Sunday, December 24, 2023

நாம் படித்ததற்கான பெரிய காரணங்களுள் பெரியார் முக்கியமானவர்

 30.06.1952 அன்று ஹிந்து வெளியிட்ட செய்தி இது என்பதை அடிக்கோடு இட்டு வாசிக்க வேண்டுமாய் அன்போடு கேட்கிறேன்

“அவனவன் ஜாதித் தொழிலை அவனவன் செய்ய வேண்டும்,
வண்ணார் வீட்டுப் பிள்ளைகள் படிக்க வேண்டியதில்லை,
குலத் தொழிலை செய்தால் போதும்,
எல்லோரும் படித்தால் எங்கிருந்து வேலை கிடைக்கும்”
என்று சென்னைக்கருகில் உள்ள திருவான்மியூர் கிராமத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சலவைத் தொழிலாளர்கள் மாநாட்டில் உயர்திரு முதலமைச்சர் அவர்கள் கூறியிருக்கிறார்
என்ற இந்த செய்தியை தோழர்கள் கா.கருமலையப்பன், ந.பிரகாசு, மற்றும் இரா. மனோகரன் ஆகியோர் தொகுத்துள்ள “குலக்கல்வியை ஒழித்த பெரியார் இயக்கம்” என்ற நூலில் வைத்திருக்கிறார்கள்
நடந்தது என்னவெனில்
அழையா விருந்தாளியாக வந்திருந்த ராஜாஜி அவர்களிடம் தங்களது பிள்ளைகள் நான்காவது வரைக்கும் படிப்பதற்கு ஏற்பாடு செய்து தருமாறு கோரிக்கை வைக்கப்பட்டதாகவும்
அதற்கு பதில் அளிக்கும் முகத்தான்தான் ராஜாஜி அப்படி பேசியதாகவும் அறிய முடிகிறது
தோழர் சாரோன் இதுகுறித்து என்னோடு பேசிய ஒரு பொழுதில்
அன்றைய முதல்வர் ராஜாஜி அவர்கள் சலவைத் தொழிலாளர்கள் மாநாட்டிற்கு அழைக்கப்படவே இல்லை என்றும்
“இந்த மாநாட்டிற்கு அழையா விருந்தாளியாகத்தான் வந்திருக்கிறேன் என்றுதான் அவர் தனது உரையத் தொடங்கியதாகவும் கூறினார்
இதனை ஒட்டி காஞ்சிபுரத்தில் ”சென்னை மாகாண யாதவ மாணவர் மாநாடு” நடக்கிறது
அன்றைய சென்னை மாகான விவசாய மந்திரியான திரு சென்னகவுடா இதில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்
“இளைஞர்கள் படிப்பை முடித்தவுடன் வேலை தேடக்கூடாது
நவீன பால்பண்ணைகளைத் தொடங்குங்கள்
பால் உற்பத்தியைப் பெருக்குங்கள்
கிராமப் பிள்ளைகள் காலையில் பள்ளியிலும் மாலையில் குலத்தொழிலும் கற்கவேண்டும் என்கிறார் ராஜாஜி
அதை நான் ஆமோதிக்கிறேன்”
இப்போதில் இருந்தே தந்தை பெரியார் மக்களை எச்சரிக்கத் தொடங்கி விட்டார்
இந்த நிலையில் 20.03.1953 அன்று சட்டமன்றத்தில் அன்றைய கல்வி அமைச்சர் திரு MV கிருஷ்ணமூர்த்தி குலக் கல்வியை பாதி நேரம் கற்கிறமாதிரி கல்வித் திட்டத்தை முன்வைக்கிறார்
ஆஹா,
பூனை வெளியே வந்துவிட்டது
இந்த நேரத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களைக் கலக்காமலே ராஜாஜி இதைக் கொண்டுவந்தத்ஹாகக் குறை கூறுகின்றனர்
தான் யாரையும் கேட்கத் தேவை இல்லை என்றும். இது விஷயத்தில் எது நடந்தாலும் தாமே பொறுப்பேற்பதாகவும் கொஞ்சம் ஆணவம் பொங்கக் கூறுகிறார்
இதே சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு கட்டத்தில் எங்கே ராஜாஜி சட்டச்மன்றத்தைக் கலைத்துவிடுவாரோ என்று அச்சப்படுகிறார்கள்
அப்படிக் கலைத்துவிட்டால் தங்களுக்கு வரும் ஊதியம் நின்றுபோகுமே என்ற கவலை அவர்களைத் தொற்ரிக் கொண்டது
நாம செய்யற வேலையை நம்ம பிள்ளைகளாவது செய்யாமல் படிக்க வேண்டும் என்பதற்காகத்தானே மக்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள்
அவர்களை தங்கள் தகப்பன்மார்கள் செய்கிற தொழில் நோக்கி அனுப்பும் கல்வித் திட்டம்
அயோக்கியத்தனமானது என்கிறார் பெரியார்
சனாதனம் ஒழிய வேண்டும்
புதியக் கல்வித் திட்டம் சனாதனத்தைக் கெட்டிப்படுத்தும்
ஆகவே சனாதனம் முற்றாக ஒழிய வேண்டும் என்றால் புதியக் கல்வித் திட்டத்தை ஒழிக்க வேண்டும் என்கிறார் பெரியார்
ஆசிரியர்களைத் தூண்டுகிறார்
பிள்ளைகள் நலமாக கௌரவமாக வாழ வேண்டும்
அவர்களை அப்படி உருவாக்க வேண்டும்
என்பதற்காகத்தானே நீங்கள் சம்பளம் வாங்கிகிறீர்கள்
அவர்களை மீண்டும் குலத்தொழிலுக்கு அனுப்புகிற ஒரு கல்வித் திட்டத்தை ஏன் கண்டிக்க மறுக்கிறீர்கள் என்று கேட்கிறார்
ராஜாஜிக்கு எதிராக ஓமாந்தூராரை, காமராசரை, பக்தவச்சலத்தை கிளப்பிப் பார்க்கிறார்
பேரணி நடத்துகிறார்
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமாட்டோம் என்ற போராட்டம் நடத்துகிறார்
ராஜாஜியை வீட்டிற்கு அனுப்பினால்தான் குலக்கல்வித் திட்டத்தை ஒழிக்க முடியும் என்று குத்தூசி சொல்வதை ஏற்கிறார்
ராஜாஜி வீட்டிற்கு போக வேண்டும்
நாம் அனுப்பினால் என்ன
காமராசர் அனுப்பினால் என்ன?
என்று கேட்கிறார்
இதை ஒட்டி நடந்த சம்பவங்களே ராஜாஜியை ராஜினாமா செய்ய வைக்கிறது
ஆக,
குலக்கல்வி இருந்திருந்தால் நானும் இதை வாசிக்கிறவர்களில் பலரும் படித்திருக்க முடியாது

