”இம்மைக்குச் செய்தது
மறுமைக்கு ஆம் எனும்
அறவிலை வணிகன்
ஆ அய் அல்லன்;
பிறரும்
சான்றோர் சென்ற நெறியென,
ஆங்குப் பட்டன்று
அவன் கைவண்மையே.”
என்கிறது ஏணிச்சேரி முடமோசியார் என்பவர் எழுதிய புறநானூற்றுப் பாடல்.
இப்பிறவியில் நல்லது செய்தால் தனது மரணத்திற்குப் பிறகு இறைவனது கருணை கிடைக்கும் என்பதற்காக எந்த நல்லதையும் செய்பவன் அல்ல ஆய் ஆண்டிரன். அந்தக் கணத்தில் அவனுக்கு எது நல்லது எனப் படுகிறதோ அதைச் செய்பவன் அவன் என்பது இதன் பொருள்.
இது எந்த அளவிற்கு ஆய் ஆண்டிரனுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ இந்திய இடதுசாரிகளுக்கு முற்றாக முழுதாகப் பொருந்துகிறது. எதையும் எதிர்பார்க்காமல் அந்தப் புள்ளியில் மக்களுக்கு எது அவசியமோ அதைச் செய்துவிட்டு கடந்து போய்விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் அவர்கள்.
அந்த சங்க காலத்து தலைவன் ஆய் ஆண்டிரன் குறித்து நல்ல வாய்ப்பாக ஏணிச்சேரி முடமோசியார் ஆவணப்படுத்தி வைத்திருக்கிறார். இந்திய இடதுசாரிகள் செய்வதை பயனாளிகளுக்கே இவர்கள் கடத்தத் தவறுகிறார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் உரையாளரான வெற்றிகொண்டான் அவர்கள் ஒருமுறை அவருக்கே உரிய நக்கலோடு இதுகுறித்து ஒரு கூட்டத்தில் பேசும்போது
“ஊர்ல நாலே நாலு கம்யூனிஸ்ட் இருப்பான். பக்கத்து ஊர்ல இருக்குற அவங்க ஆளுங்க ஆறு பேரக் கூட்டிட்டு வந்து இந்த ஊர்ல தண்ணீர்க் குழாய் இல்லன்னு போராடுவான்.
குழாய் வந்துடும். நாங்கதான் கொண்டு வந்தோம்னு கூட்டம் போட்டு பேச மாட்டான். அடுத்த ஊர்ல ரோடு சரியில்லன்னு அவிங்களோடு சேர்ந்து போராடப் போயிடுவான்.
ஏண்டா இப்படின்னு கேட்டா, ’பெத்த தாய்க்கு சேலை எடுத்துக் கொடுத்துட்டு, அத போஸ்டர் அடிச்செல்லாம் ஒட்டக் கூடாது தோழர்னு நமக்கு க்ளாஸ் எடுக்க ஆரம்பிச்சுடுவான்’ என்று கூறினார்.
பெரும்பாலும் அதுதான் உண்மை.
தேர்தல் களம் மோடியில் ஆரம்பித்து ஒரு புள்ளியில் சட்டென ராகுல் பக்கம் திரும்பி அப்படியும் இப்படியுமாக சூடேறி நகர்கிறதே. இதில் உங்களது கட்சியின் பங்கெதுவும் இருப்பதாகத் தெரியவில்லையேப்பா என்று கேட்கிறான் பிள்ளை ஒருவன்.
எப்போது களம் மாறி சூடு பிடித்துத் திரும்பியது என்று கேட்கிறேன்.
தேர்தல் நிதிப் பத்திரங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் தலையிட்ட பிறகுதான் தேர்தல் களம் மாறியது என்கிற புரிதல் அந்தப் பிள்ளைக்கு இருக்கிறது.
தேர்தல் நிதிப் பத்திரம் குறித்த மசோதா வந்தபோது அதை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மிகக் கடுமையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்தது. ’நம்பர் சூத்திரம்’ இந்தக் கண்டனக் குரலை நசுக்கி ஒன்றும் இல்லாததாக செய்து விட்டது.
