Monday, May 28, 2012

ஒரு வழக்கும் ஒரு சாட்சியும்

அவர் தீவிரமான பக்தர்தான். ஆனால் வெறித்தனமான பக்தி என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. என்ன, ஒரு விதத்தில் நமக்கு நேரெதிரானவர். அவருக்கு எம்மதமும் சம்மதம். நமக்கோ எந்த மதத்தோடும் சம்மதம் இல்லை.

எதையும் விட முக்கியமானது அவரது அர்ப்பனிப்போடு கூடிய தொழில் பக்தி. அர்ப்பனிப்பு என்றால் அப்படியொரு அர்ப்பனிப்பு.

“ ஓன்னு அழுதாச்சும் எங்களப் படிக்க வச்சிடுவாருங்க சார்”

பிள்ளைகள் இப்படிச் சொல்லி அடிக்கடி கேட்டிருக்கிறேன்.

பணியில் சேர்ந்த ஆண்டிலிருந்து ஒரு ஆண்டு கூட விடாமல் இருபத்தி ஐந்து ஆண்டுகளாக தனது பாடத்தில் நூறு சதவிகிதம் தேர்ச்சி விழுக்காட்டினைத் தருபவர்.

அன்று மிகுந்த விரக்த்தியோடு ஆசிரியர் அறையில் அமர்ந்திருந்தார்.

“ ஏன் அண்ணே ஒரு மாதிரியா உக்காந்து இருக்கீங்க. உடம்பு ஏதும் சரியில்லையா?”

“அதெல்லாம் ஒன்றும் இல்ல எட்வின்.”

“பசங்க எதுவும் எழுதிக் காட்டலையா அண்ணே?”

பள்ளியில் பிள்ளைகள் ஏதேனும் தவறிழைத்தாலோ அல்லது அவர் சொன்ன வேலையை செய்ய வில்லை என்றாலோ அவர்களைத் தண்டிக்க மாட்டார். மாறாக தன்னையே வருத்திக் கொண்டு, பல நேரங்களில் சாப்பிட மறுத்து அடம் பிடித்து இப்படித்தான் தன்னையே வருத்திக் கொள்வார். அதனால்தான் அப்படிக் கேட்டேன்.

“என்ன எட்வின் மனசாட்சியே இல்லாம இப்படி பன்றாங்க. கேட்டதுல இருந்து மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு எட்வின்”

“என்னங்க அண்ணே?”

“இல்ல, இன்னிக்கு காலைல பசங்கள கூட்டீட்டு இருங்களூர் போனோம் இல்ல...”

புரிந்தது, இப்போதெல்லாம் ஜனவரிக்குப் பிறகு பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அடிக்கடி யாரேனும் புத்துணர்வு முகாம், அல்லது அவர்களுக்கான பிரார்த்தனை என்கிற வகையில் மாணவர்களைத் திரட்டி விடுகின்றனர்.

அதிலும் குறிப்பாக பொறியியல் கல்லூரிகள் தங்களது கல்லூரிக்கான சேர்க்கையை கவனத்தில் கொண்டு பள்ளிகளுக்குப் பேருந்துகளை அனுப்பி புத்தாக்க முகாம்களுக்கு மாணவர்களைத் திரட்டுகின்றனர்.

அது போல அன்று காலை இருங்களூரில் இருக்கும் ஒரு போதகர் சிறப்பு வழிபாட்டிற்காக பள்ளிகளிலிருந்து மாணவர்களைத் திரட்டியிருந்தார்.

பிள்ளைகளோடு அண்ணனும் போயிருந்தார். அங்கு நடந்த ஏதோ ஒன்று அவரது மனதை சிராய்த்திருக்க வேண்டும்.

“ என்ன நடந்துச்சுங்க அண்ணே?”

“எல்லாம் நல்லவிதமாத்தான் நடந்துச்சு எட்வின். அதிலுங் குறிப்பா அந்த பாஸ்டர் பிள்ளைகளுக்காக உருகி அழுது ஜெபம் செய்தது மனச அப்படியே உருக்கிடுச்சு எட்வின்”

“அப்புறம் என்னங்க அண்ணே?”

