Thursday, October 13, 2022

உங்களை சுடச் சொன்ன பாரியண்டேசை உலகம் மறந்துவிட்டது சே

 

அன்பின் சேகுவேரா,

வணக்கமும் முத்தமும்
அக்டோபர் 08, 1967
உங்களது உடைமைகள் குறித்து பொலிவியா ஒவ்வொன்றாக வெளியிடத் தொடங்குகிறது
சில தகவல்களையும் வெளியிடுகிறார்கள்
உங்களோடு இருந்தவர்கள் உறைகிறார்கள்
ஆமாம்,
அவை அவ்வளவு துல்லியமானவை
பிடிபட்டுவிட்டீர்கள்
உயிரோடு இருக்கிறீர்களா? இல்லையா? என்பதுதான் கேள்வி
பிடிபட்ட கணவாயிலேயே நீங்கள் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டதாக கசியவிடப்படுகிறது
பொலிவியாவைக் குறித்தும்
பொலிவிய அதிபர் பாரியண்டோஸ் குறித்தும் நன்கு அறிந்தவர்களுக்கு ஒரு விஷயம் தீர்க்கமாகத் தெரிந்தது
ஒன்று நீங்கள் பிடிபட்ட கணவாயிலேயே கொல்லப் பட்டிருக்க வேண்டும்
அல்லது விசாரனைக்கு முன்பே நீங்கள் உறுதியாகக் கொல்லப்படுவீர்கள்
அமாம்
அமெரிக்காவே உங்களை உயிரோடு பனாமாவிற்கு கொண்டுபோக ஆசைப்பட்டதாக தகவல்கள் உண்டு
பொலிவியாவில் வைத்து விசாரித்தாலும்
விசாரனையை உங்கள் பக்கம் நகர்த்துவீர்கள்
போக,
பொலிவியாவில் மரண தண்டனை கிடையாது
நீங்கள் உயிரோடு இருப்பது மக்களை எப்போது வேண்டுமானலும் கிளர்ந்தெளச் செய்யும் என்பதை
பாரியண்டோஸ் நன்கு உணர்ந்திருந்தான்
ஆகவே
பாரியண்டோஸ் உங்களைக் கொன்றுவிடுமாறு உத்தரவிட
அந்த உத்தரவு ரெக்டெரான் என்பவனுக்கு அனுப்பப் படுகிறது
அவன் அதை செய்வதற்காக
உங்களை அடைத்துவைத்திருந்த பள்ளிக்கு வருகிறான்
பாருங்கள் சே,
பிடிபட்ட உங்களை அடைத்து வைப்பதற்காக பள்ளியை சிறையாக்கி இருக்கிறார்கள்
சிறைகளை பள்ளியாக்க நினைத்த மனிதனை அடைத்து வைக்க பள்ளியை சிறையாக மாற்றினார்கள்
பள்ளியில் இருந்த உங்களுக்கு உணவு அளிப்பதற்கு அனுமதி கேட்கிறார் யூலியா கார்டினோஸ் என்கிற ஆசிரியை
ஆச்சரியம்,
அனுமதி கிடைக்கிறது
என்ன செய்யப் போகிறார்கள் என்னை? என்று கேட்கிறீர்கள்
தனக்குத் தெரியாதென்றும்
கடவுள் உங்களைக் காப்பாற்றட்டட்டும் என்றும் அழுதுகொண்டே கூறியபடி அவர் ஓடிவிடுகிறார்
கடவுள் என்று ஒருவர் இருந்திருந்தால் உங்களைக் காப்பாற்றி இருப்பார்தானே சே
“tri continental" பத்திரிக்கைக்கு நீங்கள் ஒரு முறை பேட்டி தருகிறீர்கள்
கடைநிலையில் இருக்கக்கூடிய உலக மக்களின் விடுதலையே லட்சியம் என்கிறீர்கள்
நம்முடைய ஒவ்வொரு செயலும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான குரலாக இருக்க வேண்டும் என்றீர்கள் அதில்
எவ்வளவு வித்தியாசம்
எல்லோரும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக குரல் தர வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தபோது
ஏகாதிபத்தியத்திற்கு எதிரான செயலே
அதற்கு எதிரான குரல் என்று சரியாக சொன்னவர் நீங்கள்
அதே பேட்டியில்
நமது குரலை ஒரே ஒரு காது கேட்டாலும் போதும்
ஒரே ஒரு கை துப்பாக்கியை ஏந்தினாலும் போதும் என்றும் கூறினீர்கள்
துப்பாக்கி ஏந்த கைகளைத் தேடிய நீங்கள்தான்
எதிரியே தூண்டினாலும் தேவைப்பட்டால் ஒழிய ஆயுதத்தை எடுக்கக் கூடாது என்றும் சரியாகக் கூறினீர்கள்
உங்களிடமிருந்த டைரி ஒன்றைக் கைப்பற்றி பாரியண்டோசிடம் கொடுக்கிறார்கள்
அதை அவர் CIA விற்கு கொடுக்கிறார்
அது எப்படியோ கிடைத்து நூலாகவும் வருகிறது
அய்யோ சே,
07.10.1967 அன்றுகூட எழுதியிருக்கிறீர்கள்
அதில்
வீரமிருந்தாலும் தவறான தந்திரங்களை அவை மக்களை பலிவாங்கும் என்பதால் அவற்றை கையெடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தீர்கள்
இதற்குள் ரெக்டெரான் உங்களைச் சுட வந்துவிட்டான்
முடியாது தடுமாறுகிறான்
போதையேற்றுகிறான்
நீங்களே அவனை உங்களை சுடச் சொல்லி உற்சாகப்படுத்தியதாகவும் உறுதியில்லாத தகவல்கள் கூறுகின்றன
நீங்கள் இறந்ததும்
அசட்டு துணிச்சல்காரர் நீங்கள் என்றும்
இனி லத்தின் அமெரிக்காவில் ஏதும் செய்ய இயலாது என்றும் கூறினார்கள்
ஆனாலும் பாருங்கள்
லத்தீன் அமெரிக்கா சிவந்துகொண்டே இருக்கிறது
அந்த மக்கள் ஜனநாயகத்திலும் பக்குவப்பட்டு வருகிறார்கள்
உலகம் முழுக்க
ஏன் அமெரிக்காவிலும்
பிள்ளைகள் உங்கள் படம் இட்ட பனியன்களை அணிகிறார்கள்
உங்களை சுடச் சொன்ன பாரியண்டேசை உலகம் மறந்துவிட்டது
அவன் உத்தரவால் கொல்லப்பட்ட உங்களை உலகம் அது உள்ளவரைக் கொண்டாடும்
வீர வணக்கம் சே
அன்புடன்,
இரா.எட்வின்
09.10.2022
#சாமங்கவிய இரண்டுமணி பதினான்கு நிமிடங்கள்
09.10.2022

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...