Saturday, May 21, 2011

இத்தனை சாமிகளா?

வியர்க்க வியர்க்க வீட்டுக்குள் நுழைகிறேன். கிஷோர் வெளியேறிக்கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் கொஞ்சம் சத்தமாக “ அம்மா, அப்பா எங்க போயி சுத்திட்டு வராருன்னு கொஞ்சம் விசாரிச்சு வை” என்று சொன்னவனிடம் “அது சரி அய்யா எங்க சுத்தப் போறீங்க?” என்றேன்.

“  நானும் வித்யாசாகரும் சாரநாதன்ல அப்ளிகேஷன் வாங்கப் போறோம்,”

“வெய்யிலுக்கு முன்ன போய்ட்டு வந்தா என்னடா?, சரி, பாத்து சூதானமா போயிட்டு சீக்கிரமா வந்து சேருங்க” 

வண்டியை எடுத்துக்கொண்டுக் கிளம்பினான்.உள்ளே நுழைந்தால் பையன் பத்தவைத்துவிட்டுப் போன சீனிப் பட்டாசு சன்னமாய் வேலை செய்ய ஆரம்பித்திருந்தது. 

“ நானும் கரடியாத்தான் கத்துறேன். ரெண்டு ஆம்புளைங்க இருக்குறீங்கன்னுதான் பேரு. இங்க இருக்கறத அங்க நகத்தறதில்ல. சரி,  ரேஷன் கடைக்காச்சும் போயி சக்கரைய வாங்கிட்டு வரக் கூடாதா? நடந்து போர தூரத்தில இருந்தா ஒங்கள யாரு எதிபார்க்கப் போறா?”

“ இன்னைக்கு ஏம்மா ஊருல உலகத்துல ஆம்புளைங்க எப்படி பொறுப்பா இருக்காங்கன்னு போய் பார்க்க சொல்லல” என்று நான் சிரித்துக் கொண்டே இடை மறிக்கவும், “ இந்த நக்கலுக்கெல்லாம் ஒன்னும் கொறைச்சல் இல்ல. போயி ஜோஸ்பின் மிஸ் வீட்லப் பாருங்க, அண்ணன் கிச்சன்ல எவ்வளவு உதவி செய்யிறாருன்னு. நானும் உங்களாட்டம்தானே வேலைக்குப் போயிட்டு வாரேன். கொஞ்சமும் மனசாட்சியே இல்லாத மனுஷங்க கிட்ட பேசி என்னத்துக்கு ஆவுது”

பேசாம முதல் சுற்றோடு சாப்பிடப் போயிருக்கலாம்.குறைந்த பட்சம் இந்த அளவிலாவது போயிருக்கலாம். சுழி விட்டால்தானே. 

“ஏம்மா அவரு என்ன என்ன மாதிரி ரெண்டு மூணு புத்தகமா எழுதி இருக்காரு?” என்று முடிக்கக் கூட இல்லை,

“ ஏங்க பேசாம வந்து சாப்பிட உக்காருங்க. இல்லாட்டி நல்லா வந்துரும் ஆமா”

ஒரு வழியாய் சுதாரித்துக் கொண்டவனாய் , உடை மாற்றிக் கொண்டு, முகம் கழுவி, சாப்பிட அமர்ந்தேன்.சாப்பிட்டு முடிந்ததும் “சுகன்” இல் வந்திருந்த கிருஷ்ணப்ரியாவின் “வேறு வேறு சிகரங்கள்” என்ற கவிதையினை வாசிக்கத் தொடங்கினேன்.கவிதையில் மூன்று வரிகள் மிச்சம் இருக்கும் போது கிஷோரிடமிருந்து அழைப்பு.

”என்னடா?”

