Wednesday, April 28, 2010

எம்.ஏ. சுசீலா பார்வையில் அந்தக் கேள்விக்கு வயது 98

தோழர் என விளித்தபடி அன்புமடல் எழுதும்இரா எட்வினின் ‘’அந்தக் கேள்விக்கு வயது 98 ‘’ என்ற கட்டுரை நூல் ..


‘’சமுதாயத்தின் மீதான இடது சாரிப் பார்வை,உரிமைக்கான குரல்,தாய்மொழி மீதான அக்கறை,பலரும் கவனிக்க மறுக்கும் நியாயங்களை உற்று நோக்கி வெளிப்படுத்தும் மன உறுதி’’ஆகிய கூறுகளே இந்தத் தோழர் எழுத்தின் சாரம் எனத் தமது அணிந்துரையில் கோவி.லெனின் குறிப்பிட்டிருப்பதில் அணுவளவும் பிழையில்லை என்பதை இந்நூலின் ஒவ்வொரு கட்டுரையும் மெய்ப்பிப்பதை வாசித்துத்தான் உணர வேண்டும் என்றாலும்..பானைச் சோற்றுக்குப் பதச்சோறாய்ச் சில....


இந்த நூலின் தலைப்பு சற்று ஆச்சரியப்படுத்துவதாய் இருக்கவே முதலில் அந்தக் கட்டுரைக்குள் நுழைந்து பார்த்தால் .... தெரிந்த செய்தியாக இருந்தாலும் கட்டுரை முடிவில் எட்வின் வைத்திருக்கும் வித்தியாசமான முத்தாய்ப்பு மானமுள்ள தமிழர்களைத் தலைகுனியச் செய்யும் சாட்டையடியாக வந்து விழுகிறது.பின்னாளில் பாரதியின் சீடராகி அவரது வாழ்க்கை வரலாற்றை அற்புதமாக வடித்துத் தந்த வ.ரா.என்னும் வ.ராமசாமி அய்யங்கார் முதன் முதலாகப் பாரதியைக் காணப் புதுச்சேரி வருகிறார்.ஆங்கிலத்தில் பேசினால் பாரதி மகிழ்வார் என எண்ணி வ.ரா. ஆங்கிலத்தில் பேச பாரதி செவிட்டில் அறைவது போல


‘’இன்னும் எத்தனை நாளைக்கு ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் ஆங்கிலத்தில் பேசப் போகிறீர்கள்’’என்று ஒரு கேள்வியைக் கேட்கிறார்


அதற்கு எட்வினின் பின்னுரை இதோ....இது நடந்தது..1910ஆம் ஆண்டு.பாரதியின் கேள்விக்கு இப்போது வயது 98.இன்னும் இரண்டாண்டுகளில் நூற்றாண்டு.(எட்வின் நூலெழுதப்பட்டு 2 ஆண்டு கடந்து விட்டதால் இப்போது உண்மையாகவே அந்தக் கேள்வி கேட்கப்பட்டு 100 ஆண்டு முடிந்து விட்டது.)


எட்வின் கேட்கிறார்...‘இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு இந்தக் கேள்வியை உயிரோடு வைத்திருக்கப் போகிறோம்

வண்ண மயமான செம்மொழி மாநாடுகளின் கோலாகல ஆர்ப்பாட்டங்களில் திளைத்தபடி....தமிழை ஆங்கில உச்சரிப்பில் பேசும் தொலைக்காட்சித் தொகுப்பாளர்களோடு (இரு பாலாரும்தான்)கூச்சமின்றித் தொலைபேசியில் கதைத்துக் கொண்டிருக்கும் நமக்குப் போயும் போயும் இந்தக் கேள்விக்கு பதில் தேடவா நேரம் இருக்கப் போகிறது..?


பாவம்..... அப்பாவி எட்வின்கள் ஒருபக்கம் புலம்பிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்

தமிழ்ப் பாடகர் ஒருவர் பாடிய தெலுங்குக் கீர்த்தனைகளை ஒரு முறை கேட்ட சாயிபாபா, தெலுங்கு உச்சரிப்பில் கவனம் செலுத்துமாறு அவரிடம் அறிவுறுத்தியதை எடுத்துக் காட்டும் எட்வின் அதைத் தனக்கே உரிய கோணத்தில் இப்படிப் பார்க்கிறார்.


