Wednesday, July 10, 2024

கவிதை 19

 

ஒரு

நீல வண்ண வாளியில்
முக்கால் பங்கு தண்ணீர்
அரைக்கால் பங்கு
நான் செத்ததாக வதந்தி
கைப் படாமல்
குச்சி விட்டு கலக்கி
கருவண்ண
டர்கி டவலை
அதில் நனைத்து
பிழியாமல்
முகநூல் கொடியில்
கிளிப் போட்டு
தொங்க விடுங்கள்
வட்டிக்கு
வையும்
கந்துக்காரன் பதறுவதை
மனதார
ரசிக்க வேண்டும்

கவிதை 18

 

குழாய் விளக்கிற்கு கீழே
ஒரு பூச்சி
பூச்சிக்கு கீழே
தவத் தோரணையில்
ஒரு பல்லி
என்ன நடக்குமென்று
பார்த்துக் கொண்டிருந்த என்னை
வெளியே இழுத்தது அழைப்பொலி
வந்து பார்த்தால்
பூச்சியும் காணோம்
பல்லியும் காணோம்
சாப்பிட்டிருக்குமா பல்லி
இல்லை
தப்பித்திருக்குமா பூச்சி

கவிதை 17

 

அதிகாலை
கனவில்
பாப்பா
கொட்டிய தண்ணீரில்
நனையவே இல்லை நான்
பாப்பா
தண்ணீர் ஊற்றினால்
நனைய மாட்டோமாம்
பாப்பா
நனையனும்னு சொன்னாதான்
நனைவோமாம்
பாப்பா சொல்கிறாள்

கவிதை 16

 

எதைப் பார்த்தாலும்
உன்னில் இல்லாத
உன் சாயல்

கவிதை 15

 

சடச் சட என்ற
சத்தம் கேட்டு
வெளியே வருவதற்குள்
நனைகிற ஆசையை
உலர்த்திவிட்டுப் போயிருந்தது மழை

கவிதை 14

 

யார் கண்டது
கழுதைகள் தங்களுக்குள்
மனிதனை
கழுதை என்றும்
ஓநாயை
மனிதன் என்றும்
அழைத்துக்கொள்ளக் கூடும்

கவிதை 13

 

கடவுள் இல்லை என
நம்புபவன் நான்
எலும்பும் சதையுமாய்
இருக்கிறீர்கள் நீங்களென்பதால்
நீங்கள் கடவுளில்லை என்கிறேன்
எனக்குப் பின்னும்
நீங்கள்
வாழ்வாங்கு வாழ வேண்டும்
கடவுள் மரணமற்றவன் என்கிறீர்கள்
வாழ்வாங்கு வாழ்ந்தாலும்
நீங்களுமொருநாள்
போகத்தான் வேண்டுமென்பதால்
நீங்கள் கடவுளில்லை என்கிறேன்
பொய் பொய்யாய் சொல்கிறீர்கள்
ஈரம் , இரக்கமற்றிருக்கிறீர்கள்
இல்லாத கடவுளுக்கு
இருப்பதாக சொல்லப்படும்
குணங்கள் எதுவுமில்லை
உங்களிடம் என்பதால்
உங்களை நீங்களே
கடவுளென்பதை என்னால்
ஏற்க இயலாதென்பதோடு
சக கடவுளுக்கே
ஒழுகுகிற கூரையைக் கட்டி
அவனை நனையவிட மாட்டான்
கடவுள் என்பதால்
நீங்கள்
கடவுள் இல்லை என்கிறேன்
போக,
நீங்கள் தோற்றிருந்தால்
உங்களை அன்று
நேர்கண்டவரும்
இதை
ஏற்கமாட்டார்
என்பதுமறிக

கவிதை 12

 

தவத்தை
கலைத்து விடுகிறேன்
என்மீது
ஒரே
ஒரு சொட்டு
சாபத்தைத் தெளி

கவிதை 11

 

என்னோடு நான்
பேசிக் கொண்டிருந்ததை
அசைபோட போட
புரிந்தது
யார் யாரெல்லாமோ
பேசியிருக்கிறார்கள்

கவிதை 10

 


ஒரே ஒரு
காரணம்தான்

உனக்கு முன்னால்
நான் போய்விட வேண்டுமென்று
விரும்புவதற்கு

என் சார்ந்த எல்லோரிடமும்
வெளிப்படுத்திவிட்டேன்
நம்மை

உன் சார்ந்த யாரிடமும்
நம்மின்
“அ” னவைக்கூட
ஆரம்பிக்க மறுக்கிறாய் நீ

நான் செத்து
நீ
அழ நினைத்தால்

என்ன சொல்லியும்
அழலாம்

என்
சார்ந்தவர்கள்
உன் கைகளைப்
பற்றுவார்கள்

அணைவார்கள்

ஆறுதல்
சொல்வார்கள்
கண்ணீர் துடைப்பார்கள்

நீ
செத்து
நான் இருந்தால்

அழக்கூட
உரிமை இருக்காது
எனக்கு

எனக்கு
அழுவதற்கு
உரிமை தராத
சாவு
உனக்கெதற்கு

நான்
முதலில்
போய்விடுகிறேன்

இருந்து
என் சாவில்
அழு


கவிதை 09

 

மருத்துவமனையில்
உயிருக்குப்
போராடிக்கொண்டிருக்கும்
தோழனுக்கனுப்ப
ஏதுமற்ற
தங்கள் கையறுநிலை குறித்து
புலம்பிக் கொண்டிருந்த
தாத்தா பாட்டியிடம்
தன்னிடமிருந்த
கிட்காட்டை நீட்டிய
கிரிஷ்
தாத்தாக்கு சரியாகும்
அனுப்பென்கிறான்
எல்லா குழந்தைகளிடமும்
இரண்டே இரண்டேனும்
இருக்கின்றன
யாருக்குமான
நம்பிக்கை வார்த்தைகள்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...