Wednesday, December 30, 2015

’போல’ களின் காலம்

 காட்டு யானைகளின் அட்டகாசம்” என்பது மாதிரிதான் தொடர்ந்து பத்திரிக்கை செய்திகளில் பார்க்கிறோம். மக்களின் வசிப்பிடங்களில் யானைகள் அத்து மீறுகின்றனவா? அல்லது நாம் அவைகளின் வாழிடத்தை ஆக்கிரமித்திருக்கிறோமா என்பது பற்றி விரிவாய் பிரிதொரு சமயம் பேச வேண்டும். பேசலாம். இந்த புள்ளியில் பேச வேறொன்று இருக்கிறது.
காட்டில் வாழும் யானைகள்தான் யானைகள். நாமோ யானைகளை காட்டு யானைகள் என்கிறோம். ஊருக்குள் பிச்சையெடுக்கும் வரை பழக்கப் படுத்தி வைத்திருக்கிற யானை போன்ற ஒன்றை யானை என்கிறோம்.
அது சரி, “ போல “ க்களின் காலம்தானே இது.

ஜேட்லி வாய் கேட்பினும்

ஊடக விவாதங்களின் வளர்ச்சி செய்திக்கும் கருத்துக்கும் இடையேயான கோட்டினை வலுவிழக்க செய்திருக்கிறது என்று ஆதங்கப் பட்டிருக்கிறார் மாண்பமை அருண்ஜேட்லி அவர்கள்.

சொல்வது ஜேட்லி என்பதற்காகவோ அவரது கட்சியினர்தான் இந்தக் கோட்டினை பெருமளவு சேதப்படுத்தியது என்பதற்காகவோ அந்தக் கருத்தை உதாசீனப் படுத்திவிடக் கூடாது

செய்தி என்பது வரலாறு. கருத்து என்பது அதன்மீதான நமது அபிப்ராயம்

ஊடக விவாதங்களில் பெரும்பான்மையோர், குறிப்பாக 'சமூக ஆர்வலர்கள் ' தங்களது கருத்தை செய்தியாகப் பயிய படாத பாடு படுவதும் ஊடகங்கள் அதற்கு துணைபோவதும் ஆபத்தானது

அழைப்பு 18





இன்று 30.12.2015 அன்று ஒரத்தநாடு பூவத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெறும் ஆசிரியர்களுக்கான வாசிப்பு முகாமில் உரையாற்றுகிறேன்.

வாய்ப்புள்ள தோழர்கள் வந்தால் சந்திக்கலாம்

Tuesday, December 29, 2015

நல்லவர் 1



அரசியலில் நல்லவர்களே இல்லாதது போல ஒரு பிம்பம் கவனமாக கட்டமைக்கப் பட்டு வருகிறது. இது மிகவும் அபத்தமானதும் ஆபத்தானதும் ஆகும். சொற்ப நேர உரையாடல் தொடங்கி மிக நீண்ட உரையாடல்வரைக்கும், அது இது குறித்தென்றால் மிகுந்த சுவாரஷ்யமாகிப் போகும்.

ஆனால் உண்மை அது அல்ல. வெகுஜன அரசியல் கட்சிகளில்கூட நல்லவர்கள் இருக்கவே செய்கிறார்கள். இருக்கிறார்கள் என்று ஒரு வார்த்தையில் மறுக்க விரும்பவில்லை.

முடியும்போதெல்லாம் அரசியலில் எனக்குத் தெரிய இருக்கும் நல்லவர்களைப் பற்றி இங்கு எழுதலாம் என்றிருக்கிறேன். நான் நல்லவர்கள் என்று முன் வைக்கும் தோழர்கள்மீது அதற்கு எதிரான கருத்துக்கள் இருப்பின் ஆதாரத்தோடு வைக்குமாறு நண்பர்களை வேண்டுகிறேன். விவாதிப்போம்.

1 மா ஜெயசீலன் (cpm)
*************************************

இவர் முதுகலை பட்டம் பெற்றவர். BEdதேர்வு எழுதவில்லை. தேர்வு நேரத்தில்தான் அவரது கட்சியிலிருந்து முழுநேர ஊழியராகும்படி அவருக்கு அழைப்பு வந்தது. 90 இல் இருந்து 93 குள் இருக்க வேண்டும். வருடம் சரியாகத் தெரியவில்லை.

எங்கே BEd முடித்து விட்டால் வேலைக்கு போக வேண்டி வரும் என்பதால் தேர்வினைத் தவிர்த்தவர். ஒன்றும் வசதியான குடும்பம் எல்லாம் இல்லை. ஆகவே நான்கூட வேண்டாமென்று எவ்வளவோ போராடிப் பார்த்தேன். அந்தக் கால கட்டத்தில் நான் சொல்லி அவர் தட்டியது அநேகமாக இதுவாகத்தான் இருக்கும்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மண்ணச்சநல்லூர் வட்டச் செயலாளர், மாவட்டச் செயலாளர், மாநில பொறுப்பாளர், பிறகு கட்சியின் லால்குடி தாலுக்கா செயலாளர், இறுதியாக இப்போது கட்சியின் மாவட்டச் செயலாளர்,.