“ ஒரு பாப்பா சாட்சி சொல்ல வந்துச்சு. அது சொல்லுது, நான் போன வருஷம் ஒரு பேப்பர்ல இருபது மார்க்குக்குத்தான் எழுதினேன். ஆனால் கர்த்தர் மனதிறங்கி, பேப்பர் திருத்திய ஆசிரியரின் மனதை இறங்க வைத்து எனக்கு எண்பது மதிப்பெண்களை வாங்கித் தந்தார் என்கிறது.

இது பசங்கள கெடுத்துடாதா எட்வின்.படிக்காம சாமி கும்பிட்டாப் போதும் என்கிற மன நிலையை உண்டாக்கிடாதா?”

“ ஆமாம் , விடுங்க அண்ணே.” என்று அவரை ஒருவழியாய் சமாதானப் படுத்திவிட்டு இருந்த சமாதானத்தைத் தொலைத்தவனாய் நகர்ந்தேன்.

அவரைப் பொருத்தவரை இத்தகைய சாட்சிகள் மாணவர்களை ‘எல்லாத்தையும் கடவுள் பார்த்துக்குவார்’ என்ற மன நிலைக்குத் தள்ளி படிக்க விடாமல் செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறதே என்ற கவலை. அது கடந்து அவர் அதை அரசியல் படுத்தவில்லை.

ஆனால் நமக்கோ அதில் அலச சில இருக்கின்றன. அதற்குள் போகுமுன் ஒரு வழக்கை நாம் தெரிந்து கொள்வது நலம்.

அது ஒரு விசித்திரமான வழக்கு...

பொதுவாக தேர்விலே ஏதேனும் ஒரு பாடத்தில் அல்லது சில பாடங்களில் தோல்வி அடையும் மாணவனோ மாணவியோ தான் நல்ல முறையில் தேர்வினை எழுதியிருப்பதாகவும் எனவே தனது தாளினை அல்லது தாள்களை மறு மதிப்பீடு செய்ய உத்திரவிட வேண்டும் என்று நீதி மன்றத்தை அனுகுவது வாடிக்கை.

சில நேரங்களில் தான் பெற்றிருக்கிற மதிப்பெண்ணிற்கும் தான் எழுதியதற்கும் கொஞ்சமும் பொருத்தமே இல்லாமல் இருப்பதால் தனது தாளினை மறு மதிப்பீடு செய்ய உத்திரவிடக் கோரி சிலர் நீதி மன்றத்தை அனுகுவதும் உண்டு.

பல நேரங்களில் இதில் அவர்கள் வெற்றி பெறுவதும் உண்டு

.இன்னும் சொல்லப் போனால் மறு மதிப்பீட்டிற்குப் பிறகு அந்தக் குழந்தை மாநிலத்தில் முதலிடத்திற்குப் போனதும் உண்டு. இதில் இரண்டு வகையான துயரங்கள் உண்டு.

ஒன்று, யாரோ ஒரு ஆசிரியரின் பிழையால் அல்லது கவனக் குறைவால்அந்தக் குழந்தை தனக்கு உரிய இடத்தை சில காலம் இழந்திருந்தது,

இன்னொன்று, அதே ஆசிரியரின் கவனக் குறைவால் தனக்கு உரியதற்ற இடத்தில் கொஞ்ச காலம் இருந்து தற்போது அந்த இடத்தை இழந்த மற்றொரு குழந்தை.

ஒரே ஆசிரியரின் சன்னமான ஒரு கவனக் குறைவால் இரண்டு குழந்தைகள் அனுபவித்த மன உளைச்சல் சொல்லி மாளாது.

ஒருக்கால் அந்தக் குழந்தை நீதி மன்றத்தை அனுகியிருக்காவிட்டால் அந்தக் குழந்தைக்கு உரிய இடம் கிடைக்காமல் போனது, அந்த இடத்திற்கு தகுதியற்ற குழந்தையிடம் அந்த இடம் போனது என்ற வகையில் அது ஒரு இரட்டைக் குற்றமாகவே அமைந்திருக்கும்.