“கிஷோருங்களா”, வேறு யாரோ பேசினார்கள். பக்கத்தில் யார் யாரோ பேசுவது கேட்டது.  ”நான் கிஷோரட அப்பா “ என்று பேசிக் கொண்டிருக்கும்போதே துண்டித்து விட்டார்கள். நான் அழைத்தாலும் எடுக்கவில்லை. உதறலெடுத்து விட்டது. பிள்ளைக்கு ஏதோ பிரச்சினை என்று மட்டும் புரிந்தது. யாரோடும் சண்டையா?. அவன் யாரோடும் சண்டைக்கெல்லாம் போகிறவனும் இல்லையே. குழம்பி போனவனாய் மீண்டும் மீண்டும் கிஷோர் எண்ணை அழைத்துக் கொண்டே இருந்தேன். கண்களில் கசிவதை உணர்ந்தேன். எனக்கும் அழுகை வரும் என்பது அப்போதுதான் தெரிந்தது.இதற்குள் மீண்டும் அவன் அலை பேசியிலிருந்து ஒரு வழியாய் மீண்டும்அழைப்பு. பதறிப்போய் எடுத்தேன்.

“ என்னப்பா?”

“சார், கிஷோரோட அப்பாங்களா?”

“ஆமாம்ப்பா, பிள்ளைக்கு என்னப்பா. ஏதேனும் பிரச்சினையா?”

“ ஒன்னும் இல்லைங்க சார், கிஷோருக்கு ஒன்னும் இல்ல , ஓட்டிட்டு வந்த பையனுக்குத்தான் கொஞ்சம் காலில் அடி”

புரிந்து போனது. திருச்சி தாண்டி இருக்கும் சாரநாதன் கல்லூரிக்கு வண்டியிலேயே போயிருக்கிறார்கள்.ஏதோ விபத்து நடந்திருக்கிறது. இதற்குள் விட்டுவிற்கும் லேசாக விஷயம் புரிய ஆரம்பிக்க “ ஏங்க , தம்பிக்கு என்னங்க? “ என்று அழ ஆரம்பிக்கவே,”கொஞ்சம் பொறும்மா, என்னன்னு கேப்போம்” என்று விட்டுவை சமாளித்துவிட்டு , “ ஏம்ப்பா, என்னையா நடந்துச்சு?” என்றேன்.

“சார் பேசறதுக்கெல்லாம் நேரமில்லை. நேரே வந்து சொல்கிறோம். இப்ப ஒரு வேன்ல ரெண்டு பேரையும் எடுத்துக் கொண்டு வரோம். ஒன்னும் பயப்படாதீங்க சார். ரெண்டு பேரும் ரொம்ப நல்லாத்தான் இருக்காங்க. அவுங்கள கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரதா? இல்ல வேற ஏதேனும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரட்டுங்களா?”

”பெரம்பலூர்ல, அன்னை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்துடுங்கப்பா”

“அன்னை ஆஸ்பத்திரியா? அது எங்க சார் இருக்கு?”

“எனக்குத் தெரியுங்க அண்ண”

அப்பாடா, அது கிஷோரோட குரல். 

”தம்பி கொஞ்சம் கிஷோர்ட்ட போன கொடுங்களேன்”.

“அப்பா”

“என்ன சாமி, என்ன ஆச்சு?. வித்யா எப்படிப்பா இருக்கான்?”

”ஒன்னுமில்லப்பா. திடீர்னு ப்ரேக் போட்டான். விழுந்துட்டோம். எனக்கு லேசான சிராய்ப்புத்தான். வித்யாவுக்கு லேசா ப்ராக்‌ஷர் போல”

