1947 ஆகஸ்ட் 15 நள்ளிரவு
உலகமே இந்திய விடுதலையைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது
பூனேவிலும் 500 பேர் கூடி இருக்கிறார்கள்
ஆனால் அவர்கள் ஏற்றியது ஸ்வஸ்திக் கொடி
அவர்கள் முன்னால் கோட்சே வருகிறான்
“இந்தியப் பிரிவினை என்பது கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு துன்பங்களைத் தந்துள்ள பேரழிவு.
இதைச் செய்தது காங்கிரஸ். அதிலும் குறிப்பாக அதன் தலைவர் காந்திஜி”
கோட்சே ஒரு பத்திரிக்கையாளன் என்பது நம்மில் எத்தனைபேருக்குத் தெரியும் என்பது அய்யமாக இருக்கிறது
”அக்ரானி”, “இந்துராஷ்டிரா” ஆகிய இரண்டு பத்திரிக்கைகளை அவன் வெவ்வேறு காலகட்டங்களில் நடத்தி வந்தான்
காந்தியார் கொலை செய்யப்படும் காலத்தில் அவன் “இந்துராஷ்டிரா” இதழின் ஆசிரியனாக இருந்தான்
1947 ஆகஸ்ட் 15 நாளிட்ட இந்துராஷ்டிரா தலையங்கம் எழுதப்படாமல் அந்த இடம் கட்டம் கட்டப்பட்டு வெள்ளையாக விடப்பட்டிருந்தது
1947 நவம்பர் ஒன்று
“இந்துராஷ்டிரா” இதழின் பங்குதாரர்கள் கூட்டம் நடக்கிறது
அதன் ஆசிரியரான கோட்சே பேசுகிறான்
“தனது பிணத்தின் மீதுதான் இந்தியாவைப் பிளக்க முடியும் என்று காந்தி கூறினார்.
இந்தியா பிளக்கப்பட்டுவிட்டது
இன்னும் காந்தி உயிரோடு இருக்கிறார்” (தோழர் அருணனின் “கோட்சேயின் குருமார்கள்” பக்கம் 11)
இதன் பொருள் என்ன? இதை கவனித்து உரிய நடவடிக்கை எடுத்திருந்தாலே காந்தியார் இன்னும் கொஞ்சம் காலத்திற்கு உயிரோடு இருந்திருப்பார்
”நல்லவராக வாழ்வதும்கூட மிகவும் ஆபத்தானது”
என்று காந்தியாரின் இறப்பு செய்தியை கேட்ட மாத்திரத்தில் பெர்னாட்ஷா கூறிய செய்தியை
ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பதிப்பித்த
“காந்தியார் கொலை - அதிர்ச்சியூட்டும் தகவல்கள்”
என்ற நூலின் 97 ஆவது பக்கத்தில் பார்க்கிறோம்
இனி இந்தக் கட்டுரையில் (அந்த அளவிற்கு இது நகரும் பட்சத்தில்) பக்க எண் என்று மட்டுமே தருகிறேன். அது மேல்காண் நூலின் குறிப்பிட்ட பக்கம் என்று கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்
ஒரு மகத்தான மனிதனின் பிறந்த நாளில் அவரது மரணம் குறித்தே நாம் தொடங்க வேண்டிய சூழல் இருக்கிறது
இந்த சூழலுக்கு நம்மை அவர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள் என்கிற வகையில் அவர்களது வளர்ச்சியை
அதுவும் 2014 இல் ஒன்றியத்தை அவர்கள் கைப்பற்றிய பிறகு அவர்களது அசர வளர்ச்சியை நாம் ஒத்துக் கொள்ள வேண்டும்
அவர்களுக்கான எதிர்வினையை நாம் போதுமான அளவு தரவில்லை என்பதையும் நாம் ஏற்க வேண்டும்
அப்போதுதான் நாம் செய்ய வேண்டியதை இனியாவது சரியாக செய்ய இயலும்
காந்தியைக் கொன்றது கோட்சே என்ற தனி மனிதன் அல்ல
அவரைக் கொன்ற கோட்சே ஒரு கூட்டத்தின் பிரதிநிதி
அந்தக் கூட்டத்தை இயக்கியது ஒரு மிகக் கொடிய மதப் பாசிசத்தின் பிரதிநிதி
