Wednesday, August 1, 2012

வறண்டாலும் வாழி காவேரி

“ காவிரியைக் கடக்க
ஓடங்கள் தேவையில்லை
ஒட்டகங்களே போதும்”

என்று ஒரு முறை தோழர் தணிகைச் செல்வன் எழுதினார்.

“விற்பதற்கு 
சிலம்பிருந்த காரணத்தினால்
என்னை விற்கவில்லை
கோவலனின் 
குணம் புரிந்ததா?”

என்று கண்ணகி சொல்வதாய் தோழர் எழுதியபோது எவ்வளவு கொண்டாடினோமோ அதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் இதற்கும் கொண்டாடி மகிழ்ந்தோம். எங்கள் தோழர் எதை எழுதினாலும் அது இப்படித்தான் கொண்டாட்டத்திற்கு உரியதாகவே இருக்கும். “எங்கள் தோழர் தோழர் எழுதி எது தவறாய்ப் போகும்?” என்ற திமிறே உண்டு எங்களுக்கு.

ஆனால் எங்கள் செம்மாந்தத் திமிரில் மண் அள்ளிப் போட்டார்கள் மணல் கொள்ளையர்கள்.

 காவிரியைக் கடக்க ஓடமா? என்று சிலர் நக்கலாய் சிரிக்கக் கூடும். ஆனால் உண்மை அதுதான். நானே சிறு பிள்ளையாய் இருந்த பொழுது குளித்தலையிலிருந்து முசிறிக்கு பரிசலில் போன அனுபவம் உண்டு. இவ்வளவு பாலங்கள் இல்லாத காலத்தில் ஆற்றின் இக்கரையிலிருந்து அக்கரைக்கு போவதற்கு ஓடங்களே பயன் பட்டன.

ஆனால் அதற்கு ஆற்றில் தண்ணீர் வர வேண்டும். கர்நாடகத்து நதி அரசியல் கறைபட்டு போனதிலிருந்து காவிரியில் தண்ணீர் வராது வறண்டு கிடந்த மணல்பரப்பாய் காவிரி காட்சியளித்தபோது அது தந்த வலியை தனக்கே உரிய எள்ளலோடு தணிகை அப்படி எழுதினார்.

அன்றைக்கு காவிரியில் தண்ணீர் இல்லை. எனவே காவிரியைக் கடக்க ஓடங்கள் தேவைப் படவில்லை. கொதிக்கும் மணல் பரப்பைக் கடக்க ஒட்டகங்கள்தான் பொருத்தமாகப் பட்டது.

ஆனால் இன்றைக்கு அவரது கவிதையையும் பொய்யாக்கிக் காட்டினார்கள் இந்தச் சண்டாளர்கள். “ஒட்டகங்களே போதும் ”  என்று அவர் எழுதிய காலத்தில் காவிரியில் மணல் இருந்தது. மணலே இல்லாமல் கட்டாந்தரையாக காவிரி காட்சியளிக்கும் போது ஒட்டகம் எப்படிப் பொருத்தமாய்ப் போகும்.

  நானும் கூட ஒரு முறை,

“யாரது
ஆடிப் பெருக்கன்று
நடுக்காவிரியில்
ஊற்று தோண்டுவது?”

என்று ஆடிப் பெருக்கன்றும் நீரற்றுக் காட்சியளித்த காவிரி தந்த வலியை எழுதினேன். இன்று ஊற்றுத் தோண்டுவதற்கு காவிரியில் மணலேது? கிணறு வேண்டுமானால் காவிரியில் வெட்டலாம். இப்படியாக என் கவிதையும் பொய்த்துப் போனது. என் கவிதை பொய்த்துப் போனதில் எனக்கொன்றும் வருத்தமெல்லாம் இல்லை. தணிகைக் கவிதையே சாலையைக் கிழித்துப் பறக்கும் மணல் லாரிகளில் நசுங்கும் போது என் கவிதை எம்மாத்திரம்?

