Friday, May 21, 2010

பள்ளியெனும் பழக்காடு



வெள்ளக் கோவிலில் இருந்து மூலனூர் செல்லும் சாலையில் சுமார் பத்து கிலோ மீட்டர் பயணித்தால் அமராவதி ஆறு. அதன் பாலத்தைக் கடந்தவுடன் வலது பக்கமாக திரும்பும் சற்றே குறுகலான சாலையில் மூன்று நான்கு கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளாகவே இருக்கிறது பட்டத்திப் பாளையம்.

பேருந்துகளே வராத அந்தக் கிராமத்தில் திரும்பிய திசைகளிலெல்லாம், பார்க்கிற இடமெல்லாம் வண்ண வண்ணமாய், அழகாய், நேர்த்தியாய் அன்றைய நிகழ்ச்சிக்கான சுவரொட்டிகள் மற்றும் விளம்பரத் தட்டிகள். நிகழ்விடம் வரைக்கும் சாலையின் இரு மருங்கும் கம்புகளை ஊன்றி குழல் விளக்குகளை எரிய விட்டிருந்தார்கள். அறுபது எழுபது இரு சக்கர வாகனங்கள் ஒழுங்கான வரிசையில் நிறுத்தப் பட்டிருந்தன. ஏழெட்டு கார்கள் ஓரமாய் ஒழுங்காய் நிறுத்தப்பட்டிருக்க அந்த சின்னப் பாதையில் மாட்டு வண்டிகளும் டிராக்டர்களும் எந்த வித இடயூருமின்றி பயணித்தன

கம்பீரமான பெரிய மேடை. மேடையின் முதுகு சுவராய் நிகழ்வுகளை சொல்லும் கலையழகு பொங்கிக் கசியும் வண்ண பேனர். நன்கு தண்ணீர் தெளிக்கப் பட்டு மண் வாசனை கமழும் திடலில் முன்னூருக்கு குறையாத எண்ணிக்கையில் நாற்காலிகள் போடப் பட்டிருந்தன. காம்பௌண்ட் வாசலில் நின்று வருபவர்களை கைகூப்பி வணங்கி குங்குமம் சந்தனம் கல்கண்டு கொடுத்து புன்னகையோடு ஒரு குழு வரவேற்றார்கள். வந்த அணைவருக்கும் சுண்டலும் தேனீரும் ஒரு குழு வழங்க இன்னொரு குழு காலி காகித தட்டுகளையும் குப்பிகளையும் சேகரித்து தொட்டிகளில் போட்டுக் கொண்டிருந்தார்கள்

ஒரு கலை இரவுக்குரிய அத்தனை தயாரிப்புகளோடும் அம்சங்களோடும் நகர்ந்து கொண்டிருந்த விழா ஒரு தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா என்றால் வியப்பாய்தான் இருக்கும். இருபத்தி மூன்றே குழந்தைகள், அதிலும் பெரும்பகுதி முதல் தலைமுறை குழந்தைகள் படிக்கும் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியின் ஆண்டு விழா என்பது வியப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றுவிடும்.

"நீங்க படித்த பள்ளிதானே, சார்? காலையிலிருந்து வேட்டியோடு வந்து பிள்ளைகளோடு பிள்ளைகளாய் தரையில் அமர்ந்து ஒவ்வொரு விஷயத்தையும் கூர்மையாய் கவனித்து கொடி ஒட்டி, நிகழ்ச்சிதொடங்கும் முன் அவசர அவசரமாய் வீடு போய் குளித்து உடை மாற்றிக் கொண்டு குடும்பத்தோடு வந்திருந்த பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குனர் கார்மேகம் அவர்களை கேட்டபோது சொன்னார் "அப்படி இல்ல எட்வின், என்னை மனுஷனா செதுக்கிய பள்ளி"


ஒரு நாள் நள்ளிரவுக்கு கொஞ்சம் முந்தி செல் ஒலித்தது. ஒன்று விஷ்ணுபுரம் சரவணனாக இருக்க வேண்டும் அல்லது கார்மேகம் சாராக இருக்க வேண்டும். கணிணியிலிருந்து சன்னமாய் விலகி செல்லை எடுத்தால் சார்தான்.

"எங்க கிராமத்துல நான் படித்த துவக்கப் பள்ளியில் ஆண்டு விழா. ஒரு நல்ல நாடகக் கலைஞன் வேண்டும். அவர் மேடையை விட்டு இறங்கும் வரைக்கும் குழந்தைகள் கொண்டாடிக் குதூகலித்து கூத்தாட வேண்டும்." "பிள்ளை பிடிக்கிற குழந்தைகளுக்கான கலைஞன் இருக்கான். மேடையை விட்டு அவன் இறங்கும்போது பிள்ளைகள் அவனோடே கிளம்பத் தயாராகி விடுவார்கள். ஆனால் அவனும் அவனது குழுவும் பாண்டியிலிருந்து வரணுமே சார்"

"அது ஒரு பிரச்சினையே இல்ல எட்வின். பாத்துக்கலாம்,குழந்தைங்க கல கலன்னு சந்தோசமா இருக்கனும் அவ்ளோதான். ஆமாம் யாரு?"

"பாண்டியிலிருந்து வேலு சரவணன் ."

"ஓஓஓ தெரியும் தெரியும், 'மக்கள் தொலைக் காட்சியில்' வருவாரே அவர்தானே? இந்தக் கிராமத்துக்கெல்லாம் வருவாரா?"

"வருவார்."

"அப்ப பேசிடுங்க"

அப்படியாகப் பேசிக் கூட்டி வரப்பட்ட வேலு சரவணன் உள்ளே ஒப்பனை செய்து கொண்டிருந்த போதுதான் நானும் சாரும் வேலு சரவணனை எப்போது மேடை ஏற்றுவது, மேடையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன என்பது குறித்தும் பேசிக் கொண்டிருந்தோம். அந்த நேரம் பார்த்து நீர் முட்டவே கழிவறை எங்கிருக்கிறது என்று சாரிடம் எப்படிக் கேட்பது என்று தயங்கி நெளிவதை புரிந்து கொண்ட சார் என்ன பிரச்சினை என்றார். தயங்கித் தயங்கி ஒரு வழியாய் சொல்லவும் "இதுக்குத்தானா இவ்வளவு தயக்கம்?" என்றவர் "நாம் இப்போது நிற்பதே கழிவறைதானே" என்றார்.

புடனியில் அரை வாங்கியது போல் இருந்தது. ஏறத்தாழ அரைமணி நேரமாக அங்குதான் நின்று பேசிக் கொண்டிருக்கிறோம். கழிவறை என்பதற்கான அறிகுறியயே இல்லை. அங்கு நின்று கொண்டுதான் தேநீர் குடித்திருக்கிறேன். அவ்வளவு சுத்தம். மூக்கைப் பிடிக்காமல், முகத்தை சுளிக்காமல் அதற்குப் பிறகும் அங்கு நின்றுதான் பேசிக் கொண்டிருந்தோம்.

பெரிய பெரிய பள்ளிகளில், வெளிப்படையாக பேசி விடுவதெனில் கோடீஸ்வரக் குழந்தைகள் கொட்டி அழுது படிக்கும் தனியார் சர்வதேசப் பள்ளிகளில் காணக் கிடைக்காத சுத்தம், உள்மறைந்து கிடக்கும் ஒரு சிற்றூரில், ஏழைக் குழந்தைகளே பெருமளவு படிக்கும் ஒரு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் கழிவறையில் எப்படி சாத்தியம்?


கேட்டே விட்டேன்.

"நம்ம பள்ளிக் கூடம்"ங்கிற அக்கறையும் அர்ப்பணிப்பும் அதோடு கொஞ்சம் திட்டமிடலும் இருந்தா எல்லாமே சாத்தியம்தான் சார்," சொல்லிக்கொண்டே மேடையிலிருந்து கீழே இறங்க வேண்டிய குழந்தையை இறக்கி விட நகர்ந்துவிட்டார் அந்தப் பள்ளியின் உதவி ஆசிரியர் திரு. பொன்.ராஜ்

வேலு சரவணன் தயாரா எனப் பார்க்கலாம் என உள்ளே நுழைந்தால் ... இத்தனையா? எத்தனை என்று எண்ணிதான் பார்த்து விடுவோமே என்று எண்ணிப் பார்த்தால் ஒன்பது கணிணிகள் ஒவ்வொன்றும் தனித் தனியே யூ பீ எஸ் உடன் இணைக்கப்பட்டு. ஆச்சரியம் கண்களிலிருந்து முழுதாய் கழன்று போவதற்கு முன்னமே மேடையில் இன்னொன்று. ஆண்டறிக்கையை மூன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு பையன் வாசிக்க ஆரம்பித்து இருந்தான். ஒரு ஸ்டூலில் அவனை ஏற்றி ஃபுல் ஃபிட் ஸ்டேண்டிற்கு அவனை சமப் படுத்தி இருந்தார்கள். இந்த வேலை எவ்வளவு கடினம் என்பது பல பள்ளிகளில் "வேண்டாம் விடுங்கப்பா" என்று பாய்ந்து ஓடும் ஆசிரியர்களின் வேகத்தைப் பார்த்தாலே புரியும். எந்தப் பயமும் இன்றி பொடிசு சும்மா பிரித்து மேய்ந்து கொண்டிருந்தான். ஒவ்வொரு விஷயமாய் அவன் முடிக்கும் போதும் யுவராஜின் "ஆறு"கள் கண்டு கொந்தளிக்கும் ரசிகர்களைப் போல் கூடியிருந்த கூட்டம் ஆர்ப்பரித்தது.

"ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளுக்கு அமெரிக்காவில் உள்ளது போல் மலர்களின் பெயரை சூட்டுங்கள்." தங்கள் குழந்தையின் நியாயமான கோரிக்கையை மக்கள் மிக நீண்ட கரவொலியால் ஆமோதிக்கிறார்கள். ஆபத்தான விஷயங்களில் எல்லாம் ஒன்...டூ...த்ரீ என்று எல்லா எதிர்ப்புகளையும் மீறி அமெரிக்காவை பின் பற்றும் அரசியல் வாதிகள் பிஞ்சுகளின் கோரிக்கையை அமல் படுத்த வேண்டும்.

"எங்கள் பெற்றோர்களும் பெரியோர்களும் கேஸ் அடுப்பு வாங்கித் தந்து ஈர விறகோடும் புகையோடும் அல்லல் படும் லட்சுமி அக்காவை காப்பாற்ற வேண்டுமாய்" அவன் சொன்ன போதும் அனைவரும் ஆர்ப்பரித்தனர். நாடு முழுவதும் சத்துணவு சமையல் கூடங்களில் அம்மாக்களும் , அக்காக்களும் ஈர விறகோடும் புகையோடும் படும் அல்லல்களுக்கு ஒரு விடிவு கிடைக்காதா என்ற ஏக்கத்தோடும் எதிர்பார்ப்போடும் நாமும் கை தட்டினோம்.