உடனே அந்தக் கட்சி தேர்தல் நிதிப் பத்திரங்கள் குறித்த கீழ்க்காணும் விவரங்களை பொதுவில் வைக்க உத்திரவிட வேண்டும் என்று வழக்குப் போடுகிறது.
1) தேர்தல் பத்திரம் யாரால் வாங்கப் பட்டது
2) யாருக்கு வழங்கப் பட்டது
3) எவ்வளவு தொகைக்கு வாங்கப் பட்டது
4) எப்போது வாங்கப் பட்டது
இந்த வழக்கு கிணற்றில் போடப்பட்ட கல்லாகவே கிடந்தது. மிகச் சரியான நேரத்தில் அதை நீதியரசர் சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச்.விசாரனைக்கு எடுக்கிறது. ஒன்றிய அரசும் பாரத ஸ்டேட் வங்கியும் முடிந்த வரைக்கும் நீர்த்துப் போக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றை எல்லாம் செய்து பார்த்தன.
இந்த விசாரனையும், ஒன்றிய அரசின் சால்ஜாப்புகளும், நீதிமன்றத்தின் கிடுக்கிப் பிடியும் மக்களின் கவனத்தை ஈர்க்கின்றன. அப்போதுதான் “தேர்தல் நிதிப் பத்திரம்” என்றால் என்ன என்பது மக்களுக்குப் புரிய ஆரம்பிக்கிறது.
ஒரு வழியாக, பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் நிதிப் பத்திரங்கள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்திற்குத் தருகிறது. தேர்தல் ஆணையம் அதைத் தனது அதிகாரப் பூர்வ வலை தளத்தில் வைக்கிறது.
அதைப் பார்த்ததும் மக்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். தேர்தல் களம் சூடு பிடிக்கிறது.
இப்படியாக தேர்தல் களத்தை சூடுபடுத்தி அதன் திசையை மாற்றிய அந்த வழக்கைப் போட்டது இடது சாரிகள். அந்த வகையில் தேர்தல் களம் இப்படியாக தனது போக்கை மாற்றிக் கொண்டதற்கு காரணம் இடதுசாரிகள், அதிலும் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
ஆச்சரியத்தின் உச்சிக்குப் போன அந்தப் பிள்ளை, “இதை ஏன் ஒரு பாவ ரகசியத்தைப் போல யாருக்கும் தெரியாமல் பாதுகாக்கிறீர்கள்?” என்று கேட்கிறான்.
அந்தக் கேள்வி என்னை பளேரென்று கன்னத்தில் அறைகிறது.
இந்தத் தேர்தல் களத்தில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பேசுபொருளாக இருந்தவற்றுள் பில்கின்ஸ் பானு வழக்கும் ஒன்று. அந்த வழக்கிலும் இடதுசாரிகளின் பங்கு இருக்கிறது என்பது பெரும்பான்மை இடதுசாரிகளே அறிந்திராதது என்பதுதான் துயரம்.
பில்கின்ஸ் பானுவிற்கு நடந்த கொடுமை நமக்குத் தெரியும். அதற்கு எதிராக அந்தப் பெண் தொடர கொடியவர்கள் அனைவரும் சிறைக்குப் போகிறார்கள். அவர்களை இந்திய சுதந்திரத்தின் எழுபத்தி ஐந்தாவது விடுதலை நாளின் பொருட்டு விடுதலை செய்கிறார்கள்.
அதற்கு எதிராக வழக்குத் தொடரப் படுகிறது. அவர்கள் மீண்டும் சிறைக்குப் போகிறார்கள். இதுவரை அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்தக் கொடியவர்களின் விடுதலையை எதிர்த்து நீதிமன்றத்தின் கதவைத் தட்டியது தோழர் சுபாஷன் அலி என்ற மர்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர் என்பது நமக்கேத் தெரியாது.
