Wednesday, July 2, 2014

நிலைத் தகவல் 47

இரண்டு விஷயங்கள் என்னை நெகிழ்த்திப் போட்டன இன்று.

ஒன்றை தோழர் Shah Jahan தந்திருந்தார். இன்னொன்றை எங்கள் மாவட்ட ஆட்சியர் செய்திருந்தார்.

ஷாஜி பகிர்ந்திருந்தது தனக்கும் மருத்துவர் அசோகனுக்கும் இடையில் நடந்த உரையாடல் குறித்த M.m.அப்துல்லா அவர்களின் பதிவின் சாரம்.

மூளைச் சாவு அடைந்திருந்த தனது மகனின் உறுப்புகளை தானமளித்து உயிர்களைக் காப்பாற்றிய ஈர மனிதர் மருத்துவர் அசோகன்.

அவர் இறந்து போன தனது உறவினரின் கண்களைத் தானமாகப் பெற்று மருத்துவ மனைக்கு அனுப்ப, அவை அன்றே பயன்படுத்தப் பட இறந்தவரின் சடலம் புதைக்கப் படும் முன்பே இருவருக்கு பார்வை கிடைத்ததைப் பற்றிய அப்துல்லாவினுடைய உரையாடலைத்தான் ஷாஜி தந்திருந்தார்.

அதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் அன்று பார்த்து மழை. குழி தோண்ட சாக்கடை நீர் ஊற்றெடுக்கிறது. வேறு வழியின்றி சாக்கடை நீருக்குள்ளேயே புதைக்கிறார்கள். அப்போது மருத்துவர் சொன்னாராம்,

“ நல்ல வேளை அவரது கண்களை இந்த சாக்கடை நீரிலிருந்து காப்பாற்றி விட்டேன்”

#

பெரம்பலூருக்கு அருகே பிச்சை எடுத்துக் கொண்டிருந்த சிறுவர்களைப் பற்றிய தகவல் கிடைத்ததும் அதிகாரிகளை அனுப்பி அந்தச் சிறுவர்களை மீட்டு உண்டு உறைவிடப் பள்ளியில் சேர்த்திருக்கிறார் எங்கள் மாவட்ட ஆட்சியர் தரேஷ்.

“ பிச்சைப் புகினும் கற்கை நன்றே” என்றாள் கிழவி

பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாலும் படி என்கிறாள்.

பிச்சையிலிருந்து மீட்டெடுத்து படிக்க வாய்ப்பளித்திருக்கிறார் தரேஷ்.

#

1. நல்லதைப் பகிர்ந்த ஷாஜஹான்
2. அப்துல்லா
3. மருத்துவர். அசோகன்
4. மாவட்ட ஆட்சியர் தரேஷ்

#

நாலு பேருக்கும் நன்றி.

17 ஆழ்மனக் குறிப்புகள்




“மெர்லின்
நீ சபிக்கப்பட்ட வாழ்க்கை வாழ்ந்ததற்காய்
இங்கே ஒரு ‘டாடி’ அழுகிறான்”

ஏறத்தாழ எண்பத்தி எட்டு வயதான ஒரு மனுஷியின் மரணத்திற்காக முப்பதே ஆன ஒரு இளைஞனின் கண்ணீர் இது. இருபதுகளின் தொடக்கத்தில் பிறந்த ஒரு மனுஷியை, எண்பதுகளின் இறுதியிலோ தொண்ணூறுகளின் தொடக்கத்திலோ பிறந்த ஒரு இளைஞன் மகளே என்று விளிக்கிறான்.
”தாயே” என்றோ “பாட்டியே” என்றோ விளித்திருந்தால் பொறுத்தமாயிருந்திருக்கும். தொண்ணூறை நெருங்கும் ஒரு கிழவிக்கு முப்பதே முப்பது ஆன ஒரு இளைஞன் தந்தையாகிப் போகிறானே, இதைப் பக்குவம் என்பதா? இல்லை பித்துக்குளித் தனம் என்பதா? உதயகுமாரின் வலைதளமான “ஆழ்மனக் குறிப்புகள்” உள்ளே பயணித்துப் பார்த்தால் இது வறட்டுத் தனமான பக்குவமோ, பித்துக் குளித்தனமோ இல்லை ஈரஞ்சொட்டும் உண்மை என்பது புரியும்.