இதற்குள் விட்டுவிற்கு எல்லாம் ஒரு வழியாய் புரிந்து போகவே, உடை மாற்றிக் கொண்டு இருக்கிற பணத்தை எல்லாம் அள்ளிக் கொண்டு, முத்துவுக்கு தகவல் தரவே முத்து, மோகன், பிரபு என்று ஆளாளுக்கு இருப்பதை எல்லாம் எடுத்து பாக்கெட்டில் திணித்துக் கொண்டு கிளம்பி விட்டார்கள். நாங்கள் போவதற்கும் வேன் வருவதற்கும் சரியாக இருந்தது. ஒரு மினி லாரியில் தூக்கிப் போட்டுக் கொண்டு வந்தார்கள். நிறைய ரத்தம்.கிஷோர் நடந்தான். வித்யாவால் நடக்க முடியவில்லை. பிள்ளைகளோடு பத்துப் பேருக்கும் குறையாமல் வந்திருந்தார்கள். வித்யாவின் கால் அநேகமாக ஒடிந்திருக்க வேண்டும். நிறைய ரத்தம் வெளியேறி இருந்தது. அவன் காலை இரண்டு இளைஞர்கள் தங்கள் மடியில் போட்டுக் கொண்டு வந்தார்கள். அவர்களது பேண்ட் முழுவதும் ரத்தத்தால் ஊறிப் போயிருந்தது. வித்யா மிகவும் எடை உள்ளவன் என்பதால் மிகவும் சிரமப் பட்டு தூக்கி வந்து அறையில் கிடத்தினர்.

இதற்கிடையில் வித்யாவின் சித்தப்பாவிற்கு தகவல் தந்தோம். அவரும் வந்து விட்டார்.

“ வா கிஷோர், வீர விளையாட்டா?” என்றவாறே வந்த மருத்துவர். சரவணன் இருவரையும் பார்த்துவிட்டு ஒரு பத்து நிமிஷம் , மொதல்ல பசங்களுக்கு குடிக்க எதுனாச்சும் வாங்கிக் கொடுங்க ,வந்துடறேன் “ என்று சொல்லிவிட்டு என்னையும் வித்யாவின் சித்தப்பாவையும் பார்த்து, “ ஒன்னும் பயப்படாதீங்க, “ என்றவர் கண்களில் அழுதுகொண்டிருந்த விக்டோரியா படவே” டீச்சர் அழாதீங்க, ஒண்ணும் இல்ல, இதோ வந்துட்டேன்” என்றவாறு ஏற்கனவே பார்த்துக் கொண்டிருந்த  நோயாளியைப் பார்க்கப் போய் விட்டார். இதற்கிடையில் முத்து இரண்டு பசங்களுக்கும் பதமான சூடில் காபி வாங்கி வந்திருந்தார்.

கிடைத்த இடை வெளியில் அழைத்து வந்தவர்களைத் தேடிப் போனோம். மரத்தடியிலும் , படிக்கட்டிலும் என்று கிடைத்த இடங்களில் அமர்ந்திருந்தனர்.

”வாங்க தம்பி, காபி சாப்பிடலாம்.”

”பொறுங்க சார், பசங்களுக்கு என்னான்னு மொதல்ல தெரிஞ்சுக்கிட்டு அப்புறம் அதை எல்லாம் பார்க்கலாம்”

மெதுவாய் விசாரித்தோம்.
கிஷோரும் வித்யாவும் வண்டியிலேயே கிளம்பிப் போயிருக்கிறார்கள். வித்யா வண்டியை ஓட்டிக் கொண்டு போயிருக்கிறான். ஆலத்தூர் கேட் அருகே திடீரென ப்ரேக்கைப் போடவே வண்டி விழுந்திருக்கிறது. வித்யா அங்கேயே விழுந்து கிடக்க கிஷோர் ஒரு முப்பது அடி தூரத்திற்கு வண்டியோடு இழுபட்டு போயிருக்கிறான். அது சென்னை திருச்சி பிரதான தேசிய நெடுஞ்சாலை. எப்போதும் நெரிசலாய் இருக்கும் சாலை. அந்த நேரத்தில் எந்த வண்டியும் வராத காரனத்தால் பிள்ளைகள் இருவரும் பிழைத்திருக்கிறார்கள். சாலையில் நெருப்புப் பொறி பறக்க பாய்ந்துபோன வண்டியையும் அதனோடு உருண்டு போன கிஷோரையும் பார்த்தவர்கள் கிஷோர் பிழைக்க மாட்டான் என்றுதான் நினைத்து ஓடி வந்திருக்கிறார்கள். அனால் கிஷோர் அவர்கள் ஓடிவரும் முன்னமே எழுந்து ஓடி வித்யாவை தூக்கிவிட முயன்றிருக்கிறான்.அவால் முடிய வில்லை. அதற்குள் எல்லோரும் ஓடி வந்து இருவரையும் இழுத்துப் போட்டுக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