நாம் படித்ததற்கான பெரிய காரணங்களுள் பெரியார் முக்கியமானவர்
இன்று அவரது ஐம்பதாவது நினைவுநாள்
நன்றியோடு வணங்குகிறேன்

Saturday, December 23, 2023

பிள்ளைகள் பெரிசாக வருகிறார்கள்

”அறம் வெல்லும்” 2021 தேர்தலுக்காக திமுக வெளியிட்ட புத்தகம்

40 கட்டுரைகள்
என்னுடைய “குலக்கல்வி ஒருபோதும்” என்ற கட்டுரையும் இருந்தது
அதுகுறித்து அந்தப் புத்தகத்தை தொகுத்தவர்களுள் ஒருவரான திரைப்பட இயக்குனர் சந்திரா ஒரு எழுத்தைக்கூட மாற்றாமல் வைத்த கட்டுரை அது என்றார்
அந்தக் கட்டுரையை “காட்பரிஸ் கல்வியும் கமர்கட் கல்வியும்” நூலில் வைத்திருக்கிறேன்
அது குறித்து எழுதும்போது சந்திரா அப்படி சொன்னபோது வெற்றிமாறன் LKG யில் வெரிகுட் வாங்கியபோது கிடைத்த மகிழ்ச்சி மாதிரி இருந்தது என்று எழுதினேன்
இப்போது வெற்றிமாறனின் அரையாண்டுத் தேர்வுத் தாளில் “வெரி குட்”
இதுமாதிரி நானும் ஒரு வெரிகுட் வாங்க வேண்டும்
பிள்ளைகள் பெரிசாக வருகிறார்கள்
பார்த்துவிட்டுப் போக வேண்டும்