எத்தனைப் போராட்டங்கள், எத்தனை முறை சிறைகள்.

கால் நூற்றாண்டுகால இடைவெளியில் வயதும் பக்குவமும் கூடியிருக்கிறதே தவிர மனிதர் கொஞ்சமும் மாறவேயில்லை.

இன்னமும் தொகுப்பு வீட்டில்தான் இருக்கிறார். யாரேனும் தோழர்கள் வாங்கிக் கொடுத்தால் அதையும் கட்சிக்கு தகவல் தருகிறார்.

கட்சி கொடுத்திருக்கும் வாகனத்தைக் கூட தேவை தாண்டி பயன்படுத்தியது இல்லை.

சமீபத்தில் அவரது குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது அந்த செலவை எப்படி எதிர் கொண்டார் என்பது முழுவதும் கட்சிக்குத் தெரியும் என்பதைவிட கட்சியின் அனுமதியோடுதான் எதிர் கொண்டார்.

கால் நூற்றாண்டிற்கும் மேலான அவரது அரசியலில் சின்னக் கறைகூட காண இயலாது.

கட்சி ஊழியர்களை, மக்களை அலட்சியமாக நத்தியதே இல்லை. யாரும் எப்போதும் அணுகலாம்.

சமீபத்தில் என்னைப் பார்ப்பதற்காக பள்ளிக்கு வந்த இடத்திலும் அங்கு நண்பர்கள் பேசிக் கொண்டிருந்த பிரச்சினையை கேட்டு அவராகவே காவல் நிலையத்திற்கு அலைபேசி சரி செய்யக் கேட்டுக் கொண்டவர்.

அருமையான பேச்சாளர் என்பதுகூட செயலுக்கு அடுத்தபடியாகத்தான் என்று கருதுபவர்

பிரச்சினைகளை மிகச் சரியாக அணுகுபவர்.

#அரசியலில் நல்லவர்கள் இல்லை என்று யார் சொன்னது?

6 மாற்றுச் சான்றிதழ் அரசியல்

ஆசிரியரை பணிநீக்கம் செய்ய வேண்டுமென அந்தப் பள்ளி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்என்ற தலைப்பு செய்தி மற்ற செய்திகளிலிருந்து என் கவனத்தை களவாடிக் கொண்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஒன்று, அந்தப் பள்ளி எனக்கு மிக அருகில் இருக்கிற பள்ளி. இரண்டு எனக்கு மிகவும் பரிச்சயமான பள்ளி.

ஆசிரியர் மாற்றுச் சான்றிதழைப் பெற்றுச் செல்லுமாறு கட்டாயப் படுத்தவே ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டதாகவும் எனவேதான் சம்பந்தப் பட்ட அந்த ஆசிரியரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தியதாக அந்த செய்தி நகர்ந்தது.

அந்த செய்தியைப் படித்ததும் சராசரிப் பொதுப் புத்தியில் படியும் பிம்பம்தான் எனக்குள்ளும் படிந்தது.

அந்த மாணவன் பத்தாம் வகுப்பிலோ அல்லது பன்னிரெண்டாம் வகுப்பிலோ படித்துக் கொண்டிருக்க வேண்டும். ஒழுங்காகப் படிக்காமல் அல்லது அடிக்கடி பள்ளிக்கு வராத மாணவனாக இருந்திருக்க வேண்டும். நிச்சயமாக என்ன செய்தும் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற மாட்டான் என்பது உறுதியானதும் அவனை மாற்றுச் சான்றிதழைப் பெற்றுச் செல்லுமாறு அந்த ஆசிரியர் வற்புறுத்தி இருக்க வேண்டும். மனது உடைந்த அந்தக் குழந்தை தற்கொலை செய்திருக்க வேண்டும்.

இன்றைய சூழலில் மேற்காணும் செய்தியை வாசித்ததும் யாருக்குள்ளும் விழுகின்ற அந்தப் பிம்பம் பள்ளிக் கல்வி ஊழியனான எனக்குள் படிந்ததில் ஆச்சரியம் இல்லை. காரணம் இது இயல்பாக இன்று நடக்கக் கூடியது.

