Friday, May 29, 2015

அதற்கென்ன செய்யலாம்?

கப்பலா, படகா, இல்லை படகுக் கப்பலா? அதன் பெயர் என்னவென்று தெரியவில்லை. பசி, தாகம், அழுகை, கதறல், உயிரின் வாதை போன்றவைகளால் நிரம்பிக் கசிகிறது அது. எந்தக் கரையிலும் இரக்கமேயில்லை.
எரிபொருள் இருக்கும் வரை இயக்கலாம் அதனை. பிறகு, அலைகள் இழுக்கும் திசை இழுபட அனுமதிப்போமா?
கடவுள்கள் இல்லை. ஒருக்கால் அப்படி யாரேனும் இருப்பின் இத்தனை கொடுமைகளையும் வேடிக்கை பார்த்தமைக்காக அவர்களைக் கொன்று போடலாம்.
எந்த மெசையாவும், அவதாரமும், தூதரும் எதுவும் செய்துவிட இயலாது.
நமது அரசாங்கங்களை தலையிடவும் தடுத்து நிறுத்த அந்த அரசை நிர்ப்பந்திக்கவும் நிர்ப்பந்திப்போம்.
அதற்கென்ன செய்யலாம்?

இடைத் தங்கல்

பதறி விடாதீர்கள்.,
விவசாயிகளுக்கான சேனலைத் தொடங்கி வைக்கத்தான் வந்திருக்கிறார்.
ஒரே ஒரு வார ஓய்வுக்குப்பின் புறப்பட்டு விடுவார்

அவர் ரொம்ப நல்லவர்.

சென்ற ஆண்டு இதே நாளில் பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் திரு கார்மேகம் அவர்களோடு பேசிக்கொண்டிருக்கிறேன். பேசிக்கொண்டிருந்தாலும் கவனம் முழுக்க அவர் மேசையிலிருந்த ஒரு புத்தகத்தின் மீது இருப்பதைக் கவனித்தவர்
"முரட்டு வாசகனுக்கு" என்றெழுதிக் கையொப்பமிட்டுக் கொடுத்தார்.
திருடுவதற்கான வாய்ப்பை எனக்கு ஒருபோதும் தருவதில்லை அவர்.
அவர் ரொம்ப நல்லவர்.

Thursday, May 28, 2015

கவிதை 32

பேதமெல்லாமில்லை
எந்த சாமிக்குக் கொடுத்தாலும் சரி
எங்கள் தொகுதியை
கொடுக்கும் கட்சிக்கு என் வாக்கு
வட்டம், சதுரம், நகரமெல்லாம்
புடைசூழ
வாக்குக் கேட்கவேனும் வருமே
ஏதேனுமொரு தெய்வம்
எங்கள் தெருவிற்கும்

Wednesday, May 27, 2015

இளைய திரள் அதற்கெங்களை....

