Friday, July 17, 2015

65/66 காக்கைச் சிறகினிலே, ஜூன் 2015



தோழர் கனிமொழி அவர்களிடம் இருந்து முகநூல் நட்புக் கோரிக்கை வந்திருந்தது. தோழரைப் பற்றி தெரிந்து கொள்வோமே என்பதற்காக அவரது பக்கத்துள் நுழைந்தேன். உள்ளே போகப் போக இவர் எப்படி இவ்வளவு நாள் நம் பார்வைக்கு தட்டுப் படாமல் போனார் என்று வியந்தேன். அவரது பதிவுகள் மட்டுமல்ல அவர் தேர்ந்தெடுத்து பகிர்ந்திருக்கும் பதிவுகளும் மிக மிக ஆழமானவை.

நெல்சன் சேவியர் என்ற தோழரின் பதிவொன்றை அவர் பகிர்ந்திருந்தார். அம்மாடி , அப்படி ஒரு பதிவு. எத்தனை நடக்கிறது நமக்குத் தெரியாமலே நம்மைச் சுற்றி.  தெரு முக்கத்து தேநீர்க் கடையில் வெங்காய பக்கோடாவுடனான உரையாடலில் தனது அம்மாவிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும், ஏதாவது நல்ல மனிதர் கிடைத்தால் சொல்லுமாறும் அவரது தோழன் கேட்டதாக நெல்சன் பதிகிறார். இதை படிக்கும் போது நமக்கே ஆச்சரியத்தின் பிடியிலிருந்து விடுபட முடியவில்லை. என்றால் அதை அருகிருந்து கேட்ட நெல்சனுக்கு எப்படி இருந்திருக்கும்?

நான்கு ஆண்டுகளாக விதவையாக இருக்கும் தனது அம்மாவிற்கு இப்போது 37 வயதுதான் என்றிருக்கிறார். 20 வயதே ஆன தனக்கே உடலின் அவஸ்தை கட்டுப்படுத்த முடியாமல் இருக்குமெனில் 37 வயதில் தனது தாயாருக்கு எவ்வளவு கஷ்டம் இருக்கும் என்பதை உணருகிறார். தன் அம்மாவிற்கு திருமணமானால் அந்த மனிதரை சித்தப்பா என்றோ பெரியப்பா என்று அழைத்துக் கொள்வதாகவும் கூறியிருக்கிறார்.

கலாச்சாரத்தின் மாய வலைகளை அறுத்தெறிந்து இதைச் செய்வதென்ன சாத்தியமா என்றுதான் நெல்சன் நினைத்திருக்கிறார்.

முயற்சிக்கிற மாதிரி கடுமையாக முயற்சித்தால் முடியும்தான்.
சொன்னது போலவே தனது தாயை சம்மதிக்க வைத்து மனைவியை இழந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்து அவரை சித்தப்பாவாக ஏற்கிறார். சித்தப்பனும் பிள்ளையும் கேரம் விளையாடுகிறார்கள் ஓய்வில்.  இந்த மண்ணில் இவ்வளவு உன்னதமான காரியம் நடக்கிறது என்றால் அதைக் கொண்டாட வேண்டாமா? கொண்டுபோக வேண்டாமா?   நெல்சனிடம் ஒரு வேண்டுகோள் நமக்கு,  அந்த இளைஞனை அவனது சித்தப்பாவை, அம்மாவை பார்க்க வேண்டுமே.

ஆத்திரத்தை அடக்கலாம் ஆனால் மூத்திரத்தை அடக்க முடியாது என்று முதன் முதலில் சொன்னவரை கைகுலுக்கி பாராட்டவேண்டும். மிகச் சரியாக
சொல்லப்பட்ட அனுபவ முத்திரைகளுள் முதன்மையான வாக்கியம் இது.
கந்துக்காரனுக்கு பயந்து தெருத் தெருவாக திரும்புவது மாதிரி குட்டிச் சுவர் ஏதேனும் கிடைக்காதா என்றுஅலைகிற அனுபவம் இருக்கிறது
பாருங்கள்... அப்பப்பா.. அப்படியொரு அவஸ்தை அது. அப்படியே ஏதேனும்
குட்டிச் சுவர்கிடைத்து ஒதுங்கலாமென்றால் அங்கு யாரேனும் நடமாடிக்
கொண்டோ அல்லது நின்று பேசிக் கொண்டோ இருந்தால் அந்தக்குட்டிச் சுவர்
சபிக்கப்பட்ட குட்டிச் சுவாராகும். ஆமாம், ஒன்னுக்கிருக்க ஒத்துழைக்காத சுவர் இருந்தென்ன, இல்லாமல்போனால்தான் என்ன.