”உலக ஆண்களின் கனவுக் கன்னியாக,கவர்ச்சிக் குறியீடாக பாலுணர்ச்சியை வடிக்கும் வடிகாலாக உலகத்தால் மிகத் தவறாக அறியப்பட்ட துரதிர்ஷ்டக்காரி மெர்லின்” என்று உதயகுமார் எழுதுவது கொஞ்சமும் கலப்படமற்ற உண்மை.

உலகமே அகலமாய் கண்திறந்து பார்த்த அந்த அழகு தேவதை மரித்தபோது கேட்க ஆளற்று அனாதையாய் மூன்று நாட்கள் பிணவறையில் கிடந்த மெர்லினது உடல் குறித்து உதயகுமார் எழுதுவதைப் படிக்கும்போது நம்மை அறியாமல் நம் கண்கள் சுரக்கும்.

“பெருக்கெடுத்து ஓடத்தொடங்கிய நதி பாதி வழியில் ஆவியானதைப் போல் காணாமல் போன வாழ்க்கைக்கு சொந்தக்காரி” என்று உதயகுமார் எழுதுவதைவிட மெர்லினது வாழ்க்கையை சொல்லிவிட முடியாது.
தினமும் தினமும் கடித்துக் குதறப்பட்ட போதும் தான் சந்திக்கும் ஒவ்வொரு ஆணிலிருந்தும் தந்தையைத் தேடியிருக்கிறாள் மெர்லின். இன்னும் சொல்லப்போனால் தான் மணந்துகொண்ட அனைத்து ஆண்களையுமே அவள் “ டாடி “ என்றே அழைத்திருக்கிறாள். மெர்லினின் தாய்க்கே இவளது தந்தை யாரெனத் தெரியாது. அதனால்தான் தந்தைக்காக ஏங்கி அலைந்திருக்கிறாள். வாழ்ந்த காலமெல்லாம் தந்தையின் பாசத்திற்காக ஏங்கி அலைந்த ஒரு பெண்ணிற்கு அவளது பேரன் வயதில் ஒரு தந்தை வாய்த்தது அவளுக்குத் தெரியாது போனதுதான் கொடுமையினும் கொடுமை.

ஃப்ராய்ட், ஷேக்ஸ்பியர் என்று வாசித்துக் குவித்து யாரேனும் அது குறித்தெல்லாம் தம்மிடம் பேசமாட்டார்களா என்ற அவளது ஏக்கத்தை ஒரு முப்பது வயது இளைஞன் புரிந்துகொண்டு அது குறித்து அவளது தொண்ணூறு வயது மகளோடு அசைபோடத் தயாராயிருக்கிறான். அவள்தான் இல்லை.
தொண்ணூறு வயது கிழவிக்கு முப்பது வயது இளைஞன் தந்தயாக முடியும் என்பதை உரத்து சொல்கிறது “ ஆழ்மனக் குறிப்புகள் “
” சடசடவென பொழிகிறது மழை

ஆங்கோர் மரத்தில் கூடுகட்டி வாழும்
ஊர்க்குருவியைப் பற்றி
மழைக்கு எந்த லட்சியமும் இல்லை

அடித்து வீசுகிறது காற்று

மெல்லிய மல்லிக்கொடி
ஒடிந்து வீழ்வது பற்றி
காற்றுக்கென்ன விசனமிருக்கப் போகிறது

எது ஒன்றும் அதன் அதன்
தன்னியல்பிலேயே இருக்கிறது

இதோ என் கூட்டின் மரக்கதவுகளை
கூர்மூக்கால் சுரண்டிக் கொண்டிருக்கும் அந்தப் பறவைக்கு சொல்லுங்கள்
கதவை மூடிக் கொண்டழுவது என் இயல்பென”