தேர்ச்சி பெறுவானா மாட்டானா என்ற இழுபறி நிலையில் உள்ள குழந்தைகளை மாற்றுச் சான்றிதழைப் பெற்றுச் செல்லுமாறு எந்த ஆசிரியரும் கட்டாயப் படுத்துவதில்லை. அத்தகைய மாணவர்களை மெல்லக் கற்கும் மாணவன் என்று அடையாளப் படுத்தி அவன் மீது தனிக் கவனம் செலுத்த தொடங்குவது வாடிக்கை. தனிக் கவனம் என்பது வேறொன்றுமில்லை. எல்லாவற்றையும் அந்தப் பிள்ளை படித்து அந்தப் பிள்ளை சிரமப் படக் கூடாது என்பதால் ‘BLUE PRINT’ ஐ கையிலெடுப்பார்கள். நாற்பத்தி ஐந்திலிருந்து ஐம்பது மதிப்பெண் பெறுமளவிற்கான உறுதி செய்யப் பட்ட பகுதிகளை மட்டும் வடித்தெடுத்து அதில் மட்டுமே அவனுக்குப் பயிற்சி கொடுப்பார்கள். இன்னும் சில ஆசிரியர்கள் அதற்கு முந்தைய ஐந்து ஆண்டு பொதுத் தேர்வு வினாத் தாட்களை எடுத்துக் கொண்டு அவற்றில் மீண்டும் மீண்டும் கேட்கப் பட்டுள்ள வினாக்களைத் தேர்வு செய்து அவற்றில் முக்கியமானவற்றை வடிகட்டித் தேர்வு செய்து, அவற்றுள் அந்தக் குழந்தையால் எவை முடியும் என்பதை உணர்ந்து ஏற்கனவே வடிகட்டப் பட்டவற்றை மீண்டும் வடிகட்டி அவற்றை மட்டுமே படிக்குமாறு செய்வார்கள். மார்ச் மாதம் நடக்கும் பொதுத் தேர்வு, ஜூன் மாதம் நடக்கும் உடனடித் தேர்வு, அக்டோபர் மாதத்தில் நடக்கும் தேர்வு ஒரு வருடத்திற்கு மூன்று தேர்வுகள் என்கிற வகையில் ஐந்து ஆண்டுப் பொதுத் தேர்வு வினாத் தாட்களின் எண்ணிக்கை என்பது பதினைந்து ஆகும். இது தேர்ச்சியினை உறுதி செய்கிற எளிதான முறை.

பல நேரங்களில் இதுமாதிரி பயிற்சி கொடுக்கப் பட்டஇழுபறிஎன்று அடையாளப் படுத்தப் பட்டு கவனம் குவிக்கப் பட்டு பயிற்சி கொடுக்கப் பட்ட மாணவர்கள் அறுபதிலிருந்து எழுபது விழுக்காடு மதிப்பெண்ணோடு தேர்ச்சி பெற்று விடுவதும் நிச்சயம் தேர்ச்சி பெறுவான் என்று எதிர்பார்க்கப் பட்ட மாணாவன் ஏதோ சில காரணங்களால் தேர்ச்சி பெற இயலாமல் போவதும்கூட வாடிக்கைதான்.

பொதுத் தேர்வுக்கான வினாத்தாள்களை தயார் செய்யும் ஆசிரியர்கள் பெரும்பாலும் அதற்கு முந்தைய தேர்வு வினாத்தாள்களிலிருந்தான் வினாக்களை தேர்வு செய்கிறார்கள் என்கிற பொதுப் புத்தியை போகிற போக்கில் நம்மால் மறுத்துவிடவும் முடியாது. இந்த வகையில் ஐந்து வருட பொதுத் தேர்வு வினாத்தாள்களில் பயிற்சி பெறுவது என்பது பல நேரங்களில் நூறு விழுக்காடு மதிப்பெண்ணைக்கூட கொண்டு வந்து சேர்க்கும். இன்னும் சொல்லப் போனால் இந்த வகையில் பயிற்சி எடுக்கும் மாணவர்கள் நிச்சயமாக தேர்ச்சி பெறுவார்கள் என்று வகைப் படுத்தப்பட்ட மாணவர்களைக் காட்டிலும் அதிக மதிப்பெண் பெறுவதும் அவ்வப்போது நடக்கிற காரியம்தான்.

இதிலும் சில பள்ளிகளில் ஒன்பதாம் அல்லது பதினோராம் வகுப்பிலிருந்தே இந்தப் பயிற்சியை ஆரம்பித்து விடுகிறார்கள் என்பதையும் மறுப்பதற்குரிய தைரியம் நமக்கில்லை.
இத்தனைக்குப் பிறகுமொரு குழந்தை தேர்ச்சிப் பெறமாட்டான் என்பது உறுதி செய்யப்படும் நிலையில்தான் இந்த மாற்றுச் சான்றிதழ் கொடுப்பது என்கிற அசிங்கமான, அயோக்கியத் தனமான நடைமுறையைக் கையிலெடுக்கின்றனர்.

இப்படி கோரப்பட்டு அல்லது நிர்ப்பந்திக்கப் பட்டு அல்லது மிரட்டப் பட்டு மாற்றுச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளும் மாணவர்கள் அனைவரையும் பள்ளியை விட்டெல்லாம் அனுப்பிவிடுவதும் இல்லை. அவர்களில் பெரும்பான்மையோர் அதே வகுப்பிலேயே அதே சீறுடையிலேயே தொடர்ந்து படிப்பர். அந்த வகுப்பு மாணவர்களுக்கேக்கூட அந்த விவரெமெல்லாம் தெரியாது. ஆனால் தேர்வினை மட்டும் அந்தப் பள்ளி மாணவன் என்ற அடையாளத்தோடு எழுதாமல் தனித் தேர்வர் என்ற அடையாளத்தோடு தேர்வெழுதுவர்.