‘’கடவுளின் அவதாரமாகவே பல கோடி மக்கள் அவரைக் கொண்டாடினாலும்,தமது தாய்மொழி தெலுங்கு என்பதிலும்,தனது தாய்மொழியை வேற்று மொழிக்காரரும் சரியாய் உச்சரிக்க வேண்டும் என்பதிலும் அவருக்குள்ள அக்கறையைப் போற்றுகிறோம்,.இன்னுஞ் சொல்லப்போனால் அநேக விஷயங்களில் அவரோடு முரண்படுகிற நாம் அவரது மொழிப்பற்றை சிரந்தாழ்த்தி மகிழ்ச்சியோடு வணங்குகிறோம்....நாம் தமிழர்.நமது தாய்மொழி தமிழ் தமிழ் .இதை நாம் எப்போது உணரப்போகிறோம்?’


உணர்ச்சி வேகத்தில் மொழி உணர்வுக்குக் கொடி பிடித்து ஆவேசத்தைத் தூண்டிவிடும் மலிவான நோக்கம் எதுவும் நூலாசிரியரிடம் இல்லை.அடிப்படையே ஆடிப்போய்விடுமோ என்ற ஆதங்கமே அவரை அங்கலாய்க்க வைக்கிறதென்பதை அவரே பதிவு செய்கிறார்.


‘’எனக்கும் தமிழ்தான் மூச்சுஆனால் அதைப் பிறர் மேல் விட மாட்டேன்’’என்பார் ஞானக் கூத்தன்.ஆமாம். பிறர் மீது விட வேண்டாம்ஆனால் நாமாவது சுவாசிக்க வேண்டாமா

மொழி சார்ந்து எழுப்பும் இந்தக் கேள்விகளோடு நம் மனச் சாட்சியைத் தொட்டு உலுக்கி ...சமூகம்,அரசியல்,மதம் எனப் பல களங்களிலும் பல வினாக்களை முன் வைக்கின்றன இவரது கட்டுரைகள்.


சூரியனை மையமாக வைத்துப் பூமி சுற்றுகிறது என்ற கருத்தை 1633 இல் வெளியிட்டுத் திருச்சபையின் கருத்துக்கு எதிராகக் கருத்துச் சொன்ன கலீலியோவின் மீது போடப்பட்ட அதே வழக்கு 360 ஆண்டுகளுக்குப் பின்,1990 இல் மேல்முறையீட்டுக்கு வந்தபோது திருச்சபை தன் முடிவை மாற்றிக்கொண்டு அவரது கருத்தை ஏற்றது என்பதால் ‘மதத்தை விஞ்ஞானம் வென்றது’என ஆத்மார்த்தமாக மகிழும் எட்வின் அத்துடன் வேறொரு சுவாரசியமான தகவலையும் சேர்த்துச் சொல்கிறார்.


‘90 இல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது , தற்போது போப்பாண்டவராக உள்ள பெனடிக் மட்டும் கலீலியோவின் கருத்தத் திருச்சபை நிராகரிக்க வேண்டுமென்று விடாப்பிடியாகச் சொல்லியிருக்கிறார் என்பதும்...அந்தக் காரணத்தினாலேயே - இப்பொழுது அவர் போப்பாண்டவராகவே இருக்கும் நிலையிலும் ரோமிலுள்ள லா ஸாட்னீஸா என்ற பல்கலைக் கழகம் அவர் அருளாசி தரவிருந்த நிகழ்வைத் துணிவோடு ரத்து செய்து விட்டதென்பதும் (17.01.08)எட்வின் தரும் புதிய தகவல்கள்.


‘அவர்களும் விசுவாசிகளே ஆனால் அற்ப விசுவாசிகளல்ல.விஞ்ஞானத்தை ஏற்பவர்கள்’ என்று கூறும்கட்டுரையாளர் ‘குற்றம் குற்றமே’ என்ற இக் கட்டுரையை,‘இந்த நிகழ்வை இந்தியாவிலுள்ள கல்வி நிலையங்கள் அருள் கூர்ந்து கவனிக்க வேண்டுமென்றும்,மதவாதிகளின் நெருக்கடியைப் பழமைக் கூத்தை’ எதிர்க்க வேண்டும் என்றும் முடித்திருப்பது இந்தியநடப்பியலின் கவலை தரும் போக்கில் அவருக்குள்ள மெய்யான அக்கறையை ஆத்மசுத்தியோடு பதிவு செய்கிறது


மீண்டும் அதே பூமி பற்றிய ஆராய்ச்சி. ஆனால் இம்முறை தர்க்கத்தில் ஈடுபடுபவர்கள் சின்னக் குழந்தைகள்.