அன்பை எப்படி வெளிப்படுத்தலாம்? இதமான ஸ்பரிசம், கனிந்து கசியும் ஒரு சன்னமான பார்வை, அன்பொழுகும் ஒரு கடிதம், ஒரு முத்தம், இப்படி ஏதேனும் ஒன்றின் மூலம் நமது அன்பை வெளிப்படுத்த முடியும். உதயகுமார் அழுகையை தனது அன்பைக் கொண்டு சேர்க்கும் ஊடகமாகக் கையாள்கிறார்.

இவரது படைப்புகளை மேம்போக்காகப் பார்ப்பவர்களுக்கு அவை இவரது காதலிக்காக எழுதப் பட்டவையாகத் தோன்றும். ஆனால் அவை அவரது நண்பர்களுக்கானவை. நண்பர்களுக்கான தனது அன்பை கண்ணீரில் கறைத்துத் தருகிறார்.

நம்மாழ்வார் மறைந்த பொழுது இவர் எழுதிய ஒரு பதிவு குறிப்பிட்டுப் பேசவேண்டிய ஒன்று.

வேப்பமரத்தை அமெரிக்கா சொந்தம் கொண்டாடி ஒவ்வொரு வேப்ப மரத்திற்கும் அவற்றை வைத்திருக்கும் நாடு தனக்கு கணக்கிட்டு கப்பம் கட்டவேண்டும் என்று சொன்னபோது சர்வதேச நீதிமன்றம் சென்று அதன் உரிமையை நமக்கு மீட்டெடுத்துக் கொடுத்தவர் நம்மாழ்வார் என்ற உண்மையை சொல்கிறார்.

காடும் அதன்வழியே பெருக்கெடுத்து ஓடும் நீருமே மக்களுக்குப் பாதுகாப்பு..அவற்ரை அழித்து சாலைகளைப் போடுவதென்பது எந்த விதத்திலும் சரியாகாது என்பதை நம்மாழ்வார் ஊடாக இந்த வலை நமக்கு சொல்கிறது.

தோன்றி வெறும் முன்னூறு ஆண்டுகளேயான அமெரிக்காவிடம் பதினைந்தாயிரம் ஆண்டுகால விவசாயப் பாரம்பரியமுள்ள நாம் விவசாய ஆலோசனைகள் கேட்பது நியாயமா என்ற நம்மாழ்வாரின் கேள்வியை இந்த வலை நம்முள் தொடர்ந்து விதைத்துக் கொண்டே இருக்கிறது.

விவசாயிகள் விவசாயத்தைக் கைவிட்டு வேறு தொழிகளுக்குத் தாவ வேண்டுமென பொருளாதாரப் புலி மன்மோகன் சொன்னபோது அது தற்கொலைக்கு சமம் என்று நம்மாழ்வார் சொன்னதை சொல்லி சிலாகிக்கிறார். அவரே தற்கொலைகளை நியாயப் படுத்துவது வலிக்கச் செய்கிறது. ஆத்மநாமின் தற்கொலையையோ அல்லது ஸ்டெல்லா ப்ரூசின் தற்கொலையையோ நாம் கொச்சைப் படுத்தவில்லை. ஆனால் இருவரும் மரணம் வரை வாழ்ந்திருக்க வேண்டும் என்றே ஆசைப் படுகிறோம். போகிற போக்கில் அன்பின் உச்சத்தை ஒரு தற்கொலையின் மூலம் வெளிப்படுத்தலாம் என்று உதயகுமார் என்ற இளைஞன் முடிவெடுத்துவிடுவானோ என்று இந்த அப்பனுக்கு கவலை இருக்கிறது.

”அதிகபட்ச எதிர்பார்ப்பு வேறொன்றுமில்லை
நேசம் ததும்ப ஒரு சொல்
இந்நாளை அழகாக்க ஒரு புன்னகை
இவ்வாழ்வுக்கு அர்த்தம் சேர்க்கவென கொஞ்சமே கொஞ்சம் பிரியம்
இதுதான்
இவ்வளவேதான்”

என்று ஒரு கவிதை இருக்கிறது இந்த வலையில்.

