Tuesday, May 27, 2014

நிலைத் தகவல் 36

வாழ்த்துக்கள் மாண்பமை மோடி அவர்களே.

நீங்கள் வந்துவிடக்கூடாது என்று இறுதிவரை என்னளவில் மிகக் கடுமையான பிரச்சாரம் செய்தவன்தான். ஆனாலும் உங்களது வெற்றியையும் எனது தோல்வியையும் மனதார ஏற்றுக் கொண்டவன்.

தேநீர் விற்றுக் கொண்டிருந்த ஒரு சாமானிய மனிதனாலும் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான நமது நாட்டின் பிரதமராக முடியும் என்பதை இந்த உலகிற்கு மூர்க்கமும் உரத்துமான ஒரு குரலில் புரிய வைத்திருக்கிறீர்கள்.

ஆயிரம் விமர்சனங்கள் இருந்த போதிலும், முன்பைவிட உங்களுக்கு எதிராக போராட வேண்டிய சூழல் வந்து போராட நேரலாம் என்பதை உணர்ந்திருந்தும் இந்த சாமானியன் அதற்காக மிகுந்த மரியாதையோடு வாழ்த்துகிறேன்.

நிறைய சொல்ல வேண்டும். ஆனால் நான் சம்பந்தப் பட்ட துறை சார்ந்து ஒன்றை மட்டும் இப்போது சொல்ல விரும்புகிறேன்.

சகல மாச்சரியங்களையும் அந்தப் பக்கம் தள்ளிவிட்டு தேநீர் விற்றவர் எங்கள் பிரதமர் என்பதில் திமிரோடு கூடிய பெருமையோடு கேட்கிறேன்,

இது நியாயம் என்பதை நீங்களும் திமிறோடும் பெருமையோடுமே உண்மையிலுமே உணர்கிறீர்கள் என்றால்,

மாடு மேய்ப்பவனுக்கெல்லாம் கல்வியா என்று கேட்பவர்களும் உங்களோடு இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து அப்புறப் படுத்துங்கள். குடிசைக்கொரு கல்வி கோமானுக்கொரு கல்வி என்பதில் கறாராக இருப்பவர்களை உங்களிடமிருந்து விலக்குங்கள்.

இதை நீங்கள் செய்யத் தவறினால் என்னைப் போல ஒரு சாமானிய மனிதர் பிரதமர் ஆகியிருக்கிறார் என்ற எனது திமிரும் பெருமிதமும் அசிங்கப் பட்டுப் போகும்.

கொசுறாக ஒன்று,

உலகில் எங்கே இந்து பாதிக்கப் பட்டாலும் தலையிட்டு சரி செய்வோம் என்று தேர்தல் அறிக்கையில் சொல்லியுள்ளீர்கள். முதலில் அதை செய்யுங்கள்.

பிரதமர் அவர்களே அன்புமணி மட்டும் அல்ல இளவரசனும் இந்துதான் என்பதையும், பல இடங்களில் கொத்துக் கொத்தாக ஊர்விலக்கம் செய்யப் பட்டுள்ள தலித்துகளும் இந்துக்கள்தான் என்பதையும் உணருங்கள்.

இந்தச் சாமனியனின் எதிர்பார்ப்பு நீங்கள் எல்லா இந்துக்களையும் சமமாக ஏற்று பாவிக்க வேண்டும் என்பதே. இதைச் செய்யத் தொடங்கினாலே சிறுபான்மையினரையும் என் போன்ற நாத்திகர்களையும் இந்தியனாக ஏற்கும் பக்குவம் உங்களுக்கு பையப் பைய வந்துவிடும்.

கூப்பிய கரங்களோடு உங்களை அணுகி வாஞ்சையோடு உங்கள் கரம் பற்றுவதா அல்லது உயர்த்திய கரங்களோடு களம் இறங்குவதா என்பதை உங்களது செயல்களே தீர்மானிக்கும்.,

இந்த சாமானியன் சொன்னதையும் கொஞ்சம் மனதில் கொள்ளுங்கள்.

மீண்டும் உங்களுக்கு என் அன்பும் வணக்கமும் வாழ்த்துக்களும்.

முகநூல் இணைப்பு
https://www.facebook.com/eraaedwin/posts/711426362232210

Saturday, May 17, 2014

நிலைத் தகவல் 35


எனக்குத் தட்டுப் பட்டாலும் அனுப்பி வைக்கிறேன், சொல்வதற்காக நீ தேடிக் கொண்டிருக்கும் என்னை மறந்ததற்கான காரணத்தை

Wednesday, May 14, 2014

நிலைத் தகவல் 34



ஒரு பள்ளியின் உதவி தலைமை ஆசிரியரின் பதிவு.