‘’பூமி தட்டைன்னு சொன்ன ஆளுடீ உங்க சாமி ! பூமி உருண்டைன்னு தெரியாத சாமி எப்படிடீ பூமியப் படச்சிருப்பான்’’என்று வாதத்தைத் தொடங்கி வைக்கிறான் கட்டுரையாளரின் மகன்.‘’...குண்டன் தப்பு தப்பாப் பேசறான் இப்ப்டிப் பேசறதனாலேதான் எப்பவும் செகண்ட் ரேங்கிலேயே இருக்கே ....சாமி தப்பா சொல்வாரா ‘’என்றெல்லாம் தங்கை ஆதங்கப்பட்டுத் தவித்தாலும்


‘’பூமி உருண்டைன்னு உனக்கெப்படித் தெரியும்’’ என்ற தன் அடுத்த கேள்வியை அண்ணனிடம் வைக்கத் தவறவில்லை அவள்.


‘’சயின்ஸ்லே படிச்சேண்டி கத்தரிக்கா’’என்கிறான் பதிலுக்கு அவன்.


அதற்கு அந்தத் தங்கை சொல்லும் பதிலிலேதான் அப்பழுக்கற்ற குழந்தை மனதைப் பிட்டு வைக்கிறார் கட்டுரையாளர்.


‘’ஏம்பா சாமி காலத்திலே சயின்ஸ் இல்லதானேப்பா. சாமிக்கு சயின்ஸ் தெரியாது.அதனாலேதான் அப்படிச் சொல்லியிருப்பார். சாமி சயின்ஸ் படிச்சிருந்தா உன்னைவிட பர்ஸ்ட் ராங்கா சொல்லியிருப்பார்’’

என்று அந்தப் பிஞ்சுப் பெண் பேசி முடிப்பதைச் சொல்லி


‘குழந்தை மாதிரி தெளிவாய்ப் புரிந்து கொள்ள தெளிவாய்ப்பேச நமக்கின்னும் பயிற்சி வேண்டும்’என்று கட்டுரையை நிறைவு செய்கிறார்.பி.எஸ்.ராமையாவின் ‘நட்சத்திரக் குழந்தைகள்’சிறுகதையை நினைவூட்டும் கட்டுரை ஆக்கம் இது.


பிரபலமானவர்களின் எழுத்துக்களை மட்டுமே மேய்ந்து விட்டு நகர்ந்து செல்லும் நாம் தெரிந்துகொள்வதற்கான நல்ல பல தகவல்களும்,முற்போக்குச் சிந்தனைகளும்,மானுட நேயமும் ...பார்வைக்கு அதிகமாக வந்திராத நூல்களிலும் கூடக் குவிந்துகிடக்கக் கூடும் என்பதற்கான கண் திறப்பு எட்வினின் இந்நூல்.(முகம் தெரியாத எனக்கு இந்நூலை அனுப்பி,இதைப் படிக்கும் அனுபவத்தைச் சாத்தியமாக்கிய அவருக்கு மீண்டும் நன்றிகள்.)இனியேனும்...புத்தகக் கடை வரிசைகளை நூலக அடுக்குகளைக் கடந்து செல்கிறபோது நம் கவனம்..அதன் வெளிச்சம் இவ்வாறான நூல்கள் மீதும் சற்று விழட்டும்.


‘ஏதேனும் ஒன்று என் உசிரைப் பிசையுமானால் அதைப் பற்றி எழுத முற்படுகிறேன்’ என்று தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார் தோழர் எட்வின்.தனது எழுத்தின் வல்லமை படிப்பவர் இதயத்தையும் பிசையும் வலிமை வாய்ந்ததாக இருப்பதை இதற்குள் பல எதிர்வினைகள் அவருக்கு உணர்த்தியிருக்கக் கூடும்.

மண் பயனுறச் செய்யும் எழுத்து....மனித மாண்புகளைத் தூண்டும் எழுத்து.....மலினமான மோசடிகளைச் சாடும் எழுத்து...அவருக்கு வரமாக வாய்த்திருக்கிறது.பல நூல்களின் தொடர்ந்த உருவாக்கத்துக்கான மொழித் திறனும்...சொல்வளமும் அவரிடம் குறைவின்றி நிறைந்து கிடக்கிறது.அவற்றை உள்ளே கனல் பரப்பி எழுத்தாக்கமாய் வெளிக்கொணருவதற்கான எழுச்சியும் ,கிளர்ச்சியும்,ஏற்ற மனநிலையும் பொருந்த வாய்க்க வேண்டும் என்பதே நம் பேரவா.


நூல் விவரம்; இரா.எட்வின்,

‘அந்தக் கேள்விக்கு வயது 98’

சாளரம்-வெளியீடு,

2/1758,என்பீல்டு அவென்யூ,

மடிப்பாக்கம்,

சென்னை- 600 091










No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...