சற்றும் உலராத ஈரம் சொட்டும் அன்பின் பாய்ச்சலும், அன்பிற்கான யாசித்தலுமே இந்த வலை நெடுகத் தென்படுகிறது.

அன்பை நேசிக்கும் அனைவரும் பார்க்க வேண்டிய வலை
http://nichalanam.blogspot.in/




Tuesday, July 1, 2014

நிலைத் தகவல் 46

இன்று ஶ்ரீஹரிகோட்டாவில் பிரதமர் இந்தியைத் தவிர்த்து ஆங்கிலத்தில் பேசினார். இது பிரதமர் சன்னமாக மாறியிருப்பதைக் காட்டுவதாகவும், இதை அவர் தொடர வேண்டும் என்றும் தோழர் ஞாநி சங்கரன் கூறியுள்ளார்.

எதிலும் வலிந்து இந்தியை திணித்துவிட வேண்டும் என்று அரசே முயலும் போது அதன் தலைவர் அதிலிருந்து சற்றே விலகி நின்று பேசியது அவரை இப்படி எழுத வைத்திருக்கும்.

மோடியின் தாய் மொழி இந்தி எனில் அதில் அவர் பேசுவதுதான் முறை. அல்லது குஜராத்தி எனில் அதில் பேசலாம்.அதே போல அங்கு பேசும் அண்ணா மயில்சாமி உள்ளிட்ட ஒவ்வொருவரும் தத்தமது தாய்மொழியில் பேசவும், அதை அனைவருக்கும் கொண்டு சேர்க்க உரிய மொழி பெயர்ப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டியதும்தான் அவசியம் எனப் படுகிறது.

முகநூலில் வாசிக்க...
https://www.facebook.com/eraaedwin/posts/730027670372079

5

தெரிந்திருக்க நியாயமில்லைதான்
சிரிக்கவே மாட்டாயா 
எனக் கேட்கும் நண்பனுக்கு
சிரிக்கத்தான் செய்கிறேன்
இலங்கை கடற்படை
தமிழ் மீனவனை
கைது செய்த செய்தி வராத
தினத்தந்தி பார்க்கும் ஒவ்வொரு முறையும் என்பது

Monday, June 30, 2014

நிலைத் தகவல் 45

பெற்றோர்களை அழைக்கும் பள்ளிகளில் பலவற்றில் தாய்மார்கள் சென்று விட்டால் அப்பா எங்கே போனார் என்றும், இதைவிட அப்படி என்ன முக்கியமான வேலை அவருக்கு என்றும் கேட்கப் படுவதாக அறிகிறோம்.

அம்மா பெற்றோரில்லையா?

Saturday, June 28, 2014

நிலைத் தகவல் 44


ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்வதற்கு கொஞ்சம் முன் வசிஷ்டர் ராமனுக்கு சொல்வது போல ஆட்சித் தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் கம்பன் சொல்வான்,
" யாரொடும் பகை கொள்ளலன் என்றானபின்
போரொடுங்கும்
புகழொடுங்காது
தன் தார் ஒடுங்குதல் செல்லாது
அது தந்தபின் வேரொடும்
கெடல் வேண்டல் உண்டாகுமோ"
பகை தவிர். போர் இருக்காது. அன்பாயிரு. புகழுண்டாகும் என்கிறது ராமாயணம் என்பதை
ஆயுதக் கொள்முதலுக்கு முன்னுரிமை கொடுக்கப் படும் என்று பேசும் ராம பக்தர் நமது பாதுகாப்புத் துறை அமைச்சர் மாண்பமை அருண் ஜேட்லி அவர்களுக்கு நினைவு படுத்துகிறோம்.