பரிசளிப்பின் போது நாங்கள் வியப்பின் எல்லை தாண்டினோம். ஒவ்வொரு குழந்தையும் ஐந்தாறு பரிசுகளாவது அள்ளிச் சென்றனர். ஒவ்வொரு குழந்தையும் ஒன்று அல்லது இரண்டு முதல் பரிசுகளாவது வாங்கினர்.


எங்களது வியப்பை துடைக்க முன் வந்தார் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி.கலைச்செல்வி." கொஞ்சம் மாத்தி யோசிச்சா வழி பிறக்கும். எல்லாரும் போட்டிய வச்சுட்டு யாரு முதல் பரிசு என்று தீர்மானிப்பார்கள். நாங்க இந்தப் புள்ள முத பரிசு வாங்க என்ன போட்டி வைக்கலாம்னு யோசிச்சோம். பலன் கிடச்சுது."

"எதுக்குமே லாயக்கு இல்லாத.."

முடிக்க விடாமல் வேக வேகமாய் இடை மறித்தார்கள் " அப்படி யாரும் உலகத்துல இல்லீங்க சார். ஒவ்வொருத்தனுக்குள்ளேயும் ஒரு திறமை இருக்கு. உடுக்கு அடிக்கிறது அல்லது ஓணான் பிடிக்கிறது. இப்படி அவனுக்கு தோதான ஏதாவது ஒன்னு வச்சு அவன பரிசு வாங்க மேடை ஏத்திடுவோம்"
ஆசிரியர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கல்வி இயக்குனர் திரு.இளங்கோவன் தான் பார்த்த மிக நல்ல பள்ளி இது என்றும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முன் வர வேண்டும் என்றும் மிக சரியான வேண்டுகோளை முன் வைத்தார்.

வந்திருந்த அணைவருக்கும் பொங்கல், பூரி, தோசை, கம்மங்கூழ், இனிப்பு என விருந்து. கூலித் தொழிலாளி முதல் பெரிய செல்வந்தர் வரை அணைவரும் ஒன்றாய் சாப்பிட்டு விட்டுதான் சென்றனர். நிதி மற்றும் அணைத்தும் எப்படி சாத்தியப் படுகிறது?

"கோயில் திருவிழாவுக்கு மாதிரியே ஊர்க்காரங்க பூராம் ரெண்டு வாரத்துக்கு நேரங் கிடைக்கறப்ப எல்லாம் இங்கேயே தானே கிடந்து உழலுவோம்" பரிமளம் கூற்றில் கிடைத்தது வெற்றியின் ரகசியம்.

எத்தனையோ பள்ளிகளுக்கு தான் சென்றிருப்பதாகவும் இது போன்ற ஒரு பள்ளியை இப்போதுதான் முதன்முறையாக பார்ப்பதாகவும் , தன் வாழ் நாள் முழுக்க மறக்க முடியாத பள்ளியென்றும் வேலு சரவணன் சொன்னார்.

நன்றியுரை சொல்ல வந்த குழந்தை சொன்னாள்
"ஊரோரம் கிளிக்காடு
ஒவ்வொன்றும் பஞ்சவர்ணம்
பஞ்ச வர்ண கிளி உறங்க
பழத்தாலே கூடு செஞ்சோம்"

தங்கள் குழந்தைகளுக்காக அரசாங்கம் கட்டிக் கொடுத்த பள்ளிக் கூடத்தை பழக் கூடாக மாற்றி , நாடு முழுமையும் சுமை தூக்கிகளாகவே பிள்ளைகள் இருக்கையில் தங்கள் பிள்ளைகளுக்கு சிறகு கட்டி பறக்க வைத்து அழகு பார்க்கிறார்கள் ஊர்க் காரர்களும் ஆசிரியர்களும்.

நானும், வேலு சரவணனும், விஷ்ணுபுரம் சரவணனும் அழ்தப் பள்ளியை பற்றியே அசை போட்டுக் கொண்டு வந்தோம்

கல்வியும் மருத்துவமும் பொதுப்பட வேண்டும். தமிழ் நாட்டில் தோராயமாக 34500 ஊ.ஒ.துவக்கப் பள்ளிகளும், 10000 ஊ.ஒ.நடுநிலைப் பள்ளிகளும், 4500 அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. எழுபது சதம் மாணவர்கள் இவற்றிலும் . பத்து சதம் மாணவர்கள் அரசு உதவி பெரும் தனியார் பள்ளிகளிலும் படிக்கிறார்கள். இந்த பள்ளிகள் எல்லாம் பட்டத்திப் பாளையம் பள்ளியைப் போல் பழக்காடுகளாக மாறிவிட்டால் பொதுக் கல்வி தானாய் வெற்றி பெரும்.

என்ன செய்யலாம்?
நன்றி: "கல்கி" ( இதன் பெரும்பகுதி கல்கியில் வெளியானது)

Sunday, May 9, 2010

உயிர்த்தெழுகை



எவ்வளவுதான் இனிமையாக ஒலித்தாலும் இப்போதெல்லாம் அலை பேசியின் அழைப்பொலியினை ரசிக்க முடிவதில்லை . எந்தக் கடன்காரனோ, எப்படித்திட்டப் போகிறானோ, என்ன சொல்லி சமாளிக்கப் போகிறோமோ என்று மனதுகிடந்து பதை பதைக்கிறது.
அழைப்பொலி கேட்டவுடன் எண்ணைப் பார்க்காமல் அலை பேசியை எடுத்து யாராவது பேசினால் ஒன்று அவன் கடனற்றவனாக இருக்க வேண்டும் அல்லது எதற்கும் பயப்படாதவனாக இருக்க வேண்டும்.
"அப்பா குளிக்கிறாங்க", "அப்பா செல்ல வச்சிட்டுப் போய்ட்டாங்க" இப்படி ஏதாவது சொல்லி கடன் காரர்களை சமாளிக்கப் பழக்கியிருக்கிறேன் பிள்ளைகளை.
"அம்மா, கடங்காரங்களுக்கு பயந்துகிட்டு அப்பா இருபத்தி நாலு மணி நேரமும் குளிச்சுகிட்டே இருக்கப் போறார், வேணாப் பாரேன்" பையனின் எள்ளல்இப்போதெல்லாம் எல்லையைத் தாண்டினாலும் இனிக்கவே செய்கிறது. ரசிக்கக் கற்றுக் கொண்டு விட்டேன். கடன் ரசனையை மெருகு செய்திருக்கிறது.
பேப்பர்காரனுக்கு நான்கு மாத பாக்கி. காலையில் அவன் வரும் நேரம் பார்த்து டாய்லெட்டில் நுழைந்து கொள்வேன். இன்னும் மூன்றுதெருக்களாவது போக வேண்டும் அவன். எனவே எனக்காக அவனால் காத்திருக்கஇயலாது. " சாரக் கொஞ்சம் கவனிக்க சொல்லுங்க" என்றபடி ஓடி விடுவான். இன்றுகாலை வரை இதுதான் வாடிக்கை.
சனிக் கிழமைகளில் நான் வீட்டில்தான் இருப்பேன் என்பதை தெரிந்துகொண்டு அன்று மதியம் வீட்டிற்கு வந்து விட்டான். ஏறத்தாழ விடாக் கண்டனாய்மாறியிருந்தான். என்ன சொல்லியும் நகர மறுத்தான். " அக்காட்ட இருக்கும் கொஞ்சம் வாங்கிக் கொடுங்க சார். இல்லாட்டி மேல் வீட்டிலாச்சும்கொஞ்சம் கேட்டு வாங்கிக் கொடுங்க சார்." என்று நச்சிக் கொண்டே நகர மறுத்தான்.
இந்த நேரம் பார்த்து உதவுகிறோம் என்று தெரியாமலேயே சரியாய் உதவிக்கு வந்தான் பையன். " அப்பா அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வுன்னு "ப்ளாஷ்"ஓடுது, வந்து பாரேன்.
"அடுத்த புதன் வந்து வாங்கிக்கப்பா" பட படவென்று சொல்லிட்டு "ப்ளாஷ்"பார்க்கிற சாக்கில் உள்ளே ஓடினேன். போனானோ இல்லை அங்கேயே நின்றுமுனகிக் கொண்டிருக்கிறானோ தெரியவில்லை.
அக விலைப்படி எட்டு சதவிதம் உயர்த்தப் பட்டிருப்பதாய் "ப்ளாஷ்"ஷில்ஓடிக் கொண்டிருந்தது. "டிஏ போட்டாச்சு. வந்து பாரேன் "விட்டு" உற்சாகத்தில் கத்தினேன்.
"என்ன வந்து என்னத்துக்கு ஆகப் போகுது. வானத்தையே வளச்சுக் கொடுத்தாலும் அடகு வச்ச தாலிக் கொடிய மட்டும் திருப்பித் தரப் போறதில்ல. கட்டைல போர வரைக்கும் இந்தக் கவரிங் செயினதான் கட்டிக்கிட்டு மாரடிக்கணும்னு ஆயிடுச்சு. பாசிப் படர்ந்த மாதிரி செயின்பட்ட இடமெல்லாம் பச்சப் பச்சையா , வெயில் நாளைல ஒரே எரிச்சலும் அரிப்பும்தான்... எல்லாம் என் தலை எழுத்து"
கூப்பிடக் கூடாத நேரத்தில் "விட்டு" வைக் கூப்பிட்டால் இப்படிவாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியதுதான். ஆனாலும் இது ஒன்றும் புதிதல்ல என்பதோடு இது மாதிரி வாங்கி கட்டிக் கொள்ளாத மத்திய தர புருஷன்மார்கள் இருப்பார்கள் எனில் ஒன்று அவர்களுக்கு வேறு வருமானம் இருக்கும் அல்லது "தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு" என்று சுறுங்கி போன ரகமாக இருக்க வேண்டும். விடுங்கள், என்ன சொல்லி என்ன,வாங்க வேண்டியதை வாங்கியாகி விட்டது.
அப்பொது பார்த்துதான் அலை பேசியில் கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்த மகள் "செல்வ பாண்டியன் மாமா லைன்ல இருக்காங்க. எங்க போயிருக்கீங்கன்னு சொல்லட்டும்?" என்று கத்திக் கொண்டே ஓடி வந்தாள் .
" வர வர குட்டிப் பிசாசுக்கு குசும்பு ஜாஸ்தியாயிடுச்சு" மகளின் நக்கலை ரசித்த படியே அவளிடமிருந்து அலை பேசியை பிடுங்கினேன்.