அந்தக் குழந்தை தேர்ச்சி பெற்றால் கொண்டாடுவார்கள். ஒருக்கால் தேர்ச்சிபெற இயலாது போனாலும் அது அந்த ஆசிரியரது, பள்ளியினது தேர்ச்சி விழுக்காட்டைப் பாதிக்காது என்கிற வகையில் அந்த ஆசிரியரும் பள்ளி நிர்வாகமும் ஒருவிதமான நிம்மதிப் பெருமூச்சை விடுவதைப் பார்க்கிறோம்.

பன்னிரெண்டாம் வகுப்பினைப் பொறுத்தவரை பல இடங்களில் விலையில்லா மடிக்கணினி வழங்கப் பட்டதும் இதுமாதிரியான நடைமுறை சாத்தியப் படுவதாகத் தெரிகிறது.

இந்த மாற்றுச் சான்றிதழ் கலாச்சாரத்தின் வயதென்ன? நாங்கள் படிக்கிற காலத்தில் எல்லாம் இப்படி ஒரு நடைமுறை இல்லையே? நாங்கள் படிக்கிறபோது தேர்ச்சி பெற மாட்டான் என்று உறுதி செய்யப் பட்ட மாணவர்களை மாற்றுச் சான்றிதழ் வழங்கி அனுப்பியதில்லை. போராடிப் பார்ப்பார்கள். முடியாது என்று முடிவானால், மார்ச்சிற்கு மூன்று பாடங்களிலாவது தேர்ச்சி பெறு. மீதி இரண்டை அக்டோபரில் கடக்கலாம் என்கிற வகையில் பயிற்சியினைத் தர ஆரம்பித்து விடுவார்கள்.

எனில் அந்தக் காலத்து ஆசிரியர்களைப் போல் அல்லாமல் அக்கறையற்று இருக்கிறோமா இந்தக் காலத்து ஆசிரியர்கள்? இப்போது எவ்வளவுதான் கசந்தாலும் உண்மை என்கிற வகையில் இதை சொல்லித்தான் ஆகவேண்டும். அந்தக் காலத்து ஆசிரியர்களுக்கு மாணவர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மட்டுமே இருந்தது. இந்தக் காலத்து ஆசிரியர்களுக்கு தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டிய தேவையும் இருக்கிறது. இன்னும் விளங்குகிறமாதிரி சொல்வதெனில் அந்தக் காலத்தில் நிறையத் தேர்ச்சி விழுக்காட்டினைத் தரக்கூடிய ஆசிரியர்கள் கௌரவிக்கப் பட்டார்கள். தேர்ச்சி விழுக்காட்டினைத் தர இயலாத ஆசிரியர்கள் தண்டிக்கப் படவோ, அவமானப் படுத்தப் படவோ இல்லை. ‘என்ன செஞ்சாலும் தேறவே மாட்டேன்னு சொல்றவன வச்சிக்கிட்டு என்ன செய்ய முடியும். இருந்தாலும் கொஞ்சம் கூடுதலா கவனிங்க. எல்லாரும் நல்ல ரிசல்ட்ட கொடுக்கறப்ப நாம மட்டும் கொடுக்கலைனா நல்லாவா இருக்கும்என்பதாகத்தான் அதிகாரிகளின் அணுகுமுறை இருக்கும்.

இப்பொழுதெல்லாம் நூறு விழுக்காட்டிற்கு அரைச்சதம் கால்சதம் குறைவான தேர்ச்சி விழுக்காட்டையும் கல்வித் துறை அதிகாரிகளால் ஏற்க முடிவதில்லை. அப்படி குறைவான தேர்ச்சி விழுக்காட்டினை எடுத்துள்ள ஆசிரியர்கள் அனுபவிக்கும் அவமானங்களும் எதிர்கொள்ளும் ஒழுங்கு நடவடிக்கைகளும் எத்தகைய எழுத்திற்குள்ளும் அடங்க மறுப்பவை. பணி மாறுதல், மெமோ, 17B, போன்ற ஒழுங்கு நடவடிக்கைகளை ஆசிரியர்கள் எதிர்கொள்கிறார்கள். இவை எல்லாம் கடந்த காலங்களில் குற்றங்களுக்கு கொடுக்கப் பட்ட தண்டனைகள். இப்போது இவை தேர்ச்சி விழுக்காடு குறைந்த ஆசிரியர்களுக்கு வழங்கப் படுகின்றன. எனில் மாணவன் ஏதோ காரணங்களால் தேர்ச்சி பெறாமல் போனால் அது ஆசிரியரின் குற்றமா?

சரி அதையே ஒரு வாதத்திற்காக ஏற்போம். இந்தப் பள்ளியில் குற்றம் இழைத்த ஆசிரியரை வேறொரு பள்ளிக்கு பணி மாறுதல் செய்வது எந்த வகையான தண்டனை? கேட்டால் இந்தப் பள்ளி பாதிக்காதா என்கிறார்கள். சரி இப்போதும் அவர் வேறு ஒரு பள்ளிக்குத்தானே போகிறார். இப்போது அந்தப் பள்ளி பாதிக்காதா?