Friday, June 27, 2014

நிலைத் தகவல் 43


May 13 · 
இன்று சமயபுரம் SRV மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் திரு துளசி அவர்களை நண்பர் கனகராஜோடு சென்று சந்தித்தேன்.
பேசிக்கொண்டிருந்தபோது எனது “ இவனுக்கு அப்போது மனு என்று பேர் “ என்ற நூலில் வரும் சம்பவத்தை ஸ்கிட்டாக மாற்றி 10 நிமிடம் நிகழ்த்தியிருக்கிறார்கள் அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் என்பதைச் சொன்னார்.
தயாரித்த ஆசிரியையிடம் எப்படி இதை தேர்வு செய்தீர்கள், எட்வின் யார் என்பதோ தனது நண்பர் என்பதோ தெரியுமா என்று கேட்டிருக்கிறார். தெரியாது என்று சொன்னவர் பள்ளி நூலகத்தில் படித்ததிலிருந்து அதே நினைவில் இருந்ததாகவும் சொல்லியிருக்கிறார். அநேகமாக மகள், அல்லது மகன் வயதுதான் இருக்கிறது அங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு. அந்த மகளை வாழ்த்தி நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
எத்தனையோ அமைப்புகளுக்கு எத்தனையோ நூல்களைப் பற்றி பேசப் போனாலும் ஒரு அமைப்பேனும் விவாதிக்க எடுத்துக் கொள்கிறமாதிரி ஒரு நூலையும் இன்னும் எழுத வில்லையே என்று என்னையே நான் நொந்து கொள்வது உண்டு.
ஆனாலும் தொடர்ந்து இயங்க இதுமாதிரி நிகழ்வுகளே நம்மை உந்தித் தள்ளுகின்றன.
நன்றி மகளே. நன்றி துளசி.

நிலைத் தகவல் 42


கும்பகோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ( மகளிர் ) அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் அருந்ததிய மாணவிகளுக்கான இடங்கள் யாரும் சேராததால் அப்படியே காலியாக இருப்பதாகவும் யாரேனும் ஏதாவது செய்தால் நல்லது என்பது மாதிரியும் தோழர் அ. மார்க்ஸ் ( Marx Anthonisamy ) வேதனையோடு எழுதியிருந்தார்கள்.
அதற்கு பின்னூட்டம் இட்டிருந்த ஒரு தோழர் அங்கு மட்டுமல்ல மாயவரம் , தஞ்சை உள்ளிட்ட இடங்களிலும் இப்படித்தான் என்று சொல்லியிருந்தார்.
அநேகமாக மாநிலம் முழுக்கவும் இதுதான் நிலையாக இருக்கக் கூடும்.
த.மு.எ.க.ச, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அருந்ததிய அமைப்புகள், அனைத்து இடதுசாரி அமைப்புகள் மற்றும் தோழர்கள் மட்டுமல்லாது விடுதலைச் சிறுத்தை அமைப்பினரும் இது விசயத்தில் கவனம் கொள்வது அவசியம்.
ஒவ்வொரு ஊரிலும் படிப்பைத் தொடர இயலாத அருந்ததிய குழந்தைகள் குறித்த விவரங்களை சேகரிப்பது என்பது அனைத்து ஊர்களிலும் கட்டமைப்பை வைத்திருக்கக் கூடிய மேற்சொன்ன அமைப்புகளுக்கு கடினமானது அல்ல.
அமைப்புகளை முடுக்கி விட்டு பட்டியல் தயாரித்து, அவர்களை பள்ளிகளில் கல்லூரிகளில் சேர்ப்பதற்கு ஆவண செய்ய வேண்டும்.
பொருளாதார விஷயத்தில் தேவைப் பட்டாலும் நண்பர்களிடம் திரட்டி விடலாம்.

Thursday, June 26, 2014

நிலைத் தகவல் 41

இந்தி எம் மீது திணிக்கப் படுவதை மட்டுமல்ல, ஒருக்கால் பீஹாரி மீதோ, வங்காளி மீதோ அல்லது யார் மீதோ தமிழ் திணிக்கப் பட்டாலும் அதை எதிர்க்கவே செய்வோம்.