அவரது அழைப்புக்காகத்தான் காத்திருந்தேன். அப்பாவை ஒரு நல்ல மன நல மருத்துவரிடம் அழைத்துப் போக வேண்டி இருந்தது. ஒரு மாத காலமாகவேகொஞ்சம் கூடுதலான மன அழுத்தத்தோடு இருக்கிறார். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் செத்துப் போன எனது அம்மா உயிரோடு வந்திருப்பதாகவும் அப்பாவை தேடிக் கொண்டிருப்பதாகவும் அவரை ஒரு ஜோசியக் கும்பல் அவரை உசுப்பி விட்டு அவரது ஓய்வூதியத்தில் பெரும் பகுதியை காலி செய்திருந்தனர்.
தம்பிதான் இதை முதலில் கண்டு பிடித்தான். அந்தக் கும்பலை விரட்டி விட்டு அப்பாவை மீட்டெடுத்து வருவதற்குள் அப்பாவின் மன நிலை மருத்துவர்தேவைப் படுமளவிற்கு பழுது பட்டிருந்தது.
அம்மா படத்திலிருந்த மாலையை கழற்றினார். ஏனென்று கேட்டால் " அவ உயிரோட வந்துட்டாடா" என்றார். சரியாகி விடும் என்றெண்ணி கவனிக்காமல் விட்டதன் விளைவை அனுபவிக்கத் தொடங்கியிருந்தோம்.
சாலையில் ஏதேனும் ஆட்டோ சத்தம் கேட்டுவிட்டால்கூட போதும் அம்மாவாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்போடு எட்டிப் பார்க்க ஆரம் பித்தவர், நாளாக நாளாக பேரனை அழைத்து "தம்பி, அப்பாயிதானான்னு பாரு. அவளாயிருந்தா பையக் கொஞ்சம் தூக்கிட்டு வாடா பாவம்" என்று பிதற்றவே ஆரம்பித்து விட்டார்.
"அப்பாயி எங்க தாத்தா வெளிய போச்சு ஆட்டோல வரதுக்கு. அது பாட்டுக்குதோசை சுட்டுட்டு இருக்கு. பொலம்பாம தூங்கு தாத்தா" சலித்துக்கொள்கிறான் பையன்.
"இவள சொல்லலடா. ஒங்க பெரிய அப்பாயிய சொன்னேன்"
"அப்பாயி தாத்தாவ வந்து என்னன்னு கேளு. செத்துப் போன அப்பாயி கல்லறையிலிருந்து எழுந்து வருதாம். நீ கட்டிக்கிட்டதும் லூசு பெத்துப்போட்டதும் லூசு அப்பாயி"
" எம் மவன இன்னொருதரம் லூசுன்னு சொன்ன அப்படியே கொமட்லயே குத்திப் புடுவேன் ஆமா"
"மகன சொன்னதும் அப்படியே பொத்துக்கிட்டு வருது பார்டா ஒங்க அப்பாயிக்கு. தங்கமாமே, அப்படி கிப்படி தங்கமா இருந்தாதான் பரவாயில்லையே அப்படியே தூக்கிட்டுப் போய் அந்த அறுபது கிலோவையும் அடகு வச்சுட்டு அந்த அருமத் தங்கம் வாங்கிவச்சிருக்க கடனையெல்லாம் அடச்சிருக்கலாமே"
"ஏம்மா அடகெல்லாம் வச்சுகிட்டு. பேசாம வித்துட்டே செட்டிலாயிருக்கலாமே."பையன் முடிக்கவும் அம்மா உட்பட எல்லோரும் சத்தமாய் சிரிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
இப்படித்தான் அப்பாவை வார ஆரம்பித்து என்னில் வந்து முடியும் ஒவ்வொரு முறையும்.
செல்வ பாண்டியன் மருத்துவத் துறையில் இருப்பதால் அவரிடம் ஆலோசனை கேட்டிருந்தேன். அவருக்குத் தெரிந்த மருத்துவரிடம் நேரம் வாங்கிக் கொண்டுதெரிவிப்பதாக சொல்லியிருந்தார். அநேகமாக அதற்காகத்தானிருக்கும்.
அதற்கேதான்.
தான் மருத்துவர்.முருகன் கிளினிக்கில் இருப்பதாகவும், கிளினிக்கில் தற்போது கூட்டமே இல்லை என்றும் , ஆகவே இயலுமெனில் அப்பாவை உடனே அழைத்து வரும்படியும் சொன்னார்.
பி.பி செக் அப்பிற்கு என்று பொய் சொல்லி அப்பாவை அழைத்துக் கொண்டு கிளினிக்கிற்கு போனேன்.
கூட்டமில்லாத காரணத்தால் காத்திருக்கத் தேவையில்லாமல் போனது. மருத்துவரிடம் ஏற்கனவே செல்வபாண்டியன் எல்லாவற்றையும் சொல்லியிருந்தகாரணத்தால் மருத்துவரிடம் பேசவும் தேவையற்றுப் போனது.
ஒரு சன்னமான புன்னகையோடு அப்பாவை வரவேற்றார் மருத்துவர்.
"உங்க பிறந்த நாள் என்னங்க சார்?" என்ற எளிய கேள்வியோடுதான் மருத்துவர் தொடங்கினார்.
அப்பாவின் தெளிவும் தமிழ்த் தேசிய அரசியலும் மருத்துவரோடு ஒத்திசைந்து போகவே இருவரும் நண்பர்களாய் மாறி நிறைய பேசினார்கள். நானும் செல்வபாண்டியனும் பார்வையாளர்களாய் மாறிப் போனோம்.
இறுதியாய் அந்தக் கேள்வியைக் கேட்டார்.
"மரித்தவர்கள் உயிரோடு வர இயலும் என நம்புகிறீர்களா?"
"நிச்சயமாய் இல்லை" என்ற அப்பா "ஆனா என்னோட வொய்ப்பை மீண்டும் உயிரோடு பார்த்ததாய் சொல்கிறார்கள்" என்றார்.
மருத்துவர் எதுவுமே பேசவில்லை. " பண்டியன், சாரை பக்கத்து ரூமுக்கு கூட்டிட்டு போய் பி.பி செக் பண்னுங்க" என்றவர் ஒரு புன்னகையோடு அப்பாவைவழி அனுப்பி வைத்தார்.
எழுந்த என்னை அமரச் செய்தார்.
" ஒன்னும் பயப்பட வேண்டாம். ஆறு மாசத்துல எல்லாம் சரி ஆகிவிடும். தொடர்ந்து மாத்திரைகளை கொடுங்கள். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறைகூட்டிட்டு வாங்க. அதிகமா தூங்கினாலோ, அல்லது சரியா தூங்கலைன்னாலோ உடனே கூட்டிட்டு வந்திடுங்க."
ஒரு புன்னகையோடும் ஏராளமான நம்பிக்கையோடும் அப்பாவை அழைத்துக் கொண்டு வீடு வந்தேன்
அம்மாவிடமும் விட்டுவிடமும் விவரங்களை சொல்லி விட்டு வாங்கி வந்த வண்ண வண்ண மாத்திரைகளை டப்பாக்களில் கொட்டிக் கொண்டிருந்தேன். ஓடி வந்த மகள் கேட்டாள :
"இந்த மாத்திரை எதுக்குப்பா?"
"இது தாத்தாவுக்கு நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்?"
"இது?" அடுத்த மாத்திரையைக் காட்டினாள்.
"இது தாத்தாவுக்கு மன அமைதியையும் நிம்மதியையும் கொடுக்கும்"
" அப்படின்னா நீயும் சித்தப்பாவும் தாத்தாவுக்கு என்னத்ததான் கொடுப்பீங்க?"
நன்றி: கல்கி ( 16.05.2010)

Monday, May 3, 2010

தமிழிந்தியன்



மழலைத் தொண்ணூறுகளில் எனக்கு அவர் அறிமுகமானார். ஐம்பதுக்கும் அவருக்குமிடையில் ஓரிரு நாட்காட்டிகளே அநேகமாக மிச்சமிருந்திருக்க வேண்டும். "இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்" விலைவாசி உயர்வைக் கண்டித்து அறைகூவியிருந்த "சிறை நிறப்பும்" போராட்டத்தில்தான் அவரை முதன் முதலாய் சந்திக்கிறேன். சிறை செல்லும் தோழர்களை வாழ்த்திப்பேசி வழியனுப்பி வைக்க இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்ட இன்றைய செயற்குழுவின் உறுப்பினரும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மண்ணச்சநல்லூர் ஒன்றிய அன்றைய செயலாலருமான தோழர்.ஜெயசீலன் அழைத்திருந்தார்.

வாழ்த்தி முடித்ததும் முரட்டுக் கரமொன்று என் கரம் பற்றிக் குலுக்கியது. கைகளை உதற வேண்டும் போலிருந்தது. அவ்வளவு வலி. நமது பலவீனத்தை நாமே அம்பலப் படுத்தக் கூடாது என்ற எச்சரிக்கையோடும் ஒரு புன்னகையோடும் அவரை நிமிர்ந்து பார்க்கிறேன். வேட்டி, சட்டை, முண்டாசு எல்லாமே அழுக்கு. கனத்து சிரித்தும் அதைவிட அதிகமாய் குரலெடுத்தும் பேசுகிறார்

"மாரியம்மன் ஸ்கூல்லயா வேல பாக்குற?. ரொம்ப புடிச்சிருக்கு ஜெயில்ல இருந்து வந்ததும் உன்ன வந்து பாக்குறேன், வாத்தியாரே"

"அழுக்குக் கம்பீரம்" அல்லது "கம்பீரமான அழுக்கு" இரண்டில் எது சரி என்று தெரியாது. ஆனால் எது சரியோ அது அவரிடம் இருந்தது.

இளைஞர்கள் ஒருவர் பின் ஒருவராய் ஒரு ஒழுங்கான வரிசையில் சென்று தங்களது ரேகை, பெயர், மற்றும் முகவரிகளை காவலரிடம் பதிந்து கொண்டிருந்தார்கள். இவரும் வரிசையில் போகிறார். நான், ஜெயசீலன், இறந்துபோன பால்ராஜ், அந்த நாட்களில் "தோழர்" என்பதுதான் இவரது பெயர் என்று சமயபுரம் சுற்றுப் பகுதி மக்களால் அறியப் பட்டிருந்த தோழர்.கருப்பையா எல்லோரும் வட்டம் கட்டி பேசிக் கொண்டிருந்தோம்.

திடீரென வெடித்த பெருஞ்சத்தத்தைக் கேட்டு அந்தத் திசை நோக்கி திரும்பினோம்.

அவர்தான் பெருங்குரலெடுத்து காவலரோடு விவாதித்துக் கொண்டிருந்தார்.

":இது வாலிபர் சங்க போராட்டங்கறாங்க. இதுல நீ ஏன்யா?. போயா." என்று காவலர் விரட்ட

"நான் கைதாகக் கூடாதுங்கறதுக்கு நீ என்னய்யா அன்னாவி. நீ பேசாம ஓம் வேல என்னவோ அதோட நில்லு"

"இல்ல இது சின்னப் பசங்களோட சிறை நிறப்பும் போராட்டம். இதுல நீ ஏன்யா?" . காவலரும் விடாமல் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தார்.

அதற்கு கொஞ்சமும் அசராமல் அவர் சொன்ன பதில்தான் என்னைக் கவ்வி இழுத்துப் போய் அவரிடத்தில் தள்ளியது.