எவ்வளவு முயன்றும் கவிதை முழுமையாக சரியாக நினைவிற்கு வரவில்லை. எழுதிய திருவைக் குமரனையும் அலை பேசியில் பிடிக்க இயலவில்லை. 

மணல் காற்றில் பறக்கக் கூடாது என்பதற்காக லாரி மணலில் நீர் ஊற்றுவார்கள். அப்படி ஊற்றப்பட்ட தண்ணீர் போகிற வழியெங்கும் சாலையில் கசிந்து கொண்டே போகும். அந்த நீரின் கசிவை திருவைக் குமரன் “ நதியின் கண்ணீர்” என்பார். ஏனடா கழிசடைகளே என் மணலை கொள்ளையடிக்கிறீர்கள் என்று கதறும் நதியின் கண்ணீராக அது அவருக்குப் பட்டிருக்கிறது.  

ஆடி மாதத்து தமிழ் நாட்டுக் காவிரியை இளங்கோ வர்ணிப்பார்,

“உழவர் ஓதை
மதகோதை
உடை நீர் ஓதை
தன் பதங்கொள் விழவர் ஓதை
சிறந்து ஆர்ப்ப 
நடந்தாய் வாழி காவேரி”

தமிழ் பூமிக்கு வருகிற காவிரியை தமிழகத்து விவசாயிகள் பெரும் சந்தோசக் கூச்சலிட்டும் பெண்கள் குழவி ஒலியோடும் வரவேற்க, மதகு தாண்டி வரும் நீர் மகிழ்ச்சியாய் சளசளவென்று சத்தமிட்டு நடந்து வரும் காவேரி என்கிறார் இளங்கோ.

எவ்வளவு பெரிய விஞ்ஞானக் கூற்று இது. நதி நீர் நடக்க வேண்டும் .ஓடக்கூடாது. னதி நீர் பைய நடந்து போகும் பூமிதான் வளப்படும்.. பயிர் செளிக்கும் , நிலத்தடி நீர் செழித்தோங்கும். ஓடுகிற நீர் விரந்து கடலில் போய் தனது கதையை முடித்துக் கொள்ளும். பூமியும் செழிக்காது நிலத்தடி நீரும் உயராது.

இளங்கோ காலத்தில் நடந்த காவேரி ஓடும் காவேரியாய் மாறி இப்போது வறண்ட காவேரியாய் மாறியிருக்கிறது.  நடந்த காவேரி ஓடும் காவேரியாய் மாற மணல் கொள்ளையே காரணம். நீரும் மனிதன் போலத்தான், மணலில் ஓட முடியாது. 

ஒலிம்பிக்கோ, ஆசிய விளையாட்டுப் போட்டிகளோ, எதுவென்று சரியாய் நினைவில்லை அப்போதைய அமைச்சர் காளிமுத்து அவர்கள் எழுதினார்,

“சடு குடு போட்டி 
நடத்த இடம் தேடி அலையாதீர்
இங்கே அனுப்புங்கள்
நீரா இருக்கிறது
 மணல்தானே காவிரியில்” என்று

இப்போது காவிரியில் சடுகுடுவும் விளையாட இயலாது.

ஆடிப் பெருக்கன்று காவிரிக்கு வரும் புது மணத் தம்பதிகள் நீராடி மகிழ்ந்தார்கள். பிறகு ஊற்று தோண்டி தலையில் கொஞ்சம் தண்ணீர் தெளித்துக் கொண்டார்கள். 

இனி ஆடியில் காவிரியில் நீராட வரும் புது மணத்தம்பதிகள் குடங்களில் நீரெடுத்து வர வேண்டியதுதான்.

இன்று ஆடி 18.

நமக்கு கிடைத்த வாய்ப்பு நம் பிள்ளைகளுக்கு இல்லை. இரண்டு மோசமான சக்திகளை எதிர்த்து போராட வேண்டியுள்ளது. 