கிஷோருக்கு உள்ளங்கை சதை முழுக்கத் தேய்ந்து போயிருந்தது. தொடையில் நிறையக் காயம், கைகளில் முதுகில் கால்களில் என்று காயம். சாலையில் உருண்டு போகவே தலையில் ஏதும் பிரச்சினையா என்று பார்க்க சி.டி ஸ்கேன் எடுத்தோம். ஒன்றுமில்லை.வித்யாவிற்கு காலில் அறுவை செய்து ப்ளேட் வைக்க வேண்டுமென்று சொல்லிவிட்டார். நாளை (வெள்ளி) இரவு அறுவை.

அழைத்து வந்தவர்களுக்கு என்னத் தருவது? நிறைய கேட்பார்கள் என்றும் . இதுமாதிரி ஆட்களிடம் ஈவு இரக்கமே இருக்காது என்றும் , முடிந்த வரைப் பிடுங்குவார்கள் என்றும், ஆகவே மிகவும் ஜாக்கிரதையாக அவர்களிடம் பேச வேண்டும் என்றும் எங்களிடம் சொல்லியிருந்தனர். 

அவர்களிடம் போனோம்.

”பசங்களுக்கு என்னா சார்?” 

 சொன்னோம்.

எல்லோரும் பசங்களிடம் போனார்கள். வித்யாவின் தலையை வருடிக் கொடுத்தார்கள். கிஷோர் தோளில் கை போட்டார்கள். “பயப்படாதீங்க”
தலை அசைத்துக் கிளம்பினார்கள்.

“ தம்பி காபி சாப்பிடலாம்”

“பரவா இல்ல சார்.“ 

எவ்வளவோ வற்புறுத்தியும் மறுத்தார்கள். 

“ அந்த இடத்துல விபத்து நடந்து இதுவரை யாரும் பொழச்சதே இல்ல சார். விபத்து நடந்தா பொணமாத்தான் சார் எடுப்போம். நசுங்கி கிடக்கிற கார்களில் யாரையாச்சும் உசிரோட எடுக்க மாட்டோமான்னு கிடந்து தவிப்போம் சார். இப்பக் கூட கிஷோர் செத்துருப்பான்னுதான் சார் ஓடியாந்தோம். ரெண்டுப் பசங்களையும் உசிரோடப் பெத்தவங்ககிட்ட சேர்த்திருக்கோம் சார். ஆண்டவன் கொடுத்த இந்த மன நிம்மதி போதுங்க சார்.எதையாவது சாப்பிட்டு இந்த மன நிலைய டிஸ்டர்ப் பண்ணிக்க ஆசப் படலங்க சார். பசங்க நூறு வருஷம் நல்லா இருப்பாங்க சார்” 

”வேனுக்கு ஏதாச்சும்...”

“ அடப் போங்க சார், ரெண்டு ஜீவனக் காப்பாத்தற பெரிய புன்னியத்த கடவுள் எங்களுக்கு இன்னைக்கு தந்திருக்கிறார். ஏற்கனவே உங்களுக்கு நிறைய செலாகும். எங்க கவலை எல்லாம் அதுல எங்களால பங்கெடுக்க முடியலையேன்னுதான் சார். யாரும் பசங்கள திட்டாதீங்க சார்.” 

