Thursday, June 27, 2019

65/66, காக்கைச் சிறகினிலே டிசம்பர் 2018


ஒவ்வொரு மாதமும் காக்கை போய் சேர்ந்ததும் தோழர் முத்தையாவிற்கு அலைபேசுவார்,

முத்தையா, ‘காக்கைவந்துடுச்சு. வாசித்ததும் பேசுகிறேன்.”

வைத்துவிடுவார். அடுத்தநாள் எல்லாப் பக்கங்கள் குறித்தும் நிகழ்கால அரசியல் குறித்தும் அதில் இடதுசாரிகளின் நிலைகுறித்தும் சலிக்கவே சலிக்காமல் மணிக்கணக்கில் அவரோடு உரையாடுவார்.

அடுத்ததாக எனக்கு அழைப்பு வரும்,

எட்வின், எட்டையபுரத்திலிருந்து சேகர் பேசறேன்என்றுதான் ஒவ்வொரு முறையும் தொடங்குவார்.

அந்தமாதகடைசிப் பக்கங்கள்குறித்துதான் முதலில் பேசுவார்.  கடைசி பக்கங்களை வாசித்து முடித்ததும் இதழை வைத்து விடுவதாகவும், அதற்குமேல் உடனடியாகத் தன்னால் இதழைத் தொடர முடிவதில்லை என்றும், அவ்வளவு அழுத்தமான எழுத்துக்கள் என்றும் ஒவ்வொரு மாதமும் பொய் சொல்லித் தட்டிக் கொடுப்பார்.

முதல்நாள் கடைசி பக்கங்கள், எனது கட்டுரை, தலையங்கம் பற்றி உரையாடிவிட்டு வைத்து விடுவார். அடுத்தநாள் காக்கையின் அத்தனை பக்கங்கள் குறித்தும் விவாதிப்பார்.

ஒருமுறை தோழர் முத்தையா பேசிய தரவுகளைக் கொண்டு ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.

எட்வின், சரியா கணிச்சிருக்கீங்க. முத்தையாகிட்ட நெறைய இருக்கு. நீங்க கட்டுரையில சொன்ன மாதிரி அந்த ஆளுகிட்ட இருக்கிறத எல்லாம் ஆவணப் படுத்துங்க. கொண்டாடணும் முத்தையாவ.”

இன்னொருமுறை சொன்னார்,

ஒரு இடது சாரியின் எழுத்து எப்படி இருக்க வேண்டும் என்று நான் கனவு கண்டேனோ, அப்படியே அச்சு அசலா இருக்கு எட்வின் உங்க எழுத்து. உங்க கட்சி லைனில் இருந்து கொஞ்சம்கூட பிசகாம எலைட்டுக்கும் புரியறமாதிரி வொர்க்கிங் க்ளாசுக்கும் புரியறமாதிரி எழுதறீங்க.”

என்றெல்லாம் கஞ்சத்தனமே இல்லாமல் மிகையாய் தட்டிக் கொடுத்திருக்கிறார்.

விட்டுடாமகாக்கை கொண்டு வாங்க எட்வின். உங்களுக்குத் தெரியாது, காக்கை நிறைய அசைக்குது

என்ன செய்யிறது, உங்க கட்சிக்காரனே உங்க எழுத்த வாசிக்கறது இல்லஎன்று அடிக்கடி வருத்தப் படுவார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் எனது எழுத்து குறித்து ஒரு கூட்டத்தில் குறிப்பிட்டதாகதீக்கதிர்ஆசிரியர் தோழன் மதுக்கூர் ராமலிங்கம் கூறியதாக மார்க்சிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளார் தோழர் ஜெயசீலன் சமீபத்தில் கூறினார். மதுக்கூரும் அதை உறுதி செய்தான்.

டிசம்பர் இதழை வாசித்துவிட்டு உரையாடும் தோழர் சேகரிடம்பார்த்தீர்களா தோழர், எங்கள் கட்சியின் பொதுச் செயலாளரே என் எழுத்தை வாசிக்கிறார்என்று சொல்ல நினைத்திருந்தேன்.

அதற்குள் என்ன அவசரமோ சேகர் போய் சேர்ந்து விட்டார்.

ஆக, என் மரணத்திற்கு வரவேண்டிய அவசியம் சேகருக்கும் இல்லாது போனது.

எங்களுக்கும் காக்கைக்கும் அவரது மரணம் பேரிழப்பு.