கேட்டுவிட்டார்களே என்பதற்காக வழங்கப்படும் புத்தக அணிந்துரைகள் மிக அதிகம். ஏதாவது அணிந்துரை என்ற பெயரில் போட்டாக வேண்டுமே என்பதற்காக பெறப்படும் அணிந்துரைகளும் இல்லாமல் இல்லை. அணிந்துரை இல்லாமல் நேரடியாக வாசகனை அணுகும் புத்தகங்களும் இருக்கவே செய்கின்றன. புத்தகங்களை முழுமை அடையச் செய்யும் அணிந்துரைகள் நிறைய இருக்கின்றன. புத்தகக்களின் முக்கியமானதொரு உறுப்பாகவே அவை மாறிவிடும்.
அப்படியான மூன்று அணிந்துரைகளை அவ்வப்போது நான் அசைபோடுவது உண்டு.
• தோழர் சுபவீரபாண்டியன் அவர்கள் எழுதிய “பகத்சிங்கும் இந்திய தேசிய காங்கிரசும்” என்ற நூலுக்கான தோழர் இளவேனில் அவர்கள் எழுதிய முன்னுரை. ( நூலின் தலைப்பு இந்திய தேசிய அரசியலும் என்று இருப்பதற்கான வாய்ப்பும் உண்டு. இதுவரை ஏழுமுறை அந்த நூலை வாங்கியிருப்பேன். களவு போய்விடுகிறது.)
• “அந்தக் கேள்விக்கு வயது 98” என்ற எனது நூலுக்கு தோழன் கோ.வி. லெனின் எழுதிய முன்னுரை. லெனினுடைய அந்த முன்னுரையை எடுத்துவிட்டால் அந்த நூல் ஊனப் படும் என்பதே எனது அபிப்பிராயம்.
• தோழர் இரா.சுப்பிரமணி அவர்கள் எழுதிய “இந்தியாவில் நெருக்கடி நிலை” என்ற நூலுக்கு தோழர் S.V.ராஜ்துரை அவர்கள் எழுதிய முன்னுரை.
தோழர் இளவேனில் அவர்களின் “கவிதா”வை எவ்வளவு மதிக்கிறேனோ அதில் கொஞ்சமும் குறையாமல் தோழர் சுப வீரபாண்டியன் அவர்களது நூலுக்கான அவரது முன்னுரையையும் மதிக்கிறேன். அந்த நூலைப் படித்துவிட்டு அழுததாக இளவேனில் அதில் சொல்வார். அந்த முன்னுரையே என்னை அழ வைத்திருக்கிறது.
எந்து நூலுக்கானதோழன் கோ.வி.லெனினது அணிந்துரையைப் பற்றி சொல்லவேண்டுமெனில் அந்த நூலின் ஆகச் சிறந்த பக்கங்கள் அவரது அணிந்துரைப் பக்கங்கள்தான்.
தோழர் இரா.சுப்பிரமணி அவர்களின் “இந்தியாவில் நெருக்கடிநிலை” நூலுக்கான தோழர் எஸ்.வி.ஆர் அவர்களின் அணிந்துரையைப் பற்றி சொல்லி மாளாது. பிரிட்டிஷ் இந்தியாவின் அடக்குமுறைச் சட்டங்களை, அதன் விளைவுகளை, அதற்கான அன்றைய காங்கிரசின் எதிர் வினையை, அதன் போராட்டங்களை, சுதந்திரத்திற்குப் பிறகு அதே காங்கிரஸ் தான் எதிர்த்துப் போராடிய அதே சட்டங்களை கையெடுத்து அதை முன்னைவிடவும் அதிகமாய் கூர் படுத்தியது போன்றவற்றை மிக அழகாக நமக்கு எளிதில் புரிகிற மாதிரி பாடம் நடத்துகிறது.
நேரு அவர்களின் உண்மையான முகத்தை, ராஜாஜியின் கோரப் பகுதியை, இந்தியாவிற்கென்று சட்டங்கள் ஏற்பட்ட பின்பு ஏன் பழைய பிரிஷ் இந்தியாவின் கொடூரச் சட்டங்களைத் தொடர வேண்டும் என்று சட்ட சபையில் பேசிய தீரர் சத்தியமூர்த்தி அவர்கள் அதற்கு அடுத்த ஆறே மாதங்களில் இந்தித் திணிப்பிற்கு எதிராகப் போராடிய தமிழர்கள் மீது பிரிவு 120எ, மற்றும் பிரிவு 120பி ஆகியவற்றைப் பிரயோகித்து அவர்களைத் தூக்கிலிட வேண்டும் என்று ஏசி அசிங்கமாக அம்பலப் பட்டு நின்றது என்று பலவற்றை பேசுகிறது.