வண்டி பத்திரமாக இருப்பதாகவும். எப்போது வேண்டுமானாலும் வந்து எடுத்துக் கொள்ளலாம் என்றும் சொல்லி முகவரியும் எண்ணும் தந்துவிட்டு காத்திருக்காமல் போய் விட்டார்கள்.

கை எடுத்துக் கும்பிட்டோம். தாரை தாரையாய் கண்கள் சுரக்க.

சாமி இல்லை என்றுதான் நினைத்திருந்தோம். இத்தனை சாமிகளா?

பிள்ளைகள் முற்றாய் குணமானதும் இவர்களிட்ம் அழைத்துப் போய் இவர்கள் ஒவ்வொருவரையும் தனித் தனியாய் கொஞ்ச நேரம் கை எடுத்துக் கும்பிட வைக்கப் போகிறேன். அதை விட வேறென்ன செய்ய முடியும் என்னால் 
-- 

30 comments:

  1. எளிய மனிதர்கள் எப்பொழுதும் இயல்பாய் இருக்கிறார்கள்; ஈரத்தோடும் இருக்கிறார்கள். எழுத்தறிவு பெற்றவர்கள்தான், (என்னையும் சேர்த்துதான்) அவர்களைச் சந்தேகித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

    குழந்தைகள் இருவரும் நலம் பெற வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. உங்கள் அன்பிற்கும் விழைதலுக்கும் என் கண்ணீரும் நன்றியும் தோழர்

    ReplyDelete
  3. அய்யா, என் கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் வந்தது, உங்கள் பதிவை படித்த பிறகு, இன்னொரு உயிரை காப்பாற்றுவது எவ்வளவு பெரிய புண்ணியம். அவர்கள் தொலைபேசி எண்ணை எனக்கு தாருங்கள், கை எடுத்து கும்பிட தோன்றுகிறது. emailid: aramanan@yahoo.com

    ReplyDelete
  4. தங்கள் பதிவை படித்தேன்.
    குழந்தைகள் இருவரும் விரைவில் நலம் பெற நல்ல மன தைரியமும் பெற நாங்கள் இறைவனை பிரார்த்திக்கிறோம்.
    நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். நாம் செய்யும் நல்ல காரியங்களுக்கு பிரதிபலன்கள் நல்ல மனிதர்கள் மூலமாக கடவுள் மாதிரி கிடைக்கின்றன.
    மனப்பூர்வமான பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  5. நல்ல மனிதர்கள் பற்றி நல்ல பதிவு..

    இருவரும் சீக்கிரம் குணமடைய பிராத்தனைகள்..

    இந்த வயது அப்படி.. :) சில நேரம் அனுபவ பாடம் தேவைப்படுது..

    ( என் அண்ணா மகன் விபத்து ஏற்பட்டு இன்றும் நடக்க முடியாமல் தவிப்பது ரத்தக்கண்ணீர்தான் பெற்றவர்களுக்கு )

    மனைவிக்கும் அப்பப்ப வீட்டு வேலையில் உதவிடுங்கள்..வேலைக்கு செல்பவராச்சே.. அதைவிடவா கவிதையும் எழுத்தும் முக்கியம்?..( உங்க எழுத்து வெச்சே இந்த மதிப்பீடு .
    தவறென்றால் வருத்தங்கள்..)

    ReplyDelete
  6. \\Reflections said...
    அய்யா, என் கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் வந்தது, உங்கள் பதிவை படித்த பிறகு, இன்னொரு உயிரை காப்பாற்றுவது எவ்வளவு பெரிய புண்ணியம். அவர்கள் தொலைபேசி எண்ணை எனக்கு தாருங்கள், கை எடுத்து கும்பிட தோன்றுகிறது. emailid: aramanan@yahoo.com//

    கண்ணீரும் நன்றியும் தோழர்.அவர்களது எண் வித்யாவின் சித்தப்பாவிடம் இருக்கிறது. வாங்கி உங்களுக்கு மெயில் செய்கிறேன்