"சின்னப் பசங்க நடத்தற போராட்டந்தான். நான் என்ன கெழவங்க நடத்தற போராட்டம்னா சொன்னேன். அவங்க கொடுத்த நோட்டீஸ்லயும் அடிச்சு ஒட்டுன போஸ்ட்டர்லயும் "எங்கள் போராட்டத்தில் நியாயம் காண்கிற உணர்வுள்ள பொது மக்களே ஆதரவு தாரீர்" னு போட்டுருக்காங்க பாரு." தனது பாக்கெட்டிலிருந்து ஒரு துண்டு பிரசுரத்தை எடுத்து நீட்டுகிறார்.

"இது எதுக்குய்யா இப்ப எனக்கு?." காவலரின் சுருதி கொஞ்சம் குறைகிறது.

"ம்ம், அடங்கு. அந்தப் பசங்க நடத்துற போராட்டம் நியாயம்னு படுது, உணர்வுள்ள ஒரு பொது ஜனமா ஆதரவு தாரேன். இந்த நோட்டீஸ படிச்சுப் பாரு. உனக்கும் நியாயம்னுதான் படும். உணர்வு இருந்துச்சுன்னா உடுப்ப கழட்டிப் போட்டுட்டு இப்படி வந்து வரிசைல நில்லு"

எங்க விட்டா தன்னையும் உள்ள கூட்டிட்டு போய் விடுவாரோ என்ற பயம் கவ்வியிருக்க வேண்டும். " மோசமான பொம்பள. எப்ப வெளிய விடுமோ தெரியல. வயசான காலத்துல எதுக்கு கஷ்டம்னு சொன்னேன். எனக்கென்ன? ." என்றவர் "சரி, சரி பேர சொல்லு" என்றார்.

"தமிழிந்தியன்"

"அவர் பேரே தமிழிந்தியன்தானா, ஜெயா? "

"ஆமாம் தோழர். "

"அப்பா அம்மா வச்ச பேரா? இல்ல புனை பேரா?"

"ரெண்டும் இல்ல. இது இவர் தனக்கு தானே வைத்துக் கொண்ட பெயர்."

நான்காம் வகுப்பைத் தாண்டாத ஒரு கூலித் தொழிலாளி தமது பெற்றோர் வைத்த பெயர் பிடிக்காமல் தனக்குத் தானே பெயர் வைத்துக் கொள்வதும் அதுவும் இப்படி ஒரு பெயரை தெரிவு செய்ததும் ஆர்வத்தை கொந்தளிக்கச் செய்தது. சினிமாவில், தொலைக் காட்சியில், பண்பலைகளில் "சும்மா அதிருதில்ல" என்று ஓராயிரம் முறை கேட்டும் இப்போது கொஞ்சமும் அதிராத அறுபது கிலோ உடம்பும் அன்றைக்கு சத்தியமாய் நிறையவே அதிர்ந்தது.

எனக்கு அவரையும் அவருக்கு என்னையும் நிறையப் பிடித்துப் போனது.

சிறையிலிருந்து வந்தது முதல் எங்களது நட்பு விரிந்தது. நிறையப் பேசினோம் என்று சொல்ல முடியாது. வழக்கமாக நிறைய பேசும் நான் நிறைய கேட்டேன். பேசினார், பேசினார், பேசிக் கொண்டே இருந்தார். சலிக்கவே சலிக்காது. உலக வரலாறு அவருக்கு அத்துப் படியாய் இருந்ததும் அவரது பூகோல அறிவும் என்னை இன்றுவரை வியக்க வைப்பவை.

"ஜெர்மென்ல எல்லாத் துறைக்கும் மத்திய அமைச்சர் உண்டு எட்வின். ஆனா கல்விக்கு மட்டும் மத்தியில் அமைச்சர் இல்லை. அவனுக்குத் தெரியும் கல்வி பிராந்தியங்களின் கட்டுப் பாட்டில்தான் இருக்கணும் என்பது. இங்கதான் எல்லம் தலை கீழா இருக்கே. எப்படி வாதியாரே கல்வி விளங்கும்?"

இதை அவர் சொல்லிக் கேட்டு பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டன. சில மாதங்களுக்கு முன்னால் ஜெர்மென் சென்று திரும்பிய ஒரு உயர் அதிகாரி மிகுந்த வியப்போடு இதே செய்தியை பகிர்ந்து கொண்ட போது அவர்மேல் இருந்த ஆச்சர்யம் கூடியது.

நான்காம் வகுப்பே தாண்டாத ஒரு மனிதனுக்கு எப்படி இது சாத்தியம்?.

அவர் ஒரு முறை சொன்னார். "மாடு மேய்க்கிறவந்தான் நான். ஆனா மாடு மேய்க்கிறபோதும் வாசிக்கிறேன். நூலகம் போகிறேன்.அது தாண்டி கட்சியின் (மார்க்சிஸ்ட்) அரசியல் வகுப்புகளில் நிறைய பாடம் எடுத்துக்கிட்டேன். ஆனா படிக்க வேண்டிய வாதியாருங்க அவ்வளவா படிக்க மாடேங்குறீங்களேப்பா"

ஆசிரியர் அறையில் அமர்ந்து கொண்டு இதை அவர் பேசியபோது நண்பர்கள் கொஞ்சம் நெளிந்தார்கள்.

சாலையில் அவர் தானே பேசிக் கொண்டு நடப்பதாக சொன்னார்கள். ஏன் சிலர் பச்சையாக அவருக்கு மறை கழன்று விட்டதாகவும் சொன்னார்கள். நான் அது பற்றியெல்லாம் கவனம் செலுத்தவே இல்லை.

அவர் தினமும் பள்ளிக்கு வருவார், பேசுவார், துரை கடையில் ஒரு தேனீர், ஒரு ரூபாய்க்கு மூக்குப் பொடி அவ்வளவுதான் போய்விடுவார். சமயங்களில் " வாதியாரே, ஒரு ரெண்டு ரூபா கொடு எனக் கேட்பார். எப்போதேனும் புத்தகம் வாங்க காசு கேட்பார்.

அன்றைக்கும் வந்தார். "வா வா டீ சாப்பிடலாம்" அவர் காட்டிய அவசரம் புதிது. தேனீர்க் கடைக்குப் போனோம். அஞ்சு ரூபாய்க்கு இல்ல இல்ல பத்து ரூபாய்க்கு பொடி கட்டு என்றார். சிரித்துக் கொண்டே " என்ன தோழா, கடை வைக்கப் போறீங்களா? " என்றேன். பதிலுக்கு புன்னகைத்து விட்டு போய்விட்டார்

கொஞ்ச நேரத்தில் சமயபுரமே கலேபரப் பட்டது.

அன்று ஒரு கொலையை செய்துவிட்டு நேரே வந்திருக்கிறார். என்னைப் பார்த்து விட்டு நேரே காவல் நிலையம் போய் சரண்டர் ஆகியிருக்கிறார்.

நடந்தது இதுதான். வெட்டிக் கட்டிய விறகை விற்பனைக்காக சுமந்து வந்திருக்கிறார். பாலக்கட்டையில் மப்பில் அமர்ந்திருந்த இளைஞர்களில் ஒருவன் "உடையாரே" என இவரை அழைத்திருக்கிறான். நம்மாளுக்கு "ஜாதி" சுத்தமாய் பிடிக்காது. அதுவும் ஜாதியால் தான் அடையாளப் படுத்தப்பட்டல் கோவம் வரும். இது அந்த இளைஞன் உட்பட அனைவருக்கும் தெரியும்.

"டேய் இது நல்லா இல்ல. "மசுரான்"னு வேணாலும் கூப்பிடு. ஜாதிய வச்சு கூப்பிடாத. அப்புறம் நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்"

போதையில் இருந்த அவனும் விடாது " நான் அப்படித்தான் சொல்லுவேன். என்ன செய்வியோ செய் ' என்று சீண்டியிருக்கிறான்

விறகுக் கட்டில் அரிவாள்

விளைவு அவன் கல்லறியிலும் இவர் சிறையிலும்.

அவரைப் பற்றி நன்கு தெரிந்திருந்தும் அவரைச் சீண்டிய இளைஞனா? இல்லை இதற்குப் போய் கொலை செய்த தமிழிந்தியனா? யாரை குற்றப் படுத்துவது

கொப்பளிக்கும் வாலிபத்தோடு இருந்த வீரியம் மிக்க இளைஞனை வேலை தராமல் பாலத்தில் உட்காரவைத்த அரசாங்கங்களின் மீதே என் சுட்டு விரல் பாய்கிறது.

நன்றி: கீற்று இணைய தளம்

Wednesday, April 28, 2010

எம்.ஏ. சுசீலா பார்வையில் அந்தக் கேள்விக்கு வயது 98

தோழர் என விளித்தபடி அன்புமடல் எழுதும்இரா எட்வினின் ‘’அந்தக் கேள்விக்கு வயது 98 ‘’ என்ற கட்டுரை நூல் ..


‘’சமுதாயத்தின் மீதான இடது சாரிப் பார்வை,உரிமைக்கான குரல்,தாய்மொழி மீதான அக்கறை,பலரும் கவனிக்க மறுக்கும் நியாயங்களை உற்று நோக்கி வெளிப்படுத்தும் மன உறுதி’’ஆகிய கூறுகளே இந்தத் தோழர் எழுத்தின் சாரம் எனத் தமது அணிந்துரையில் கோவி.லெனின் குறிப்பிட்டிருப்பதில் அணுவளவும் பிழையில்லை என்பதை இந்நூலின் ஒவ்வொரு கட்டுரையும் மெய்ப்பிப்பதை வாசித்துத்தான் உணர வேண்டும் என்றாலும்..பானைச் சோற்றுக்குப் பதச்சோறாய்ச் சில....


இந்த நூலின் தலைப்பு சற்று ஆச்சரியப்படுத்துவதாய் இருக்கவே முதலில் அந்தக் கட்டுரைக்குள் நுழைந்து பார்த்தால் .... தெரிந்த செய்தியாக இருந்தாலும் கட்டுரை முடிவில் எட்வின் வைத்திருக்கும் வித்தியாசமான முத்தாய்ப்பு மானமுள்ள தமிழர்களைத் தலைகுனியச் செய்யும் சாட்டையடியாக வந்து விழுகிறது.பின்னாளில் பாரதியின் சீடராகி அவரது வாழ்க்கை வரலாற்றை அற்புதமாக வடித்துத் தந்த வ.ரா.என்னும் வ.ராமசாமி அய்யங்கார் முதன் முதலாகப் பாரதியைக் காணப் புதுச்சேரி வருகிறார்.ஆங்கிலத்தில் பேசினால் பாரதி மகிழ்வார் என எண்ணி வ.ரா. ஆங்கிலத்தில் பேச பாரதி செவிட்டில் அறைவது போல


‘’இன்னும் எத்தனை நாளைக்கு ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் ஆங்கிலத்தில் பேசப் போகிறீர்கள்’’என்று ஒரு கேள்வியைக் கேட்கிறார்


அதற்கு எட்வினின் பின்னுரை இதோ....இது நடந்தது..1910ஆம் ஆண்டு.பாரதியின் கேள்விக்கு இப்போது வயது 98.இன்னும் இரண்டாண்டுகளில் நூற்றாண்டு.(எட்வின் நூலெழுதப்பட்டு 2 ஆண்டு கடந்து விட்டதால் இப்போது உண்மையாகவே அந்தக் கேள்வி கேட்கப்பட்டு 100 ஆண்டு முடிந்து விட்டது.)


