Monday, July 26, 2021

ஐம்பதுமணி நேரமாவது அய்யாவோடு இருக்கிற வாய்ப்பு கிடைத்தபோதும்...

 


எண்பத்தி ஒன்பதிற்கும் தொண்ணூற்றிரண்டிற்கும் இடைப்பட்ட ஏதோ ஒரு நாளில்

திருச்சி கலைக்காவிரியில் நடந்த ஒரு கருத்தரங்கில்

அறுபதுகளில் இருந்த அவரை இருபதுகளின் மத்தியில் இருந்த நான் முதன்முதலில் சந்திக்கிறேன்

சந்தித்தேன் என்பதெல்லாம்கூட பொய்தான்

பார்த்தேன் என்பதுதான் சரி

என்ன நடந்தது என்பது சரியாக நினைவில்லை

ஆனால் திருக்குறள் குறித்து அல்லது வள்ளுவர் குறித்து

இவரால் ஏற்கமுடியாத ஒரு கருத்தை யாரோ கூறிவிட

மேடையில் ”பாய்ந்து ஏறுவது” என்பதற்கு இலக்கணத் தழும்பாய் பாய்ந்து ஏறினார்

பிடி பிடி என்று, பிசிறே இல்லாமல் ஆற்றொழுக்காய் கொட்டி முடிக்கிறார்

இருந்த ஆயிரத்தி சொச்சம் மக்களும் வெடித்து ஆரவாரிக்கிறார்கள்

அருகே அமர்ந்திருந்த கலைக்காவிரியின் அன்றைய சவுண்ட் இஞ்சினியரான கிறிஸ்டோபரிடம் கேட்கிறேன்,

“யார் இவர்?”

“இளங்குமரனார் அய்யா. திருக்குறளுக்கு அத்தாரிட்டி”  

இப்படித்தான் இளங்குமரனார் எனக்கு அறிமுகமாகிறார்

அதன்பிறகு என் கவனத்திற்கு வரும் அவரது கூட்டங்களில் எல்லாம் வெறிகொண்ட பார்வையாளனாகக் கலந்து கொள்கிறேன்

ஒருநாள் எனது பள்ளிக்குள் வருகிறார்

என்னைத்தான் பார்க்க வருகிறார் என்று நினைத்துக் கொண்டேன்.

“நாம என்ன அவ்வளவு பெரிய ஆளாவா அதுக்குள்ள வளர்ந்து விட்டோம். நம்மைப் பார்க்க இவ்வளவு பெரிய ஆளுமை வருகிறாரே” என்று ரெக்கை முளைத்துவிட்டது

உண்மையிலுமே அப்படித்தான் நினைத்தேன்

ஆனால் எங்களது ராமதாஸ் அய்யாவை பார்ப்பதற்காகத்தான் அவர் வந்தார்

அய்யாவும் அவரும் நெருக்க நண்பர்கள் என்பது அப்போதுதான் தெரிந்தது

எங்கள் பள்ளியில் அமர்ந்தபடிதான் திருச்சி அல்லூரில் “திருவள்ளுவர் தவச்சாலை” யை அமைப்பதற்கான திட்டத்தை வடிக்கிறார்கள்

தொடர்ந்து எம் பள்ளிக்கு வந்தவண்ணம் இருக்கிறார்

எம் பள்ளியின் அப்போதைய “நாட்டு நலப்பணித் திட்ட” பிள்ளைகளின் பெரும்பங்களிப்பு தவச்சாலையின் கட்டமைப்பில் இருக்கிறது என்பது எப்போது நினைத்தாலும் இனிக்கிற செய்தி எங்களுக்கு

சிறுபிள்ளைத்தனமான மேதாவித்தனத்தோடு அவரை அப்போது எதிர் கொண்டிருக்கிறேன்

ராமதாஸ் அய்யா தன் பிள்ளையாகவே என்னை பாவித்து வந்ததை உணர்ந்தவராக அவர் இருந்த காரணத்தினால்தான் அவற்றை பெரிது படுத்தாமல் பெருந்தன்மையோடு கடந்து போயிருக்கிறார்

தப்பு தப்பாக அவரைக் கேள்விகள் கேட்டாலும் ஒரு மாணவனுக்கு உரிய பணிவோடுதான்  நடந்து கொண்டிருக்கிறேன் என்பதுதான் சற்று ஆறுதலான விஷயமாக இருக்கிறது

ஒருமுறை எங்கள் அய்யாவிடம் கூறினார்

“இந்தப் பையனிடம் எல்லா வினாக்களுக்குமான விடைகள் உள்ளன. எதைக் கூறினாலும் அதை இடைமறித்துக் கேட்பதற்கான வினாக்களும் உள்ளன.

ஆனால் வறட்டுத்தனமான போக்கு இருக்கிறது. பக்குவப்பட பத்து வருஷம் ஆகும்.

பெருசா வருவார்”

இதைப் புரிந்துகொள்வதற்கே எனக்கு பத்துப் பதினைந்து ஆண்டுகள் பிடித்தது

ராமதாசு அய்யாவின் பிள்ளையும் எம் பள்ளியின் தமிழாசிரியருமான செல்வம் தொடர்ந்து அய்யா பற்றிய தகவல்களை கொடுத்துக் கொண்டே இருக்கிறார்

சில நாட்களுக்கு முன்னர் அய்யா அவர்கள் குளியலறையில் வழுக்கி விழுந்த தகவலைக் கூறினார்

சென்று பார்ப்பது என்று முடிவெடுத்தோம்

நேற்று ராமதாஸ் அய்யா சென்று அய்யாவைப் பார்த்திருக்கிறார்

நன்றாக இருப்பதாக செல்வம்வழி செய்தி வருகிறது

இரவு அவர் இல்லை என்ற செய்தி வருகிறது

ஐம்பதுமணி நேரமாவது அய்யாவோடு இருக்கிற வாய்ப்பு கிடைத்தபோதும் அவரிடம் இருந்து எதையும் எடுத்துக்கொள்ளாத மக்காகவே இருந்திருக்கிறேன்

போய் வாருங்கள் அய்யா


26.07.2021

 

 

 

 

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...