    ReplyDelete
  7. \\ Rathnavel said...
    தங்கள் பதிவை படித்தேன்.
    குழந்தைகள் இருவரும் விரைவில் நலம் பெற நல்ல மன தைரியமும் பெற நாங்கள் இறைவனை பிரார்த்திக்கிறோம்.
    நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். நாம் செய்யும் நல்ல காரியங்களுக்கு பிரதிபலன்கள் நல்ல மனிதர்கள் மூலமாக கடவுள் மாதிரி கிடைக்கின்றன.
    மனப்பூர்வமான பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்.

    May 21, 2011 6:52 AM//

    மிக்க நன்றி அய்யா

    ReplyDelete
  8. \\ எண்ணங்கள் 13189034291840215795 said...
    நல்ல மனிதர்கள் பற்றி நல்ல பதிவு..

    இருவரும் சீக்கிரம் குணமடைய பிராத்தனைகள்..

    இந்த வயது அப்படி.. :) சில நேரம் அனுபவ பாடம் தேவைப்படுது..

    ( என் அண்ணா மகன் விபத்து ஏற்பட்டு இன்றும் நடக்க முடியாமல் தவிப்பது ரத்தக்கண்ணீர்தான் பெற்றவர்களுக்கு )

    மனைவிக்கும் அப்பப்ப வீட்டு வேலையில் உதவிடுங்கள்..வேலைக்கு செல்பவராச்சே.. அதைவிடவா கவிதையும் எழுத்தும் முக்கியம்?..( உங்க எழுத்து வெச்சே இந்த மதிப்பீடு .
    தவறென்றால் வருத்தங்கள்..)

    May 21, 2011 8:50 AM//

    மிக்க நன்றி தோழர். ஆமாம் அவ்வளவு மோச்மாகவா என் எழுத்து இருக்கிறது?

    ReplyDelete
  9. கண்ணீரைத் தவிர அந்த பெறுமதியான மனிதர்களைப் பற்றிச் சொல்ல வார்த்தைகளே இல்லை. பிள்ளைகள் நலம் பெறட்டும். நாம் இன்னும் மனிதர்கள் ஆவோம் உதவியவர்களைப் போல. ஒரு விபத்து ஒரு வீட்டை எப்படி உருமாற்றும் என்ற அனுபவம் இருக்கிறது தோழர். தைரியமாகவும், மருத்துவ விவரங்களைப் பல முறை சரி பார்க்கவும் செய்யுங்கள். மீண்டு வாருங்கள்.

    ReplyDelete
  10. மிக்க நன்றி தோழர் மிருணா. கிஷோர் ஒரு வட்டத்துக்குள் இயங்க முடிகிறது. வித்யா நடமாட இன்னும் கொஞ்சம் நாட்களாகும். இன்று இரவு அவனுக்கு அறுவை. எல்லாம் சரியாகும். மிக்க நன்றி மிருணா

    ReplyDelete
  11. எட்வின் சார் நீங்கள் எழுதிய விதம் யார் படித்தாலும் கண்ணீர் வரும் கிஷோர் ,வித்யா நலம் பெற இறைவனை வேண்டிகொள்கிறேன்.

    ReplyDelete
  12. ஈர விழிகளோடும் கூப்பிய கரங்களோடும் நன்றி சொல்கிறேன் தோழர் குரு

    ReplyDelete
  13. தோழர்! உண்மையில் ஒரு சில வரிகள் படித்ததும் முடிவு தெரியாமல், குழந்தையை போய் பார்க்காமல் நிறுத்த முடியாத வலி தெரிந்தது. ஈரமுள்ள மனிதர்கள். நல்லவர்கள் இருப்பதாலயே இந்த உலகம் இன்னும் அழியாமல் உள்ளது என்று படித்த தமிழ் மூதுரை நினைவில் வந்து போகிறது!