கோவிலுங்களும் இருக்குப்பா

 கிஷோர் பேசினான்

கிறிஸ்மஸ்கு ட்ரெஸ் எடுத்தியாடா
கிறிஸ்மசுக்கு எதுக்குப்பா?
அங்க கிறிஸ்மசெல்லாம் இருக்காதுல்ல
ஷீனா போனை வாங்கிக் கொண்டாள்
அய்யோ அப்பா இங்க சர்ச்செல்லாம் இருக்குப்பா
இன்னொன்னு தெரியுமாப்பா
கொஞ்ச நாளைக்கு முன்னாடி “கந்த சஷ்டி விழா” மூன்றுநாள் கொண்டாடினாங்கப்பா
கோவிலுங்களும் இருக்குப்பா
அது துபாய்
தகவலுக்காக
அன்புடுத்தி அலைவோம்

திருந்துவது தவறு என நினைக்கும் ஏரியா இது

 புத்தகங்களை ஆட்டையப் போடுவது என்பது நமக்கு அப்படிப் பிடித்தமான ஒன்று

அப்படிச் சுட்ட புத்தகங்கள் ஆயிரமாவது வீட்டில் இருக்கும்
சமீபத்தில் ஆட்டையப் போட்ட நூல் “ஆர் எஸ் எஸ் -இந்தியாவிற்கு அச்சுறுத்தல்”
சுதாவிடமிருந்து
பார்த்தால் பென்சிலில் அடிக்கோடுகள்
கடைசிப் பக்கம் வரை
என்ன சுதா?
முதல்முறை படிக்கும்போது அடிக்கோடு போட்டிடுவேன்
அப்ப அடுத்துப் படிப்பியா
ஆமாம்
அய்யோவென்று இருந்தது
ஆனாலும்
அய்யோவென்றிருந்தாலும் தொடர்ந்து ஆட்டையப் போடுவோம்தான்
திருந்துவது தவறு என நினைக்கும் ஏரியா இது

ஏன் அவரெல்லாம் உண்டியலடிக்க வரமாட்டாரா?

 "கட்சித் திட்டம்” தேவைப்பட்டது 

 கட்சி அலுவலகம் போகிறேன் உண்டியல் வசூலுக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள் 

 ”சீக்கிரமா, ஏற்கனவே லேட்” குரல் புதிது 

 திரும்பிப் பார்க்கிறேன் 

அந்தத் தாயாரும் எனக்குப் புதிது 

 யார் எனக் கேட்கிறேன் 

 அவரும் நான் யார் என அதே நேரத்தில் விசாரிக்கிறார் 

 இருவருக்கும் அறிமுகம் நடக்கிறது 

 அவர் வெள்ளையம்மாள் 

 பாடாலூர் அதிமுக மகளிர் அணிப் பொறுப்பில் இருந்து விலகி வந்திருக்கிறார் 

 ஏன் அவரெல்லாம் உண்டியலடிக்க வரமாட்டாரா? 

 அய்யோ தாயி நானும் தோளில் கட்சிக் கொடியை சாய்த்துக் கொண்டு செல்பவன்தான் 

 இப்போது முடியவில்லை சொல்கிறேன் 

 பார்க்கிறார் பார்வை சொல்கிறது

 ஃபிட்நெஸ் சர்டிபிகேட் வாங்கிட்டுதான் கட்சியில் சேர்க்க வேண்டும்

 அடுத்தமுறை அந்தத் தாய்த் தோழரோடு உண்டியலடிக்க கிளம்பிவிட வேண்டும்

ஒன்றியப் பேரிடர் என்று சொல்லுங்கள்

 தேசியப் பேரிடர் என்று சொல்ல முடியாது என்கிறீர்கள் திருமிகு நிர்மலா

ஒன்றியப் பேரிடர் என்று சொல்லுங்கள்

அதுதான் சரியானதும் ஆகும்

All reactions:

Friday, December 22, 2023

உங்கள் பாச்சா ஒருபோதும் இங்கு வேகாது

 