ஒன்று,
கர்நாடகாவோடு நீருக்காய்

இரண்டு
மணல் கொள்ளையை எதிர்த்து

இதை செய்யாது போனோமெனில் ஆடி 18 கும் ஏப்ரல் ஒன்றிற்கும் ஒரு வித்தியாசமும் இருக்காது.

  

32 comments:

  1. We can only write. No one else to correct. Kaveri oru kanavu. sathi

    ReplyDelete
  2. ayya!

    valikal
    konda varikal!
    etharku mel enna solla
    theriyala...

    ReplyDelete
  3. பொய்யாய்
    பழங்கதையாய்
    போன
    காவிரி...
    கருத்துக்கள் அருமை.

    ReplyDelete
  4. எட்வின் அவர்களே! நீர் திருச்சிக்காரர்! அப்படித்தான் எழுதுவீர்! எங்கள் தாமிர வருணி ஆறு எங்கள் மாவட்டத்திலேயே பிறந்து எங்கள் மாவட்டத்திலேயே சங்கமிக்கும் ஆறு! சண்டாளர்கள் அதனை குத்திக் குற்றுயிராக்கி விட்டார்கள்! கிளை நதிகளை ஏலத்திற்கு விட்டு விட்டார்கள்! பங்களுருவுக்கும், கொச்சிக்கும் தமிழ்நாட்டிலிருந்து மணல் போகிறதாம்! வை.கோ வுக்கு தெரியாதா! அதைத்தடுக்க மாட்டார்! லாரியை மேலே ஏத்திவிடுவான்! வயத்தெரிசலை கிளப்பாதயும் ஐயா!---காஸ்யபன்

    ReplyDelete
  5. ஆடி 18 கும் ஏப்ரல் ஒன்றிற்குமொரு வித்தியாசமும் இருக்காது.
    உண்மையான வரிகள். இந்த வரிகளை அனைவரும் புரிந்து கொண்டால், பிரச்சனையில்லை. புரிய வைப்பதில்தான் பிரச்சனையிருக்கிறது.
    நன்றாக வந்திருக்கிறது. வாழ்த்துகள் தோழர். இலக்கியத்தில் அரசியல் கூடாது என்று கத்தும் வலதுசாரிகளுக்கு, அரசியல் இல்லாமல் இலக்கியம் இல்லை என்பதையும் புரியவைக்கும் கட்டுரை. வாழ்த்துகளுடன் மதிகண்ணன்.

    ReplyDelete
  6. தணிகைக் கவிதையே சாலையைக் கிழித்துப் பறக்கும் மணல் லாரிகளில் நசுங்கும் போது என் கவிதை எம்மாத்திரம்?//

    இதுவே ஒரு கவிதையாய் இருக்கு.தலைமுறைக்கும்தொடருமோ காவிரியின் வலி. நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. // இதை செய்யாது போனோமெனில் ஆடி 18 கும் ஏப்ரல் ஒன்றிற்குமொரு வித்தியாசமும் இருக்காது.
    //
    Unmai..

    ReplyDelete
  8. நானெல்லாம் பொன்னியின் செல்வனை வாசித்துவிட்டு காவிரியை கற்பனையில் இரசித்தவள்.ஒருமுறை ஆசையாய் சென்று நேரில் பார்த்து விக்கித்துவிட்டேன். இப்போதெல்லாம் எங்களுடைய பொன்னி (சிறுபெண்ணாய் இருந்தாலும்)எப்போதாவது அரிதாய் இரு க்ரைகளையும் தொட்டு அணைத்துக்கொள்ளும் போது என் மகளையும் உடனழைதுக்கொண்டு ஒருநடை போய் பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன்.யாருக்குத்தெரியும்...அடுத்ததலைமுறையினர் இந்த காட்சியை காணமுடியுமா என்ன?