அப்படி ஒரு அவஸ்தையை சமீபத்தில் அனுபவிக்க நேர்ந்தது. பேருந்திலிருந்து இறங்கியபோதோ வண்டி நிறுத்தத்திலிருந்து வண்டியை எடுத்தபோதோ ஒன்றும் தோன்றவில்லை. பாலக்கரையைத்
தாண்டியதும் சிறுநீர் முட்டிக்கொண்டது. எங்காவதுஒதுங்கிவிட முடியுமா என்று அங்குமிங்கும் தேடுகிறேன் எல்லா இடங்களிலும் ஆள் நடமாட்டம் அதிகமாய் இருந்தது. என்னசெய்வதென்று தெரியவில்லை. அப்படியொரு அவஸ்தை. ஒரு வழியாக பழைய தாசில்தார் அலுவலகத்தைத் தாண்டி உள்ளசுவர்ருகே யாரும் இல்லை என்பதோடு முன்னே நிறுத்தி வைக்கப் பட்டிருந்த இரண்டு சரக்கு ஆட்டோக்களும் மறைப்பாய்இருக்கவே வண்டியை நிறுத்திவிட்டு இறங்கினேன். அந்த நேரம் பார்த்து தலமை ஆசிரியரிடமிருந்து அழைப்பு வரவே அலைபேசியை இடது காதால் தோள்பட்டையில் வைத்து இடுக்கிக் கொண்டு நகர்கிறேன். துணி சாக்கை சுமந்தவாறு சுவற்றில்ஒட்டப் பட்டிருந்த படத்தைப் பார்த்து ஏதோ உளறிக் கொண்டிருந்தான் அந்த மனிதன். அவனை ஒரு பொருட்டாக யாரும் பார்ப்பதில்லை. எதோ ஒரு லாரியைப் பார்த்தோ அல்லது சுவரைப் பார்த்தோ அல்லது நடு ரோட்டில் நின்று கொண்டோ ஏதோஉளறிக் கொண்டிருப்பான். அவன் பேசுவதை யாரும் கவனிப்பதில்லை. அவன் யார்? எங்கு தூங்குகிறான்? எப்படி சாப்பிடுகிறான்? எங்கு குளிக்கிறான்? அவன் பெயரென்ன? எது பற்றியும் யாருக்கும் கவலை இல்லை. அவன் ஒரு கிறுக்கன்என்று நாங்களாகவே முடிவு செய்து விட்டோம். கிறுக்கனைப் பற்றி எங்களுக்கென்ன கவலை?

அந்த மனிதன் அங்கிருப்பதை ஒரு பொருட்டாகவே எனக்குத் தெரியவில்லை.
பேசிக் கொண்டே போய் தணித்துவிட்டுதிரும்பும்போது அவன்மீது மோதிக்
கொள்ளவே அலைபேசி கீழே விழுந்து விட்டது. குனிந்து எடுக்கிறபோது அவனது உளறல்தெளிவாய் கேட்கிறது.

“சாகிற வயசா சாமிங்களா? அந்தக் கண்டார ... சாமி நாசமாப் போகட்டும்”

சத்தியமாய் இது உளறலில்லை. நிமிர்ந்து பார்க்கிறேன் சுவரில் கும்பகோணம்
குழந்தைகளுக்கு ஒட்டப்பட்டிருந்த பழையஅஞ்சலி சுவரொட்டியைப் பார்த்து
பேசிக் கொண்டிருக்கிறான். செத்துப் போன குழந்தைகளின் படம் பார்த்து சாகிற வயசாசாமிங்களா? என்பது உளறலா?

ஏய் என்ன சொன்ன என்பதற்குள் அவன் வேகமாய் நகர்ந்து விட்டான். எனக்கும் தலைமை ஆசிரியரோடு பேச இருக்கவேபேசிக் கொண்டே நகர்ந்து விட்டேன்.

அதன் பிறகு அவனைப் பார்க்கிற வாய்ப்பு எனக்கு கிட்டவே இல்லை. பார்த்தால் வீட்டிற்கு அழைத்து வந்து விசாரிக்கவேண்டும்.