இப்போது கேட்கலாம்,

முதலிடத்திற்கு தகுதியற்ற ஒரு குழந்தை அந்த இடத்திலிருந்து கீழிறக்கம் செய்யப்பட்டது நியாயம்தானே. அதில் அந்தக் குழந்தை மன உளைச்சல் அடைவதற்கு என்ன இருக்கிறது?

மேலோட்டமாய் பார்த்தால் இது நியாயமாகக் கூடப் படும். ஆனால் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்,

தன்னை முதலிடத்தில் அமர்த்தும்படி அந்தக் குழந்தை யாரிடத்தும் மணு எதுவும் கொடுக்க வில்லை.யாருடைய தவறாலோ அந்த இடத்தில் இருந்து விருதுகள், பராட்டுக்கள் எல்லாவற்றையும் அனுபவித்து விட்டு தற்போது அவை தனக்குரியவை அல்ல என்றானபின் தனது உறவினர்களை, நண்பர்களை மற்றவர்களைப் பார்க்க எப்படி கூனிக் குறுகியிருப்பாள்.

ஆனால் இது மாதிரி வழக்குகள் வழக்கம்தான்.

ஆனால் ஒரு மாணவன் தான் கணிதப் பாடத்தில் தேர்ச்சிப் பெற்றது சாத்தியமே இல்லாத ஒன்று என்று வழக்குக்குப் போனான். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் தான் கணக்கிலே எழுபது மதிப்பெண்கள் பெற்றிருக்க வாய்ப்பே இல்லை என்றும். ஆகவே முறையாக மறு மதிப்பீடு செய்து தன்னை கணிதத்திலே தோல்வியடைந்ததாக அறிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் போனான்.

மேலோட்டமாகப் பார்த்தால்,

“ இப்படியெல்லாம்கூட நடக்குமா?” என்று கூட நினைக்கத் தோன்றும்.

ஆனால் நடந்தது.

அதிகப் பட்சம் அறுபத்தி ஐந்து மதிப்பெண்களுக்குமேல் தான் பெற்றிருக்க வாய்ப்பே இல்லை என்றும், அறுபத்தி ஐந்தே மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டிய தனக்கு எழுப்து மதிப்பெண்கள் வழங்கி தனது எதிர்காலத்தை பாழாக்கியிருக்கிறார்கள் என்பதே வழக்கின் சாரம்.

சொன்ன மாதிரியே அவன் அறுபத்தி ஐந்து மதிப்பெண்கள்தான் பெற்றிருந்தான்.

நடந்தது இதுதான்,

அவன் மற்ற எல்லாத் தாள்களிலும் 195 மதிப்பெண்களுக்கும் மேலே வாங்கியிருந்தான். கணிதத் தேர்வன்று வினாத்தாளை வாங்கியதும் 170 மதிப்பெண்களே வாங்க முடியும் என்பது புரிந்திருக்கிறது . 170 மட்டுமே வாங்கினால் பொறியியல் சேர்க்கைக்கான கட் ஆஃப் குறையும் என்பது புரிந்திருக்கிறது.

ஆனால் 170 வாங்குவதற்கு பதிலாக தோல்வி அடைந்தால் உடனடித் தேர்வில் நன்கு எழுதி கட் ஆஃப் மதிபெண்களை அதிகப் படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்தவன் 65 மதிப்பெண்கள் வருமளவு மட்டும், எழுதிக் கொடுத்து விட்டு வந்து விட்டான்.

திருத்திய ஆசிரியருக்கு இது தெரியாது. பாவம், 65 வாங்கி தோல்வி அடைகிறான் என்று கருதிய அவர் ஒரு 5 மதிப்பெண்களை அங்கும் இங்கும் போட்டு எழுபதாக்கி தேர்ச்சி பெறச் செய்துவிட்டார்.

அதற்கு அவர் கொடுத்த விலையும் பெற்ற தண்டனைகளும் , அப்பப்பா எழுத்தில் சொல்லி மாளாது.

இப்போது அந்த சாட்சிக்கு வருவோம்.

20 மதிப்பெண்களுக்கு மட்டுமே எழுதிய ஒரு குழந்தைக்கு எந்த ஒரு ஆசிரியனும் எண்பது போட முடியாது. இது எனது இருபத்தி ஐந்து ஆண்டுகால பணி தந்த அனுபவப் பாடம்.

