Friday, June 3, 2022

அண்ணா “டான் டீ”

 மதுரை உயர்நீதிமன்றக் கிளையை பேருந்து கடக்கும்போதே மத்தியப் பேருந்து நிலையத்தில் இருக்கும் டான் டீ கடையின் உயர க்ளாஸ் தேநீருக்கு நமது நாக்கு தயாராகிவிடும்

இறங்கியதும் முதல் வேலை அந்தக் கடைக்குப் போவதுதான்
ஊர் திரும்பும்போதும் அங்கு தேநீர் அருந்தாமல் நகர்வது இல்லை
சமீபத்தில் மதுரை அருளானந்தர் கல்லூரியில் உரையாற்ற சென்றபோதும் அப்படித்தான்
அந்த டான் டீ நிறுவனத்தை அண்ணா உருவாக்கியதற்கான காரணம் மிக முக்கியமானது
1960 களில் இலங்கைத் தோட்டத் தொழிலாளிகளது குடியுரிமையைப் பறிக்கிறது இலங்கை அரசு
பலர் தமிழ்நாட்டிற்கு திரும்புகிறார்கள்
அவர்களுக்கான பலவிதமான வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறார் அன்றைய முதல்வர் அண்ணா
அவர்களில் பெரும்பான்மையானோருக்கு தேயிலைத் தொழிலைத் தவிர வேறு எதுவும் தெரியாது என்பது அண்ணாவின் கவனத்திற்கு வருகிறது
1968 இல் அண்ணா “டான் டீ” நிறுவனத்தை உருவாக்குகிறார்
அண்ணா குறித்து பேச நிறைய இருக்கு

முகநூல்
25.05.2022

மொழி அயோக்கியத்தனம்

 குவாட் மாநாட்டிற்காக ஜப்பான் சென்றிருக்கிறார் பிரதமர்

அங்குள்ள இந்திய வம்சாவளியினர் வரவேற்பளித்திருக்கிறார்கள்
அப்போது ஜப்பான் குழந்தைகள் இருவர் அவரை இந்தியில் வரவேற்றிருக்கிறார்கள்
மகிழ்ந்துபோன பிரதமர்
எப்படி இந்தி கற்றீர்கள் என்று கேட்டிருக்கிறார்
இது இயல்பானது
இதை வாசிக்கிறபோது எமக்கும் மகிழ்ச்சி ஒட்டிக் கொள்கிறது
இது மொழி மகிழ்ச்சி
சமீபத்தில் இந்தியை ஏற்காவிட்டால் ஒன்றிய நிதி உதவி கிடையாது என்றார் மாண்புமிகு அமித்ஷா
இது மொழித் திணிப்பு
எல்லோரும் அயர்ந்திருந்த நேரத்தில்
சமஸ்கிருதத்தில் பிள்ளைகளை உறுதியேற்க வைத்தது
மொழி அயோக்கியத்தனம்

முகநூல்
25.05.2022

இங்க அவன் வந்தப்ப அவன் செத்திட்டு இருந்தான் சார்

 இதை எழுதுவதா ?