தோழர்கள் அரவிந்தன், இன்குலாப், வீரசந்தானம், சேகர் என்று காக்கை தொடர்ந்து இழந்து கொண்டே வருகிறது.    

ஏற்கனவே மூவருக்கும் சொன்னதுதான் இப்போது தோழர் சேகருக்கும்,

எங்களில் யார் கடைசியாகப் போகிறோமோ தெரியாது. ஆனால் அதுவரைக்கும் என்ன இடர் வந்தபோதும் காக்கையை விடாது கொண்டு வருவோம். எங்களுக்குப் பிறகும் இதழைத் தொடருவதற்கான அடுத்தத் தலைமுறை பிள்ளையை நிச்சயமாகக் கண்டெடுத்து காக்கையை ஒப்படைத்துவிட்டுத்தான் போவோம். இதுதான் உங்கள் நால்வருக்குமான எங்களுடைய பொருளுள்ள அஞ்சலியாக இருக்கும் என்பதை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம்.”

நான் வரும்வரை ஓய்வில் இருங்கள் தோழர்.
********************************************    

தமிழுக்கு எந்த வகையில் எல்லாம் கேடு செய்ய முடியுமோ அதனை மிகச் சரியாக செய்து வருகிறது அரசு. சமீபத்தில்தமிழ் வளர்ச்சித் துறையின் பணியினை ஆரவாரமே இல்லாமல் சரிபாதியாகக் குறைத்திருக்கிறது. 

அரசு அலுவலகங்களில் தமிழைப் புழங்குவது என்பதுதான் ஆட்சிமொழி செயலாக்கத் திட்டம். இதனை அமல்படுத்துவதற்காகவும் கண்காணிப்பதற்காகவும் ஏற்படுத்தப்பட்டதமிழ் வளர்ச்சித் துறைசிறுகச் சிறுக செயல் இழந்து வருவதாகக் கவலையோடு கூறுகிறது 19.11.18 தினமணி.

தமிழ்நாட்டில் உள்ள மாநில அரசு அலுவலகங்களின் அலுவலக மொழி தமிழ். அங்கு தமிழே பயன்படுத்தப்பட வேண்டும்.

அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் முத்திரைகள், பெயர்ப்பலகை, அலுவலகத்திற்குள்ளும் அலுவலகத்திற்கு வெளியிலுமாக அனுப்பப்படும் சுற்றறிக்கைகள் மற்றும் கடிதங்கள், ஆணைகள், அழைப்பிதழ்கள், சம்பளப் பட்டியல் ஆகியவை தமிழில் இருக்கின்றனவா என்பதைக் கண்காணிக்க வேண்டியது தமிழ் வளர்ச்சித் துறை.

தமிழைப் பயன்படுத்தாத அலுவலகங்களை நெறிப்படுத்துவதும் கட்டுப்படாத அலுவலகங்கள்மீது நடவடிக்கை எடுப்பதும் தமிழ் வளர்ச்சித் துறையின் வேலை

மாதத்திற்கு நாற்பது ஆய்வுகள் என்றிருக்கும்போதே நிறைய சுற்றறிக்கைகள் ஆங்கிலத்தில் வருவதைப் பார்க்கிறோம்.

இன்னும் சொல்லப்போனால் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தமிழில்தான் கையொப்பமிட வேண்டும் என்பதாக நூற்றுக் கணக்கில் சுற்றறிக்கைகள் வருகின்றன. அவற்றில் பெரும்பான்மையானவை ஆங்கிலத்தில் வருகின்றன. 

இந்த நிலையில்தான் ஆள்பற்றாக்குறையை காரணம் காட்டி இருபது ஆய்வுகளாக் குறைத்திருக்கிறது.

தனியார் நிறுவனங்களில் உள்ள பெயர்ப்பலகைகளில் 5 பங்கு அளவிற்கு தமிலும் 3 பங்கு அளவிற்கு ஆங்கிலத்திலும் 2 பங்கு அளவிற்கு மற்ற மொழிகளிலும் எழுத்தின் அளவு இருக்க வேண்டும்.

இந்த அளவிற்கு ஆய்வு நெருக்கடி இருக்கும்போதே என்றோ பாரதிதாசன் கூறியதுபோல்,

தமிழகத்தின் தமிழ்த்தெருவில் 
தமிழ்தான் இல்லை

என்ற நிலைதான் தமிழகத்தில். ஆய்வும் பாதியாகக் குறைந்து போனால் என்ன ஆகும்?