”சமத்துவம் என்னும் பிரச்சினையை அருவமான முறையில் அல்லது பெயரளவுக்கு முன்வைப்பது முதலாளிய ஜனநாயகத்தின் இயல்பு. பொதுவான தனிமனிதச் சமத்துவம் என்னும் வேடத்தின்கீழ் முதலாளிய ஜனநாயகம், சொத்து உடமையாளர்களுக்கும், பாட்டாளிகளுக்கும், சுரண்டுபவனுக்கும், சுரண்டப் படுபவனுக்கும் உள்ள பெயரளவு அல்லது சட்டரீதியான சமத்துவத்தைப் பிரகடனப் படுத்துகிறது. இவ்வாறு அது ஒடுக்கப்பட்ட வர்க்கங்களை அப்பட்டமாக ஏமாற்றுகிறது”
என்கிற தோழர் லெனின் அவர்களது முதலாளித்து ஜனநாயகம் குறித்த கருத்தினை அவர் பொறுத்தமான இடத்தில் அவர் மேற்கோள் காட்டியது இந்திய நாடாளுமன்ற ஜனநாயத்தோடு நெருக்கமாகப் பொருந்திப் போவதை உணர முடிகிறது.
உலகின் ஆகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பதிலோ ஜனநாயகத்தின் கனிகளை அது எந்தக் குடிமகனுக்கும் முற்றாக அது நிராகரிப்பதில்லை என்பதிலோ நமக்கு முற்றாக முரண்பாடுகள் இல்லை.
இந்த அளவுக்கேனும் பேச முடியுதுன்னா அது ஜனநாயகத்தோட பலன்தான் என்றும் பலர் சொல்லும்படியான சூழல் பல நேரங்களில் வாய்க்கிறதென்பதும் உண்மைதான்.
”பெரிய மந்திரியாயிட்டாப்ல என்ன கொம்பா மொளச்சிருக்கு. எப்பேர்பட்ட கொம்பனாயிருந்தாலும் அவனுக்கும் ஒரு ஓட்டுதான், இந்த ஒட்டுக் குடிசையில் இருந்தாலும் எனக்கும் ஒரு ஓட்டுதான் என்று கிராமத்தில் இருக்கும் எழுதப் படிக்கத் தெரியாத பாமர மனிதன்கூட சொல்வதை பலநேரம் கேட்டிருக்கிறோம்.
“எவனாயிருந்தா என்ன எலக்ஷன் வந்தா ஓட்டுக்கேட்க என் வீட்டு வாசப்படிய மிதிச்சுதானே ஆகனும்” என்கிற மாதிரி ஏசாத வாக்காளனே இல்லை எனலாம்.
ஒரு பக்கம் மேலோட்டமாகப் பார்த்தால் இது எவ்வளவு சரி என்பது மாதிரித் தோன்றும். ஆமாம், அவனுக்கும் ஒரு வாக்கு எனக்கும் ஒரு வாக்கு என்பதாகத் தோன்றும். அவனுக்கும் ஒரு டிக்கட் எனக்கும் ஒரு டிக்கட்தான் என்பதில் ஆகா இருவரும் சமம்தானே என்றுகூட நினைக்கத் தோன்றும்.
கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் வாக்குச் சமநிலை என்பது வாழ்க்கைச் சமநிலை ஆகாது என்பது புரியும்.
அவனுக்கான வாக்கு நமது வாக்கோடு சமப் படுகிறது. அவனது உறைவிடம் நமது உறைவிடத்தோடு பொருந்திப் போகிறதா? என்று பார்த்தால் அவனது செல்ல நாய்க்கான உறைவிட வசதிக்கே நாமின்னும் ஏழேழு ஜென்மம் எடுக்க வேண்டும் என்ற எதார்த்தம் பிடி படும்.
அவனது குழந்தைகளுக்கான கல்வியும் நமது குழந்தைகளுக்கான கல்வியும், அவனுக்கான மருத்துவமும் நமக்கான மருத்துவமும், அவனுக்கான போக்குவரத்தும் நமக்கான போக்குவரத்தும் சமமாகாத போது வாக்குச் சமநிலை என்பது நமது வாக்கினை விலைக்கு வாங்கக்கூடிய வல்லமையை அவனுக்குத் தரவே செய்யும்.
சமமான வாழ்க்கையோடு கூடிய வாக்குச் சமநிலையே வாக்குகளை விலைபொருளாவதிலிருந்து தடுக்கும்.
ஆக, வாக்குகளின் மூலம் நல்ல மக்கள் அரசு வரவேண்டும் என்பதற்கான நிபந்தனையே சமமான வாழ்க்கைதான்.
நமக்கு நல்ல மக்கள் அரசு வேண்டும்.
அதற்கு மக்களின் வாழ்க்கை சமப்பட வேண்டும்.
அதற்கு ஏதாவது செய்தே ஆகவேண்டும்.
இளைய திரள் அதற்கெங்களை வழிநடத்தும்.