வேண்டாமா?
என்று நிறையக் குழம்பிய பின்னரே எழுதுகிறேன்
நான் செய்தது தவறென்றால்
இதை சரியாக செய்வதெப்படி என்று யோசித்து சரியாக செய்வதற்கு உதவும் என்பதாலும்
சரியென்றால்
தைரியத்தோடு இதை இன்னும் விரைவாக செய்வதற்கு உதவும் என்பதாலும் எழுதுகிறேன்
20.05.2022 வெள்ளி முற்பகல் 10.20
தேர்வறைகளுக்கு கண்காணிப்பாளர்களும் மாணவர்களும் சென்றுவிட்டார்கள்
மாணவர்களுக்கு வழங்கியது போக மிச்சம் இருந்த வினாத் தாட்களை பீரோவில் வைத்து பூட்டி சீல் வைத்த பின்பு
அறைகளை சுற்றி வருவதற்காக கிளம்புகிறேன்
மூன்றாம் எண் அறையில் இருந்த விஜயலட்சுமி அழைக்கிறார்,
“சார், ஒரு பையன் அப்படியே சரியறான் சார்”
ஓடுகிறேன்
கைத்தாங்கலாக பிடித்தபடியே
“என்ன ஆச்சு, சாப்டியா சாமி?”
சிரிக்கிறான்
”ரெண்டு நாளா ஜுரம் சார். மருந்து பையில் இருக்கு என்கிறான்”
கைத்தாங்கலாகவே அவனை “கட்டுப்பாட்டு அறைக்கு” அழைத்து வருகிறேன்
சரிந்து விழுகிறான்
மூச்சு விட இயலாமல் தவிக்கிறான்
சூடான தேநீரைத் தருகிறோம். கொஞ்சம் தெம்பு வருகிறது
மீண்டும் தனது பையில் மருந்து இருப்பதாகவும் அது வேண்டும் என்றும் கேட்கிறான்
மூச்சுவிட முடியாமல் போகிறது
தேர்வறைக்கு செல்லும் முன் குழந்தைகளின் புத்தகப் பைகளை ஒரு அறையில் வைத்து பூட்டிவிடுவோம்
தேர்வு முடிந்ததும்தான் அதைத் திறக்க வேண்டும்
அதற்கு முன்னர் திறப்பது குற்றம்
ஆவது ஆகட்டும் என்று அறையைத் திறக்கிறோம்
அவன் சொன்ன மருந்து “நிவாரன் 90”
நாங்கள் பஃப் வைத்திருப்பான் என்று எதிர்பார்த்தோம்
எங்களது அலுவலக உதவியாளர் தங்கதுரை அவனை எதிரே இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துப் போகலாம் என்கிறார்
அவரும் இன்னொரு அலுவலக எழுத்தர் மீனா அம்மாவும் கைத்தாங்கலாக அழைத்துப் போகிறார்கள்
அப்படியே நாற்காலியில் சாய்கிறேன்
கால்மணி ஆகியும் யாரும் வராமல் போகவே எங்கள் துறை அலுவலரிடம்
“நேரமாகுது ரமீலா, பயமா இருக்கு. நான் போய் பார்த்துவிட்டு வருகிறேன். பாத்துக்கப்பா”
”என்னதிது. போய் பார்த்துட்டு வாங்க சார். பாத்துக்கறேன்”
பையனுக்கு ஆக்சிஜன் ஏறிக் கொண்டிருக்கிறது
தங்கதுரை மருத்துவரோடு பேசிக் கொண்டிருக்கிறார்
பையன் ஒரு இருதய நோயாளி. 10 வருடங்களாக மருந்துகள் எடுப்பவன். இரண்டு மாதமாக மருந்தெடுப்பதை நிறுத்தி இருக்கிறான்
அம்மா வருகிறார்
மருத்துவர் அவரோடு பேசி, திருச்சி KMC பரிந்துரைக்கிறார்
ECG எடுத்திருக்கிறார்கள்
வெளியே வரக்கூடாது சார். வந்துவிட்டேன். போகவா சார்
எழுகிறார்
கைளைப் பற்றிக் கொள்கிறார்
நான் செய்ய நினைத்த காரியம்
இங்க அவன் வந்தப்ப அவன் செத்திட்டு இருந்தான் சார்
இன்னும் கொஞ்சம் நேரம் வராமல் இருந்திருந்தால் ஒன்று அவன் முடிந்திருப்பான். அல்லது இன்னமும் கிரிட்டிகலாக ஆகி இருக்கும்
இப்ப ஒன்னும் பிரச்சினை இல்லையே?
90 விழுக்காடு இல்லை சார். மிச்சத்த அவன் பார்த்துப்பான் என்று மேலே கைகளை உயர்த்துகிறார். தைரியமா போங்க சார் என்கிறார்
அவன் அரசுப்பள்ளி மாணவன்
பணம் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் ஆக்சிஜன், ECG எல்லாம் எடுத்த அந்த மருத்துவரை கை எடுத்துக் கும்பிடுகிறேன்
அவன் அம்மா வரவரைக்கும் இங்கேயே அவங்கூட இருக்கட்டுமா சார். அம்மாவத் தேடும் சார் என்று அவன் உடனிருந்த மீனா அம்மா
தங்கதுரை
ரமீலா
எல்லோரையும் கை எடுத்து வணங்கி நன்றி சொல்கிறேன்
நடந்ததை எல்லாம் சொல்லியபோது என்னைவிட பதினைந்து வயதாவது இளையவராக இருக்கும் எங்கள் முதன்மைக் கல்வி அலுவலர்
சரியா செஞ்சுருக்கீங்க சார் என்கிறார்
மாவட்டக்கல்வி அலுவலர்,
ஒரு பையனக் காப்பாத்தி இருக்கீங்க சார் என்கிறார்
இப்படி தொடர் சிகிச்சையில் இருக்கும் பிள்ளைகளுக்கு மருத்துவர் சொல்லாமல் மருந்துகளை நிறுத்தாதீர்கள்
நோய் குறித்த விவரங்களை தேர்வுப் பணிக்கு வருபவர்களிடம் கொடுங்கள்
என்ன வேணா சொல்லுங்க,
எப்படி அறையைத் திறக்கலாம்?
வெளியே மருத்துவமனைக்குப் போகலாம் என்று யாரேனும் கேட்டால்
அன்று மாலை அந்தக் குழந்தை மோகன்ராஜோடு பேசிய தெம்பில்
தண்டனைக்கான தெம்போடுதான் இருக்கிறேன்