தேர்வு முடிவு எதுவாயினும் குழந்தைகளை ஒரு புன்னகையோடு அரவணையுங்கள்.

நல்ல மதிப்பெண்களோடு வரும் குழந்தையை " உம் " மென்று அணுகாதீர்கள். " உன்னைத் தவிர வேறு யாருக்கு இது சாத்தியப் படுமென்று? " பொய்யாகவேனும் கொண்டாடுங்கள்.


ஒருக்கால் குறைவாய் பெற்றுவிட்டான் எனில் கோபப்பட வோண்டாம்.

வெறும் 575 மட்டுமே பெற்ற என்னையே என் அப்பாவும் அம்மாவும் கொண்டாடினார்கள். நான் என்ன குறைந்தா போய்விட்டேன். ஒன்று தெரியுமா?, 575 எடுத்த நான் இன்று ஒரு மேல்நிலைப் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியன். 923 எடுத்த என் வகுப்புத் தோழன் இப்போது ஒரு பள்ளியில் ரெக்கார்டு கிளார்க்.

ஒன்றும் இல்லை மதிப்பெண்களில் என்பதை உணருங்கள். குழந்தையைக் கொண்டாடி உற்சாகப் படுத்துங்கள். பெரிதாய் வருவான்.

தேர்வில் தோற்றுப்போன என் வகுப்புத் தோழன் ஒருவன் இன்று முப்பது பேர் பணியாற்றக்கூடிய நிறுவனத்தின் முதலாளி.

ஒருக்கால் பிள்ளை தோற்றே போயிருப்பின் அதிக அன்போடு " விடுப்பா. இப்ப பாஸ் பண்ணினவன் எல்லாம் என்ன பெரிய மேதையா? பார்த்துககலாம் வா" என்று உற்சாகப் படுத்துங்கள். கூடுமான வரைக்கும் கூடவே இருங்கள்.

இது போனால் ஜூனில்,அக்டோபரில், மார்ச்சில் என்று வாய்ப்புகள் உண்டு. குழந்தை போனால்?

முடிவு எதுவாயினும் குழந்தைகளை அன்போடும் புன்னகையோடும் வாரிக் கொள்வோம்.


09.05. 2014 அன்று சுட்டி விகடன் இணையதளம் பதிவு செய்த எனது பழைய பதிவு

நிலைத் தகவல் 33


" கொழந்தைங்களுக்கு டிக்கட் எடுக்கலையாம்மா? "

பேரப் புள்ளைங்கப்பா. பேரப் புள்ளைங்களுக்குக் கூடவா டிக்கட் எடுப்பாங்க"

"நீ கூட ஒங்க பாட்டியோட பேத்திதான. அப்புறம் ஏன் ஒனக்கெடுக்க?"

"சரி வேணான்னா எனக்கும் வேணாம் உட்டுடு"



https://www.facebook.com/eraaedwin/posts/696804247027755

Tuesday, May 13, 2014

4

போகிற பாதையோரம்
தட்டுப் பட்டது
கூராயிருந்ததால்
பிரச்சினையெழவில்லை
அதை
சாமி என்றேற்பதில்

நீண்ட தேடலில்
சாமி ஏதுமற்ற குளக்கரை மரமொன்று கிடைக்க
பிரச்சினையில்லை
கழுவி நடுவதிலும்

”யார் வேணாலும் ஒன்னு மண்ணாப் பொழங்க
சாராயக் கடையா?
சாமி இடம்
சுத்த பத்தம் வேணும்”

“சுத்தி வளைக்காத
நாங்க கும்பிடக்கூடாது
அதானே?”

அவனுக்கு ரெண்டு இவனுக்கு ரெண்டென
அணிபிரிய
எவனோ ஒருவன்
எட்டி உதைத்ததில்

சாமியாகவேண்டியதை கல்லாக்கிப்
போயிருந்தது
சாதி

Tuesday, May 6, 2014

3

எடுப்பதற்கு உள்ளே எதுவுமில்லை
செய்து வைக்க காசு இல்லை
என்பதெல்லாம் கடந்து
குடிசைக்கு கதவு வைக்காமைக்கு
களவு போய்விடும் கதவு
என்ற பயமும்தான்

2

ரெண்டு செக்கோடு
அவசியம்
தம்பியையும் அழைத்து வருமாறு
மூன்றாவது முறையாக
கந்துக்காரன் அழுத்திய போதுதான்
உறைத்தது
வயதாகிக் கொண்டிருக்கிறது

Sunday, May 4, 2014

நிலைத் தகவல் 32

இரா எட்வின்
April 26 at 12:20am
22 ஆம் தேதி 11 மணிக்கு ஒரு அழைப்பு,

” எலெக்‌ஷன் கமிஷனிலிருந்து பேசறோம். நீங்க எட்வின் தானே?”