    ReplyDelete
  14. ஆமாம் வேடியப்பன்,
    இந்தப் பூமி மனிதர்கள் நிறைந்ததும் ஆகும்

    ReplyDelete
  15. //சாமி இல்லை என்றுதான் நினைத்திருந்தோம். இத்தனை சாமிகளா?

    இந்தப் பூமி மனிதர்கள் நிறைந்ததும் ஆகும்//

    இருவரும் சீக்கிரம் குணமடைய பிரார்த்தனைகள்...:(

    ReplyDelete
  16. மிக்க நன்றி நிலா

    ReplyDelete
  17. யதார்த்தமான மனிதர்களின் இயல்புகள் நம்மை வெட்கப்பட வைத்துவிடுகின்றன சமயத்தில். கிஷோரும், வித்யாவும் சீக்கிரம் குணம் பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. மிக்க நன்றி தோழர் மணிச்சுடர்

    ReplyDelete
  19. சாமி இல்லை என்றுதான் நினைத்திருந்தோம். இத்தனை சாமிகளா?

    பிள்ளைகள் முற்றாய் குணமானதும் இவர்களிட்ம் அழைத்துப் போய் இவர்கள் ஒவ்வொருவரையும் தனித் தனியாய் கொஞ்ச நேரம் கை எடுத்துக் கும்பிட வைக்கப் போகிறேன். அதை விட வேறென்ன செய்ய முடியும் என்னால்
    -- //
    சீக்கிரம் குணம் பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. \\\இராஜராஜேஸ்வரி said...
    சாமி இல்லை என்றுதான் நினைத்திருந்தோம். இத்தனை சாமிகளா?

    பிள்ளைகள் முற்றாய் குணமானதும் இவர்களிட்ம் அழைத்துப் போய் இவர்கள் ஒவ்வொருவரையும் தனித் தனியாய் கொஞ்ச நேரம் கை எடுத்துக் கும்பிட வைக்கப் போகிறேன். அதை விட வேறென்ன செய்ய முடியும் என்னால்
    -- //
    சீக்கிரம் குணம் பெற வாழ்த்துக்கள்.
    May 24, 2011 7:20 PM ///

    மிக்க நன்றி தோழர் ராஜேஸ்வரி

    ReplyDelete
  21. அண்ணன்.. இதை பேசுகையில் சொல்லும்போது உணர்ச்சியற்றுதான் கேட்டுகொண்டிருந்தேன். இப்போது படிக்கையில் கண்ணீர் வந்ததை தவிர்க்க முடியவில்லை.

    ReplyDelete
  22. உண்மையைச் சொன்னால் அந்தத் தோழர்கள் அவர்கள் வந்த வேனில் ஏறும்போது என்னையும் அறியாமல் கை எடுத்துக் கும்பிட்டேன். என்னையும் அறியாமல் விசும்பினேன். என்னாலும் தவிர்க்க முடியவில்லைதான் சரவணன்

    ReplyDelete
  23. கிஷோர் நலம்பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. நல்ல மனிதர்கள் நிறைய இருகிறார்கள் என்பதை உணர்த்தியது காயம்பட்ட அவர்கள் குணம் அடைய பிரார்த்திப்போம் இத்தனை சோகத்திலும் உங்கள் எழுத்து நடை அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. மிக்க நன்றி தோழர் ப்ரபாஸ்கரன். தொடர்ந்து சந்திப்போம்

    ReplyDelete
  26. மனதைப் பிழியும் கதை
    கற்பனை தானே ?
    நிச்சயம் அந்த மனிதர்கள்
    சாமிகளே !

    ReplyDelete
  27. இப்போது கிஷோரின் உள்ளங்கை நலம்தானே,
    வித்யா நடக்கிறானா?
    தம +

    ReplyDelete
    Replies
    1. இருவருமே இப்போது நலமாக உள்ளார்கள் தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...