முகநூல்
21.05.2022

GST COUNCIL எடுக்கிற முடிவை மாநிலங்கள் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை

 GST குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு GST குறித்து சொல்லிக்கொள்கிற மாதிரி ஞானமில்லாத என்னைப் போன்றவர்களுக்கும் கொஞ்சம் புரியத் தொடங்கி இருக்கிறது

நமது நிதி அமைச்சர் திரு பழனிவேல் தியாகராஜனின் நேர்காணல்கள் இன்னும் கொஞ்சம் தெளிவு செய்கின்றன
இன்று நான் கேட்ட CPM கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கனகராஜ் அவர்களின் நேர்காணல் இதை எப்படி நடமுறைப்படுத்த வேண்டும் என்று கூடுதலாகத் தெளிவு செய்திருக்கிறது
GST COUNCIL எடுக்கிற முடிவை மாநிலங்கள் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை என்றும்
அதற்கு எதிரான சட்டத்தையும் மாநிலங்கள் நிறைவேற்ற முடியும் என்றும் தீர்ப்பு கூறியது
எனில்,
ஒரே பொருளுக்கு ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு விதமான வரியை விதிக்க முடியும்
இந்த இடத்தில்தான் தோழர் கனகராஜ் அவர்கள் எந்த ஒரு பொருள்மீது GST விதிக்கும் முன்பும் ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் அது குறித்து ஒரு உரையாடலை நிகழ்த்த வேண்டும் என்று
இல்லாதுபோனால் ஏற்படும் சிக்கலையும் அவர் தெளிவு படுத்துகிறார்
என்ன சிக்கல் வரும்
உதாரணமாக
சர்க்கரைக்கு 20 சதவிகதம் GST யை தமிழ்நாடு விதிப்பதாகவும்
பஞ்சாப் 10 சதவிகிதம் விதிக்கிறது என்றும் கொள்வோம்
தமிழ்நாட்டு மக்கள் ஏதோ ஒரு வகையில் பஞ்சாபில் இருந்து வாங்கிக் கொள்வார்கள்
இப்படியாக எந்தப் பொருளுக்கு எந்த மாநிலத்தில் விலை குறைவோ அந்தப் பொருளை அந்த மாநிலத்தில் இருந்து வாங்கிக் கொள்வார்கள்
இதில் என்ன சிக்கல்
சர்க்கரைக்கு தமிழகம் கூடுதலாக GST விதித்தால்
தமிழ்நாட்டில் சர்க்கரை தேங்கிவிடும்
இதற்காகத்தான் உரையாடல் அவசியம் என்கிறார் தோழர் கனகராஜ்

முகநூல்
22.05.2022

அமெரிக்க டாலரின் விலை ஏறினால் என்ன ? குறைந்தால் என்ன?