“ஆமாம்”

“ சரி வச்சுடுங்க”

பிறகு 12 மணி வாக்கில் அங்கிருந்து வந்த இன்னொமொரு அழைப்பு அடுத்த நாள் 9 மணிக்கே வந்து அப்பாயின்மெண்ட் ஆர்டெர் வாங்கி கொண்டு பூத்திற்கு செல்ல ஆணையிட்டது.

அன்று இரவு 8 மணிக்கு வந்த அழைப்பு அடுத்த நாள் சரியாக 7 மணிக்கெல்லாம் வந்து உத்தரவை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தவறினால் கடுமையான நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும் என்றும் கனிவாக மிரட்டியது.

வீட்டை விட்டு 4 மணிக்கு கிழம்பி ஏழுக்கெல்லாம் போனால் ஏழரைக்குப் பிறகே அவர்கள் ஒவ்வொருவராய் வந்தார்கள். உத்தரவை 11 மணிக்கு கொடுத்தவர்கள் உடனே வாக்குச் சாவடிக்கு போய் காத்திருக்க வேண்டும் என்றும் வாக்களிக்கும் கருவிகளைக் கொடுக்க உடனே வருவார்கள் என்றும் அப்போது இல்லை எனில் கடுமையான நடவடிக்கைகள் வரும் என்றும் மிரட்டி அனுப்பினார்கள்.

போய் காத்திருந்தால் ஆறு மணி வாக்கில் நிதானமாக வந்தார்கள்.

முதல் நாள் மதியம் சாப்பிட்டது. 24 ஆம் தேதி இரவு 7 மணிக்குத்தான் சாப்பிட முடிந்தது. இடையில் ஒரே ஒரு கப் தேநீர்தான். இதுகூட பல இடங்களில் இல்லை என்பதுதான் செய்தி. ஏற்கனவே சாப்பாட்டிற்கு முன்னர், பின்னர் என்பதெல்லாம் தாண்டி சாப்பிடும் போது ஒரு மாத்திரை சாப்பிடவேண்டிய ஆள் நான்.

இவை போக வாக்கெடுப்பை அமர்ந்து நடத்த நாற்காலிகளைத் தேடிய ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.

ஏற்கனவே தேர்தல் வகுப்புகள் எடுத்து மிக நேர்த்தியாக ஆசிரியர்களை அசிங்கப் படுத்தினார்கள்.

தேர்தல் கமிஷனே இப்படித்தான் வழிகாட்டியதா? இல்லை வருவாய்த்துறை வரம்பு மீறினார்களா தெரியாது.

தேர்தல் கமிஷன் அவ்வப்போது ஆசிரியர்களை கலந்தாலோசித்தாலே தேர்தல்களை இதைவிடச் சிறப்பாக நடத்த முடியும்.
...................................................................
08.05.2014 புதிய தலை முறையில் 
..................................................................

Wednesday, April 9, 2014

1

ஊர் எதுவாயினும்
மாறுவதேயில்லை
நீரின் பயணம்
கீழிருந்து மேலாய்
குடிநீரும்
மேலிருந்து கீழாய்
சாக்கடையும்

Thursday, March 13, 2014

நிலைத் தகவல் 31


இன்று காலை கரூரிலிருந்து வெங்கமேடு போகும் சிற்றுந்தில் ஒரு பெண் அலைபேசியில் சத்தமாக " ஏங்க நான் தங்கச்சி பேசறேன். எங்க அக்காவ கொஞ்சம் கூப்பிடுங்க" என்றார். அதற்கு என்ன பதில் கிடைத்ததென்று தெரியவில்லை. " நீங்க மேகலாதானே என்றார். அதற்கும் என்ன பதிலென்றுதெரியவில்லை.