Thursday, June 19, 2014

நிலைத் தகவல் 40

குஜராத்தில் சனந்த் பகுதியில் உள்ள நானோ கார்த் தொழிற்சாலையை 35 முதல் 40 நாட்களுக்கு மூடுவது என்று டாடா நிறுவனம் முடிவெடுத்திருப்பதாக 15.06.2014 நாளிட்ட தீக்கதிர் சொல்கிறது.

இது அது தொடர்ந்து சந்தித்து வரும் நட்டத்தை ஈடு கட்டுவதற்கான முயற்சி என்றும் தெரிகிறது.

நண்பர்கள் எனக்குத் தெளிவு படுத்த வேண்டும்.

தொடர் நட்டம் என்று காரணம் சொல்லி இதை சிக் யூனிட் என்று இவர்களால் ஏதோ ஒரு புள்ளியில் சொல்லிவிட இயலுமா?

அப்படி இவர்கள் சொல்லும் பட்சத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வட்டியை செலுத்தத் தொடங்கினால் போதும் என்கிற சலுகையோடு வங்கி இவர்களுக்கு கொடுத்துள்ள 9000 கோடிக்கு நெறுக்கமான தொகையை வங்கி ரைட் ஆஃப் செய்து விட வாய்ப்புள்ளதா?

அதற்காகவே இவர்கள் இப்படி செய்வதற்கும் வாய்ப்பு உள்ளதா?

ஏன் கேட்கிறேன் எனில்,

வங்கிக் கடன் ஏறத்தாழ 9000 கோடி ரூபாய். ஆனால் நானோவின் சொத்து மதிப்பு ஏறத்தாழ 3000 கோடி மட்டுமே.

ஒருக்கால் கொடுத்த தொகைக்காக வங்கி சொத்துக்களை அப்போது எடுத்துக் கொண்டாலும் இவர்களுக்கு 6000 கோடி லாபமாகிறதே.

தெரிந்து கொள்வதற்கான சந்தேகங்களே இவை.

என் அய்யங்கள் சரி எனும் பட்சத்தில் இது குறித்து தரவு திரட்டி எழுதவும் இல்லாத பட்சத்தில் உண்மையை என்னவென்று அறிந்து கொள்ளும் ஆவலில் கேட்கிறேன்.

Tuesday, June 17, 2014

நிலைத் தகவல்39

போனவாரம் ஒரு வேலையினிமித்தம் திருச்சி பெரிய கடை வீதி போயிருந்தேன்.

ஒரு இளைஞனை அடித்து காவல் நிலையத்திற்கு இழுத்துக் கொண்டு போனார்கள். விசாரித்தபோது அந்த இளைஞன் 300 ரூபாயை ஜேப்படி செய்து விட்டதாக அறிந்தேன்.

அந்தப் பகுதியின் காற்றுவெளி " 10 ரூவாயா இருக்கட்டும். திருட்டு திருட்டுதானே சார். " என்பது மாதிரியான பேச்சுக்களால் நிரம்பிக் கசிந்தது.

300 ரூபாய் திருடியவனையே தரும அடியோடு சிறைக்கும்
அனுப்பும் இந்த மண்ணில்தான்,

2009 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை ONGC கு சொந்தமான எண்ணெய் வயல்களில் இருந்து ஏறத்தாழ 18 பில்லியன் கனமீட்டர்கள் இயற்கை வாயுவை ரிலையன்ஸ் நிறுவனம் திருடியிருப்பதாகவும் அதன் மதிப்பு கிட்டத் தட்ட 30 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என்றும் ONGC வழக்குத் தொடுத்திருக்கிறது.

ONGC பொதுத்துறை நிறுவனம். எனில் மக்களது நிறுவனம். எனில் மக்களது பணம் 30 ஆயிரம் கோடியை ரிலையன்ஸ் திருடியிருப்பதாகத்தான் ONGC கூறுகிறது.

சும்மா சொல்லி வைத்தேன்.

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...