Monday, May 25, 2015

எனக்கும் சேர்த்துதான்

”ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்”
ஒன்றாம் வகுப்பு பிள்ளைகளுக்கு மட்டுமல்ல. எனக்கும் சேர்த்துதான் கிழவி சொன்னது

Sunday, May 24, 2015

குட்டிப் பதிவு 42

விடுமுறை முடிந்து பள்ளி வரும் ஆசிரியர்களிடம் ஆளுக்கொரு தாளைக் கொடுத்து விடுமுறையில் அவர்கள் வாசித்த நூல் குறித்து ஒரு கட்டுரை கேட்டால் எப்படி இருக்கும்

Saturday, May 23, 2015

ரசனை 08




”பள்ளிக்கூடத்துக்கு பீஸு கட்டலபா” என்ற
குழந்தையின்
தலையை வருடியபடியேயான
அவனது தவம்
ஒரு இழவிற்காக
என்ற தேவதா தமிழ் அவர்களின் வெட்டியானின் வலி குறித்த இந்தச் சின்னக் கவிதையை வாசித்ததிலிருந்து வலித்துக் கொண்டே இருக்கிறது.
ஒரு ஐந்து வரிக் கவிதை பரட்டைத் தலையோடு சட்டையற்ற கிழிந்த டவுசர் மேனியினனான ஒரு ஏழைச் சிறுவனை, அவனது ஏக்கத்தை, அழுக்கப்பிய கிழிந்த வேட்டிக்காரத் தந்தையின் இயலாமையை வருடலை கண் முன்னே காட்சிப் படுத்துகிறது.
வாழ்த்துக்கள் தோழர்.

கலகல



மதுரையில் நடந்த “கல கல வகுப்பறை” பயிற்சியில் பங்கு பெற்ற ஆசிரியத் தோழர்களோடான உரையாடல்.
எது கல்வி என்பது குறித்தும், வகுப்பறை கல கலவென்றிருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் தொடங்கி,
வகுப்பறை கல கல என்றிருக்க வேண்டுமெனில் அது சுயநிதிப் பள்ளியாக இருக்க இயலாது என்பதையும், ஒரு வகுப்பு கல கல என்றிருக்க வேண்டுமெனில் அந்த வகுப்பு அவனது தாய் மொழியில் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசிவிட்டு வந்தேன்.
மகிழ்ச்சியாய்த் தானிருந்தது.

Friday, May 22, 2015

தமிழிலும் கொஞ்சம்....

அது இசைக் கச்சேரிகளில் தமிழிலும் பாடவேண்டும் என்று கல்கி, ராஜாஜி, அண்ணாமலைச் செட்டியார் போன்றவர்கள் போராடிக் கொண்டிருந்த நேரம்.

இதற்காக ஒரு இயக்கமே கட்டி இந்த நியாயமான கோரிக்கைக்காக ஊர் ஊராய் மாநாடுகளை நடத்திக் கொண்டிருந்திருக்கிறார்கள். இதற்கு கடுமையான எதிர்ப்பு இருந்திருக்கிறது. அதுவும் அப்படி ஒன்றும் இவர்கள் கச்சேரி முழுவதையும் தமிழில் கொடுங்கள் என்றும் கேட்கவில்லை. கச்சேரிகளில் கொஞ்சம் தமிழையும் பாடுங்கள் என்ற அளவில்தான் இவர்களது இறைஞ்சல் இருந்திருக்கிறது. 

கேட்டவர்களைப் பார்த்து அவர்கள் புத்திசாலித்தனமாய் கேட்டிருக்கிறார்கள்,

“ சங்கீதத்திற்கு ஏது பாஷை? பாஷையே தேவைப் படாத சங்கீதத்தை தமிழில் பாடவேண்டும் என்று ஏன் அழிச்சாட்டியம் செய்கிறீர்கள்?”

கல்கி கேட்டிருக்கிறார்,

“ பாஷையே இல்லாத சங்கீதத்தை தமிழில் பாடக்கூடாது என்பதிலும் தெலுங்கில்தான் பாடவேண்டும் என்றும் ஏன் சொல்கிறீர்கள்?”

ஒரு கட்டத்தில் தமிழில் இசை கோரும் இயக்கத்தை “ அநியாய இயக்கம்” என்று துப்பியிருக்கிறார்கள். தமிழிலும் இசை வேண்டும் என்று கேட்டவர்களைப் பார்த்து தெலுங்கு தூவேஷிகள் என்றிருக்கிறார்கள்.

தமிழ் மண்ணில் தமிழிலும் பாடுங்கள் என்று மாநாடு போட்டு கேட்கவேண்டிய அவலம் இருந்திருக்கிறது.

“ ஏன் தமிழில் கேட்கிறீர்கள்?”

“ தெலுங்கு புரியவில்லை?”

“ ஏன்?”

“ தெலுங்கு எங்களுக்கு தெரியாது”

“ ஏன் உங்களுக்கு தெலுங்கின் மீது வெறுப்பு?”