"ம்ம் நா செல்வியோட தங்கச்சி பேசறேன். அதக் கொஞ்சம் கூப்பிடுங்க" என்றவர் தனக்குத்தானே "கிறுக்கி இதல்ல மொதல்ல சொல்லியிருக்கனும்" என்றார்.

விழுந்த வேகத்தினும் அதிக வேகமாக கற்றுக் கொள்கிறார்கள் சாமானியர்கள்.

Thursday, March 6, 2014

16 வல்லமை


தமிழ்த் தரவுகள் அனைத்தையும் முடிந்தவரை திரட்டிச் சேர்ப்பது. இயன்றவரை கலப்படமில்லாத தமிழில் புழங்குவது என்கிற உயரிய, நடைமுறைக்கு முற்றிலும் சாத்தியப் படுகிற நோக்கங்களோடு நடத்தப் படுகிற ஒரு இணைய இதழ் ”வல்லமை”.

ஒருநாள் அதன் நிர்வாக ஆசிரியர் திருமதி பவளசங்கரி அவர்கள் இதழுக்கு எனது படைப்புகளைக் கேட்டபோதுதான் இப்படி ஒரு இணைய இதழ் வந்துகொண்டிருப்பது தெரிய வந்தது. உடனே உள்நுழைந்தேன். தங்களது நோக்கங்களைப் பிரகடனப் படுத்தும் போது எந்த வித ஆரவாரமுமின்றி “ முடிந்தவரை திரட்டிச் சேர்ப்பது”    ”இயன்றவரை கலப்பின்றி புழங்குவது” என்று சொல்லக்கூடிய நடைமுறை நேர்மை என்னை ஈர்த்தது. இது கடந்து இதில் இன்னும் பாலரது படைப்புகளையும் பார்க்க இயலும் என்பது இன்னும் கொஞ்சம் கூடுதலாக ஈர்த்தது.

இங்கிலாந்திலிருந்து திரு சக்தி தாசன் அவர்கள் தொடர்ந்து கடித வடிவத்தில் எழுதி வருகிறார். ஒவ்வொரு கடித்தத்திலும் இந்த மண்ணின் மீதான அவரது அக்கறையும் அதை காப்பதற்கான அவரது அரசியல் 
நிலைபாட்டையும் காண முடிகிறது.

இப்பொழுது இங்கிலாந்து சந்தித்து வரும் சூறாவளி, வெள்ளம், வரலாறு காணாத பனி இவற்றின் காரணமாக இங்கிலாந்து மக்கள் அனுபவிக்கும் துயர் இவை பற்றி அவரது 97 வது கடிதம் விவரிக்கிறது என்பதோடு இருந்திருப்பின் இதை ஒரு சாதாரண செய்திப் பதிவாக விட்டு விடலாம்.  அது கடந்து அதற்கான காரணங்களைத் தேடிப் பயணித்து வியர்த்து, குளிர் உறைந்து மூச்சடக்கி பந்தி வைப்பதுதான் சக்திதாசன் அவர்களது கடிதத்தைப் பற்றி பேச வைக்கிறது. ஏறத்தாழ 250 ஆண்டுகளாக இது போன்ற ஒரு இயற்கை சீர்கேட்டை இங்கிலாந்து பார்த்ததில்லை என்று கூறும் சக்திதாசன் “ polar vortex” என்கிற ஒருவிதமான இயற்கை மாறுதலே இதற்குக் காரணம் என்கிறார். இயற்கையோடு இயைந்து வாழாமல் அதை தன் இஷ்டத்திற்கு தாறுமாறாய் பயன்படுத்துவதே இத்தகைய கொடூரமான கேடுகளைக் கொண்டுவரும் மாறுதல்களுக்குக் காரணம் என்பதை வெகு பூடகமாக புரிய வைக்கிறார். நோய் முதல் நாடும் அவரது ஆளுமை அவரை நோக்கி நம்மை உந்தித் தள்ளுகிறது.

இமயமலையின் பனிப் படிமங்களின் மேல் ரிஃப்லக்டர் மாதிரி ஒரு படிமம் இருக்குமாம். அதுதான்  ஒளியையும் வெப்பத்தையும் பனிப் படிமத்தைத் தாக்கிவிடாமல் திரும்ப ஒளிரச் செய்து பாதுக்காக்கிறது என்று வாசித்திருக்கிறேன். இமயமலையையும் இப்போது தாறுமாறாகத்தானே நாம் பயன்படுத்தி வருகிறோம். அதன் விளைவாக அந்த ரிஃப்லக்டர் போன்ற படிமம் மாசுபட்டு அதன் விளைவாக வெப்பம் பனிப் படலத்தை வெகுவாகத் தாக்கத் தொடங்கி உள்ளதாகவும் எங்கோ வாசித்தேன். இந்தப் பனி படலம் வெப்பப் படுமானல் வெகு வேகமாக உருகத் தொடங்கும். அது பேரதிக இடர்பாடுகளை நமக்கு கொண்டு வந்து சேர்க்கும்.