இதைவிட அதிகாரிகள் ஆசிரியர்களை பேசுகிற பேச்சு இருக்கிறதே. ஒருமையில் அழைக்காத குறைதான். அதுகூட சில இடங்களில் நடக்கிறது என்கிறார்கள். அதுவும் வயதில் மிகவும் இளைய அதிகாரிகள் மிக மூத்த ஆசிரியர்களை இப்படி தரக் குறைவாக பேசுவது என்பது கல்வித்துறை அக்கறையோடு கவலைப் பட வேண்டிய விஷயம்.

ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும். தமிழ்ப் பாடத் தேர்ச்சி விழுக்காடு குறித்த பரிசீலனைக் கூட்டத்தை ஒரு முதன்மைக் கல்வி அதிகாரி சில ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தினார். 276 மாணவர்கள் தேர்வு எழுதியதில் ஒரு மாணவன் தேர்ச்சி பெறவில்லை. அதுவும் அந்தக் குழந்தை ஏதோ காரணங்களால் தமிழ் முதல் தாளினை எழுத வில்லை. இந்தக் காரணத்தை அந்த ஆசிரியை சொல்ல முற்பட்டபோது அதைக் காது கொடுத்துக்கூட கேட்காத அந்த அதிகாரிவெக்கமாயில்லஎன்று கேட்டிருக்கிறார். அந்த ஆசிரியை அழுதுகொண்டே திரும்பியிருக்கிறார். தற்கொலை செய்துகொள்ளாமல் அவர்களைக் காப்பாற்ற அவரது தோழிகள் அதிகமாக போராட வேண்டியிருந்தது.

பிறகு சங்கத்து தோழர்கள் அந்த அதிகாரியை அணுகி இது குறித்து கேட்டபோது வருத்தப் பட்டு மன்னிப்பையும் இதற்காகக் கோரினார். ‘இதுக்காக அந்தப் பொண்ணு இந்த அழுகை அழுவுதா. அப்பா மாதிரிதானே நானு. என்ன செய்யறது எட்வின் மேல இருந்து வருகிற அழுத்தம்.’ என்று சொன்னவர் அந்த ஆசிரியையை நேரில் சென்று பார்த்துஅப்பா திட்டுனா அழுவறதா இப்படி. மனசுல வச்சுக்காதஎன்று பேசிவிட்டு வந்தார்.

உண்மையிலுமே அப்பாவை ஒத்த அதிகாரி அவர். அவருக்கு வரும் அழுத்தம் அவர்போன்ற அதிகாரிகளையே இப்படி மாற்றிப் போடுகிறது என்றால் அதிகார போதையோடு இருக்கும் அதிகாரிகளின் நிலை என்ன.

இவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளவும், சுயநிதிப் பள்ளிகள் தங்கள் கல்லாவை மனதிருத்தியுமே இந்த மாற்றுச் சான்றிதழ் நடைமுறையை கையெடுக்கின்றனர்.

1)   நன்கு படிக்க வேண்டும் என்கிற நிலையிலிருந்து அவசியம் தேர்ச்சி பெற வேண்டும், பேரதிக மதிப்பெண் பெற வேண்டும்என்கிற நிலைக்கு கல்வியின் போக்கு நகர்வது சீர்கேடுகளையே வருங்காலத்திற்கு கொண்டு வந்து சேர்க்கும் என்பதை பள்ளிக் கல்வித்துறை அவசியம் உணர வேண்டும்.
2)   ஒவ்வொரு கல்வியாண்டிலும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் எத்தனைபேர் பெற்றிருக்கிறார்கள் என்பதைக் கண்டறிவதும் அதில் நிர்ப்பந்தம் இருக்கிறதா என்பதையும் கண்டறிவது ஒன்றும் கல்வித்துறைக்கு கடினமான காரியம் அல்ல.
3)   அப்படி நடந்திருக்கும் பட்சத்தில் சம்பந்தப் பட்டவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
4)   தேர்ச்சி விழுக்காடு குறித்து ஆசிரியகளௌக்கு பேரதிக அழுத்தம் தருவதை கைவிட்டு சமூக அக்கறையுள்ள, நாட்டுப் பற்றுமிக்க குடிமகன்களை உருவாக்குகிற வேலையை செய்யுமாறு அவர்களைப் பணிக்க வேண்டும்.

வாட்ஸ் அப்பில் வந்த ஒரு செய்தியை பகிர்வது பொறுத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

சச்சின் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறவில்லை. ஆனால் இன்று பத்தாம் வகுப்பு ஆங்கிலப் புத்தகத்தில் சச்சினைப் பற்றிய பாடம் இருக்கிறது.

சச்சினும் அவரது நெருங்கிய நண்பரான வினோத் காம்ளியும் பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஆடிய பள்ளிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டிதான் அவரை கிரிக்கெட் உலகின் கடவுளாக்கியது. அந்த ஆட்டத்தில் இருவருமாக சேர்ந்து எழுநூறு ஓட்டங்களுக்கும் மேலாக எடுத்ததாகப் படித்திருக்கிறேன்.