 பெட்ரோல், டீசலைக் கடந்து ஒரு அமெரிக்க டாலரின் இந்திய விலையும் விரைவில் 100 ரூபாயைக் கடந்துவிடும் என்று தோன்றுகிறது

பொருளாதாரத்தின் அரிச்சுவடியை மேலோட்டமாக அறிந்த அக்கறையுள்ளவர்களைக்கூட இது தூங்க விடாது
கவலையாக இருக்கிறது
இந்த நேரத்தில் ஒன்றிய நிதி அமைச்சர் கூறியதாக ஒரு செய்தி உலவுகிறது
சொல்பவர்தான்
சொல்லி இருக்கவும் கூடும்
இல்லை என்றாலும் அதுகுறித்து உரையாடுவது அவசியம்
”நீங்கள் உங்கள் வீட்டிற்குத் தேவையான மளிகை சாமான்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை இந்திய ரூபாயைக் கொண்டுதான் வாங்குகிறீர்கள்
பிறகு அமெரிக்க டாலரின் மதிப்பு குறித்து நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை”
என்று கேட்டிருக்கிறார் திருமதி நிர்மலா
மேலோட்டமாகப் பார்த்தால் இது உண்மை என்றே படும்
பாருங்களேன் அரிசி ,பருப்பு, சீனி, எண்ணெய் உள்ளிட்ட அனைத்தையும் இந்திய ரூபாயைக் கொண்டுதானே மக்கள் வாங்குகிறார்கள்
அமெரிக்க டாலரின் விலை ஏறினால் என்ன ?
குறைந்தால் என்ன?
தேவை இல்லாமல் சாமானிய மக்களை கவலைப்பட வைக்கிறார்களே இந்தப் பாவிகள் என்று நினைக்க வைக்கும்
ஆமாம்தான் தாயே
கச்சா எண்ணெய் குறைவாக உள்ளபோதே பெட்ரோல் டீசலை இந்த விலைக்கு விற்கிறீர்கள்
கச்சா எண்ணெயை அமெரிக்க டாலர் கொடுத்துதான் வாங்குகிறீர்கள்
அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்கிறது
என்றால்,
கச்சா எண்ணெயின் விலை உயராதா?
எப்படி உயரும்?
1000 அமெரிக்க டாலருக்கு கச்சா வாங்குகிறோம்
டாலருக்கு இந்திய மதிப்பு 50 ரூபாய் எனக் கொள்வோம்
1000 டாலர் எனில் 50,000 ரூபாய் ஆகும்
இதுவே 100 ரூபாய் அளவிற்கு டாலர் உயர்ந்தால் 1,00,000 ரூபாய் ஆகும்
கச்சா எண்ணெய் 1000 டாலர்தான்
டாலர் 50 ரூபாயாக இருந்தபோது நாம் கொடுக்க வேண்டியது 50,000 ரூபாய்
டாலரின் மதிப்பு 100 ரூபாய் ஆனால் நாம் கொடுக்க வேண்டியது 1,00,000 ரூபாய்
எனில் பெட்ரோல், டீசலின் விலை இன்னும் உயரும்
எனில் மளிகை சாமான்களின் விலையும் உயரும்
இப்படித்தான் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்தால் இந்திய ரூபாயில்
இவர்கள் வாங்கி வைத்துள்ள கடனுக்கான வட்டியையும் டாலரில்தான் தர வேண்டும்
அமெரிக்க டாலர் விலை 50 ரூபாய் என்று கொள்வோம்
1000 டாலர் வட்டி கட்ட வேண்டும் என்றால் 50,000 ரூபாய் கொடுத்தால் போதும்
100 ரூபாய் என்று உயர்ந்தால் 1,00,000 கட்ட வேண்டும்
இன்னும் இன்னுமாய் மக்களுக்கு புரிகிற மொழியில் உரையாட வேண்டும்
செய்வோம்

முகநூல்
21.05.2022

என்ன வகையான சுருட்டல் இது?