அன்பிற்குரிய திரு ராஜ்நாத்சிங் அவர்களுக்கு,
வணக்கம்
நீங்கள் ஏதோ ஒரு நிகழ்ச்சியின் பொருட்டு சென்னைக்கு வந்து சென்றிருக்கிறீர்கள் என்றும்
சென்றவுடன்
உங்களது X தளத்தில்
பாரதக் கலாச்சாரத்தின் கோட்டையாக தென்னிந்தியா விளங்குவதாக மகிழ்ச்சி பொங்க பதிவு செய்துள்ளதாக அறிகிறேன்
அதுகுறித்து சொல்வதற்கு கொஞ்சம் இருக்கின்றன
”பாரதக் கலாச்சாரம்” என்கிறீர்கள்
ஒரு வார்த்தை விட்டு “தென்னிந்தியா” என்கிறீர்கள்
ஒன்று புரிகிறது
எங்கள் பூமி பாரதமாக இல்லை
இதை சொல்கிறபோதே இன்னொன்றையும் சொல்லிவிட வேண்டும்
பாரதத்தோடும் எங்களுக்கு எந்த முரண்பாடும் இல்லை
ஒன்றுபட்ட இந்தியாவின் ஒரு பகுதியாகத்தான் தமிழ்நாட்டை உள்ளடக்கிய தென்னிந்தியா எப்போதும் இருக்கும்
இப்படியே இருக்கட்டும் என்று விட்டு விடுவதுதான் அறம்
நீங்களே சொல்கிறீர்கள்,
தென்னிந்தியா என்பது பாரதக் கலாச்சாரத்தின் கோட்டை என்று
எங்கள் கலாச்சாரம்தான் பாரதத்தின் கலாச்சாரம் என்று தாங்கள் கூறுவது உண்மையானால்,
வித்தியாசங்களைக் கொண்டாடும் எங்கள் கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்
அப்படி எல்லாம் இல்லை
அந்தப் பதிவு வெறும் நடிப்பு என்றால் சொல்ல ஒன்றுண்டு எம்மிடம்,
உங்கள் பாச்சா ஒருபோதும் இங்கு வேகாது
அன்புடன்,
இரா.எட்வின்
15.12.2023
இரவு 10.25
All reactions

கவிதை 04

 


கேட்கிற சூடு
அரைத் தித்திப்பு
நுரையிருந்தால்கூட பரவாயில்லை
ஊதிக் கொள்கிறேன்
அவசரமாய்
அரைக் கிளாசு
உன் குரல் வேண்டும்

92 நிறைமாத கர்ப்பிணிகளை மருத்துவமனையில் சேர்த்து


 மிக்ஜாம் புயலின்போது

108 ஆம்புலன்ஸ் தொடர்பிழந்த நிலையில்
மரங்கள் முறிந்து கிடந்த நிலையில் ஏறத்தாழ 92 நிறைமாத கர்ப்பிணிகளை மருத்துவமனையில் சேர்த்து காவல்துறை நண்பர்கள் காப்பாற்றினர் என்கிற செய்தியை 18.12.2023 நாளிட்ட ”விடுதலை” தருகிறது
உரியவர்களை நெகிழ்ந்து வணங்குகிறோம்

எனக்கு பிள்ளைக்கு கிஷோர் என்று வைத்ததில் மகிழ்ச்சிதான்

 நேற்றைய கூட்டத்தின் பாதியிலேயே வெளிவரவேண்டிய சூழல்

என்னோடு கூடவே இன்னொரு நண்பரும் எழுந்து வந்திருந்தார்
தேநீர் குடித்துக் கொண்டிருக்கிறோம்
கேட்கிறார்
இவ்வளவெல்லாம் பேசறீங்க பிள்ளைக்குப் பெயரை கிஷோர்னு வச்சிருக்கீங்களே
அதுதான் ஏற்கவே முடியல
எத்தனையோதரம் சொல்லியாகிவிட்டது. ஆனாலும் மீண்டும் சிரித்துக் கொண்டே சொல்கிறேன்
லாகூர் சதி வழக்கில் பகத்தோடு கைதுசெய்யப்பட்ட கிஷோரிலாலை ஏனோ எனக்கு நிறையப் பிடிக்கும் தோழர். அதனால்தான்
அவர் உங்க கட்சிக்கு வந்தவர் என்பதாலா
இல்லை தோழர்
அவர் மகிழ்ச்சியானவர்
நீதிபதி தீர்ப்பை சொல்கிறபோதுகூட அதை நகைச்சுவையோடு ஏற்றவர் என்று படித்திருக்கிறேன்
அதுமட்டும் இல்லை
அந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோது
தங்களது உரிமைகளுக்காக சிறையிலேயே உண்ணாவிரதம் இருக்கிறார்கள்
சிறைத்துறை எப்படியேனும் உண்ணாவிரதத்தை முறியடிக்க வேண்டும் என்று தண்ணீர்ப் பானைகளில் பாலை ஊற்றி வைக்கிறது
தோழர்கள் பானைகளை உடைக்கிறார்கள்
ட்யூப் மூலமாக நீருணவை செலுத்த முயற்சிக்கிறார்கள்
தொண்டையில் புண் வந்தால் அப்படி உணவை செலுத்த முடியாது
தொண்டையில் புண் வருவதற்காக கிஷோரிலால் சிவப்பு மிளகையும் கொதிக்கும் நீரையும் குடிக்கிறார்
போக மற்ற தியாகிகள் அளவிற்கு இவர் கொண்டாடப்படவில்லை
இதெல்லாமும் சேர்ந்துதான் தோழர்
ஆனாலும் அந்தத் தோழர் தமிழ் விரோதிகள் பட்டியலில் இருந்து என்னை விடுவிக்க விரும்பாதவராகவே திரும்பினார்
எனக்கு பிள்ளைக்கு கிஷோர் என்று வைத்ததில் மகிழ்ச்சிதான்
All