    ReplyDelete
  9. நதி நீர் நடக்க வேண்டும் .ஓடக்கூடாது. னதி நீர் பைய நடந்து போகும் பூமிதான் வளப்படும்.. பயிர் செளிக்கும் , நிலத்தடி நீர் செழித்தோங்கும். ஓடுகிற நீர் விரந்து கடலில் போய் தனது கதையை முடித்துக் கொள்ளும். பூமியும் செழிக்காது நிலத்தடி நீரும் உயராது.

    இளங்கோ காலத்தில் நடந்த காவேரி ஓடும் காவேரியாய் மாறி இப்போது வறண்ட காவேரியாய் மாறியிருக்கிறது. நடந்த காவேரி ஓடும் காவேரியாய் மாற மணல் கொள்ளையே காரணம். நீரும் மனிதன் போலத்தான், மணலில் ஓட முடியாது.//Nice Edwin

    ReplyDelete
  10. /// Samy said...
    We can only write. No one else to correct. Kaveri oru kanavu. sathi ///

    குறைந்த பட்சம் அதையாவது ஒழுங்காய் செய்துவிடுவோம் தோழர்.

    மிக்க நன்றி தோழர்.

    ReplyDelete
  11. /// Seeni said...
    ayya!

    valikal
    konda varikal!
    etharku mel enna solla
    theriyala... ///

    மிக்க நன்றி சீனி.

    உங்களது தொடர்ந்த வருகையும் கருத்துக்களும் என்னை செழும்ழிப் படுத்திக் கொள்ள உதவுகின்றன.

    ReplyDelete
  12. //// kashyapan said...
    எட்வின் அவர்களே! நீர் திருச்சிக்காரர்! அப்படித்தான் எழுதுவீர்! எங்கள் தாமிர வருணி ஆறு எங்கள் மாவட்டத்திலேயே பிறந்து எங்கள் மாவட்டத்திலேயே சங்கமிக்கும் ஆறு! சண்டாளர்கள் அதனை குத்திக் குற்றுயிராக்கி விட்டார்கள்! கிளை நதிகளை ஏலத்திற்கு விட்டு விட்டார்கள்! பங்களுருவுக்கும், கொச்சிக்கும் தமிழ்நாட்டிலிருந்து மணல் போகிறதாம்! வை.கோ வுக்கு தெரியாதா! அதைத்தடுக்க மாட்டார்! லாரியை மேலே ஏத்திவிடுவான்! வயத்தெரிசலை கிளப்பாதயும் ஐயா!---காஸ்யபன் ////

    மிக்க நன்றிங்க தோழர்.
    அவர்கள் அங்குள்ள அவர்களது மணலை எடுக்க மாட்டார்கள்.

    ReplyDelete
  13. //// மதிகண்ணன் said...
    ஆடி 18 கும் ஏப்ரல் ஒன்றிற்குமொரு வித்தியாசமும் இருக்காது.
    உண்மையான வரிகள். இந்த வரிகளை அனைவரும் புரிந்து கொண்டால், பிரச்சனையில்லை. புரிய வைப்பதில்தான் பிரச்சனையிருக்கிறது.
    நன்றாக வந்திருக்கிறது. வாழ்த்துகள் தோழர். இலக்கியத்தில் அரசியல் கூடாது என்று கத்தும் வலதுசாரிகளுக்கு, அரசியல் இல்லாமல் இலக்கியம் இல்லை என்பதையும் புரியவைக்கும் கட்டுரை. வாழ்த்துகளுடன் மதிகண்ணன்.////

    எதில் தோழர் இல்லை அரசியல்.

    அவர்கள் அவர்கள் வேலையை சரியாய் செய்கிறார்கள்.

    நாம்தான் தொடங்க வேண்டும்.

    ReplyDelete
  14. //// எஸ்.கருணா said...
    தணிகைக் கவிதையே சாலையைக் கிழித்துப் பறக்கும் மணல் லாரிகளில் நசுங்கும் போது என் கவிதை எம்மாத்திரம்?//

    இதுவே ஒரு கவிதையாய் இருக்கு.தலைமுறைக்கும்தொடருமோ காவிரியின் வலி. நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.////

    தங்களது வருகை தந்த மகிழ்ச்சி சொல்லி மாளாது தோழர். மிக்க நன்றி.

