Thursday, June 27, 2019

65/66 காக்கைச் சிறகினிலே ஜனவரி 2019


நடந்து முடிந்த ஐந்து மாநிலங்களுக்கான சட்ட மன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது ஏகத்திற்கும் எதை எதையோ பேசினார்கள் பாஜக தலைவர்கள். அவர்களுள் குறிப்பாக உத்திரப் பிரதேச முதலமைச்சர் மரியாதைக்குரிய ஆதித்யநாத் அவர்கள் தனது ராஜஸ்தான் பிரச்சாரத்தின்போது உச்சத்திற்கே சென்றார்.

மனிதர்களுக்கே ஜாதி இருக்கக்கூடாது என்று நாம் போராடிக் கொண்டிருக்கிற காலத்தில் அவர் ஆண்டவர்களுக்கு இடையேகூட ஜாதி இருக்கிறது என்பதை தனது பிரச்சாரத்தின் ஊடே தெரிவித்தார்.

ராமனுடைய நெருங்கிய நண்பரானஅனுமன்ஒரு தலித் என்று அவர் பிரகடனப் படுத்தினார். நிறையபேர் இதற்கு எதிராக பொங்கினார்கள்.

ஏதுமற்ற இறைவனை எப்படி ஒரு ஜாதிக் குமிழுக்குள் அடைக்கலாம் என்று பொங்குகிறார்களா என்று பார்த்தால் ஏமாந்துதான் போவோம்.

அனுமன் தலித் என்று அவர் கூறியதும் அவர் ஒன்றும் தலித் அல்ல அவர் பழங்குடியினர் என்று தெசியத் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி ஆணாஇயத் தலைவர் திரு நந்த கிஷோர் கொதித்தார்.

ஒரு பிராமணரைப் போய் எப்படி தலித் என்று இழிவாக்க் கூறலாம் என்று ஆதித்யநாத்தை கடிந்து கொண்டார் மத்திய அமைச்சர் சத்யபால் சிங்.

ஒருவர் அனுமனது சாதிச் சான்றிதழ் கேட்டு வாரணாசி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு செய்திருக்கிறார்.

பிராமணர் சங்கத் தலைவர் இதுகுறித்து ஜெய்பூர் நீதிமன்றத்தில்,வழக்குத்  தொடர்ந்திருக்கிறார்.

அதிர்ந்துபோன ஆதித்யநாத்அய்யய்யோ அனுமனை இழிவு படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அவனை தலித் என்று சொல்லவில்லை. தலித் இறைவனும் உண்டு என்று தலித்துகளை கௌரவப் படுத்தவே அப்படி சொன்னேன்என்று இறங்கி இருக்கிறார்.

ஒரே கேள்விதான் ஆதித்யநாத்,

தலித் சாமியை கோவிலுக்குள் வைக்கும் நீங்கள் கோவிலுக்குள் சாமி கும்பிடுவதற்காக நுழைய முற்பட்ட ஒரு பெண்ணை நிர்வாணப்படுத்தி அவளை கீழே தள்ளியும் அடித்தும் உதைத்தும் மட்டும் அல்லாமல் அவற்றை காணொலிக்குள் காட்சிப்படுத்தி சமூக வலை தளங்களுள் அதை வெளியிட்டு கூத்தடிக்கும் கயவர்களது செயலை ஏன் இன்னும் கண்டிக்க வில்லை?

********************** 

ரஃபேல் விவகாரத்தில் எந்தவிதமான முறைகேடும் நடக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. எனவே பொய்யான தகவல்களை கூறிய திரு ராகுல் அவர்கள் அவைக்கு வந்து அதற்காக மன்னிப்பு கேட்கும் வரைக்கும் அவையை நட்த்தவிடமாட்டோம் என்று பாஜக நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கிப்போட முயற்சித்தன. மாண்புமிகு ஜேட்லி அவர்களும் நிர்மலா அவர்களும் வானத்திற்கும் பூமிக்குமாய் குதித்தார்கள். ஊடகங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ரஃபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்றமே மோடியின் நேர்மை கண்டு உச்சி முகர்ந்ததைப்போல சிலாகித்து கதையளந்தன.