அந்தக் கயவர்கள் விடுதலை செய்யப்பட்டது பில்கின்ஸ் பானுவை துயருறச் செய்கிறது. அதுவும் அவர்கள் உயர்குடியில் பிறந்தவர்கள். எனவே அந்தத் தவறை அவர்கள் செய்திருக்க வாய்ப்பில்லை என்று அதற்கான காரணம் சொல்லப்பட்டபோது அந்தப் பெண் நார் நாராகக் கிழிந்து போனாள்.
அவர்களது விடுதலைக்குப் பிறகு பத்திரிக்கையாளர்கள் பில்கின்ஸ் பானுவை சந்தித்து அவர்களது விடுதலைக்கு எதிராக நீதிமன்றம் போகவில்லையா என்று கேட்கிறார்கள்.
இல்லை என்கிறார். தனக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராகத் தானேதான் போராட வேண்டுமா. இந்த அநீதியைத் தங்களுக்கு ஏற்பட்ட அநீதியாக யாரும் உணரவே மாட்டார்களா என்று கேட்கிறாள்
இதை அறிந்த தோழர் சுபாஷன் அலி அந்தக் கயவர்களின் விடுதலைக்கு எதிராக நீதிமன்றம் போகிறார். உடனே சுபாஷன் அலியின் வழக்கில் தன்னை இணைத்துக் கொள்கிறார் பில்கின்ஸ் பானு.
அவர்களது விடுதலைக்கு எதிராக வழக்கெல்லாம் போட மாட்டேன் என்று கூறிய பானு எதற்காகத் தன்னை சுபாஷன் அலியின் வழக்கில் இணைத்துக் கொண்டார் என்பது புரியாமலே இருந்தது.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயர்க்குழு உறுப்பினர் தோழர் கனகராஜ் ஒரு கூட்டத்தில் இதற்கான காரணத்தைத் தெளிவு படுத்தினார்.
சுபாஷன் அலி பிராதான வழக்கில் எந்த இடத்திலும் இல்லை என்பதைக் காரணம் காட்டி இந்த வழக்கைத் தள்ளுபடி செய்துவிடக் கூடாது என்பதற்காகத் தன்னை இந்த வழக்கில் இணைத்துக் கொண்டாராம் பில்கின்ஸ் பானு.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்தத் தேர்தல் களத்தில் “கச்சத் தீவு” பிரச்சினையைக் கயில் எடுத்து விளையாட முயற்சி செய்தது பாரதிய ஜனதாக் கட்சி.
கச்சத் தீவு குறித்து அண்ணாமலையோ அவரது ஏற்பாட்டின்படி யாரோ ஒருவரோ தகவல் அறியும் சட்டத்தின் வழியாகத் தகவல் கோரியதாகவும்,
கச்சத் தீவை இலங்கைக்குத் தாரை வார்த்தது கலைஞரும் இந்திராவும்தான் என்றும் கூறி ஒரு நாடகத்தைத் தொடங்குகிறார்கள்.
அந்தத் தகவலே போலியானது என்பதை தகவல் அறியும் சட்டத்தின் வழியாகவே தகவலைப் பெற்று நிறுவுகிறார்கள் எதிர்க் கட்சியினர்.
அதுமட்டும் அல்ல, ஒன்றிய அரசின் பல முறைகேடுகளை தகவல் அறியும் சட்டத்தின் உதவி கொண்டுதான் நம்மால் அம்பலப் படுத்தவே முடிந்தது.
சமீபத்தில் உள்துறை அமைச்சகத்திலும் வருமானவரித் துறை அலுவலகத்திலும் கோப்புகள் எரிந்தன. இத்தனைப் பாதுகாப்பான இந்த அலுவலகங்களில் தீ விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார்கள். பிறகு எப்படி இது நடந்தது.