எட்வின் கேட்கிறார்...‘இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு இந்தக் கேள்வியை உயிரோடு வைத்திருக்கப் போகிறோம்

வண்ண மயமான செம்மொழி மாநாடுகளின் கோலாகல ஆர்ப்பாட்டங்களில் திளைத்தபடி....தமிழை ஆங்கில உச்சரிப்பில் பேசும் தொலைக்காட்சித் தொகுப்பாளர்களோடு (இரு பாலாரும்தான்)கூச்சமின்றித் தொலைபேசியில் கதைத்துக் கொண்டிருக்கும் நமக்குப் போயும் போயும் இந்தக் கேள்விக்கு பதில் தேடவா நேரம் இருக்கப் போகிறது..?


பாவம்..... அப்பாவி எட்வின்கள் ஒருபக்கம் புலம்பிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்

தமிழ்ப் பாடகர் ஒருவர் பாடிய தெலுங்குக் கீர்த்தனைகளை ஒரு முறை கேட்ட சாயிபாபா, தெலுங்கு உச்சரிப்பில் கவனம் செலுத்துமாறு அவரிடம் அறிவுறுத்தியதை எடுத்துக் காட்டும் எட்வின் அதைத் தனக்கே உரிய கோணத்தில் இப்படிப் பார்க்கிறார்.


‘’கடவுளின் அவதாரமாகவே பல கோடி மக்கள் அவரைக் கொண்டாடினாலும்,தமது தாய்மொழி தெலுங்கு என்பதிலும்,தனது தாய்மொழியை வேற்று மொழிக்காரரும் சரியாய் உச்சரிக்க வேண்டும் என்பதிலும் அவருக்குள்ள அக்கறையைப் போற்றுகிறோம்,.இன்னுஞ் சொல்லப்போனால் அநேக விஷயங்களில் அவரோடு முரண்படுகிற நாம் அவரது மொழிப்பற்றை சிரந்தாழ்த்தி மகிழ்ச்சியோடு வணங்குகிறோம்....நாம் தமிழர்.நமது தாய்மொழி தமிழ் தமிழ் .இதை நாம் எப்போது உணரப்போகிறோம்?’


உணர்ச்சி வேகத்தில் மொழி உணர்வுக்குக் கொடி பிடித்து ஆவேசத்தைத் தூண்டிவிடும் மலிவான நோக்கம் எதுவும் நூலாசிரியரிடம் இல்லை.அடிப்படையே ஆடிப்போய்விடுமோ என்ற ஆதங்கமே அவரை அங்கலாய்க்க வைக்கிறதென்பதை அவரே பதிவு செய்கிறார்.


‘’எனக்கும் தமிழ்தான் மூச்சுஆனால் அதைப் பிறர் மேல் விட மாட்டேன்’’என்பார் ஞானக் கூத்தன்.ஆமாம். பிறர் மீது விட வேண்டாம்ஆனால் நாமாவது சுவாசிக்க வேண்டாமா

மொழி சார்ந்து எழுப்பும் இந்தக் கேள்விகளோடு நம் மனச் சாட்சியைத் தொட்டு உலுக்கி ...சமூகம்,அரசியல்,மதம் எனப் பல களங்களிலும் பல வினாக்களை முன் வைக்கின்றன இவரது கட்டுரைகள்.


சூரியனை மையமாக வைத்துப் பூமி சுற்றுகிறது என்ற கருத்தை 1633 இல் வெளியிட்டுத் திருச்சபையின் கருத்துக்கு எதிராகக் கருத்துச் சொன்ன கலீலியோவின் மீது போடப்பட்ட அதே வழக்கு 360 ஆண்டுகளுக்குப் பின்,1990 இல் மேல்முறையீட்டுக்கு வந்தபோது திருச்சபை தன் முடிவை மாற்றிக்கொண்டு அவரது கருத்தை ஏற்றது என்பதால் ‘மதத்தை விஞ்ஞானம் வென்றது’என ஆத்மார்த்தமாக மகிழும் எட்வின் அத்துடன் வேறொரு சுவாரசியமான தகவலையும் சேர்த்துச் சொல்கிறார்.


‘90 இல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது , தற்போது போப்பாண்டவராக உள்ள பெனடிக் மட்டும் கலீலியோவின் கருத்தத் திருச்சபை நிராகரிக்க வேண்டுமென்று விடாப்பிடியாகச் சொல்லியிருக்கிறார் என்பதும்...அந்தக் காரணத்தினாலேயே - இப்பொழுது அவர் போப்பாண்டவராகவே இருக்கும் நிலையிலும் ரோமிலுள்ள லா ஸாட்னீஸா என்ற பல்கலைக் கழகம் அவர் அருளாசி தரவிருந்த நிகழ்வைத் துணிவோடு ரத்து செய்து விட்டதென்பதும் (17.01.08)எட்வின் தரும் புதிய தகவல்கள்.


‘அவர்களும் விசுவாசிகளே ஆனால் அற்ப விசுவாசிகளல்ல.விஞ்ஞானத்தை ஏற்பவர்கள்’ என்று கூறும்கட்டுரையாளர் ‘குற்றம் குற்றமே’ என்ற இக் கட்டுரையை,‘இந்த நிகழ்வை இந்தியாவிலுள்ள கல்வி நிலையங்கள் அருள் கூர்ந்து கவனிக்க வேண்டுமென்றும்,மதவாதிகளின் நெருக்கடியைப் பழமைக் கூத்தை’ எதிர்க்க வேண்டும் என்றும் முடித்திருப்பது இந்தியநடப்பியலின் கவலை தரும் போக்கில் அவருக்குள்ள மெய்யான அக்கறையை ஆத்மசுத்தியோடு பதிவு செய்கிறது


மீண்டும் அதே பூமி பற்றிய ஆராய்ச்சி. ஆனால் இம்முறை தர்க்கத்தில் ஈடுபடுபவர்கள் சின்னக் குழந்தைகள்.


‘’பூமி தட்டைன்னு சொன்ன ஆளுடீ உங்க சாமி ! பூமி உருண்டைன்னு தெரியாத சாமி எப்படிடீ பூமியப் படச்சிருப்பான்’’என்று வாதத்தைத் தொடங்கி வைக்கிறான் கட்டுரையாளரின் மகன்.‘’...குண்டன் தப்பு தப்பாப் பேசறான் இப்ப்டிப் பேசறதனாலேதான் எப்பவும் செகண்ட் ரேங்கிலேயே இருக்கே ....சாமி தப்பா சொல்வாரா ‘’என்றெல்லாம் தங்கை ஆதங்கப்பட்டுத் தவித்தாலும்


‘’பூமி உருண்டைன்னு உனக்கெப்படித் தெரியும்’’ என்ற தன் அடுத்த கேள்வியை அண்ணனிடம் வைக்கத் தவறவில்லை அவள்.


‘’சயின்ஸ்லே படிச்சேண்டி கத்தரிக்கா’’என்கிறான் பதிலுக்கு அவன்.


அதற்கு அந்தத் தங்கை சொல்லும் பதிலிலேதான் அப்பழுக்கற்ற குழந்தை மனதைப் பிட்டு வைக்கிறார் கட்டுரையாளர்.


‘’ஏம்பா சாமி காலத்திலே சயின்ஸ் இல்லதானேப்பா. சாமிக்கு சயின்ஸ் தெரியாது.அதனாலேதான் அப்படிச் சொல்லியிருப்பார். சாமி சயின்ஸ் படிச்சிருந்தா உன்னைவிட பர்ஸ்ட் ராங்கா சொல்லியிருப்பார்’’

என்று அந்தப் பிஞ்சுப் பெண் பேசி முடிப்பதைச் சொல்லி


‘குழந்தை மாதிரி தெளிவாய்ப் புரிந்து கொள்ள தெளிவாய்ப்பேச நமக்கின்னும் பயிற்சி வேண்டும்’என்று கட்டுரையை நிறைவு செய்கிறார்.பி.எஸ்.ராமையாவின் ‘நட்சத்திரக் குழந்தைகள்’சிறுகதையை நினைவூட்டும் கட்டுரை ஆக்கம் இது.


பிரபலமானவர்களின் எழுத்துக்களை மட்டுமே மேய்ந்து விட்டு நகர்ந்து செல்லும் நாம் தெரிந்துகொள்வதற்கான நல்ல பல தகவல்களும்,முற்போக்குச் சிந்தனைகளும்,மானுட நேயமும் ...பார்வைக்கு அதிகமாக வந்திராத நூல்களிலும் கூடக் குவிந்துகிடக்கக் கூடும் என்பதற்கான கண் திறப்பு எட்வினின் இந்நூல்.(முகம் தெரியாத எனக்கு இந்நூலை அனுப்பி,இதைப் படிக்கும் அனுபவத்தைச் சாத்தியமாக்கிய அவருக்கு மீண்டும் நன்றிகள்.)இனியேனும்...புத்தகக் கடை வரிசைகளை நூலக அடுக்குகளைக் கடந்து செல்கிறபோது நம் கவனம்..அதன் வெளிச்சம் இவ்வாறான நூல்கள் மீதும் சற்று விழட்டும்.


‘ஏதேனும் ஒன்று என் உசிரைப் பிசையுமானால் அதைப் பற்றி எழுத முற்படுகிறேன்’ என்று தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார் தோழர் எட்வின்.தனது எழுத்தின் வல்லமை படிப்பவர் இதயத்தையும் பிசையும் வலிமை வாய்ந்ததாக இருப்பதை இதற்குள் பல எதிர்வினைகள் அவருக்கு உணர்த்தியிருக்கக் கூடும்.

மண் பயனுறச் செய்யும் எழுத்து....மனித மாண்புகளைத் தூண்டும் எழுத்து.....மலினமான மோசடிகளைச் சாடும் எழுத்து...அவருக்கு வரமாக வாய்த்திருக்கிறது.பல நூல்களின் தொடர்ந்த உருவாக்கத்துக்கான மொழித் திறனும்...சொல்வளமும் அவரிடம் குறைவின்றி நிறைந்து கிடக்கிறது.அவற்றை உள்ளே கனல் பரப்பி எழுத்தாக்கமாய் வெளிக்கொணருவதற்கான எழுச்சியும் ,கிளர்ச்சியும்,ஏற்ற மனநிலையும் பொருந்த வாய்க்க வேண்டும் என்பதே நம் பேரவா.