மூன்று விஷயங்கள்தான் இருக்க வேண்டும்.

ஒன்று ஒரு ஊழல் நடந்திருக்க வேண்டும். அதற்கு வாய்ப்பில்லை என்றே படுகிறது.

இரண்டு அந்தக் குழந்தை பொய் சொல்லியிருக்க வேண்டும் .

அல்லது , மூன்றாவதாக ஒருக்கால் ஏசு நாதரே திருத்திய ஆசிரியரின் மனதை இறங்க வைத்து இருபது மதிப்பெண்களுக்கு மட்டுமே எழுதியிருந்தக் குழந்தைக்கு எண்பது மதிப்பெண்கள் வாங்கித் தந்திருக்க வேண்டும்.

ஒன்றுக்கும் மூன்றுக்கும் வாய்ப்பே இல்லை எனலாம்.

ஊழல் நடந்திருக்கிறது எனில் அது சாட்சிக்குரிய செய்தியன்று. அது கிரிமினல் குற்றம்.

இரண்டாவது எனில் அது மத அரசியலை நோக்கி நகர்த்தும். அது மிக மிக ஆபத்தானது.

மூன்றாவது எனில்,

ஏசு ஆசிரியரிடம் பேசி இருபதை எண்பதாக்கிக் கொடுத்தக் குற்றவாளியாகிறார்.

ஒன்று சொல்வேன்,

சாமி இல்லை என்று சொல்கிற நாங்களே ஒரு கடவுளை இந்த அளவிற்கு கேவலப் படுத்த மாட்டோம்.




30 comments:

  1. கடவுள் இருக்கு-னு சொல்லுபவர்கள் தான் கடவுளை அதிகளவு அசிங்கப் படுத்துகின்றனர் என்பதற்க்கு நல்ல உதாரணம்.

    என் வாழ்க்கையின் நடந்த நிகழ்வொன்றை குறிப்பிட விரும்புகின்றேன்.

    நண்பர் ஒருவருடன் விவாதம் கடவுளைப் பற்றி... கடவுள் இருக்கு நான் உணர்ந்து இருக்கின்றேன் என்றார். விளக்குங்கள் என்றேன். அவர் இப்படி சொன்னார்.

    ''ரெண்டு வருசத்துக்கு முன்னாடி டூர் போய்ட்டு திரும்பி காருல வந்துட்டு இருந்தோம்... நான் தான் ஓட்டிட்டு வந்தேன் ஒரு இடத்து பஸ்-அ ஓவர்டேக் பண்ணேன்... எதுரு-ல ஒரு லாரி... நல்லா தெரிஞ்சுருச்சு மோதப் போறோம்-னு.... சாமிகிட்ட கும்பிட்டேன்... எப்படியாச்சும் காப்பாத்து-னு... எனக்கு பின்னாடி வந்தவன் என்ன ஓவர்டேக் பன்னி போய் மோதிட்டான்... அதுநாள நான் தப்பிச்சுட்டேன். இப்ப சொல்லு-னு சொன்னார்... உங்கள ஓவர்டேக் பன்னவன் என்ன ஆனான்-னு கேட்டேன்... ஸ்பாட் அவுட்-னு சொன்னார்.''

    அப்போ நான் கேட்டேன் உங்கள காப்பாத்த இன்னொருத்தர சாவடிச்சவர் கடவுளா? நாளைக்கு இதே மாதிரி உங்களயும் சாவடிக்க மாட்டாரு-ன்றது என்ன நிச்சயம்-னு. இப்படி கடவுள கொலைகாரனா மாத்திட்டீங்களே-னு கேட்டேன்.

