Thursday, June 27, 2019

ஊருல எங்க? நாட்டுல எங்க? காட்டுங்க எங்க ஸ்கூல் போல ஜனவரி 2019


தோழர் ஜெயசீலன் பள்ளிக்கு வந்திருந்தார். இப்போதெல்லாம் எப்போதாவதுதான் சந்திக்க முடிகிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட்டதில் இருந்து அவரால் சொந்த அலுவல்களுக்காக அவரால் நேரம் ஒதுக்க முடிவதில்லை. அதைப் பேசி இதைப் பேசி இறுதியாக குழந்தைகளின் படிப்பு நோக்கி வந்துகொண்டிருந்தபோது சரியாக வந்து சேர்ந்தாள் 7B சந்தியா.

“MAY I GET IN?”

சற்றே குனிந்த நிலையில் வலது கையை நீட்டியபடிதான் கேட்டாள். அதற்காக நீங்கள் அதைப் பணிவு என்றெல்லாம் கொண்டுவிடக் கூடாது. ஒழுங்கீனம் என்ற வகையிலும் அதை சேர்த்துவிடக் கூடாது. அனுமதி கோரல் மாதிரியான தகவல் தெரிவித்தல் அது. ‘உள்ள வரேன், வேற வேலைகளில் இருந்து என்னிடம் கவனத்தை ஒதுக்குஎன்ற அன்பு கலந்த உத்தரவு.

தகப்பனின் அலுவலகத்திற்குள் நுழையும் முன் அந்தக் குழந்தைக்கும் தகப்பனுக்கும் இடையே தேவைப்படும் ஒருவிதமான இங்கித நடைமுறை என்ற அளவில்தான் அது இருக்கும். அதே வேளை பத்து முதல் பன்னிரண்டு வரை உள்ள குழந்தைகளிடத்தில் இந்த அளவிற்கு இயல்பாய் இருக்க முடியவில்லை. பலநேரங்களில் ஒரு சராசரியான தலைமை ஆசிரியராகவே அவர்களிடம் வெளிப்பட முடிகிறது. இதில் ஏகத்துக்கும் வருத்தம்தான் என்றபோதிலும் தவிர்க்கவும் இயலவில்லை.

சின்னப் பிள்ளைகளிடம் அப்படி இருப்பதற்காக நண்பர்களிடம் நான் நிறைய வாங்கிக் கட்டிக் கொள்ளவேண்டி இருக்கிறது. ரொம்பவும் செல்லம் கொடுப்பதாகக் கூறுகிறார்கள். அவர்களுக்கு கொடுப்பதற்கு அதைத் தவிர வேறு என்ன இருக்கிறது என்னிடம்?. இன்னும் நிறைய செல்லத்தை செலவளித்துவிட்டு இன்னும் அதிகமாய் நண்பர்களிடம் வாங்கிக் கட்டிக்கொள்ளவும் தயாராய்த்தான் இருக்கிறேன்.

இவ்வளவு நீளமாக எழுதுமளவிற்கான நேரத்தையெல்லாம் எடுத்துக் கொள்ளவில்லை. அவசர அவசரமாக அவளை, “வா வாஎன்று அழைத்தேன்.

ஏன் இவ்வளவு பதறுறீங்க?” என்ற ஜெயசீலனிடம், “இல்ல ஜெயா, கொஞ்சம் தாமதிச்சா அவளாவே வந்துடுவா. நாம கூப்டதாவே இருக்கட்டும்என்று சிரித்தபடியே கூறினேன்.

அவரும் சிரித்தவாறே என் நாற்காலிக்கு வலதுபுறமாய் நாற்காலியோடு உரசியபடி ஆடிக்கொண்டே மேசையில் விரலால் ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தவளிடம்,

ஏன் பாப்பாமே கெட் இன்னு கேக்கறியேசார்எல்லாம் சொல்ல மாட்டியா?” என்று கேட்டு முடிப்பதற்குள் தெறித்தாள்,

அதெல்லாம் எங்க சாருக்குத்தான்

வெடித்து சிரிக்கிறார்.

இப்ப என்ன பொண்ணு பிரச்சினை?”

எனக்கும் சயின்ஸ் சாருக்கும் பிரச்சினை

யாரு உங்க சயின்ஸ் சார்?”

செல்வகுமார் சார்

செல்வகுமாரா? அவரு நல்ல பையனாச்சே. நீதான் ஏதோ வம்பிழுத்திருக்க. ஆமா, நீ என்ன செஞ்ச?”

நான் ஒன்னும் செய்யல. அவங்கதான் என்னோட பேச மாட்டேங்கறாங்க. எல்லாரையும் கேள்வி கேக்கறாங்க. என்னை மட்டும் கேக்க மாட்டேங்கறாங்க

அதுதான் ஏன் னு கேக்கறேன்

தெரியல, பதில் தெரியாதவளை எல்லாம் கேக்கறாங்க. என்னை மட்டும் கேக்க மாட்டேங்கறாங்க

வலது பக்கமாக தலையை திருப்பியவாறே தோழர் ஜெயசீலன் சிரித்துக் கொண்டிருக்கிறார்.

அதுக்கு நான் என்ன செய்யனும் கிழவி

நீங்கதான HM?”

ஆமா, ஆமாஎங்க போற போக்கில பதவி இறக்கம் செஞ்சுடுவாளோ என்ற பயம் கவ்விக் கொள்ளவே பதறிப்போனவனாய் ஆமோதிக்கிறேன்.

அப்ப ஜோயல் அண்ணன அனுப்பி சார கூப்ட்டு திட்டி என்னோட பேசச் சொல்லுங்க

நீ என்னமோ தப்பு செஞ்சிருக்க. இல்லாட்டி அவன் அப்படி எல்லாம் செய்ய மாட்டான். சரி க்ளாசுக்கு போ. உங்க சாரக் கூப்ட்டு உன்னோட பேசச் சொல்றேன்

போக எத்தனித்தவள்,

நீங்க சார திட்ட மாட்டீங்க எனக்குத் தெரியும்

என்ன தெரியும் கிழவிக்கு?”

தெரியும்

ஜெயா இன்னமும் விடாது சிரித்துக்கொண்டே இருக்கிறார்.

என்ன தெரியும் எரும மாடு?”

சயின்ஸ் சார் உங்க ஸ்டூடண்ட். அதனால திட்ட மாட்டீங்க

எனக்கே உடைத்துக்கொண்டு சிரிப்பு வந்து விட்டது.

ஏம்புள்ள நீயும் என் ஸ்டூடண்ட்தானே

இல்ல. உங்க ஸ்டூடண்ட்னா நான் எப்படி ஆறாங்கிளாஸ் பாஸ் பண்ணி இருப்பேன்

உங்க சயின்ஸ் சாரும் ஏங்கிட்டதானே படிச்சான். அவன் மட்டும் எப்படி பாஸ் செஞ்சான்?”

அவங்க பக்கத்து பையன பார்த்து எழுதியிருப்பாங்க

ஏய்…”

எழுவதற்குள் ஓடிவிட்டாள்.

எழுந்து சுவரை பிடித்தவாறே சிரிக்க ஆரம்பித்து விட்டார் ஜெயா.
******************************************* 
















No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...