அவர் பொதுத் தேர்வில் தேர்ச்சிபெற மாட்டார் என்றுணர்ந்து அவருக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கியிருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

அப்படி நிகழ்ந்திருப்பின் அவர் அந்தப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்திருக்கக் கூடும். அந்த வாய்ப்பை அவர் இழந்திருக்கும் பட்சத்தில் இந்த தேசமும் கிரிக்கெட் உலகமும் சச்சினை இழந்திருக்க்க் கூடும். எவ்வளவு இழந்திருப்போம்?

நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டும் அல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நீச்சல் வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை உருவாக்கித் தரவேண்டியதும் பள்ளியின் கடமைதான்.

நான் அடிக்கடி மேற்கோளிடும் ஒன்றை இங்கும் பதிவது அவசியம் என்று படுகிறது.

யுனெஸ்கோவின் ஒரு அறிக்கை ‘the purpose of education is to include the excluded ‘ என்று சொல்கிறது. ‘கல்வி மறுக்கப் பட்ட ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட குழந்தைகளை பள்ளிக்குள் கொண்டு வருவதே கல்வியின் நோக்கம்’     

பன்னிரெண்டு ஆண்டுகள் ஒரு குழந்தை பள்ளிக்குள் இருப்பதை பள்ளிக் கல்வித்துறை உத்திரவாதப் படுத்த வேண்டும்.              


       

Monday, December 28, 2015

65/66, காக்கைச் சிறகினிலே டிசம்பர் 2015

குளிர் கசியும் பாரிஸ் நகரத்தின் நெரிசல் மிகுந்த தெரு அது. மஃப்ளர் போன்ற ஏதோ ஒன்றால் தன் கண்களைக் கட்டிக் கொண்டிருக்கிறான் அந்த இளைஞன். இருபத்தி ஐந்து அல்லது இருபத்தி ஆறு இருக்கலாம் அநேகமாக அவனுக்கு. தனது இரண்டு கைகளையும் அகல விரித்தவாறு அங்கு கூடியிருந்த ஜனங்களிடம் சோகமும் நம்பிக்கையும் பிசைந்தெடுத்த, உடைந்த குரலெடுத்து அந்தக் குழந்தை பேசினான்,   

நான் ஒரு இஸ்லாமியன். ஆனால் தீவிரவாதியல்ல. உங்கள் எல்லோர் மீதும் எனக்கு நம்பிக்கையும் நேசமும் இருக்கிறது. உங்களில் ஒருவனாக என்னையும் ஏற்பீர்களா? என்னையும் நேசிப்பீர்களா? அனைத்திற்கும் மேலாக, நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலுக்குப் பிறகு மிகுந்த நுட்பத்தோடு எங்கள் மீது தீவிரவாதிகள் என்ற பிம்பம் கட்டமைக்கப் பட்டதற்குப் பிறகும் என்மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? என்னை அன்பொழுக கட்டிப் பிடித்து இவற்றை ஆமோதிப்பீர்களா?”

இதன் ஒளிப்படச் சுருள் இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால் எனக்கது பார்க்கக் கிடைக்கவில்லை. இந்தச் செய்தியை வாசித்தபோது என்னை அறியாமலேயே கண்கள் உடைத்துக் கொண்டன.

அந்த இளையப் பிள்ளையை கட்டி அணைப்பது என்பதை ஏகாதிபத்தியம் தனக்கு எதிரான ஒரு செயலாகவே கருதும் என்பது மட்டுமல்ல தங்களுக்கு எதிராக ஈவு இரக்கமற்ற எத்தகையதொரு அயோக்கியத் தனமான நடவடிக்கையையும் அது கொஞ்சமும் கூச்சமே இல்லாமல் எடுக்கும் என்பதும்கூட அங்குக் கூடியிருந்த மக்களுக்கு தெரிந்தே இருந்தது. மட்டுமல்ல, தீவிரவாதத்தை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு கட்டுப்பட்டு ஃப்ரான்ஸ் அரசும் ராணுவமும் காலனுக்கு பலிகொடுப்பதற்காக தங்கள் வீட்டுக் கதவையும் தட்டும் என்பதையும் அவர்கள் தெரிந்தே வைத்திருந்தார்கள்.

நாங்களிருக்கிறோமடா மகனே என்றவாறு அங்கிருந்த பெரியவர்களும், எவனோ என்னவோ சொல்லட்டும் இதனால் என்ன இழப்பு வேண்டுமானாலும் எங்களுக்கு வரட்டும், நீ எங்கள் சகோதரன் என இளைஞர்களும் யுவதிகளும் கண்கள் கசியக் கசிய அந்த இளைஞனைக் கட்டி அணைத்தனர். சிலர் வாஞ்சையோடு அவனை அழுதுகொண்டே முத்தமிட்டனர்

இதயத்தின் ஏதோ ஒரு ஓரத்தில் கொஞ்சமோ கொஞ்சூண்டு ஈரம் இருப்பவனையும் இந்த நிகழ்வானது நிச்சயமாய் நெகிழ்ந்து கசியச் செய்யும்.