இந்தக் கூத்தெல்லாம் உச்சத்தில் இருந்த நொடியொன்றில்ரஃபேல் குறித்த தங்களது அறிக்கையை உச்சநீதிமன்றம் தவறாகப் புரிந்து கொண்டு தவறான விளக்கத்தை அளித்துள்ளதுஎன்று கூறியுள்ளது. அது மட்டுமல்ல தனது தவறான புரிதலையும் விளக்கத்தையும் அது சரி செய்துகொள்ள வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தை மத்திய அரசு கோரியுள்ளது.

முதல்நாள் உச்சநீதிமன்றமே தமது புனித்ததை பூமாறிப் பொழிந்து கொண்டாடியதாகக் கூறிய பாஜகவினர் அடுத்தநாளே தமது அறிக்கையை உசாநீதி மன்றம் தவறாகப் புரிந்து கொண்டு தவறாக விளக்கம் அளித்துவிட்டதாகவும் பதறுவது ஏன்?

1)   உச்சநீதிமன்றத்திற்கு இவர்கள் என்ன கொடுத்தார்கள்?
2)   அவற்றுள் எந்தப் பகுதியை உச்சநீதிமன்றம் தவறாகப் புரிந்து கொண்டது?
3)   அது எப்படி இதை தவறாக விளக்கியது?

இவற்றுக்கெல்லாம் முன்னதாக நாம் இன்னொரு விஷயத்தை தெளிவாக்கிக் கொள்வது நல்லது.

உச்சநீதிமன்றம் தவறாக விளக்கிவிட்டது என்று இவர்கள் கூறுவது அதனுடைய தீர்ப்பாகத்தான் இருக்கும். எனில், தவறாக விளக்கிவிட்டீர்கள் என்பதன் சரியான பொருள் தவறாக தீர்ப்பளித்து விட்டீர்கள் என்பதாகத்தான் இருக்கும்.

ரஃபேல் ஒப்பந்தத்தில் உள்ள முறையீடுகளை நாடாளுமன்றத்தின் கண்காணிப்போடு விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் திவாளர்கள் யஷ்வந்த் ஷின்கா, அருண்சோரி மற்றும் ஷாந்திபூஷன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிரஞ்சன் கோகாய் தலைமையில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இதை விசாரித்து சமீபத்தில் தீர்ப்பினை வழங்கியது. அந்த்த் தீர்ப்பில்,

1)   மத்திய அரசின் கொள்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது
2)   ரஃபேல் விவகாரத்தில் அரசின் கொள்கை முடிவுகள் சரியானவை
3)   ரஃபேல் விமான்ங்களின் விலை குறித்த தகவல்கள் அடங்கிய மத்திய கணக்குத் தணிக்கைத் துறையின் (CONTROLLER AND AUDITOR GENERAL) அறிக்கை பொதுக் கணக்குக் குழுவிடம் வழங்கப்பட்டுள்ளது.


அரசாங்கத்திற்கும் CAG அவர்களுக்கும் இதுகுறித்து கடிதப் போக்குவரத்து நடைபெற்றிருப்பதாகவும் CAG இதுகுறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருப்பதாகவும் நீதிமன்றம் கூரியது. அத்தோடு நிற்காமல் அந்த அறிக்கை பொதுக் கணக்குக் குழுத் தலைவருக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் நீதிமன்றம் சொன்னது.

இதை மேம்போக்காகப் படித்துவிட்டுதான் பாஜகவினரும் அவர்களது ஊடக விசுவாசிகளும் இவ்வளவு கூப்பாடு போட்டது. தீர்ப்பின் இந்த இடத்தில்தான் பிரச்சினை கிளம்பியது. CAG அவர்களின் அறிக்கை பொதுக் கணக்குக் குழுவிடம் ஒப்படைக்கப் பட்டது என்று எதன் அடிப்படையில் உச்சநீதிமன்றம் கூறுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் திரு மல்லகார்ஜுனே கேள்வி எழுப்பினார்.

