்கூட வேண்டாம். அவர்களது அரசியலை போராட்டங்களை ஆதரியுங்கள்.

எல்லாம் மோசம் என்பதும் அரசியலே வேண்டாம் என்பதும்கூட அயோக்கியத் தனமான கார்ப்பரேட் அரசியலின் கூறுகள்தான்.
கோளாறுகளும் குறைபாடுகளுமில்லாத இடம் இல்லை.

ஈழ விஷயத்தில் இன்னும் கொஞ்சம் வெளிப்படையாக அவர்கள் வெளி வந்திருக்க வேண்டும் என்று நினைப்பவன்தான் நான். கூடங்குளம் அணு உலை விஷயத்தில் அவர்களது நிலைப்பாடு எனக்கு வருத்தத்தத்தை தருகிறதுதான்.

ஆனால் இடது சாரிகளின் போராட்டத்தில் அர்ப்பணிப்பில் தியாகத்தில் எளிமையில் என்ன குறை இருக்கிறது? போக உங்களைப் போன்ற மாணவர்கள் சேர்ந்தால் இடதுசாரிகளின் போக்கும் மாறக்கூடும் என்று நம்பிக்கைக்கூட எனக்கு உண்டு.

நேற்றுகூட வாசுகி உமாநாத் காவல் நிலையத்தில்  இருந்து மாணவர்களை மீட்பதற்கான முயற்சியில் இருக்கும் தகவல் வந்தது. தோழர் சிந்தன், குமார், செல்வா போன்றோர் நடுக்குப்பத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

நான் எனக்குத் தெரிந்ததை சொன்னேன். தமிழ்த் தேசியர்களும், தீவிர இடதுசாரி மனோபாவம் கொண்டவர்களும் அங்கு இருக்கக் கூடும்.

அனைத்தையும் உள்வாங்குங்கள். உங்களுக்கு சரியெனப் பட்டதை செய்யுங்கள்.

நீங்கள் போராட்டத்தைச் தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன்னால் அரியலூருக்கு அருகே நந்தினி என்கிற 17 வயதான தலித் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப் பட்டு கிணற்றில் வீசப் பட்டிருக்கிறாள். 15 நாட்கள் கழித்துதான் அழுகிய நிலையில் அவளது உடல் கண்டெடுக்கப் பட்டிருக்கிறது. இதை செய்தவர் ஒரு இந்துத்துவா அமைப்பின் தலைவர் என்று நம்பப்படுகிறது.

ஆனால் நடவடிக்கை வேறுமாதிரி நகர்கிறது.  உண்மையான குற்றவாளியை கைது செய்யும்வரை ஏற்கனவே அழுகிய நிலையில் இருந்த அவளது உடலை வாங்க மாட்டோம் என்று அவளது உறவினர்கள் மூன்று நான்கு நாட்கள் போராடிய நிலையில் வேறு வழியின்றி வாங்கி ஈமச் சடங்குகளை முடிக்கிறார்கள்.

17 வயது மதிக்கத்தக்க ஒரு தமிழ்ப் பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்வதவன் தண்டனை பெறாது ஊர்வலம் வரலாம் என்பது தமிழ்க் கலாச்சாரத்தை ஊறு செய்யாதா பிள்ளைகளே?

இப்படி ஒரு காரியத்தை செய்தாலும் அவன் சுதந்திரமாக நடமாடலாம் என்பது மேட்டுக்குடி அரசியல். அதற்கு எதிராய் ஒரு மாற்று அரசியல் வேண்டாமா?

அதற்காக உடனே ஒன்றுதிரண்டு போராடுங்கள் என்றெல்லாம் சொல்லவில்லை. உங்கள் சக்திக்கு ஏற்றவாறு எதையேனும் செய்ய வேண்டாமா?

குறைந்த பட்சம் எல்லா கல்லூரி மாணவர்களும் ஒருநாள் இதற்கு எதிராக கருப்பு பேட்ஜ் அஅணிந்து வகுப்புகளுக்குப் போகலாமல்லவா? அந்தந்தக் கல்லூரி வாயில்களில் அமைதியாக வாயில் கூட்டங்கள் நடத்தலாமே?

இதுதான் மாற்று அரசியலின் தொடக்கம். இதற்கு நல்ல வழிகாட்டுதலும் நெறிப்படுத்துதலும் அவசியம். ஒன்று சொல்லி முடிக்கிறேன்

இந்தப் போராட்டத்தின் வெளிச்சத்தில் ‘அரசியல் படியுங்கள்


4 comments:

  1. வெளிச்சத்திற்கு வராத உண்மைகள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தோழர். மிக்க நன்றி

      Delete
  2. என்ன நண்பரே, இந்த ஒரே பதிவை எட்டுமுறை ஒன்றின்கீழ் ஒன்றாக copy செய்திருக்கிறீர்கள்?

    -இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழர். புரியவில்லை தோழர். கொஞ்சம் விளக்குங்கள் சரி செய்து விடுகிறேன்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...