ஏனிந்தப் பிள்ளை அன்பையும் நம்பிக்கையையும் இப்படிக் கையேந்தி யாசிக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது?

அதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான் பாரிசில் ISIS அமைப்பு சில மனித வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து அப்பாவி மக்களை கொன்று குவித்திருந்தது. இந்தக் கொடூரமான செயலை மனிதனாய்ப் பிறந்த எவனும் வன்மையாக கண்டிக்கவே செய்வான். செத்துக் கொண்டிருக்கும் ஒருவனையும் கொலை செய்யும் உரிமை எவனுக்கும் இல்லை. செத்துக் கொண்டிருப்பவனைத் தானே கொன்றேன். நான் கொல்லாமல் விட்டிருந்தாலும் அடுத்த இரண்டு நிமிடங்களில் அவன் செத்திருக்கத்தானே செய்வான் என்றும் எவனும் சொல்ல முடியாது. தானாய் ஒருவனை மரணம் கவ்வும்வரை வாழும் உரிமை ஒவ்வொருவனுக்கும் உண்டு. அப்படியிருக்க முதியவர், இளைஞர், யுவதி, பச்சிளங் குழந்தைகள் என்று மானுடப் பரப்பை குறுக்கும் நெடுக்குமாய் கொன்றொழித்த அந்த அயோக்கியர்களைக் கண்டிக்கிறோம் என்பது மட்டுமல்ல அந்த அமைப்பை முற்றாய் அழித்தொழிக்க வேண்டுமென்பதிலும் அதற்கு மானுடச் சமூகம் கரங்கோற்க வேண்டும் என்பதிலும் உறுதியாகவே இருக்கிறோம்.

ஆனால் இதனை அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது சுய லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்ள எத்தனிக்கிறது. தீவிர வாதத்தை வேரறுக்கிறோம் என்ற பெயரில் தனது வல்லான்மையை விரிவுபடுத்தி நிலை நாட்டுவதற்கு நயவஞ்சமாக முனைகிறது. தீவிரவாதத்தை அம்பலப் படுத்துவதை விடவும் பேரதிகமாய் அமெரிக்காவின் இந்தக் கோர முகத்தை அம்பலப் படுத்த வேண்டியத் தேவையும் தீவிரவாதத்தை எதிர்கொள்வதைப் போலவே அமெரிக்காவின் இந்த முயற்சியை எதிர்கொள்ள வேண்டியத் தேவையும் மானுட சமூகத்திற்கு இருக்கிறது.    

ISIS அமைப்பு இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பு என்கிற ஒரு பிம்பத்தைக் கட்டமைக்கிற முயற்சியில் அமெரிக்கா ஒரு குறிப்பிடத் தக்க அளவிற்கு முன்னேறியிருக்கிறது. இதுமாதிரி இஸ்லாமிய இளைஞர்களால் கட்டப்படும் தீவிரவாத அமைப்புகளைஇஸ்லாமியத் தீவிரவாத அமைப்புகள்என்று பொதுப் புத்தியைக் கட்டமைக்க முயல்கிறார்கள். இதில் குறிப்பிட்டு சொல்லுமளவிற்கு வெற்றி பெற்றதும்இஸ்லாமியர்கள் எல்லோருமே தீவிரவாதிகள்என்று நிறுவ முயற்சிக்கிறார்கள்.

ISIS மட்டுமல்ல இது போன்ற எந்த ஒரு தீவிரவாத அமைப்பாக இருந்தாலும், அது எந்த மண்ணில் இருந்தாலும் அவற்றைக் கண்டறிந்து அவர்களுக்கு ஆயுதம், பணம் பயிற்சி அனைத்தையும் அமெரிக்கா வழங்கும். அந்த மண்ணின் அரசாங்கத்திற்கு ஏதிராக கிளர்ச்சிகளை உண்டு பண்ணும். அப்படி முடியாத பட்சத்தில் பிற மத, இனக் குழுக்களோடேனும் பகைமையை உருவாக்கி அடித்துக் கொள்ள வைக்கும். பிறகு தீவிர வாதத்தை அழிக்கிறேன் என்ற பெயரில்தான் உருவாக்கிய அமைப்புகளையும் அழித்தொழிக்கும். இப்போது அதன் கையில் இருக்கும் பலிக்கடா ISIS.

இதனடிப்படையில்தான் இப்போது பாரிசில் மனித வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்ததற்கு பின்னால். தீவிரவாதிகளை வேட்டையாடுகிறோம் என்ற பெயரில் பாரிசில் உள்ள இஸ்லாமியர்களை வேட்டையாடும் கொடூரத்தை ஃப்ரான்ஸ் அரசாங்கத்தை விட்டு முடுக்கிவிட்டிருக்கிறது. ஆறு வயது குழந்தையிலிருந்து வேட்டை தொடங்குகிறது. இஸ்லாமியன் எனில் அவன் தீவிரவாதி. ஆகவே அவன் அழிக்கப்பட வேண்டியவன் என்கிற எண்ணத்தை அந்தந்த மண்ணின் மக்களிடம் வலுவாகப் பிரச்சாரம் செய்கிறது.