Thursday, December 21, 2023

ஆக CPM குடியரசுத் தலைவரை உருவாக்கிய கட்சியும்கூட

 ஒரு இக்கட்டான சூழலில் குடியரசுத் தலைவரைக் கொண்டு வந்ததில் தோழர் PR அவர்களுக்குப் பெரும் பங்கு உண்டு


1977

குடியரசுத் தலைவருக்கான தேர்தல்

மொராஜி தேசாய்தான் அப்போதைய பிரதமர்

பிரபலமான நடனக் கலைஞர் ருக்மணியை குடியரசுத் தலைவராக்க மொராஜி விரும்புகிறார்

அவர் திறமையானவர் என்பதற்காகவோ அல்லது அந்தப் பதவிக்குப் பொறுத்தமானவர் என்பதற்காகவோ அவர் அவரைக் கொண்டுவர விரும்பவில்லை

அந்த இரண்டையும் கொண்ட எவரையும் மொராஜி விரும்பவில்லை

இவை இரண்டும் இல்லை என்பதால்தான் ருக்மணியை அவர் குடியரசுத் தலைவராக்க விரும்புகிறார்

தான் சொன்னதை மட்டுமே செய்யக்கூடிய,

தான் காட்டும் இடத்தில் கையெழுத்திடக் கூடிய ஒரு நபர் அவருக்குத் தேவை

அதை ருக்மணி செய்வார் என்று மொராஜி கருதுகிறார்

ஜனசங்கமும் இடதுசாரிகளும் நீலம் சஞ்சீவி ரெட்டியைக் கொண்டுவர விரும்புகிறார்கள்

மொராஜி பிடி கொடுக்க மறுக்கிறார்

காங்கிரசோ ஆளும் கூட்டம் அடித்துக் கொண்டு இந்த விஷயத்தில் இரண்டு பிரிவாகட்டும்

சந்தடி சாக்கில் நாம் ஜட்டியைக் கொண்டு வந்துவிடலாம் என்று கருதுகிறது

தோழர் PR அவர்களை நிறைய தலைவர்கள் மொராஜியிடம் பேசுமாறு கூறுகிறார்கள்

“The old man is not listening to anybody, you do something" என்று வாஜ்பாயி தோழர் ராமமூர்த்தியைக் கேட்கிறார்

ஒரு தோழரை தோழர் ராமமூர்த்தி அழைத்து ஒரு கடிதத்தைக் கொடுக்கிறார்

அவர் பெயர் என்னவென்று தெரியவில்லை

தோழர் என்.ராமகிருஷ்ணன் எழுதிய நூலில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்பில் இருந்துதான் இதைத் தருகிறேன்

அந்த நூலும் என்னிடம் இல்லை

அது தோழர் ராமகிருஷ்ணனாகக்கூட இருக்கலாம்

அது இரவு 12 மணி

அந்தக் கடிதத்தை உடனே மொராஜியிடம் சேர்க்க வேண்டும் என்கிறார்

பின்னிரவாக இருப்பதால் தயங்கிய அந்தத் தோழர்

உங்கள் எழுத்து மொராஜிக்குப் புரியாது காலையில் நான் டைப் அடித்து வந்து உங்களிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டுபோய் கொடுக்கிறேனே என்கிறார்

மொராஜிக்கு தன் எழுத்து புரியும் என்கிறார் தோழர் PR

அந்தக் கடிதத்தில்

மாநிலங்கள் அவையில் காங்கிரஸ் பலமாக இருக்கிறது

ஜனதாவிலும் ருக்மணிக்கு ஆதரவில்லை

இடதுசாரிகளும் சஞீவரெட்டியைத்தான் விரும்புகிறார்கள்

எனவே சஞ்சீவரெட்டியே வேட்பாளர் என உறுதிபட சொல்கிறார்

ஆக CPM குடியரசுத் தலைவரை உருவாக்கிய கட்சியும்கூட

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...