    ReplyDelete
  2. அருமையான பதிவு.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  3. கார்தி அவர்களே! கடவுள் மறுப்பு என்பது ஆழ்ந்த விஞ்ஞான ,தத்துவ பின்னணியில் வழங்கப்படவேண்டும். "தி.க "காரன் போன்ற கடவுள் மறுப்பு நிற்காது.பிள்ளையாரை உடைப்பதும்,ராமர் சிலையை அவமதிப்பதும் கடவுள் மறுப்பல்ல! ---காஸ்யபன்

    ReplyDelete
  4. கடவுள் இருக்கிறாரா ?
    ஏப்ரல் மாதம் முகநூலில் நான் பதிவிட்டது

    ReplyDelete
  5. கடவுள் இருக்கிறாரா ?
    ஏப்ரல் மாதம் முகநூலில் நான் பதிவிட்டது

    ReplyDelete
  6. சிந்திக்கத் தூண்டிய பதிவு. அந்தக் குழந்தை பொய் சொல்லியிருந்தாலும், அதன் பாரதூரத்தை அது அறிந்திருக்காது. அப்படிச் சொல்லும்படியாக பெரியவர்கள் யாரோ அதைப் பணித்திருக்க வேண்டும்.

    ReplyDelete
  7. சிந்தனைக் குரிய செய்திகளைக் கொண்ட சம்பவ விவரணை அருமை . சாமிய நம்பறவங்க தான் அதை இழிவு படுத்தரதுல முதலிடம் வகிக்கிறார்கள்.

    --

    ReplyDelete
  8. கடன் தொல்லையா, தீராத வியாதியா, குடும்பத்தில் நிம்மதி இல்லையா, உடல் ஊனமா ஏசு உங்களின் குறைகளை அறிந்து நிவர்த்தி செய்வார். நீங்கள் செய்ய வேண்டியது நம்பிக்கையுடன் ஜெபிக்க வேண்டியது தான். ஜெப கூட்டத்திற்கு வாருங்கள், கர்த்தரால் பிரச்சனைகளில் இருந்து மீண்ட சாட்சிகளை பாருங்கள்- இது நாம் தினந்தோறும் பார்க்கும் பிரமாண்ட பேனர்கள். இவை சொல்வதென்ன உங்கள் அணைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் உண்மையான கடவுளை வணக்காதது தான். அரசு, அரசின் கொள்கை இவற்றை அருமையாக மக்களிடமிருந்து மறைத்து விடுகின்றனர்.
    ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு பதிவை, விவாதத்தை ஏற்படுத்தும் ஒரு பதிவை செய்துள்ளிர்கள்., வாழ்த்துகள்

    ReplyDelete
  9. வாசித்தேன் தோழர் கல்வியின் மீதான கடவுளின் கரிசனை அது சார்ந்த அரசியல் பார்வை என நீளும் ஆய்வு இன்னும் விவரிக்கப்படவேண்டியதாய் உள்ளது...மேலும் செழுமை படுத்துங்கள்...

    ReplyDelete
  10. "அரசியலில் இதெல்லாம் சகஜமுங்க” என்பது மாதிரி மதங்களில் இதெல்லாம் ரொம்ப சகஜமுங்க. என் அனுபவங்கள் இங்கே.

    ReplyDelete
  11. நல்ல பதிவு. சிறு பிராயத்தில் இருந்தே குழந்தைகளை ஒரு விஷயத்திற்காவது அடங்கி நடக்க பயப்பட வைக்க உருவாக்குகிற பிம்பமே கடவுள்.

    ReplyDelete
  12. காஸ்யபன் அவர்களே... நான் கடவுள் இருக்கின்றாரா இல்லையா என வாதாட வரவில்லை... அது மிக நீண்ட வாதத்திற்க்கு வழிவகுக்கும்... இங்கே நான் கூற நினைத்ததும் எட்வின் அய்யா கூற நினைத்ததும் ஒன்று தான்... அதாவது... கடவுளை ஏற்றுக் கொள்பவர்கள் தான் கடவுளை அசிங்கப்படுத்துகின்றனர்.

    ReplyDelete
  13. நல்ல பதிவு தொடருங்கள்

    ReplyDelete
  14. வரிக்கு வரி.. கட்டுரை அருமை..

