பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசு திரு வல்லபாய் பட்டேல் அவர்களுக்கு பலஆயிரம்கோடி ரூபாய் செலவில் சிலை வைக்கிறது. அதைக் கடுமையாக எதிர்கொள்ளும் காங்கிரஸ் கட்சி “RSS அமைப்பைத் தடை செய்த முன்னாள் உள்துறை அமைச்சர் திரு வல்லபாய் பட்டேல்” என்ற குறிப்போடு அவரது சிலையை நிறுவ முடியுமா? என்று நக்கலாக கேட்டிருக்கிறது.
கேள்வி நக்கலாக இருந்தாலும் செய்தி உண்மைதான்.
1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம்நாள் கோட்சே காந்தியாரை கொலை செய்கிறார். அதனைத் தொடர்ந்து இந்தியாவில் நடந்த இரண்டு விஷயங்களை நாம் தொகுத்துப் பார்ப்பது அவசியம்.
1)
காந்தியாரை ஒரு RSS அமைப்பைச் சார்ந்த ஒருவர் கொலை செய்தார் என்பதற்காக அந்த அமைப்பைத் தடை செய்வதால் ஒரு பலனும் ஏற்படப் போவதில்லை என்பதால் அந்த அமைப்பைத் தடை செய்வது தேவையற்றது என்று அறிக்கை விடுகிறார் தந்தை பெரியார்.
2)
காந்தி கோட்சேயினால் கொலை செய்யப்பட்டதன் காரணமாக தனக்கு ஏற்பட்டிருந்த நெருக்கடிகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காக வேறு வழியே இல்லாமல் RSS அமைப்பைத் தடை செய்கிறார் அன்றைய உள்துறை அமைச்சர் திரு வல்லபாய் பட்டேல்
கோட்சே சுன்னத் செய்துகொண்டிருந்தார். இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது. அந்த இரண்டு அடையாளங்களின் உதவியால் காந்தியாரைக் கொன்றது ஒரு இஸ்லாமியர் என்று நிறுவ அவரது அமைப்போ அல்லது கோட்சே தன்னளவிலோ முடிவெடுத்திருந்தனர் என்று உணர முடிகிறது. காந்தியை ஒரு இஸ்லாமியர் கொலை செய்தார் என்று நிறுவுவதன் மூலம் இஸ்லாமியர்களின்மீது வெறுப்பையும் பகையையும் ஏற்படுத்தி அவர்களை இந்தியாவைவிட்டு அப்புறப்படுத்திவிட வேண்டும் என்பது அவர்களது நோக்கம். இந்த திட்டத்தில் அவர்கள் தோற்றுப்போய் அவர்கள் அம்பலப்பட்டு நின்றார்கள்.
காந்தியாரை ஒரு மராத்தியப் பார்ப்பனர் சுட்டுக் கொன்றார் என்ற செய்தி காட்டுத் தீயென பரவுகிறது. நாடே கொந்தளித்து நிற்கிறது. மக்கள் சுட்டுக்கொன்ற கோட்சேமீதுள்ள கோவத்தை பார்ப்பனர்கள்மீது திருப்புகிறார்கள்.
நாடு முழுவதிலும் பார்ப்பனர்கள் தாக்கப்படுகிறார்கள். அக்ரஹாரங்கள் தரைமட்டமாக்கப்படுகின்றன. மஹாராஸ்ட்ரா மாநிலத்தின் அன்றைய உள்துறை அமைச்சர் கிளர்ச்சியைக் கடுப்படுத்த இயலவில்லை என்று சொல்லும் அளவிற்கு பார்ப்பனர்கள்மீதான கோவம் மக்களிடம் இருந்திருக்கிறது.
பார்ப்பனருக்கும் பார்ப்பனரல்லாதவருக்குமான இடையேயன போரட்டமே அரசியலின் மையமாக இருந்த அன்றைய சென்னை மாகாணத்தில் பார்ப்பனர்கள் எவரும் தாக்கப்படவில்லை. அக்ரஹாரங்கள் எதுவும் தமிழ்நாட்டில் சேதப்படவில்லை. எழுந்த கொந்தளிப்பு சுளுவில் கட்டுக்குள் வருகிறது.
காரணம் தந்தைப் பெரியார்.
காந்தியார் கொல்லப்ப ட்ட அடுத்தநாள் வானொலியில் கீழ்வருமாறு உரையாற்றினார் தந்தை பெரியார்.