ஆக,
காந்தியைக் கொன்றது ஒரு சித்தாந்தம்
இதை காந்தி கொல்லப்பட்டபோதே சரியாகப் புரிந்து கொண்டவர் தந்தை பெரியார்
ஒரு கொலையை செய்திருக்கிறார்கள்
உலகமே அதிர்ந்த ஒரு கொலையை செய்திருக்கிறார்கள்
கையும் களவுமாகப் பிடிபட்டிருக்கிறார்கள்
ஆக,
தாங்கள் செய்த ஒரு மகா மனிதனின் கொலையை
கொலையாளியை கையில் வைத்துக் கொண்டு தங்களை இந்த அளவிற்கு வளர்த்துக் கொண்டு
0210.2022 அன்று அமைதி ஊர்வலம் நடத்த அனுமதி கோருகிற தைரியத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்பதை வெறும் தற்செயலான வளர்ச்சி என்று கொள்வோமானால் நாம் இன்னும் பின்னடைவுகளை சந்திக்க நேரும்
அவர்கள் அனுமதி கேட்கும் தைரியத்தைப் பெற்றிருப்பது கண்டு அதிர்ச்சியுற்றாலும்
“அவர்கள் அவர்களது சீருடையோடு தெருவிற்கு வருகிறார்கள்
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு
அதோ வருகிறார்களே அவர்கள்தான் காந்தியைக் கொன்றவர்கள்
அவர்கள்தான் காமராசரைக் கொன்றவர்கள்
அவர்கள்தான் எல்லோருக்குமான கல்விக்கு எதிராக நிற்பவர்கள்”
என்பதை நம் மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்று சரியாகக் கூறி இருக்கிறார் தோழர் Thirumurugan Gandhi
இதை நாம் முறையாக இதுவரை செய்யவில்லை
“பிரிவினையின்போது இந்து அகதிகளின் துயரைப் பாராது, இந்த நாட்டிலேயே தங்கிவிட்ட முஸ்லிம்களின்மேல் காந்தியார் பரிவு காட்டினார்” என்றும்
“பாரத மாதாவைக் காப்பாற்ருவதற்கு காந்தியைக் கொல்வதைத் தவிர வேறு வழி இல்லை, அவரைக் கொன்றது சரியே” என்றும்
அவர்கள் காந்தியாரின்மீதான தாக்குதல்களைத் தொடுத்தபோது
காந்தியர்கள் தம் மறு கன்னத்தைத் திருப்பிக் காட்டியவாறே இருந்தனர்”
என்று துசார் ஏ. காந்தி கூறுவதை (பக்கம் 83) நம்மால் மறுக்க முடியாது
காந்தியைக் கொன்றவர்கள் காந்தியின் பிறந்த நாளைக் கையெடுக்க முன் வந்ததும் தமிழகத்தில் அதை முதலில் எதிர்கொண்டவர் தோழர் திருமா அவர்கள்
அக்டோபர் 02, 2022 அன்று தங்கள் கட்சி தமிழகம் முழுவதும் அமைதிப் பேரணி நடத்தும் என்றும் அறிவித்தார்
காந்திக்கு ஆதரவாக திருமா வரலாமா?
காந்தியே சனாதனத்தை ஏற்றவராயிற்றே
திருமா சனாதனத்தை எதிர்ப்பவராயிற்றே
எரவாடா மறந்துபோயிற்றா திருமாவிற்கு
என்றெல்லாம் நமது பக்கம் இருந்தும்
திருமா தீயசக்தி என்று திரு H.ராஜாவிடமிருந்தும் குரல்கள் கிளம்பின
எதையும் பொருட்படுத்தாமல் திருமாவின் முன்னெடுப்பை வரவேற்று இரண்டு பொது உடமைக் கட்சிகளும் அவரோடு இணைந்தன
மே 17 இயக்கம் அதில் தன்னையும் இணைத்துக் கொள்ளும் என்று தோழர் திருமுருகன் காந்தி அறிவித்தார்
”மனிதச் சங்கிலி”யாக மாறியது
இரண்டையும் தடுத்திருக்கிறது மாநில அரசு
இரண்டிற்கும் தடை நியாயமா? என்பது பற்றி பிறகு பேசுவோம்
ஏன் தோழர் திருமா காந்தியைக் கையில் எடுக்கிறார்?