    ReplyDelete
  15. //// இளங்கோ said...
    // இதை செய்யாது போனோமெனில் ஆடி 18 கும் ஏப்ரல் ஒன்றிற்குமொரு வித்தியாசமும் இருக்காது.
    //
    Unmai.. ///

    மிக்க நன்றி இளங்கோ

    ReplyDelete
  16. காலம் மாற மாற கவிதைகளும் கருத்துக்களும் மாறுகிறது , ஆனால் கருப் பொருள் தன்னை முழுமையாக இழந்து நிற்கிறது... நானும் சுற்றுலாவுக்காக திருச்சி முக்கம்பில் நண்பர்களோடு காவிரியில் விளையாடி மகிழ்ந்ததுண்டு... உங்கள் கட்டுரையை படித்த பின்பு ஏதோ , துக்க வீட்டில் நுழைந்து வந்த வலி கவ்வுகிறது...இந்த கொடுமை எங்கும் நிகழாது .... அருமை kamalraj Rouvier

    ReplyDelete
  17. /// Uma said...
    நானெல்லாம் பொன்னியின் செல்வனை வாசித்துவிட்டு காவிரியை கற்பனையில் இரசித்தவள்.ஒருமுறை ஆசையாய் சென்று நேரில் பார்த்து விக்கித்துவிட்டேன். இப்போதெல்லாம் எங்களுடைய பொன்னி (சிறுபெண்ணாய் இருந்தாலும்)எப்போதாவது அரிதாய் இரு க்ரைகளையும் தொட்டு அணைத்துக்கொள்ளும் போது என் மகளையும் உடனழைதுக்கொண்டு ஒருநடை போய் பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன்.யாருக்குத்தெரியும்...அடுத்ததலைமுறையினர் இந்த காட்சியை காணமுடியுமா என்ன? /////

    வணக்கம் உமா.

    இந்தத் தலைமுறையே அந்த வாய்ப்பை இழந்து போகும் என்றுதான் படுகிறது

    ReplyDelete
  18. //// Suriyadoss said...
    நதி நீர் நடக்க வேண்டும் .ஓடக்கூடாது. னதி நீர் பைய நடந்து போகும் பூமிதான் வளப்படும்.. பயிர் செளிக்கும் , நிலத்தடி நீர் செழித்தோங்கும். ஓடுகிற நீர் விரந்து கடலில் போய் தனது கதையை முடித்துக் கொள்ளும். பூமியும் செழிக்காது நிலத்தடி நீரும் உயராது.

    இளங்கோ காலத்தில் நடந்த காவேரி ஓடும் காவேரியாய் மாறி இப்போது வறண்ட காவேரியாய் மாறியிருக்கிறது. நடந்த காவேரி ஓடும் காவேரியாய் மாற மணல் கொள்ளையே காரணம். நீரும் மனிதன் போலத்தான், மணலில் ஓட முடியாது.//Nice Edwin ///

    மிக்க நன்றி தோழர் சூர்யதாஸ்

    ReplyDelete
  19. /// Anonymous said...
    காலம் மாற மாற கவிதைகளும் கருத்துக்களும் மாறுகிறது , ஆனால் கருப் பொருள் தன்னை முழுமையாக இழந்து நிற்கிறது... நானும் சுற்றுலாவுக்காக திருச்சி முக்கம்பில் நண்பர்களோடு காவிரியில் விளையாடி மகிழ்ந்ததுண்டு... உங்கள் கட்டுரையை படித்த பின்பு ஏதோ , துக்க வீட்டில் நுழைந்து வந்த வலி கவ்வுகிறது...இந்த கொடுமை எங்கும் நிகழாது .... அருமை kamalraj Rouvier ///

    மிக்க நன்றி தோழர் கமல்ராஜ்.
    வலிக்க வலிக்கத்தான் எழுத முடிகிறது தோழர். மிக்க நன்றி.