மல்லிகார்ஜுனேவின் இந்தக் கேள்விதான் மத்திய அரசை நிலைய வைத்த்து. காரணம் திரு மல்லிகார்ஜுனே அவர்கள்தான் பொதுக் கணக்குக் குழுவின் தலைவர். எனக்கே வராத CAG அறிக்கையை எப்படி நீதிமன்றம் படித்தது என்று அவர் கேட்டார்.

இப்போது மத்திய அரசு கூறுவது இதைத்தான்,

பொதுக் கணக்குக் குழுவிடம் ஒப்படைக்க இருக்கிறோம் என்றுதான் நாங்கள் உச்சநீதிமன்றத்திடம் தெரிவித்திருந்தோம். உச்சநீதிமன்றம் பொதுக்குழுவிடம் ஒப்படைத்திருக்கிறோம் என்று நாங்கள் கூறியதாகத் தவறாகப் புரிந்து கொண்டு விளக்கமளித்திருக்கிறது.”

இரண்டுதான்,

1)   அரசு நீதிமன்றத்திற்கு தவறான தகவல்களைத் தந்திருப்பின் அதற்கு உரியவர்களை கடுமையாகத் தண்டிக்க வேண்டும்
2)   ஒருக்கால் அரசு சரியான தகவல்களைத் தந்திருந்து தாம் அதைத் தவறாகப் புரிந்துகொண்டு தவறான விளக்கத்தைத் தந்திருப்பதாக நீதிமன்றம் உணருமானால் குறைந்த பட்சம் அந்த விளக்கத்தை சரியாக்கித் தர வேண்டும்.

கஜா புயல் பாதிப்பு காரணமாக
பகவான் டீக்கடையில் வைத்துள்ள 15.12.18 ஆம் தேதி வரைக்குமான
அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது

என்று ஒரு சிறிய போஸ்டர் வம்பன் நான்குரோட்டில் உள்ள ஸ்ரீபகவான் தேநீர்க்கடையில் வைக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக அந்தப் பகுதி மக்கள் பகவான் டீக்கடையில்தான் தேநீர் பருகுவார்கள். அந்தப் பகுதி விவசாயத் தொழிலாளிகளும் பிற கூலித் தொழிலாளிகளும் அந்தக் கடையில் பற்று வைத்து தேநீர் மற்றும் வடை போண்டாக்களை சாப்பிடுவது வழக்கம்.

இந்த நிலையில் கஜா அவர்களது வாழ்க்கையை சின்னாபின்னமாக்கிவிட்டு போயிருக்கிறது. ஏதுமற்ர நிலையில் இருக்கும் அந்தத் தொழிலாளிகளிடம் ஒரு கோப்பைத் தேநீர் குடிப்பதற்கும் காசில்லை.

இந்த நிலையில்தான் அந்த தேநீர்க்கடையின் உரிமையாளரான திரு சிவா அவர்கள் தமீடம் அந்தத் தொழிலாளிகள் வைத்திருக்கக் கூடிய கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்திருக்கிறார்.

மாதாமாதம் கணக்குப் பார்த்து பணம் கொடுப்போருக்கு மட்டும்தான் கடன் என கணாக்கு எழுதி வைப்பேன். கடை வைத்த காலத்தில் சிலர் கடன் சொல்லிவிட்டு டீ குடித்த கணாக்கையும் சேர்த்து சில ஆண்டுகளாக வாடிக்கையாளர்கள் டீ குடித்த கடன் முழுவதையும் தள்ளுபடி செய்துள்ளேன்.

ஒவ்வொருவருக்கும் அது சொற்ப தொகைதான். ஆனாலும்கூட என்னால் முடிந்த்தை என் வாடிக்கையாளர்களுக்கு செய்தது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

நான் தள்ளுபடி செய்தது வெறும் பத்தாயிரம் ரூபாய்தான் என்றாலும் என் மக்களுக்கு என்னால் முடிந்ததை செய்துள்ளேன் என்பதில் ஏகத்துக்கும் மகிழ்கிறேன்

தன் மக்களுக்காக பத்தாயிரம் ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்ததற்கே ஒரு மனிதனால் இவ்வளவு மகிழ முடியும் என்றால்….

யோசித்துப் பாருங்கள் திரு எடப்பாடி அவர்களே.

**********************      

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...