இந்த தீ விபத்து எப்படி நடந்தது என்பதற்கு பதில் ஏன் நடந்தது எனக் கேட்பது சரியாக இருக்கும்.
ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என்ற பயம் அவர்களுக்கு வந்திருக்கிறது. தகவல் அறியும் சட்டத்தின் வழி அப்போது தகவல்கள் கோரப்படலாம். அதன் மூலம் தங்களது ஊழல்களும் முறைகேடுகளும் வெளி வரலாம். அதன் மூலம் தாங்கள் சிறைக்குப் போக நேரிடலாம். இவற்றில் இருந்து சம்பந்தப்பட்டவர்கள் தப்பித்துக் கொள்வதற்காகக்கூட இந்த அலுவலகங்களுக்கு தீ வந்திருக்கலாம். இன்னும் சில அலுவலகங்களுக்கும் இந்த தீ விருந்து சாப்பிடப் போகலாம் என்கிறார்கள்.
இத்தகைய பலம் வாய்ந்த, மேட்டிமை த்வாய்ந்த அமித் ஷாவும் நிர்மலா மேடமுமே பயப்படக்கூடிய இந்தச் சட்டத்திற்காகப் போராடி அன்றைக்கு இருந்த தனது நம்பர் பலத்தின் காரணமாக அரசைக் கொண்டுவர வைத்தது இடதுசாரிகள்.
விவசாயிகளும் கூலித் தொழிலாளிகளும் லட்சக் கணக்கில் தற்கொலை செய்து கொண்டிருந்தபோது “இந்தியா ஒளிருகிறது” என்று கோடிக்கணக்கான செலவில் விளம்பரங்களைச் செய்து கொண்டிருந்தது Right man in the wrong party வாஜ்பாய் அரசு.
அதன் பிறகும் அது தொடரவே அந்த எளிய மக்களை தற்கொலையில் இருந்து தடுக்க 100 நாள் வேலைத் திட்டத்தைக் கோருகிறது இடதுசாரி இயக்கம்.
மன்மோகன்சிங் அரசு தயங்குகிறது. விடாது போராடுகிறார்கள். சோனியா அவர்களுக்கு இந்த வலி புரிகிறது. தலையிட்டு நூறு நாள் வேலைத் திட்டத்தைக் கொண்டு வருகிறார்கள்.
சோனியா அவர்களின் தலையீடு இல்லாமல் இது நிகழ்ந்து இருக்காது. அவர் போற்றுதலுக்கு உரியவர். இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்ததற்காக காங்கிரஸ் கட்சியும் போற்றப்பட வேண்டியதே.
ஆனால், இதைக் கொண்டு வருவதற்காகப் போராடிய இயக்கம் இடதுசாரி இயக்கம் என்பதை இடதுசாரித் தோழர்களிடமாவது குறைந்த பட்சம் கொண்டுபோய் சேர்க்க வேண்டாமா?
நூறுநாட்களுக்கு வேலை இல்லாவிட்டால் மக்கள் தற்கொலை செய்து கொள்வார்கள் என்ற அவல நிலையில் மக்களை காங்கிரஸ் ஆட்சி வைத்திருந்தது என்பதற்கான அடையாளம் இந்தத் திட்டம்.
ஆகவே இந்தத் திட்டத்தை எடுக்க மாட்டோம் என்று சொன்ன பாஜக அரசு இதை எடுக்க எத்தனையோ முறை முயற்சி செய்தது.
நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் இந்தத் திட்டத்தைக் காப்பாற்றுவதற்காகப் போராடியவர்கள் இடதுசாரிகள்.
நூறு நாள் வேலைத் திட்டம் தற்கொலைகளைப் பெருமளவு குறைத்திருக்கிறது என்றால் அதில் இடதுசாரிகளுக்கான பங்கும் உண்டு.
ஒன்று சொல்லி முடிக்கலாம்,
செய்யாமல் இருப்பது மட்டுமல்ல, செய்ததை சொல்லாமல் இருப்பதும் குற்றம்தான்.
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்