 உச்சநீதிமன்றத்தின் GST குறித்த நேற்றைய நேற்றைய தீர்ப்பை நான் இப்படியாகப் புரிந்துகொண்டேன்

அதாவது,
GST குழுவில் வைக்கப்படுகிற அல்லது ஏற்கப்படுகிற GST வரி குறித்த முடிவுகளை மாநில அரசுகளும் ஒன்றிய அரசும் தங்களின் அவைகளில் மசோதாவகக் கொண்டு வந்து நிறைவேற்றினால்தான் அது அமலுக்கு வரும்
அத்தகைய முடிவுகள் மாநில அரசுகளை ஒருபோதும் கட்டுப்படுத்தாது
குறிப்பாக 5 விழுக்காட்டில் இருந்து வரியை 12 விழுக்காட்டிற்கு மாற்றினால்
அதை ஒன்றிய அரசு ஏற்றுக் கொண்டு சட்டமாக்கினாலும்
சட்டமாக்கும் மாநிலங்களில் மட்டுமே அந்த உயர்வினை அமல்படுத்த முடியும்
ஆனால் GST குழுவில் 5 விழுக்காட்டில் இருந்து 12 விழுக்காடு என்று ஒன்றிய அரசு சொன்னாலே போதும்
மாநில அரசுகள் சட்டம் இயற்றாமலே அது அனைத்து மாநிலங்களிலும் அமலுக்கு வருகிறது
அது எப்படி என்ற அய்யம் இயல்பாகவே வருகிறது
இப்போது அதற்கான விடையினை மரியாதைக்குரிய பழனிவேல்ராஜன் அவர்களது க்ளிப்பிங் ஒன்றில் பார்க்க நேர்ந்தது
GST குழுவில் 5 விழுக்காட்டில் இருந்து 12 விழுக்காட்டிற்கு உயர்த்துவதாக சொல்லிவிட்டு
மாநில அரசுகளின் மசோதாக்களுக்களைப் பற்றி பொருட் படுத்தாமல்
GST வரி செலுத்துவதற்கான ஆன்லைன் செட் அப்பில் 12 விழுக்காடாக மாற்றிவிடுகிறார்கள்
என்ன வகையான சுருட்டல் இது?

முகநூல்
20.05.2022

1 comment


பணப்புழக்கமும் சாத்தியம் பழைய பென்ஷன் திட்டமும் சாத்தியம்

 அன்புமிக்க நிதி அமைச்சர் திரு பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கு,

