அன்பின் முதல்வர் அவர்களுக்கு,
வணக்கம்
“வள்ளலார் 200” நிகழ்வில் உங்களது உரையைக் கேட்டேன்
அதில் இருந்தே இந்தக் கடிதத்தைத் துவங்கிவிடலாம் என்றே கருதுகிறேன்
முதலில் உங்களது அந்த உரை குறித்து ஒன்று சொல்லிவிட வேண்டும்
அந்த உரையில் உங்களது செழுமையான ஹோம் ஒர்க்கைக் காணா முடிகிறது
வழக்கமாக உங்களது உரையை கிண்டலடிப்பவர்களுக்கு
அடிகளாரின்24 வது பாடலான
“சாதியயிலே மதங்களிலே சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே”
என்பதை அச்சுப் பிசகாமல் நீங்கள் கூரியது உங்கள் எதிரிகளுக்கு ஆச்சரியத்தையும் எரிச்சலையும் தந்திருக்கக் கூடும்
எங்களுக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் தந்தது
நீங்கள் சொன்னதுதான்
தமிழ்நாட்டுக்காரர்கள் பெரியாரையும் எடுக்கிறார்கள் வள்ளலாரையும் எடுக்கிறார்கள் என்பதுதான் நமது எதிரிகளுக்கு இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது
அந்த உரையின் ஓரிடத்தில்
எந்த மாநிலத்திற்குப் போனாலும் பிரதமர் தமிழ்நாடு குறித்தே பேசுகிறார் என்று கூறினீர்கள்
ஆமாம் சார்,
தமிழ்நாடு பிரதமரை தூங்க விடாமல் தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறது என்பதுதான் உண்மை
ஒரு மாநிலத்தில் உரையாற்றும்போது இன்னொரு மாநிலத்தைக் குறித்து பிரதமர் விமர்சிப்பது சரியல்ல என்று மிகச் சரியாக சொன்னீர்கள்
இந்த இடத்தைதான் இந்தக் கடிதத்திற்கான சரியான இடமாக நான் பார்க்கிறேன்
அவர் இந்தியா முழுமைக்கும் பிரதமர் என்பதை அவர் உணராத போதும் அவர்தான் நமக்கும் பிரதமர் என்பதை தமிழ்நாடு உணர்ந்தே இருக்கிறது
நமக்கும் பிரதமரான அவரே பிற மாநிலத்தில் நிற்கும்போது நம்மை விமர்சிப்பது தவறு
அதுவும் தப்புத் தப்பாக விமர்சிப்பது என்பது பெருந்தவறு
அப்படி இருக்க,
உத்திரப் பிரதேசத்தில் இருந்து
அந்த மாநிலத்தின் தற்போதைய முதல்வரின் படத்தினை அட்டைப் படமாகக் கொண்ட இரண்டு புத்தகங்கள் நமது பள்ளிகளுக்கு அனுப்பப் படுகின்றன
ஒரு கடிதமும் இருக்கிறது
அனைத்தும் இந்தியில்
அந்தக் கடிதத்தை கூகிலில் வைத்து மொழி பெயர்த்தால்
யோகி
பெண்களுக்காக,
விவசாயிகளுக்காக
இளைஞர்களுக்காக
புவிசார்ந்த சகிப்புத் தன்மைக்காக
பாடுபட்டு வருகிறார் என்று இருக்கிறது
இவை எல்லாம் பொய் என்பது ஒரு புறம் இருக்கட்டும்
அவர் எப்படி இருந்தால் நமக்கென்ன?
அதை ஏன் நமக்கு அனுப்ப வேண்டும்
இரண்டு அய்யங்கள் எம் அன்பிற்குரிய முதல்வர் அவர்களே
ஒன்று யோகி இப்போதோ அடுத்தோ பிரதமர் வேட்பாளராக நிற்கக் கூடும்
அதற்கான தயாரிப்பாகவும் இருக்கக் கூடும்
அல்லது,
தமிழ்நாட்டில் மதக் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவும் இருக்கக் கூடும்
இவை இரண்டும் யூகம்தான்
வெறுமனே யோகியை இந்திரன் சந்திரன் என்றுகூட இருக்கலாம்
இருந்துவிட்டு போகட்டும்
அதை ஏன் நமக்கு அனுப்ப வேண்டும்
இவை இந்தியில் இருப்பதை
வெறும் திணிப்பாகவும் கொள்ளலாம்
இந்தியில் அனுப்பினால் யார் படிப்பார்கள். கிறுக்குத் தனம் என்று அலட்சியமாகவும் தள்ளலாம்
வாலி சிஹாவிற்கு தந்தை அம்பேத்கர் எழுதிய கடிதத்தில்
”பிக்குகள் மக்களின் மொழியை அறிந்திருக்க வில்லை”
என்று குறிப்பிடுவார்
இவர்கள் நம் மொழியில் அனுப்பாமல் இந்தியில் அனுப்புவதைக் கூட மொழி அரசியலாகவே நான் பார்க்கிறேன்
அனைவருக்கும் இது புரிந்துவிடக் கூடாது என்பதில் இவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்
அனைவரும் படித்துவிட்டால் கொந்தளிப்பு கிளம்பும் என்பதை அவர்கள் அறிந்தே இருக்கிறார்கள்
அவர்கள் அனுதாபிகள் 10 பேருக்குப் போனால் போதும்
அவர்கள் தேடுவார்கள்
தொடர்பு கொள்வார்கள்
அவர்களை அடையாளம் கண்டு அணிதிரட்டலாம் என்ற ஏற்பாடாகவே இதை நான் அய்யுறுகிறேன்
தொடர்ந்து கத்திக் கொண்டே இருக்கிறேன் சார்
கத்திக் கொண்டும் இருப்பேன் ஸ்டாலின் சார்
நன்றி,
அன்புடன்,
இரா.எட்வின்
06.10.2023
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்