    ReplyDelete
  15. @Kaarti Keyan R

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  16. @Rathnavel Natarajan

    மிக்க நன்றிங்க அய்யா

    ReplyDelete
  17. ///kashyapan said...
    கார்தி அவர்களே! கடவுள் மறுப்பு என்பது ஆழ்ந்த விஞ்ஞான ,தத்துவ பின்னணியில் வழங்கப்படவேண்டும். "தி.க "காரன் போன்ற கடவுள் மறுப்பு நிற்காது.பிள்ளையாரை உடைப்பதும்,ராமர் சிலையை அவமதிப்பதும் கடவுள் மறுப்பல்ல! ---காஸ்யபன் ///

    மிக்க நன்றிங்க தோழர்

    ReplyDelete
  18. ///karthik balajee said...
    கடவுள் இருக்கிறாரா ?
    ஏப்ரல் மாதம் முகநூலில் நான் பதிவிட்டது///

    மிக்க நன்றி கார்த்தி

    ReplyDelete
  19. ///தமிழ்நதி said...
    சிந்திக்கத் தூண்டிய பதிவு. அந்தக் குழந்தை பொய் சொல்லியிருந்தாலும், அதன் பாரதூரத்தை அது அறிந்திருக்காது. அப்படிச் சொல்லும்படியாக பெரியவர்கள் யாரோ அதைப் பணித்திருக்க வேண்டும்.///

    அதுதான் தமிழ் மத அரசியல்

    ReplyDelete
  20. /// Kuppu Veeramani said...
    சிந்தனைக் குரிய செய்திகளைக் கொண்ட சம்பவ விவரணை அருமை . சாமிய நம்பறவங்க தான் அதை இழிவு படுத்தரதுல முதலிடம் வகிக்கிறார்கள்.
    ////

    ஆமாம் தோழர். மிக்க நன்றி

    ReplyDelete
  21. ///Christopher said...
    கடன் தொல்லையா, தீராத வியாதியா, குடும்பத்தில் நிம்மதி இல்லையா, உடல் ஊனமா ஏசு உங்களின் குறைகளை அறிந்து நிவர்த்தி செய்வார். நீங்கள் செய்ய வேண்டியது நம்பிக்கையுடன் ஜெபிக்க வேண்டியது தான். ஜெப கூட்டத்திற்கு வாருங்கள், கர்த்தரால் பிரச்சனைகளில் இருந்து மீண்ட சாட்சிகளை பாருங்கள்- இது நாம் தினந்தோறும் பார்க்கும் பிரமாண்ட பேனர்கள். இவை சொல்வதென்ன உங்கள் அணைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் உண்மையான கடவுளை வணக்காதது தான். அரசு, அரசின் கொள்கை இவற்றை அருமையாக மக்களிடமிருந்து மறைத்து விடுகின்றனர்.
    ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு பதிவை, விவாதத்தை ஏற்படுத்தும் ஒரு பதிவை செய்துள்ளிர்கள்., வாழ்த்துகள் ///

    மிக்க நன்றி தோழர். ஒருக்கால் விவாதம் முகிழ்க்குமானால் மகிழ்வோடு ஏற்போம். விவாதிப்போம் தோழர்

    ReplyDelete
  22. /// Madusudan C said...
    வாசித்தேன் தோழர் கல்வியின் மீதான கடவுளின் கரிசனை அது சார்ந்த அரசியல் பார்வை என நீளும் ஆய்வு இன்னும் விவரிக்கப்படவேண்டியதாய் உள்ளது...மேலும் செழுமை படுத்துங்கள்...///

    மிக்க நன்றி. மேற்கொண்டு நீங்கள்தான் செய்ய வேண்டும். எல்லாவற்றையும் கிழவன்களே செய்வோமா?

    ReplyDelete
  23. ///தருமி said...
    "அரசியலில் இதெல்லாம் சகஜமுங்க” என்பது மாதிரி மதங்களில் இதெல்லாம் ரொம்ப சகஜமுங்க. என் அனுபவங்கள் இங்கே.///

    மீண்டும் உங்களது வருகை என்னை உற்சாகப் படுத்துகிறது. மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  24. /// நா சாத்தப்பன் said...
    நல்ல பதிவு. சிறு பிராயத்தில் இருந்தே குழந்தைகளை ஒரு விஷயத்திற்காவது அடங்கி நடக்க பயப்பட வைக்க உருவாக்குகிற பிம்பமே கடவுள். ///