இந்த நொடியில் தமிழ் ஆர்வலர்கள் கொதிக்கவேண்டிய விஷயங்களில் இது மிக முக்கியமானது.
************************************************  

தனது குடும்பத்தோடு அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த தெலுங்கு நடிகர் சிவாஜி நவம்பர் 21 ஆம் தேதி தாம் ஆந்திரா திரும்புவதாகவும். அப்போது தமது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி உள்ளதால் தமக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

அவர் இவ்வளவு பதறி பாதுகாப்பு கேட்குமளவிற்கு என்ன நடந்தது?

தென் மாநிலங்களில் காலூன்ற முடியாமல் தவிக்கும் பாஜக அங்கு குழப்பத்தை ஏற்படுத்தி அதன்மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றஆபரேஷன் கருடாஎன்கிற திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டு இருப்பதாக கடந்த ஆண்டு சிவாஜி கூறியிருந்தார்.

அவர்களது முதல் இலக்கு ஆந்திரா என்றும் கூறியிருந்தார்.
அவர்களது திட்டம் என்ன என்பதையும் அவர் அப்போதே விளக்கியும் இருந்தார்.

1)   ஆந்திர எதிர்க்கட்சித் தலைவர்மீது அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் தாக்குதலை ஏற்படுத்துவது
2)   ஆந்திர ஆட்சியாளர்கள்மீது அமலாக்கத்துறை மற்றும் CBI அமைப்புகளை ஏவுவது

ஆந்திராவின் எதிர்க்கட்சித் தலைவரான திரு ஜெகன்மோகன் விமான நிலையத்தில் தாக்கப்பட்டிருக்கிறார். திரு சந்திரபாபு நாயுடுவிற்கு CBI தாக்கீது அனுப்பி இருக்கிறது. தெலுங்குதேசம் கட்சித் தலைவர்களின் வீடுகளில் வருமானவரித்துறை ரெய்டுகளை நடத்துகிறது.

சிவாஜி கூறியதை அப்போது யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அவர் சொன்னவை சொன்னபடியே நடந்திருப்பதால் அவருக்கு தன்மீது தாக்குதல் நடக்கலாம் என்ற அச்சம் பிறந்திருக்கிறது.  

அதை திரு சந்திரபாபு நாயுடு அவர்கள் மிகத் தெளிவாக உணர்ந்திருக்கிறார். அதனால்தான் அவர் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கிற வேலையில் இறங்கி இருக்கிறார்.

இந்த தேசத்தின் முன்னால் உள்ள சவால்கள் ஏராளம். ஆனால் அவற்றுள் மிக முக்கியமானதும் முதலில் எதிர்கொள்ளப்பட்டு முறியடிக்கப்பட வேண்டியதும் பாஜக ஆகும்.

குஜராத்தில் அன்றைய முதல்வர் திரு மோடி அவர்களை எதிர்த்த அமைச்சர் திரு ஹரேன்பாண்டியா கொலை செய்யப்படுகிறார். அந்தக் கொலையில் திரு அமித்ஷா அவர்களுக்கு தொடர்பு இருப்பதாக ஆகச் சமீபத்தில் அப்போதைய காவல்துறை அதிகாரி சாட்சி அளித்திருக்கிறார்.

இதில் சம்பந்தமே இல்லாத அஸ்கர் அலி சிறையில் இருக்கிறான். அவனை சிறையில் சந்தித்துவிட்டு வெளியே வந்த ஹரேன்பாண்டியாவின் மனைவி ஜக்ருதிபாண்டியா பத்திரிக்கையாளர்களிடம் கூறுகிறார்,

அஸ்கர் அலி இந்தக் கொலையில் ஈடுபடவில்லை.

இந்தக் கொலையில் ஈடுபட்ட சிலரை எனக்குத் தெரியும். உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு அந்தப் பெயர்களை நான் வெளியிடுவேன்.

என் கணவரை ஒழித்துக் கட்ட ஒரு அரசியல் சதி நடந்துள்ளது

இன்றுஆபரேஷன் கருடா

நாளை ஏதோ ஒரு ஆபரேஷன் தங்களையும் தங்களது மண்ணையும் குறிகொண்டு திட்டமிடப்படக்கூடும் என்பதை தலைவர்கள் உணர்வதும் ஒன்றிணைவதும் மிக அவசியம்.
*************************** 
No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...