நூல் விவரம்; இரா.எட்வின்,

‘அந்தக் கேள்விக்கு வயது 98’

சாளரம்-வெளியீடு,

2/1758,என்பீல்டு அவென்யூ,

மடிப்பாக்கம்,

சென்னை- 600 091










Tuesday, April 20, 2010

எலிகளை அழித்த ஊரை முன் வைத்து



குழந்தைகளுக்கு சொல்லித் தரப்படும் கதைகளுக்கு எப்போதுமே "அறம்" சார்ந்த நோக்கமுண்டு. கேட்கும் குழந்தைகள் வருங்காலத்தில் அறத்தோடும் புத்திக் கூர்மையோடும் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கம் அவைகளுக்குண்டு. தங்களது புத்தி சாதுர்யம், திறமை உள்ளிட்ட அணைத்தையும் "அறம்" தழைக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்கிற உயரிய பக்குவத்தை குழந்தைகளுள் விதைத்தலே அவைகளின் நோக்கம்.

இது எல்லா மண்ணிற்கும், எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். நம்பிக்கை, புத்திக்கூர்மை, தைரியம், தாய்மண் மீது தாய்மொழி மீது பற்று, சமூக அக்கறை, எல்லாம் கடந்து அறம் சார்ந்த ஒழுக்கம் என்பவையே குழந்தை இலக்கியத்தின் குறிப்பாக குழந்தைகளுக்கான கதைகளின் இலக்கு.

நம் மண்ணில் அறத்தின் மீது தரப்படும் அழுத்தம் ரொம்பவும் அதிகம். "அறம் செய விரும்பு" என்று அடித்துச் சொல்லித் தரும் சமூகம் தமிழ்ச் சமூகம்.

என்றால், தொன்ம, பழமிலக்கியங்களை மறு கட்டமைப்பது தேவையா? பலன் தருமா?

பார்த்துதான் விடுவோமே.

ஒரு பாட்டி கதை.

பாப்பாக்களுக்கும் தம்பிகளுக்கும் பள்ளிகளில் சொல்லித் தரப்படுவது. குழந்தைகளாய் இருந்த போது நமக்கும் நம் தாத்தாக்களுக்கும் பாட்டிகளுக்கும்கூட சொல்லித் தரப்பட்டதுதான்.

நல்ல வெயில். பறந்து கொண்டிருந்த காகத்திற்கு தகிக்கிறது. பறந்து கொண்டே கீழே எங்கும் தண்னீர் கிடைக்குமா என்று தேடுகிறது. ஒரு ஜாடி அதன் கண்களில் படவே அது கீழே இறங்குகிறது. தனது கூரிய அலகினை ஜாடிக்குள் நுழைத்து நீர் அருந்த முயற்சி செய்கிறது. அதன் அலகிற்கு நீர் எட்டவில்லை. சிறிது நேரம் யோசித்த காகம் அருகே கிடந்த சிறு சிறு கற்களை எடுத்து ஜாடியில் போடுகிறது. நீர் கொஞ்சம் உயர்ந்து வரவே காகம் தனது தாகத்தை தீர்த்துக் கொண்டு பறந்து போனது.


காகத்தின் புத்தி சாதுர்யத்தை வியக்கும் வகையில் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதன் நோக்கம் வாழ்க்கையில் அது மாதிரியான சூழலை சந்திக்கும்போது அந்தக் காகத்தைப் போல புத்திசாலித்தனத்துடன் எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் என்கிற வேட்கையை குழந்தைகளிடம் விதைப்பதுதான் இந்தக் கதையின் நோக்கம்.

எதிர் பார்க்கப்பட்ட பலனை இது தந்ததா?

அதையும்தான் பார்த்துவிடலாமே.

கொண்டபுரம் ராஜவிஜயன் மார்ச் 2010 "இது பெரிய எழுத்து" வில் சமீபத்தில் தான் தொலைக்காட்சியில் பார்த்த ஒரு காட்சியை விவரித்திருந்தார். அதை நானும்கூடப் பார்தேன் , நீங்களும் பார்த்திருக்கக் கூடும்.

வறட்சி வாட்டும் வனப்பகுதிகளில் ஆங்காங்கே விலங்குகளுக்காக நீர்த்தொட்டிகளைக் கட்டியிருக்கிறது அரசு. அதில் ஒரு தொட்டியில் சில வாரங்களே வயதுடைய இரண்டு யானைக் குட்டிகள் விழுந்து விட்டன. குட்டிகள் மூழ்கிவிடுமளவிற்கு தொட்டியில் தண்ணீர் இல்லை. என்னென்னவோ செய்தும் குட்டிகளால் மேலேற முடியவில்லை. என்ன செய்தும் தாய் யானையாலும் குட்டிகளை மேலே இழுத்து விட முடியவில்லை. ஆற்றாமையில் அது பிளிறிக் கொண்டே தொட்டியை சுற்றி சுற்றி வந்தது.

யானையின் ஆக்ரோஷமான பிளிரல் பக்கத்து கிராம மக்கள் சிலரை அங்கே இழுத்து வந்தது. தனது குட்டிகளை ஏதேனும் செய்துவிடுவார்கள் என்ற பயத்தில் தாய் யானை அவர்களை தொட்டியின் அருகே வரவிடாமல் விரட்டி அடித்தது.

யோசித்த மக்கள் கற்களை வீசி தொட்டியின் ஒரு பக்க ஆழத்தைக் குறைக்க முடிவெடுத்தனர். ஆரம்பத்தில் தனது குட்டிகளைத் தாக்கத்தான் கற்களை வீசுகிறார்கள் என்று எண்ணி அழிச்சாட்டியம் செய்த தாய் யானைக்கு உண்மை புரிய வெகு நேரமாகவில்லை. உடனே குட்டிகளின் மீது கற்கள் பட்டுவிடாமல் ஒரு மூலையில் அவைகளைத் தள்ளி ஒத்துழைத்தது.


ஒரு வழியாய் குட்டிகள் மேலேறியவுடன் தாயும் பிள்ளைகளும் சந்தோஷமாய் வனத்திற்குள் நுழைந்தன.

தங்களது குழந்தைப் பிராயத்தில் அந்தக் கிராமத்து மக்களுக்கு கிடைக்கப் பெற்ற "காகம்" கதையின் அநிச்ச விளைவாகக்கூட இது இருக்கலாம். கற்களை தொட்டிக்குள் வீசித் தொட்டியின் ஆழத்தைக் குறைப்பதன் மூலம் குட்டி யானைகளைக் காப்பாற்றி விடலாம் என்கிற புத்தி சாதுர்யம் அந்தக் கதையின் விளைவாகவும் வெற்றியாகவும் கூட இருக்கலாம். தாய் யானையின் எதிர்ப்பையும் மீறி அதிலிருந்த ஆபத்துக்களையும் எதிர்கொண்டு குட்டிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பினை ஏற்றதற்கு இந்தக் கதையிடமிருந்து பெற்ற அறம் சார்ந்த விழுமியங்களாகவும் இருக்கலாம்.

குழந்தைகளுக்கு இந்தக் கதையை சொல்லித் தருவதன் நோக்கமிதுதான் என்ற வகையில் இந்தக் கதையின் நோக்கம் நம் கண் முன்னே நிறைவேறி இருப்பதாகக் கொள்ளலாம்.

இது மாதிரி குழந்தைக் கதைகள் நமது அறிவு சார், அறம் சார் பொக்கிஷங்கள். தலைமுறை தலைமுறையாய் மாற்றி மாற்றி கையளிக்கப் பட்டு இன்று நம் கைகளுக்கு வந்துள்ள இந்தப் பாரம்பரிய பொக்கிஷங்களை நாம் மெருகு படுத்தி அடுத்த தலைமுறையின் கைகளில் கைமாற்றித் தரவேண்டிய பொறுப்பினை நாம் சரியாக செய்கிறோமா?
யுகம் யுகமாய் வாய் வழியாய் வளர்க்கப்பட்ட இந்தக் கதைகள் பிறகு ஓலையில் பிறகு தாளில் அச்சில் என்று வளர்ந்து வந்துள்ளன. இன்னும் தாண்டி ஒலித் தகடுகள், ஒலி-ஒளித் தகடுகள் என்று வளர்ந்து விரிந்த நிலைகளில் அவற்றின் பதிவுகள் நம்மை மகிழச் செய்கின்றன.

தாராள மயத்தின் கோர வளர்ச்சியில் விளம்பரத் துறையும் தனது வணிக பயன்பாட்டிற்காக குழந்தைகளின் இலக்கியத்தை இப்போது கையிலெடுத்துள்ளன. அப்படி இவர்களின் கைகளில் சிக்கி சின்னா பின்னப் படுத்தப்பட்டு சிதைந்து சீரழிந்து நிற்கும் குழந்தைகளுக்கான ஒரு கதைப் பாடலை பார்க்கலாம்.

"pied piper" என்ற ஆங்கில கதைப் பாடல். கதையின் வழியாக ஆழமான ஒரு அறத்தினை குழந்தைகளின் அடி மனசில் பதியச் செய்யும் பாடல்.


அந்த ஊர் எலிகளால் நிரம்பி வழிந்தது. ஒவ்வொரு வீட்டிலும் ஐம்பதுக்கும் குறையாத எண்ணிக்கையில் எலிகள். ஊர் மக்கள் கந்துக் காரனை விடவும் இந்த எலிகளைக் கண்டுதான் அதிகம் பயந்தனர். அவ்வளவு தொல்லை எலிகளல் அவர்களுக்கு. " நூறு புலிகளை ஜமாளிச்சுடலாம், ஆனா ஒரு எலிச் சனியனை ஜமாலிக்கிறதுக்குள்ள உசிறு போய் உசிறு வருது" என்று பேசிக் கொள்ளுமளவிற்கு அவர்கள் எலிகளால் பாதிக்கப் பட்டிருந்தார்கள். நிலை குலைந்த அவர்கள் ஊர்த் தலைவரிடம் ஒன்று திரண்டு சென்று இதற்கு ஏதாவது செய்ய வேண்டுமாய் வேண்டினர். அவர் வீட்டிலும் சற்றேரக் குறைய அறுபத்தி இரண்டு எலிகள் என்கிற வகையில் இதுபற்றி யாரும் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் அவர் இல்லைதான்.

ஒவ்வொரு நாளும் அவரது அலுவலகம் ஊர் மக்களால் முற்றுகையிடப் பட்டது. மக்களுக்கு எலிகள் மட்டுமே பிரச்சினை ஊர்த் தலைவருக்கோ வீட்டிலே எலிகளாலும் அலுவலகத்தில் பொது மக்களாலும் பிரச்சினை.

அழிபட மறுத்து நாளும் நாளும் செழித்து வளரும் இந்திய ஜாதிகளைப் போல என்ன செய்தும் நாளும் வளர்ந்து வந்த எலிகளை ஒழிப்பதற்கு ஒரு இளைஞன் முன் வந்தான். அதற்கு ஊதியமாக ஒரு பெருந்தொகையினை கேட்டான். தங்கள் ஊர் எலிகளை ஒழிப்பதற்கு காலமும் உழைப்பும் அதிகம் தேவைப் படும் என்று கருதிய ஊர்த் தலைவர் அந்த இளைஞன் கேட்ட பெருந்தொகைக்கு சம்மதித்தார்.