“இப்படிப்பட்ட பரிதாபகரமான முடிவானது நமக்கு ஒரு படிப்பினையாகி, இப்படிப்பினை மூலமாவாவது இந்த நாட்டில் அரசியல் பேராலும் இன இயலின் பேராலும் கருத்து வேற்றுமைக்காக கலவரங்களும், கேடுகளும், நாசங்களும், மூடநம்பிக்கைப் பிடிவாதங்களும் ஏற்படுவதற்கு சிறிதும் வாய்ப்பு இல்லாமல் அறிவுடமையோடு வாழ்பவர்களாக மக்கள் நடந்து கொள்வார்களேயானால் அது பரிதாபகரமானதும் வெறுக்கத்தக்கதுமான முடிவை எய்திய அந்தப் பெரியாருக்கு நாம் காட்டும் மரியாதையும் நன்றியறிதலும் ஆகும். திராவிட மக்கள் இதையறிந்து எப்படிப்பட்ட நிலையிலும் சகிப்புத்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டுமென்பது எனது விண்ணப்பம்” (தோழர் கி.வீரமணி அவர்கள் பதிப்பித்துள்ள “காந்தியார் கொலை அதிர்ச்சியூட்டும் தகவல்கள் நூலின் 5வது பக்கம்)
காந்தியைக் கொன்றது ஒரு துப்பாக்கி என்பதற்காக அதை முறித்துப் போடுவதால் ஒரு பயனும் இல்லை. காரணம் அந்தத் துப்பாக்கியை முறித்துப் போட்டாலும் கோட்சே இருப்பார். அவர் கையில் வெறொரு துப்பாக்கி வதுவிடும்.
சரி, கோட்சேயைக் கொன்றுவிடுவதாகக் கொள்வோம், அதனாலும் பலன் இல்லை. காரணம் இன்னொரு கோட்சேயை அந்த அமைப்பு உருவாக்கிவிடும். சரி, அந்த அமைப்பையே தடைசெய்வதாகக் கொள்வோம். அதனாலும் ஒரு பலனும் ஏற்படப் போவதில்லை. காரணம், அந்தக் கோட்பாடு வேறுஒரு அமைப்பை உருவாக்கும்.
ஆகவே RSS அமைப்பைத் தடை செய்வதால் ஒரு பலனும் இல்லை. மாறாக அந்தக் கோட்பாடுகளுக்கு எதிரரான ஒரு கருத்துப் போராட்டமே அவசியம் என்று பெரியார் கூறினார்.
ஆனால், தன்னைத் தற்காத்துக்கொள்வதன் பொருட்டு திரு படேல் RSS அமைப்பைத் தடை செய்தார்.
RSS அமைப்பைத் தடை செய்த திரு படேல் அவர்களுக்கு சிலை எடுக்கும் RSS இன் பிள்ளைகள் RSS அமைப்பைத் தடை செய்வதால் ஒரு பலனும் இல்லை என்பதால் அதைத் தடைசெய்யத் தேவையில்லை என்று கூறிய தந்தை பெரியாரின் சிலகளை சேதப்படுத்த்கிறார்கள்.
இது பார்ப்பவர்களுக்கு விநோதமாகத் தோன்றும். ஆனால் உண்மை வேறு மாதிரியானது.
அமைப்பு உடைந்தால் மறுகட்டமைப்பு செய்துவிட முடியும். ஆனால் கோட்பாட்டை இழந்துவிட்டல் சூனியமாகிப்போவோம் என்கிற உண்மையை அவர்கள் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள்.
அதனால்தான் அமைப்பைத் தடைசெய்யத் தேவையில்லை என்று சொன்ன பெரியாரின் சிலையை உடைக்கிறார்கள். அமைப்பைத் தடைசெய்து கோட்பாட்டை சேதப்படாமல் பார்த்துக்கொண்ட பட்டேல் அவர்களுக்கு சிலைவைத்து கௌரவப் படுத்துகிறார்கள்.
கோட்பாட்டு ரீதியாக நம்மை அவர்களால் எதிர்கொள்ள முடியாது. இது அவர்களுக்கு நன்கு தெரியும். எனவேதான் ஒரு பதட்டத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்கள். அதன் மூலம் நம்மையும் பதட்டமடைய வைத்துவிட முடியுமா என்று துடியாய் துடிக்கிறார்கள். அதற்காக எதை செய்தவது நம்மை கோவப்படுத்தி நம்மை கோட்பாட்டுத் தளத்திலிருந்து தெருவிற்கு இழுத்துவர முயற்சி செய்கிறார்கள்.
திரு H.ராஜா ஒன்றும் நிதானமிழப்பவரோ, பதட்டத்தில் உளறுபவரோ அல்ல. அவர் பதட்டப்படுகிற மாதிரியும் உளறுகிற மாதிரியும் நடிக்கிறார். அவர்கள் இப்படி எதையாவது உளறிக் கொண்டிருப்பதுகூட இதற்காகத்தான்.
அவர்கள் நமது அடையாளங்களை சிதைப்பது கோட்பாட்டுத் தளத்திலிருந்து நம்மை நகர்த்துவதற்காகவே. நாம்கூட அந்த வலையில் அவ்வப்போது விழுந்து விடுகிறோம் என்பதுதான் சோகத்தினும் சோகம்.