”வாழ்ந்த காந்தி வேறு, செத்த காந்தி வேறு” என்று தந்தை பெரியார் சொன்னதை அவர் மிகச் சரியாக உள்வாங்கி இருக்கிறார்
காந்தி வாழும்போது வர்ணாசிரமத்தை ஏற்கிறவராகவே இருந்தார் என்பது உண்மை
அதை அவர் நம்பினார்
தான் நம்பிய ஒன்றை அவர் எடுத்து வைத்தார்
அது தவறு என்று பட்ட மாத்திரத்தில் அவர் தன்னை மாற்றிக் கொண்டார்
அப்படியாக அவர் மாறியதுதான் அவரது கொலைக்கான காரணங்களுள் முக்கியமானது
அப்போது ஓமாந்தூரார் தலைமையிலான காங்கிரச் ஆட்சி
அவரது ஆட்சியை ”தாடி இல்லாத ராமசாமியின் ஆட்சி என்றும்
பார்ப்பனர்களுக்கு உரிய கல்வி மறுக்கப்படுவதாகவும்
“சுதந்திரா” பத்திரிக்கையிலும் “THE HINDU" விலும் எழுதுகிறார்கள்
இதுகுறித்தும் “வகுப்புவாரி” முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும் காந்தியிடம் முறையிடுகிறார்கள்
இதுகுறித்து ஓமாந்தூராரிடம் காந்தியார் விசாரிக்கிறார்
ஓமாந்தூரார் மிகத் தெளிவான விளக்கத்தை அளிக்கிறார்
பார்ப்பனர்களிடமிருந்து எதையும் பிடுங்கவில்லை
அவர்கள் முழுவதையும் அபகரித்து வைத்துள்ள நிலையில் மற்றவர்கள் தமக்கானதை ஓரளவேனும் பெறுவதற்கான முயற்சியே ”வகுப்புவாரிமுறை” என்பதை விளக்குகிறார்
காந்தியார் புரிந்துகொள்கிறார்
பார்ப்பனர்களைப் பார்த்து
“வேதம் ஓதுதல்தானே வேதியர்க்கழகு
தர்பையும் பஞ்சாங்கமும் பிடிக்க வேண்டிய நீங்கள் ஏன் சனாதனத்தையும் வைதிக நெறிகளையும் விட்டுவிடு ச்டெதாஸ்கோப்பையும் டி-ஸ்கொயரையும் எடுக்க விரும்புகிறீர்கள் இது நியாயம் அல்ல”
என்கிறார்
07.10.1947 அன்று “இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு” என்கிறார்
அவர் உயிரோடு இருந்தால் இந்தியா சுயமரியாதை நாடாக மாறிவிடும் என்று பயந்தவர்கள் காந்தியை அவர்கள் சுட்டுக் கொல்கிறார்கள் (பக்கங்கள்1X மற்றும்X)
காந்தியாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நன்னிலம் அருகே உள்ள சன்னாநல்லூரில் பெரியார் பேசுகிறார்
அப்போது அன்றைக்கு இளைஞராக இருந்த கலைஞர் கொஞ்சம் கோவமாக எதையோ பேச குறுக்கிட்ட பெரியார்
“சுட்டதற்காக துப்பாக்கி மீது ஆத்திரப்படலாமா?” என்று ஆற்றுப்படுத்துகிறார்
ஆமாம் துப்பாக்கிக்கு பின்னால் உள்ள சித்தாந்தத்தின் அரசியலை பேசுவோம்
உரக்கப் பேசுவோம்
ஒன்று சேர்ந்து இன்னும் இன்னுமாய் உரக்கப் பேசுவோம்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்