வணக்கம்
புதிய பென்ஷன் திட்டத்தில் இருப்பவர்களை பழைய பென்ஷன் திட்டத்திற்கு மாற்ற இயலாது என்ற உங்களது நிலையைத் தவிர உங்களது மற்ற அனைத்து திட்டங்களையும் ரசிக்கிறவனாகவே இருக்கிறேன்
பென்ஷன் திட்டத்தைப் பொறுத்தவரை உங்களைத் தொடர்ந்து கேட்கிற உரிமை எங்களுக்கும்
செய்து தரவேண்டிய கடமை உங்களுக்கு இருப்பதையும் நீங்கள் ஒருபோதும் மறுக்க இயலாது
நாங்கள் கேட்கவும் நீங்கள் செய்து தரவும் ஏதுவாக உச்சநீதிமன்றம் சிலவற்றை இன்று சொல்லி உள்ளது
பிரியத்திற்குரிய சார்
பழங்களின் விற்பனை வரலாறு காணாத அளவிற்கு குறைந்திருப்பதாகவும்
வாங்கும் சக்தி பழங்களை வாங்க முடியாத அளவிற்கு இறங்கி இருப்பதாகவும் தோழர் சீத்தாராம் யெச்சூரி கூறியிருக்கிறார்
யெச்சூரியின் இந்தக் கருத்து இந்தியா முழுமைக்குமானது என்ற வகையில் தமிழ்நாட்டிற்கும் பொருந்துவதாகத்தான் உள்ளது
இது பழ வியாபாரிகளை, பழ உற்பத்தியாளர்களை எப்படி பாதிக்கும் என்பது எங்கள் எல்லோரையும்விட உங்களுக்கு நன்கு தெரியும் என்பதை நான் அறிவேன்
இன்று பழம் வாங்க முடியாதவனால் நாளை அரிசியும்
நாளை மறுநாள் மருந்தும் வாங்க முடியாமல் போகும் என்பதும் நீங்கள் அறிந்ததுதான்
மக்கள் கையில் பணம் புழங்க வேண்டும்
எனக்கு விவரம் தெரிந்தவரை நிதிநிலை அறிக்கையில் விழும் பற்றாக்குறையை குறைத்த ஒரே நிதி அமைச்சர் நீங்கள் மட்டும்தான்
அதுவும் கஜானா காலியான நிலையில் நிதிப் பொறுப்பெடுத்த நீங்கள்
பெருந்தொற்றையும் சமாளித்து பற்றாக்குறையையும் குறைத்தது வியப்பின் விளிம்பிற்கே எம்மை கொண்டு தள்ளி உள்ளது
இதை எப்படி நீங்கள் செய்தீர்கள் என்பதை விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்துகொண்டபோது உங்களின் அறிவையும்
அதை மக்களுக்காக நீங்கள் பயன்படுத்தும் போக்கும் கண்டு ஆச்சரியப்பட்டுப் போனேன்
GST கு எதிராக மாநிலங்கள் சட்டங்கள் நிறைவேற்றலாம் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு உங்களுக்கானது என்பதையும் நானறிவேன்
இன்றைய தீர்ப்பை கையெடுங்கள் சார்
பணப்புழக்கமும் சாத்தியம்
பழைய பென்ஷன் திட்டமும் சாத்தியம்
காத்திருக்கிறோம்
நன்றி
எதிர்பார்த்து,
இரா.எட்வின்
19.05.2022

தவறு செய்கிறார் ஆளுனர் என்ற எங்களது கருத்தை

 பேரறிவாளன் விடுதலையை திரு அண்ணாமலை அவர்களால் ஜீரணிக்க இயலவில்லை என்று படுகிறது

அதை முதல்வர் உள்ளிட்டு தமிழகம் கொண்டாடுவது அவரை இன்னும் பெரிதாக துயருறச் செய்வதாகத் தெரிகிறது
பேறிவாளனை குற்றவாளி என்கிறார்
குற்றவாளியின் விடுதலையைக் கொண்டாடலாமா என்கிறார்
பேரறிவாளானின் விடுதலையை நாங்கள் கொண்டாடுகிறோம்
அது உங்களுக்கு எரிச்சலைத் தரும் என்றால் அதற்காகவே இன்னும் கொஞ்சம் கூடுதலாகக் கொண்டாடுவோம்
மற்றபடி அவர் குற்றவாளியா இல்லையா
அவரது விடுதலை ஏன் என்பது குறித்தெல்லாம் நுட்பமாக பேசுவதற்கு நிறையபேர் இருக்கிறார்கள்
அவர்கள் உமக்கு பதில் அளிப்பார்கள்
அவரது விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது
கொண்டாடுகிறோம்
அவரது விடுதலைத் தீர்ப்பிலேயே ஆளுனர் அவரை விடுதலை செய்யாதது தவறு என்றிருக்கிறது
தவறு செய்கிறார் ஆளுனர் என்ற எங்களது கருத்தை நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது
எனில்,
பேரறிவாளனை ஆளுனர் விடுதலை செய்யாதது தவறு என்கிறது உச்சநீதிமன்றம்
எனில்,
தவறுக்கான குறைந்தபட்ச துறைரீதியான நடவடிக்கையாவது வேண்டாங்களா அண்ணாமலை சார்

முகநூல்
19.05.2022


இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...