 கேட்டவரை கல்கி கேட்கிறார்,

“ உங்களுக்கு லத்தீன் தெரியுமா?”

“ தெரியாது”

கல்கி திருப்புகிறார்,

“ ஏன் உங்களுக்கு லத்தீன் மீது இவ்வளவு வெறுப்பு?”

சங்கீதத்திற்கு பாஷையே இல்லை என்று வம்படிக்கும் ஒரு நண்பரோடு ஒரு கிரஹப் பிரவேஷத்திற்கு செல்ல வேண்டிய சந்தர்ப்பம் கல்கிக்கு கிடைக்கிறது. பெரிய இடம் என்பதால் கச்சேரி நடக்கிறது. வித்வான் இந்துஸ்தானியில் பாடுகிறார்,

“ இஸ் கர்கே ஆக் லக் கயி”

நண்பர் லயித்து கைதட்டியிருக்கிறார். கல்கி அவரை பார்க்கவே அவர் சொன்னாராம்,

” எவ்வளவு அபூர்வமான பிர்காக்கள்”

“ அர்த்தம் தெரியுமா?”

“ தெரியாதே”

கல்கி சொல்கிறார்,

“ இஸ் கர்கே ஆக் லக் கயி” நா “ இந்த வீட்டிலே தீப் பிடித்து கொண்டது”

இப்படியான நகர்தலின் ஒருகட்டத்தில் தமிழிசைக்கான எதிர்ப்பியக்கம் கூட்டங்களையும் மாநாடுகளையும் ஏற்பாடு செய்கிறது. இதை அறிந்த கல்கி சொன்னாராம்,

“ ரஷ்யாவின் மீது ஜெர்மன் படை எடுத்ததும் பெர்நாட்ஷா ‘ இனி இங்கிலாந்து நிம்மதியாகத் தூங்கலாம். நாஸி ஜெர்மனியை இனி ஸ்டாலின் பார்த்துக் கொள்வார்’ என்று சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது”

“ அதற்கென்ன?”

“ எப்ப தமிழிசைக்கு எதிரா கூட்டங்களை போட ஆரம்பித்துவிட்டார்களோ இனி அவர்களே தமிழிசையைக் கொண்டுவந்துவிடுவார்கள். நாம் நிம்மதியாகத் தூங்கலாம்”

நாம் தமிழ்ப் பாடல்களைக் கேட்பதற்காக நிறையவே போராடியிருக்கிறார்கள்.

Thursday, May 21, 2015

491 அல்ல என் மகிழ்விற்கு காரணம்

மதிப்பெண் விவரம் தெரிந்ததும் அப்பாயியை பார்க்கப் போயிருக்கும் கீர்த்தனாவிற்கு அலை பேசி 491 எடுத்திருக்கும் விவரம் சொன்னேன்.

சலனமேயில்லாமல் சரிப்பா என்கிறாள்.

இப்படி பேச வாய்ப்புத் தராம முடிக்கிறாளே. என்ன செய்வது என்று தெரியவில்லை.

“ பாப்பா பெரிய சிஸ்டர், சிஸ்டருங்க, மிஸ்ங்க எல்லாம் அழைத்துட்டுட்டு வரச் சொல்றாங்க எப்படா வர?” என்கிறேன்.

“ வேணாம்பா. அடுத்த வாரம் போய் பார்க்கிறேன். போனா மண்டைய ரொப்பாம விட மாட்டாங்க. காலாண்டுப் பரிட்சையும் முழு ஆண்டுப் பரிட்சையும் ஒன்னுதாம்ப்பா”

என்ன பேசுவதென்றுப் புரிய வில்லை. “ அண்ணன் பேசினானாடா?”

“ பேசினான்”

“என்ன சொன்னான்?”

.” நாமக்கல் பன்னைக்கெல்லாம் வேணாண்டி. இங்கதானே இந்த மார்க் கிடச்சுது. இங்கயே படி. லெவன்த் பாடம் முக்கியம் னான் பா”

491 அல்ல என் மகிழ்விற்கு காரணம். குழந்தைகளின் இந்தப் பக்குவமே என்னை மகிழ்விக்கிறது.

பக்குவப் படுத்திய பள்ளிகளுக்கும் ஆசிரியத் தோழர்களுக்கும் குழந்தைகளின் நண்பர்களுக்கும்  நன்றி சொல்கிறேன்.

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...