நம் தோழர்களிடம் நமக்கு ஒரு கோரிக்கை உண்டு
நாம் கோட்பாடுகளோடு மட்டுமே சமர் செய்வோம்.
*******************************************************
எந்த மதத்தோடும் நமக்கு சம்மதம் இல்லை. ஆனால் கடவுள் என்று ஒருவன் இருப்பானேயானால் அவன் தனது குழந்தையாகிய பெண் தன்னை தரிசிக்க வருவதை வரவேற்கவே செய்வான்.
நாளையே கிறிஸ்தவ ஆலயத்திற்குள்ளோ மசூதிக்குள்ளோ பெண்கள் நுழைவதற்கு தடை ஏற்பட்டு அதற்கு எதிராக போராட்டம் வெடிக்குமானால் நிச்சயமாக நாம் அவர்களோடு இணைந்து சமர் செய்வோம்.
”சபரிமலை பற்றிய உச்சநீதிமன்றத் தீர்ப்பை இயற்கயாகவே ஏற்றுக்கொள்ள முடியாது. கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வை நீதிமன்றம் தனது தீர்ப்பில் கவனத்தில் கொள்ளவில்லை. பாரம்பரியத்தைக் கடைபிடிக்கும் ஏராளமான பெண்களின் கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நாட்டில் அமைதியின்மையை எற்படுத்தி உள்ளது” என்று RSS அமைப்பின் தலைவர் திரு மோகன் பகவத் கூறியிருக்கிறார்.
ஒரு விஷயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சபரிமலைக்கு எல்லா வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் தொடுத்த ஐந்து பெண் வழக்கறிஞர்களைக் கொண்ட குழுவில் முக்கியமானவர் திருமதி பிரேரணகுமாரி. இவரது கணவர் திரு சிதார்த் சம்பு பரிவார் அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளை வகிப்பவராக இருக்கிறார். இந்த உண்மையை இவர் மறுக்கவும் முயற்சி செய்தார். எனினும் தீர்ப்பு வந்தபோது நீதிபதி திருமதி இந்திரா மல்கோத்ராவின் தீர்ப்போடு தாம் உடன்பட்டாலும் அரசியல் ஆசன அமர்வின் வரலாற்றுச் சிறப்புமிக்க பெரும்பான்மைத் தீர்ப்பை தாம் மதிப்பதாகவும் அவர் “பார் அண்டு பெஞ்ச்” இதழில் கருத்து தெரிவித்திருக்கிறார்.
வழக்கை இவர் தொடுத்தாரா இல்லையா என்பது வேறு விஷயம். அதைத் தனியாகப் பேசலாம். ஆனால் இந்தத் தீர்ப்பை வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என்று சங்பரிவார் அமைப்போடு நெருங்கிய தொடர்பு கொண்ட இவர் கூறுகிறார்.
“பாரம்பரியம்மிக்க பெண்களின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை” என்கிறார் திரு மோகன் பகவத். பரிவார் பாரம்பரியம்மிக்க திருமதி பிரேரணகுமாரி இதை வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு என்கிறர்”
சில வருடங்களுக்கு முன்னர் இஸ்லாத்திலிருந்து இந்துவாக மாறிவிட்ட ரெஹானாவை வைத்து அரசியல் செய்ய முயற்சித்து அம்பலப்பட்டு நிற்கிறார்கள். ரெஹான VHP அமைப்பின் துணைப்பிரிவான “சூர்ய காயத்திரியின்” உறுப்பினர் என்ற உண்மையை மறைத்து சதிராடிப் பார்க்கிறார்கள்.
திரு மோகன்பகவத் தலைவராக இருக்கக்கூடிய RSS அமைப்பின் பொதுச்செயலாளரான திரு பையாஜி ஜோஷி,
“கோவில்களில் பெண்களைத் தடை செய்ததுபோன்ற அநீதியான மரபுகள் மாற்றப்பட வேண்டும். இதுமாதிரி முக்கியமான விஷயங்களை அரசியலாக்கப்படக் கூடாது. பெண்கள் மற்றும் ஆண்கள் பாகுபாடின்றி கோவில்களில் நுழைய RSS அனுமதிக்கிறது.”
பெண்கள் கோவில்களில் நுழைய RSS அனுமதிக்கிறது என்ற RSS அமைப்பின் பொதுச்செயலாளரது கருத்தை பரிசீலிக்க வேண்டுமாய் என் அன்பிற்குரிய பக்தர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
************************************************
திரு H.ராஜா அவர்கள் தான் பதட்டத்தில் நீதிமன்றத்தை திட்டிவிட்டதாகவும் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோருவதாகவும் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
எனில், தான் அப்படிப் பேசவே இல்லை என்று கூறியது பொய் என்றாகிறது.
விடுங்கள் அவர் என்றைக்கு உண்மையைப் பேசியிருக்கிறார்.
***********************************
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்