ஒரு குறிப்பிட்ட நாளில் அந்த இளைஞன் இசைக் குழலினை இசைத்தவாறு நடக்கத் தொடங்கினான். என்ன ஆச்சர்யம்! அந்த ஊரில், பிறந்து இரண்டு நொடிகள் மட்டுமே ஆன எலிக்குட்டிகள் உட்பட அனைத்து எலிகளும் அவன் பின்னால் அவன் இசைக்கு கட்டுப் பட்டு நடந்தன. இசைத்துக் கொண்டே அவன் ஒரு நீர் நிலைக்குள் அவன் இறங்க எலிகளும் நீர் நிலைக்குள் இறங்கி அழிந்து போயின.

ஒரு முக்கால் மணி நேரத்திற்குள் எலிகளே இல்லாத ஊராய் மாறிப் போனது அந்த ஊர்.

ஊதியம் பெருவதற்காக ஊர்த் தலைவரிடம் வந்தான்.


முக்கால் மணியில் முடிந்து போன ஒரு சொற்ப வேலையாகவே அது ஊர்த் தலைவருக்குப் பட்டது. பேசிய தொகையில் பெரும் பகுதியை குறைத்து ஒரு சன்னமான தொகையினை அவனிடம் நீட்டினார்.

காரணம் கேட்டது அவனது பார்வை.

"இதுவே அதிகம்" அவரது பெருந்தன்மையை எடுத்து வைத்தது அவரது பார்வை.

"பரவாயில்லை, நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்" புன்னகை கசிய இளைஞன் வெளியேறினான்.

இசைத்தபடியே மீண்டும் நடந்தான். இந்த முறை நடை பழகும் குழந்தைகளும் அவன் பின்னே நடை வண்டிகளோடு கிளம்பின.

விபரீதம் உணர்ந்த ஊர்த் தலைவர் பேசிய தொகையை பணிந்து கொடுத்து ஊர்க் குழந்தைகளை மீட்டார்.

இந்த கதையை எதனோடெல்லாம் பொறுத்தி புதிதாய் அறம் சொல்லலாம்.

சூதாய் உழைப்பை சுரண்டி ஏமாற்றினால் இது போல கேடு விளையலாம் என்று சொல்லித் தரலாம். அல்லது ஒரு கலைஞனின் மேன்மையை விளக்க இந்தக் கதையை சொல்லலாம்.

ஆனால் தற்போது ஊடகங்களில் இந்தக் கதையை ஒவ்வொரு நாளும் பல தடவை ஒரு விளம்பரத்திற்காக பயன்படுத்துகிறார்கள்.

இதிலும் எலிகள் அழிக்கப் படுகின்றன. பேசிய ஊதியம் வழங்கப் படாததால் புன்னகையோடு இளைஞன் வெளியே வருகிறான். இது வரை மாற்றமில்லை. இப்போது இசைக் கருவி அல்ல அவனது ஆயுதம். ஒரு வாசனை திரவத்தை (spray) தன் மேலே இட்டுக் கொள்கிறான். வீதியில் நடக்கிறான். அந்த வாசனை திரவத்தின் வாசனையில் கட்டுண்டு ஊரில் உள்ள அனைத்து பெண்களும் அவன் பின்னே போகிறார்கள்.

நமது கேள்வி இதுதான்.

ஏதோ ஒரு மனிதனிடம் இருக்கும் மேன்மையால் , திறமையால், புகழால், அல்லது அழகால் ஒருவரோ அல்லது சிலரோ ஈர்க்கப் படுவதும் அதில் சிலர் எல்லை தாண்டுவதும் இயல்புதான். இதே காரணங்களுக்காக ஒரு பெண்ணிடம் சில ஆண்கள் ஈர்க்கப் படுவதும் அதில் பலர் எல்லை தாண்டுவதும் வாடிக்கைதான்.

யுவராஜ் , திரிஷா போன்றவர்கள் மொய்க்கப் படுவது இந்த வகையில்தான்

என்ன சொல்கிறது இந்த விளம்பரம்?

அக்குளில் அடிக்கப் பட்ட திரவத்தின் வாசனையே போதும் பெண்களை சோரப் படுத்த என்பதுதானே?

இது சரிதானா?

குஷ்பு மற்றும் ஜெயராம் கருத்துக்கள் பெண்களை இழிவு செய்ததாய் கொதித்துக் குமுறிய நண்பர்களுக்கு இந்த விளம்பரத்தை பார்க்க சிபாரிசு செய்கிறேன்.

வேறென்ன செய்ய?

Tuesday, March 16, 2010

ஆயுள்ரேகை

அந்த இளைய பிணத்தின்
உள்ளங்கையில்
ஆழமாய்
நீளமாய்
ஆயுள் ரேகை

Sunday, March 14, 2010

காகம்


காஷ்மீரில்
குச்சி பொறுக்கிய காகம்
கூடு கட்டும்
கராச்சியில்

திருடனின் ரேகையில்


திருடனின் ரேகையில்
தெரியவேயில்லை
திருடனென்று
நன்றி : "செம்மலர்"

வடை சுற்றிய தாளில்

நன்றாயிருந்தது
வடை சுற்றிய தாளில்
கவிதை

நன்றி: "இளைஞர் முழக்கம்"

Saturday, March 13, 2010

பத்து கிலோ ஞானம்
"நடத்துனரிடம்
மீதிச்சில்லரை
எதிர்பார்த்தே
ரசிக்க முடியாமல்
போய் விடுகின்றன
பெரும்பாலான
பேருந்துப் பயணங்கள்"


என்கிறார் ராஜிவ் காந்தி. அநேகமாக அணைவரும் அனுபவித்தேயிருக்க வேண்டிய அவஸ்தைதான் இது. தரை வழி போக்குவரத்தை தவிர்ப்பவர்கள் மட்டுமே இதிலிருந்து தப்பிக்க முடியும். இருக்கிற ஒரே ஒரு நூறு ரூபாய் தாளினை கொடுத்து விட்டு உட்கார்ந்தால் பூம் தொலைக் காட்சியில் ஓடும், நரசிம்ம ராவையே வயிறு குளுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை காட்சிக்கு கூட நரசிம்மராவைவிட இறுக்கமாய் உட்கார்ந்திருப்பவர்களை நான் பார்த்திருக்கிறேன். மறக்காமல் மீதிச் சில்லறையை வாங்க வேண்டுமே எச்சரிக்கை உணர்வே சகல ரசனையையும் கொன்றுபோடும். கையில் இருந்த ஒரே நூறு ரூபாய் தாளினை நடத்துனரிடம் கொடுத்து விட்டு சில்லறை வாங்க மறந்து போய் வீட்டிற்கு நடந்து போன அனுபவம் எனக்குமுண்டு.

இது மாதிரியான தொடர் அனுபவங்கள் நடத்துனர்கள் அனைவருமே சில்லறையை ஆட்டை போடும் கொள்ளை காரர்கள் என்பதான ஒரு பொதுப் பிம்பத்தை ஏற்படுத்தி உள்ளன. எனக்குத் தெரிந்த வரை ஏழு ரூபாய் டிக்கெட்டிற்கு ஏழு ரூபாயை கொடுத்தால் வாங்க மறுக்கும் நடத்துனர் யாரும் இருப்பதாகப் படவில்லை. எத்தனை முறை இழந்தாலும் சரியான சில்லறையோடு பேருந்து ஏறவேண்டும் என்ற பொது அக்கறை மட்டும் பெரும்பாலும் யாருக்கும் வருவதில்லை.

ஆனால் எத்துனை இடையூறுகள் ஏற்படினும் அத்தனையையும் தாண்டி பேருந்துப் பயணங்களில் ரசிக்கவும் கற்றுக் கொள்ளவும் முடிகிறது என்னால். எனக்கென்னவோ அள்ள அள்ளக் குறையாத அட்ச்சயப் பாத்திரங்களாவே பேருந்துகள் அமைகின்றன. ஒவ்வொரு முறையும் எனக்கு கற்றுக் கொடுப்பதும் என்னையறியாமலே எனக்குள் ஒளிந்து கிடக்கும் "நான்" என்ற அழுக்கை தங்கள் ஒழுகும் சழுவாயால் துடைத்தென்னை தூய்மை படுத்துவதும் குழந்தைகள்தான்.


ஒரு முறை நான் கூட எழுதினேன்

"உனக்கு ஒன்னுந் தெரியாதுப்பா"
குழந்தையின் மழழையில் கசியும்
ஞானம்'"

என்று. அனேகமாக எனது எல்லாப் பயணங்களிலும் குழந்தைகள் இந்தக் கவிதையை நிசப்படுத்தியே வருகிறார்கள். நமக்கு ஒன்றும் தெரியாது என்பதையோ அல்லது குறைந்த பட்சம் அவர்கள் அளவுக்கு தெரியாதென்பதையோ ஒவ்வொரு முறையும் நிரூபித்தே வருகிறார்கள்.

அதிலிரண்டை பந்தி வைத்துவிடவேண்டுமென்று படுகிறது.
...

அன்று அதி காலை எழுந்ததிலிருந்தே ஒன்று மாற்றி ஒன்றாக தவறுகளாகவே செய்து கொண்டிருந்தேன். எல்லாம் அவசரம் தந்த பதற்றத்தால் வந்தது. தாள் திருத்தும் மையத்தில் அன்று வாயில் கூட்டம். சங்கத்தின் பொதுச் செயலாளர் விஜயகுமார் நேற்றே வந்துவிட்டார். திருச்சிக்குப் போக ஒன்றரை மணி நேரமாவது ஆகும். விடுதி அறையிலிருந்து விஜியை அழைத்துக் கொண்டு போக வேண்டும். ஏழரை மணிக்குள் முகாம் வாசலில் இருந்தால்தான் தாள் திருத்த வரும் ஆசிரியர்களை கூட்டத்திற்கு தடுத்து நிறுத்த முடியும்.

பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த பேருந்தை நிருத்தி ஏறினேன். இடமிருக்கா இல்லையா என்றெல்லாம் பார்த்து ஏறுவத்ற்கு அவகாசமில்லை. நல்ல வேளை கடைசி இருக்கையில் ஒரு இடம் இருந்தது. அப்பாடா என்றிருந்தது. அமர்ந்ததும் செல் எடுத்து மணியைப் பார்த்தேன். சரியாக ஐந்து. வழியில் ஏதும் பிரச்சினை இல்லாத பட்சத்தில் சரியான நேரத்தில் சேர்ந்து விடலாம்.

பேருந்து புற வழிச்சாலையில் திரும்பிய அந்தப் புள்ளியில்தான் அந்த அம்மாவின் பேச்சு என் கவனத்தை இழுத்தது. எனக்கு முன்னிருக்கைக்கும் முன்னிருக்கையில் அமர்ந்திருந்தார். அப்பழுக்கில்லாத கிராமத்து பெண்மணி. அவரோடு சுமார் நாற்பது மதிக்கத் தக்க அளவில் ஒரு ஆண். " இல்லடா தம்பி", "இதக்கேளுடா" என்று அடிக்கடி அந்த அம்மா சொன்னதிலிருந்து ஒன்று அவர் அவரது தம்பியாக இருக்க வேண்டும் அல்லது தம்பி போன்ற உறவுடையவராக இருக்க வேண்டும்.