இப்படியாக அந்த மண்ணில் நடந்த இயற்கை இடர்பாடு குறித்த ஒரு கடிதம் அது மாதிரி நமது பூமியில் நடப்பதற்கு வாய்ப்புள்ள ஒரு இடர்பாடு குறித்து நம்மை எச்சரிக்கிறது. இதுதான் கடித இலக்கியம். பொதுவாகவே மின்னனு உபயோகம் பெருகிவரும் சூழலில் கடிதங்கள் அருகிப் போயுள்ளன. அத்தகைய சூழலில் வல்லமை மாதிரி இணைய இதழ்கள் கடித இலக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. அதுவும் ஒரு மனிதனின் 97 கடிதங்களை இதுவரை பதிவேற்றியிருப்பது கடிதங்களின் மேலும் கடித இலக்கியத்தின் மேலும் அக்கறை கொண்டோர் யாவரும் பாராட்டவேண்டிய ஒரு விஷயம்.

பவள சங்கரி எழுதும் இதழின் தலையங்கங்கள் கவனத்திற்குரியவை. 24.01.2014 அன்று அவர் எழுதிய தலையங்கம் குவிக்கப்பட்ட கவனத்திற்குரியது. குழந்தைகள் என்றால் ஆண் குழந்தைகள் மட்டும்தானா? என்கிற ஒரு வினாவை மிக நேர்த்தியானதொரு பூடக மொழியில் பேசுகிறது அது. கடந்த 20 ஆண்டுகளில் ஏறத்தாழ ஒரு கோடி பெண் குழந்தைகள் கருவிலேயே கொல்லப் பட்டிருக்கிறார்கள் என்கிற ஒரு செய்தியை பவள சங்கரி தரும் போது உண்மையிலுமே அதிர்ந்து போகிறோம். கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்று கண்டறியும் சோதனைக்கு கடுமையான தண்டனை என்று சொல்லப்பாட்டு எல்லா மருத்துவ மனைகளிலும் ஸ்கேன் நிலையங்களும் விளம்பரித்து எச்சரிக்கை செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இப்படி என்றால் இத்தகையதொரு கடுமையான சட்டம் இல்லை என்றால் இந்த எண்ணிக்கை எங்கு போய் நின்றிருக்கும்?

ஆண் பெண் விகிதாச்சாரம் இயற்கைக்கு மாறாக வேறுபட்டால் அது சமூகத்தில் பல்வேறு விதமான கேடுகளுக்கு வழிவகுக்கும் என்பதை அக்கையோடு சொல்லும் வலையாக இருக்கிறது வல்லமை.

பேராசிரியர் இ. அண்ணாஅமலை அவர்களது மொழியியல் மற்றும் ஒலியியல் சார்ந்த பதிவுகள் மிகவும் நுட்பமானவை. ஆங்கிலத்தை unphonetic language என்று சொல்வோம்.44 ஒலி வடிவங்களை எழுத்தில் வார்க்க வெறும் 26 எழுத்துக்களே இருப்பதுதான் இதற்கு காரணம். ஆனால் தமிழில் எந்த ஒரு ஒலிக்கும் அதற்கான எழுத்து இருப்பதாகவே நினைத்து வந்தோம். ஆனாலும் ஜ, ஷ, கங்கைக்கு வரும் க ஒலி போன்ற ஒலிகளின் தேவை தமிழில் இருப்பதாகவே உணர்ந்தோம். ஆனால் எழுத்துத் தமிழும் பேச்சுத் தமிழும் வேறு வேறு மொழிகளா என்கிற அவரது ஆய்வு மொழி குறித்த அக்கறை கொண்ட அனைவருக்கும் கொண்டு போய் சேர்க்கப் பட வேண்டியதாகும்.

பெண்ணியம், மொழி, கல்வி, ஆன்மீகம், உலகமயம், சாதி, வரலாறு அரசியல், குழந்தைகள் என அத்தனை விஷயங்களையும் அலசும் ஒரு வலை வல்லமை.

அவசியம் பாருங்கள்,

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...