குடைந்து கொண்டே இருக்கிறது. செத்துப் போன குழந்தைகளுக்காக அழுபவன் எப்படி கிறுக்கனாக முடியும்? அவன் கிறுக்கன்இல்லை என்றால் யார்? மனிதனா? மனிதன் என்றால் இப்படி அழ மாட்டானே. கொத்துக் கொத்தாய் குழந்தைகள் செத்தாலென்ன? தொழிலாளிகளை யாரோ சுட்டுக் கொன்றால்தான் என்ன? அவனுக்குத்தான் ஆயிரம் வேலைகள் இருக்குமே.

ஒருக்கால், கடவுள் என்று ஒருவன் இருந்தால் அது இவன்தானோ? கடவுள் என்று ஒருவன் இருந்து அது இவனாகஇருந்திருக்கும் பட்சத்தில் அவன் இந்தக்
குழந்தைகளை சாக விட்டிருக்க மாட்டான். பிறகு யார்தான் இவன். நீண்ட
குழப்பத்திற்கு பிறகு தெளிந்தேன்.

சத்தியமாய் இவன் கிறுக்கன்தான். இத்தகைய கிறுக்கர்களால்தான் பூமி
சுத்தமாய் வறண்டுப் போகாமல் இந்த அளவிற்கேனும்ஈரத்தோடு இருக்கிறது.

இவனை கிறுக்கனாக விட்டு விடுவோம். முடிந்தால் நாமுமொரு கிறுக்கனாக
 முயற்சிப்போம்.

************************************************************************************************************


நான் தொல்காப்பியம் எல்லாம் படித்தவன் இல்லை. ஆனால் கீழே உள்ளது தொல்காப்பியத்திலிருந்து என்று அறிகிறேன்.

“ ஈ என் கிளவி இழிந்தோன் கூற்றே தா என் கிளவி ஒப்போன் கூற்றே கொடு என் கிளவி உயர்ந்தோன் கூற்றே”
எனில்,

இழிந்தவன் தன்னைவிட உயர்ந்தவனிடம் ஒரு பொருளை வேண்டிக் கேட்பதற்கு ”ஈ” என்ற சொல்லையும், தனக்கு சம நிலையில் இருப்பவனிடம் கேட்கும்போது “ தா” என்று கேட்க வேண்டும் என்றும், உயர்ந்தவன் தன்னைவிட தாழ்ந்தவனிடம் கேட்குமொபோது “ கொடு” என்று கேட்க வேண்டும் என்றும் ஆகிறது.
எனில்,

இழிந்தவன், ஒப்போன், உயர்ந்தவன் என்பது சாதியப் படிநிலைகளைக் குறிப்பதாகத்தான் எனக்குப் படுகிறது.
எனில்,

சாதிக்கொரு வார்த்தையை தொல்காப்பியம் பரிந்துரைப்பதாகவே படுகிறது.
அது அப்படித்தான் எனில் சொல்கிறோம்,
“ குற்றம் குற்றமே”
அல்லது இதற்கு வேறு ஏதும் பொருளிருப்பின் சொல்லுங்கள் சரியாயிருப்பின் ஏற்கிறோம்.

****************************************************************************************************************
இரண்டு நாட்களாக மழை பெய்கிறது. எல்லோரும் கொண்டாடுகிறார்கள். நானும்தான்.

ஆனால் தோழர் சீமாசெந்தில் இந்த மழையை வேறு மாதிரி பார்க்கிறார். அவரது கவிதையை வாசித்ததும் மிரண்டு போனேன். கருகிய தென்னை மரங்களும் , பனை மரங்களும் அவரது கவிதையின் அழுத்தத்தை சொல்கின்றன.

பசையற்றுப் போன செடிக்கு  பசியென்ன இருக்கப்போகிறது .........? இனிப் பெய்யும் மழையெல்லாம் அதற்கு சடலம் கழுவும் சடங்கு தான் ......!

******************************************************************************************************

நண்பர்களோடான உரையாடல் காக்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் என்று நம்புகிறோம். அதற்காக காக்கையின் வாசகர் வட்ட கூட்டங்களை மாவட்ட வாரியாக நடத்த ஆசை. தங்களது மாவட்டத்தில் நடத்த இயலுமா என்பதை நண்பர்கள் முயற்சித்தால் நல்லது.

பழைய சந்தாக்கள் புதுப்பிக்கப் படுவதும், புதிய சந்தாக்களை கொண்டு வந்து சேர்ப்பதும் அவசியமாகிறது. நண்பர்கள் அருள்கூர்ந்து இதில் கவனம் செலுத்த வேண்டுகிறேன்.


No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...