    ReplyDelete
  20. காவிரியை கடக்க ஒட்டகமா? விரைவில் அனைத்து ஆறுகளும் தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றப்படலாம். இந்த ஆண்டு ஆடிப்பெருக்குக்கு குடத்தில் நீர் கொண்டுவந்து கொண்டாடியதாக தெரியவில்லை எங்கள் ஊருக்கு அருகில் ஆழ்குழாய் மூலம் மோட்டார் பொருத்தி நிரெடுத்து கொண்டாடி இருக்கின்றார்கள்

    ReplyDelete
  21. தோழர் நடுவண் அரசின் நீர்வள அமைச்சகத்தின் நீர்க்கொள்கை 2012 ஐ படியுங்கள். நதியை மட்டுமல்ல நிலத்தடி நீரையும் தனியார் மயமாக்கும் முயற்சி தொடங்கியிருக்கிறது. ஆடி பதினெட்டுக்கு ஆற்றில் தண்ணீர் விட அரசாங்கம் தனியார் நிறுவனங்களுக்கு நிதி செலுத்தும் நாள் வரும் போலிருக்கிறது அல்லது ஆற்றங்கரையில் மாலையை தண்ணீரில் விடவும் அரிசிபடைக்கவும் அனுமதிச் சீட்டு வாங்கவேண்டிய நிலை வரலாம்.
    “உழவர் ஓதை
    மதகோதை
    உடை நீர் ஓதை
    தன் பதங்கொள் விழவர் ஓதை
    சிறந்து ஆர்ப்ப
    நடந்தாய் வாழி காவேரி”
    உழவர்/மதகு/உடை நீர்/ விழவர் ஓதை மாறி ஏதோ ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் ஓதை என எழுத நேரிடும்.

    ReplyDelete
  22. /// சோலை said...
    காவிரியை கடக்க ஒட்டகமா? விரைவில் அனைத்து ஆறுகளும் தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றப்படலாம். இந்த ஆண்டு ஆடிப்பெருக்குக்கு குடத்தில் நீர் கொண்டுவந்து கொண்டாடியதாக தெரியவில்லை எங்கள் ஊருக்கு அருகில் ஆழ்குழாய் மூலம் மோட்டார் பொருத்தி நிரெடுத்து கொண்டாடி இருக்கின்றார்கள் ///

    மிக்க நன்றி தோழர்.

    எங்க போயி நிற்குமென்று தெரியவில்லை

    ReplyDelete
  23. //// komagan said...
    தோழர் நடுவண் அரசின் நீர்வள அமைச்சகத்தின் நீர்க்கொள்கை 2012 ஐ படியுங்கள். நதியை மட்டுமல்ல நிலத்தடி நீரையும் தனியார் மயமாக்கும் முயற்சி தொடங்கியிருக்கிறது. ஆடி பதினெட்டுக்கு ஆற்றில் தண்ணீர் விட அரசாங்கம் தனியார் நிறுவனங்களுக்கு நிதி செலுத்தும் நாள் வரும் போலிருக்கிறது அல்லது ஆற்றங்கரையில் மாலையை தண்ணீரில் விடவும் அரிசிபடைக்கவும் அனுமதிச் சீட்டு வாங்கவேண்டிய நிலை வரலாம்.
    “உழவர் ஓதை
    மதகோதை
    உடை நீர் ஓதை
    தன் பதங்கொள் விழவர் ஓதை
    சிறந்து ஆர்ப்ப
    நடந்தாய் வாழி காவேரி”
    உழவர்/மதகு/உடை நீர்/ விழவர் ஓதை மாறி ஏதோ ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் ஓதை என எழுத நேரிடும். ///

    எங்க போயிட்டு இருக்கு பார்த்தீர்களா தோழர்?