அந்த அம்மாவின் குரலால் நிரம்பிக் கசிந்தது பேருந்து. எரிச்சலை தரக்கூடிய குரல். அவரது மகன் மற்றும் மருமகளைப் பற்றியே அவரது பேச்சு சுற்றியது. "ம்" " ம்ம்" , " சொல்லுக்கா" , "ச்ச்" என்பதைத் தாண்டி அந்த மனிதன் ஏதும் பேசவே இல்லை.

ஓட்டுநரே இரண்டு முறை திரும்பி பார்த்து விட்டு திரும்பி தலையிலடித்துக் கொண்டார். ஒவ்வொரு முறை அவரைக் கடக்கும் போதும் அந்த அம்மாவை ஒரு மாதிரி எரிச்சல் கசிய பார்த்துப் போனார் நடத்துனர்.

பாடாலூரைக் கடந்து சென்று கொண்டிருந்தது பேருந்து. புலம்பல் நிற்கிற பாடாய் தெரியவில்லை. பேருந்து புறப்பட்டு ஏறத்தாழ முப்பது நிமிடம் கடந்திருக்கும்.

திடீரென அழுவார். பிறகு அவரே சமாதானமாகி முந்தானையால் கண்களைத் துடைத்துக்கொண்டு விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடங்கி விடுவார்.

"அவ நல்லா இருப்பாளா? அவள விடு. ஒரு ஈ எறும்பு கடிக்க விட்டுருப்பேனா, இன்னிக்கில்ல அவன் இவ்ளோ பெரிய ஆம்புள. புள்ள வளரதுக்குள்ள ஒவ்வொரு ஆத்தாவும் ரெண்டு லாரி பீயாவது அள்ளிப் போடனும்ப்பா. அவ என்ன சொன்னாலும் தலய தலய ஆட்டுறானே. வெளங்குவானாடா இவன். " அவர் குரல் தந்த எரிச்சலைத் தவிர எதையும் உள் வாங்க முடியவில்லை.

"பெரம்பலூர்ல ஆரம்பிச்சது. எப்ப முடியுமோ" அடங்க மறுத்து என்னிடமிருந்து சன்னமான குரலில் எனது எரிச்சல் வெளியேறியது.

" அடப் போங்க சார், நான் விருதாச்சலத்துல ஏறினேன். அதுக்கு முன்னாலேயே அந்த அம்மா ஏறியிருக்கனும். இந்த இம்சய மூனு மணி நேரமா தாங்க முடியல சார்."

கொள்ளிடம் செக்போஸ்ட் கடக்கும் போதே அந்த அம்மா எழுந்தார். உடன் வந்த மனிதரும் எழுந்தார். திருவாணைக் கோவிலில் இறங்குவார்கள் என்பது புரிந்தது. அவர்கள் இறங்கப் போகிறார்கள்என்பதே எல்லோருக்கும் பெரிய நிம்மதியை தந்தது.

நின்றதும் இறங்குவதற்கு வசதியாக பைகளையெல்லாம் எடுத்துக் கொண்டு இருக்கைக்கு வெளியே வந்து கொண்டிருந்தார்.

"பாட்டி"

எனக்கு முன்னிருக்கையில் பெரும்பகுதி நேரம் நின்று கொண்டே வந்த மூன்று வயதுக் குழந்தை கத்தினாள்.

"ஏஞ்சாமி, என்னடா தங்கம்?"
குழந்தையின் கன்னத்தை வருடியவாரே அந்த அம்மா கேட்டார்.

" நீ பயப்படாம போ பாட்டி. குச்சி எடுத்து வந்து உனக்கு சோறு போடாத அத்தையையும் மாமாவையும் வெளு வெளுன்னு வெளுக்கிறேன்."
"நீ இருக்கப்ப எனக்கென்ன சாமி கவல." குழந்தையை தூக்கி ஒரு முத்தம் கொடுத்துவிட்டு கண்களை துடைத்துக் கொண்டே போனார்.

" யாரு பெத்த புள்ளயோ, ஒனக்குப் புரியுது என் வேதன. நீ நல்லா இருக்கனும் மவராசி"

அவர் பாட்டுக்கு அவர் இறங்கிப் போய்விட்டார். குழந்தையோ எதுவுமே நடக்காதது மாதிரி ஜன்னலில் வேடிக்கை பார்த்து விளையாட ஆரம்பித்து விட்டாள்.

எனக்கோ வாயில் கூட்டம் உட்பட அணைத்தும் மறந்து போய் ஒரே ஒரு கேள்வி மட்டும் சுழன்று சுழன்று உறுத்திக் கொண்டே இருந்தது. அநேகமாக பேருந்தில் இருந்த அனைவருக்கும் ஏன் உங்களையும் கூட இது நெருடவே செய்யும்.

அந்த சின்னக் குழந்தைக்கு புரிந்த அந்த அம்மாவின் வேதனையும் வலியும் நமக்கு ஏன் புரியாமல் போனது.

......

பாண்டியில் ஒரு வேலை. பேருந்தில் அதிக கூட்டமில்லை. வசதியான இருக்கை கிடைத்தது. ஜன்னலோர இருக்கை. எனக்கு அடுத்து முப்பத்தி ஐந்து மதிப்பில் ஒருவர். அடுத்து அவர் மனைவி. அவர்களது மூன்று வயது மதிக்கத் தக்க மகள்.

எதையும் ரசித்தாள். பேசிக் கொண்டே வந்தாள். நிறைய கேட்கவும் செய்தாள்.

அவளது பெற்றோர்கள் இவளை சட்டை செய்ததாகவே தெரியவில்லை.
அவர்கள் எதிர் வீட்டு ஷர்மி பற்றி , அவளது அண்ணி பற்றி , பைனான்சில் இருக்கும் நகையை திருப்பி வங்கியில் வைத்து வட்டியை குறைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் பற்றி , இப்படியாக எது எது பற்றியோ இடைவெளி இன்றி பேசிக்கொண்டேதான் வந்தார்கள்.

"ஐ! அம்மா அங்க பாரேன் ரெண்டு கொரங்கு" என்ற அவளது கொண்டாட்டத்தை அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. அவர்கள் பேசிக் கொண்டே வந்தார்கள்.

அவளும் இதைப் பற்றியெல்லாம் கவலைப் பட்டதாகவே தெரியவில்லை.

இப்போது அவள் எனக்கும் அவளது அப்பாவிற்கும் இடையில் வந்து நின்றாள். "ஏய் மாமாவ தொந்தரவு பன்னாத" ஏதோ சடங்குக்காய் சொல்லி விட்டு மீண்டும் அவர்களது பேச்சிலே கறைந்து போனார்கள்.

என் விரல்களை பிடித்துக் கொண்டாள். நான் ஒரு புன்னகையோடு அவளைப் பார்த்தேன். எனது புன்னகை அவளை உற்சாகப் படுத்தியிருக்க வேண்டும்.

" மாமா ஏன் உங்க கைல மோதிரமே இல்ல. எங்க அப்பா ரெண்டு மோதிரம் , ப்ரேஸ்லெட் எல்லாம் போட்டிருக்கங்களே"

"ஏய் எரும, மாமாவ தொந்தரவு பன்னாதன்னு சொன்னேனா" என்று சத்தம் போட்டவாறே அவளைத் தன் பக்கமாக இழுத்தார் அவளது அம்மா.

"விடுங்கம்மா. சின்னக் குழந்ததானே" என்று அவர்களை சமாதானப் படுத்தி அவளை மீட்டேன். அத்தோடு அவளை விட்டு விட்டு அவர்கள் மீண்டும் பேசத் தொடங்கி விட்டார்கள்.

அவர்களது எரிச்சல் பற்றியோ , கோபம் பற்றியோ இவளும் கவலைப் படவில்லை.

"மாமா கேட்டேன்ல , சொல்லுங்க ஏன் நீங்க மோதிரம் போடல"

"மாமாட்ட இல்லடா. நீ வேனா வாங்கித் தரயா?"

"ம்..சரி , நான் பெரியவளானதும் அப்பாவாட்டம் வேலைக்க்கு போய் உங்களுக்கு மோதிரம் வாங்கித் தாரேன். சரியா?"

அவ்வளவுதான் அடுத்த விஷயத்திற்கு தாவி விட்டாள். ஏதோ பத்து வருடங்களாய் பழகுபவள் போல ஒட்டிக் கொண்டாள் அந்த மூன்று வயது பிள்ளை .

நானும் அவளும் நல்ல நண்பர்களாக மாறியிருந்தோம். பேருந்து சுல்த்தான் பாளையத்தில் நின்றது. சாலை ஒரத்தில் இருந்த கோழிக் கறிக் கடையின் பெயர்ப் பலகையை காட்டினாள். "மாமா அந்தக் கோழி ரொம்ப அழகா இருக்குள்ள"

"ஆமாண்டா"

"ஒங்களுக்கு மந்திரம் தெரியுமா?"

"தெரியுமே.." நானும் அவளுக்கு ஏற்ற விளையாட்டுக் கூட்டாளியாக மாறத் தொடங்கியிருந்தேன்.

" அப்ப ச்சூ காளி மந்திரம் சொல்லி என்ன அந்தக் கோழிப் படமா மாத்துங்க ப்ளீஸ்"

"எதுக்குடா கோழிப் படமா மாத்திட்டு . அழகான கோழியாவே மாத்திடவா?"

" வேனாம். லூசு மாதிரி பேசாம என்ன கோழி படமா மாத்துங்க"

"ஏண்டா . கோழியாவே மாத்திடறேனே."

" மக்கு , மக்கு கோழியா மாறினா அறுத்துறுவாங்கல்ல.."

ஒருமுறை எழுதினேன்

"தோளில் தூங்கும்
குழந்தையின் சழுவாயில் கசியும்
ஞானம்" என்று. அடடா நாம் கூட சரியாய்த்தான் எழுதுகிறோம் போல.

அவள் பத்து கிலோ இருப்பாள் அநேகமாக. எனில் பத்து கிலோ ஞானம் அவள்.

அது சரி இவளது ஞானத்தை ரசிக்காமல் வேறு என்னத்தை பேசிக் கிழித்து விடப் போகிறார்கள் . சுத்த ரசனை கெட்டதுகள்.

........

"பின்னிருக்கையில் ஒரு போதி மரம்" என்று தனது சிறு கதை நூலுக்கு பெயர் வைத்தான் தம்பி ஆங்கரை பைரவி.

ஆக ஆங்கரைபைரவிக்கு பின்னிருக்கயில் ஒரு போதி மரம்

வைரமுத்துவிற்கு வானம் போதி மரம்

எனக்கு மொத்த பேருந்துகளும் வரம் தரும் போதி மரங்கள்தான்.

Monday, March 8, 2010

ஒற்றை கவிதை வரி


ஊர்ந்து
ஊர்ந்து
உறக்கத்தைக் கெடுத்தது
ஒற்றை கவிதை வரி

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...