    அத்தோடு நிற்காமல் அதைத் தாண்டியும் இம்சை செய்கிறார்களே தோழர்

    ReplyDelete
  25. ///Kaarti Keyan R said...
    காஸ்யபன் அவர்களே... நான் கடவுள் இருக்கின்றாரா இல்லையா என வாதாட வரவில்லை... அது மிக நீண்ட வாதத்திற்க்கு வழிவகுக்கும்... இங்கே நான் கூற நினைத்ததும் எட்வின் அய்யா கூற நினைத்ததும் ஒன்று தான்... அதாவது... கடவுளை ஏற்றுக் கொள்பவர்கள் தான் கடவுளை அசிங்கப்படுத்துகின்றனர்.///

    மிக்க நன்றி தோழர். தோழர் காஸ்யபன் அவர்களும் இதே கருத்து நிலையில் செயல் படுபவர்தான்.

    ReplyDelete
  26. சரிதான்பா..!! எல்லாருடைய களங்கங்களையும் துடைத்து கடவுளின் மீது போட்டு, இவர்கள் கடவுளை களங்கப்படுத்தியது தான் மிச்சம்..!!!

    ReplyDelete
  27. அருமையான சிந்தனையை பள்ளியில் நடந்த நிகழ்வு வழி அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  28. //// திவ்யா @ தேன்மொழி said...
    சரிதான்பா..!! எல்லாருடைய களங்கங்களையும் துடைத்து கடவுளின் மீது போட்டு, இவர்கள் கடவுளை களங்கப்படுத்தியது தான் மிச்சம்..!!!///

    ஆமாம் ஆமாம் திவ்யா. மிக்க நன்றி.

    ReplyDelete
  29. ///Murugeswari Rajavel said...
    அருமையான சிந்தனையை பள்ளியில் நடந்த நிகழ்வு வழி அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்.///

    மிக்க நன்றி தோழர். உங்கள் பள்ளி பொறாமைப் பட வைக்கிறது என்னை

    ReplyDelete
  30. இனிய காலை வணக்கம் தோழர்.Hats off to com. Edwin.பொதுவாக காலையில் முகநூலில் மேய்வதோ அன்றி மற்ற குறிப்புகளைப் படிப்பதோ இல்லை.காலை நேரத்தில் படிப்பேன்/எழுதுவேன். இன்றுமுகநூலில் காலை வணக்கம் உருட்டியதும்,தங்களின் பெயர் வந்தது.சரி என்று பக்கம் சென்றபோது, இந்த பதிவு கண்ணில் பட்டது. பதிவு குழந்தைகள் உலகம் தொடர்பானதுதான் தோழரே.படித்தால் நெஞ்சம் நெகிழ்கிறது தலைவா.கண்களில் நீர் துளிர்க்கிறது.இதுவரை எனக்குத் தெரிந்து இப்படி, இந்த முறையில குழந்தைகளின் உணர்வுகளுக்காக வக்காலத்து வாங்கியும், மேலும் தாங்கள் அணுகியுள்ள மூன்று முறைகளையும் யாரும் அணுகியதில்லை தோழரே.. தங்களின் சமூக அக்கறை என்றும் கூட சொல்லமாட்டேன், குழந்தைகளின் பால் உள்ள ஈர்ப்பும் அவர்களின் உணர்வினைத் தாங்கள் பதிவு பண்ணி பாராட்டும் தங்களின் அன்பும், குழந்தைமையைப் போற்றும் பண்பும்,பாராட்ட வார்த்தைகள் சிக்காமல் அவதியுறுகிறேன் தோழமையே, இது ஏதோ வெறும் பாராட்டிற்காக சொல்லப்படும் வரிகள் இல்லை தோழரே.நானும் குழந்தைமையை நேசிப்பவள் என்ற வகையிலே, அந்த உணர்வின் சூழலில் மனதில் ஏற்பட்ட தாக்கத்தின் விளைவு இது. எதிர்வினை பற்றி எண்ணாமல் செய்யும் தங்களின் பணி என்றும் சிறக்கட்டும். பர்ராட்டுகளும், வாழ்த்துகளும், சிறார்களின் சார்பின் நன்றியும், ஓர் ஆசிரியர் என்ற முறையில் மன நெகிழ்வும் தோழரே.நூறாண்டு காலம் வாழ்கவே..

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...