    நீர்க் கொள்கை 2012 க்கெல்லாம் முன்னமே பெப்சிக்கும் கோக்கிறும் நிலத்தடி நீரைத் தாரை வார்த்தாயிற்று தோழர்.

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  24. காலத்திற்கேற்ற பதிவு தோழர்.... வறண்டு கிடக்கும் ஆறுகளை கானும்போதெல்லாம் ஆறுகளின் ஓட்டத்தையும் அது சார்ந்த விவசாய செழிப்பையும் பழம் பெரும் இலக்கியங்களில் மட்டும் தான் எதிர்வரும் சந்ததியினர் பார்க்கமுடியும் போல.... வறண்டு கிடக்கும் ஆறுகள் இனி என்னவாகும் என்பது நம்முன்னே நிற்கும் மிகபெரிய கேள்விக்குறியே!.... திருச்சி வரும்போதெல்லாம் காவிரியில் கால்னனைக்க வேண்டுமென நினைப்பேன் ஆனால் பள்ளி காலத்திலிருந்து இன்று வரை அது நடக்காமலேயே போய்விட்டது உங்களின் கட்டுரை என் ஏக்கத்தை தூண்டிவிட்டுவிட்டது...என்ன செய்வது எல்லா கனவும் பலித்துவிடுமா என்ன?

    ReplyDelete
  25. /// Madusudan C said...
    காலத்திற்கேற்ற பதிவு தோழர்.... வறண்டு கிடக்கும் ஆறுகளை கானும்போதெல்லாம் ஆறுகளின் ஓட்டத்தையும் அது சார்ந்த விவசாய செழிப்பையும் பழம் பெரும் இலக்கியங்களில் மட்டும் தான் எதிர்வரும் சந்ததியினர் பார்க்கமுடியும் போல.... வறண்டு கிடக்கும் ஆறுகள் இனி என்னவாகும் என்பது நம்முன்னே நிற்கும் மிகபெரிய கேள்விக்குறியே!.... திருச்சி வரும்போதெல்லாம் காவிரியில் கால்னனைக்க வேண்டுமென நினைப்பேன் ஆனால் பள்ளி காலத்திலிருந்து இன்று வரை அது நடக்காமலேயே போய்விட்டது உங்களின் கட்டுரை என் ஏக்கத்தை தூண்டிவிட்டுவிட்டது...என்ன செய்வது எல்லா கனவும் பலித்துவிடுமா என்ன? ///

    உங்கள் வயதுக்கு நீங்களே இப்படித் தளரலாமா?

    சொல்லிவிட்டு வாங்க தோழர். கல்லணைக்குப் போகலாம்

    ReplyDelete
  26. அவசியம் போகலாம் தோழர்...

    ReplyDelete
  27. இனி காவேரியை ஆடி பெறுக்கு அன்று தான் நினைவில் கொள்வோம் என நினைக்கிறேன், காவேரி தினமாக- கணமான ஒரு விஷயத்தை பதிவு செய்துயுள்ளீர்கள்

    ReplyDelete
  28. எல்லா இடத்திலும் இப்படித்தான்...
    அருமையாக முடித்துள்ளீர்கள்...

    (த.ம. 3)

    ReplyDelete
  29. /// Madusudan C said...
    அவசியம் போகலாம் தோழர்... ///

    அவசியம் வாங்க தோழர்

    ReplyDelete
  30. /// Christopher said...
    இனி காவேரியை ஆடி பெறுக்கு அன்று தான் நினைவில் கொள்வோம் என நினைக்கிறேன், காவேரி தினமாக- கணமான ஒரு விஷயத்தை பதிவு செய்துயுள்ளீர்கள் ///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  31. //// திண்டுக்கல் தனபாலன் said...
    எல்லா இடத்திலும் இப்படித்தான்...
    அருமையாக முடித்துள்ளீர்கள்... ///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  32. பூனைக்கு யார் மணி கட்டுவது .......கட்டவிட்டால் ஏப்ரல் 1 எல்லாரும் கொண்டாடவேண்டியது தான்.....

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...