இதனால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞன்தான் நாம் துவக்கத்தில் பார்த்தவன். நமது குழந்தை இப்படி நடுத்தெருவில் நின்று கையேந்தி பொதுமக்களின் நம்பிக்கையை யாசித்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்.

நல்ல வேலையாக பாரிஸ் மக்கள் ஏகாதிபத்தியத்தின் இந்த வலையில் விழுந்துவிட வில்லை.

இன்னொன்றையும் நாம் கவனிக்க கடமைப் பட்டிருக்கிறோம். ISIS அமைப்பின் தாக்குதலுக்கு எதிராக உலக கவனத்தை ஈர்க்க இவ்வளவு பாடுபடும் ஏகாதிபத்தியமும் அதன் நேசநாடுகளும் சிரியாவில் ISIS நிகழ்த்தும் அட்டூழியங்களுக்கு எதிராக பெயரளவைக் கடந்து எந்த கவனமும் குவிக்கப் பட்டுவிடக் கூடாது என்பதிலும் கவனமாய் இருப்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

ISIS அமைப்பானது இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பல்ல. அது இஸ்லாத்திற்கும் இஸ்லாமியர்களுக்கும் பேரழிவைத் தரக்கூடிய ஒரு அமைப்பாகும். இதை உணர்வதும், உணரச் செய்வதும் மிக மிக அவசியம்.

தோழர் இன்குலாப் அவர்களுக்கு காக்கை எடுத்த பாராட்டு விழாவில் அவர் சொன்னதை இங்கு பதிவது சரியாக இருக்கும்,

ஒருக்கால் இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாகவும் சிங்களவர்கள் சிறுபான்மையினராகவும் இருந்து தமிழர்கள் சிங்களவர்களை அழித்தொழித்துக் கொண்டிருந்தார்கள் என்றால் எனது பேனா நிச்சயமாக சிங்களவர்களுக்காகத்தான் எழுதும்

****************************************************************************************    

மனித மலத்தை மனிதன் அள்ளுவது கொடூரமானது. அதை முற்றிலுமாக ஒழித்துவிட வேண்டும் என்று போராடிக் கொண்டு இருக்கிறோம். நம்மால் இதுவரை வெற்றிபெற முடியாத போராட்டமாக அது இருக்கிறது. இதில் வெற்றி பெறுவதற்கு போராட்டங்களை இன்னும் அழுத்தமாகக் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் நாம் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும்போது ஏழு வயதே ஆன இரண்டாம் வகுப்பு படிக்கக் கூடிய பச்சைக் குழந்தை ஒருவனை அதே வயதுகொண்ட குழந்தையின் மலத்தை அள்ளிப் போட வைத்திருக்கிறார்கள் என்பதைக் கேள்விப் படும்போது கோவத்தின் உச்சிக்கே போகிறோம்.

இது ஏதோ ஆண்டை அல்லது முதலாளி ஒருவரது வீட்டில் அவரது குழந்தையின் மலத்தை அதே வயதுடைய வேலைக்காரக் குழந்தையையை வைத்து சுத்தம் செய்தாலே அது மாபெரும் குற்றம்தான். அப்படிப் பணித்தவருக்கு சிறைத்தண்டனை என்பதுகூட சற்று குறைவான தண்டனைதான்.

இது நடந்தது ஒரு பள்ளிக்கூடத்தில் என்றால். அதுவும் அந்த வகுப்பின் ஆசிரியையே இந்த செயலை செய்ய வைத்திருக்கிறார் என்றால் அது எவ்வளவு கொடுமை.

ஆனால் அப்படி ஒரு சம்பவம் நாமக்கல் மாவட்டம் ராமாபுரம் என்ற ஊரில் உள்ள நடுநிலைப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் உயர்சாதிக் குழந்தை ஒருவன் மலம் கழித்துவிடவே அதை அதே வகுப்பில் படிக்கும் தலித் மாணவனை மிறட்டி சுத்தம் செய்ய வைத்திருக்கிறார் விஜயலட்சுமி என்ற ஆசிரியை.

படித்தவன் பாவம் செய்தால் அவன் அய்யோனு போவான், அய்யோனு போவான்என்பான் பாரதி.

இப்படி ஒரு பாவத்தை செய்தால் செய்தவன் அய்யோனு போனால் பத்தாது ஒரு ஆயுளுக்கேனும் உள்ளே போக வேண்டும்.

********************************************************************************  

ஆறுகள் ஓடிக்கொண்டிருந்த இடத்தில்
லாரிகள் ஓடிக் கொண்டிருக்கின்றன
லாரிகள் ஓடிக் கொண்டிருந்த இடத்தில்
ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன”   

என்று தனது முகநூல் பக்கத்தில் ரதி பாலா எழுதியிருந்ததை உங்களுக்கு சொல்லவேண்டும்போல் இருந்தது. சொல்லிவிட்டேன்.

***********************************************************************    






இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...