Sunday, July 29, 2018

அஜித் AV AV

அது அந்த நாளின் எட்டாவது பிரிவேளை. இயல்பாகவே அந்த நேரத்தில் சோர்வாகத்தான் இருக்கும். அதுவும் அன்றைக்கு கொஞ்சம் கடுமையான வேலை என்பதால் கொஞ்சம் அதிகப்படியான சோர்வோடு அமர்ந்திருக்கிறேன். அந்த நேரம் பார்த்து இரண்டு குழந்தைகள் கையை நீட்டி அனுமதி பெற்றவாறு உள்ளே வருகிறார்கள்.
அது தலைமை ஆசிரியர் அறை என்பதால் பெரிய குழந்தைகளிடம் காணாப்படும் எந்தவிதமான தயக்கமும் அவர்களிடம் இல்லை. அத்தனைக் கிலோவும் கபடு சூதற்ற வெகுளித்தனம்.
அந்தக் குழந்தைகளின் வருகை அத்துனை சோர்வையும் துடைத்துப்போட்டு புன்னகையை என் இதழ்களுக்கு கொண்டு வருகிறது.
”என்ன?” என்பதாகப் பார்க்கிறேன்.
”நான் ஏழாம் வகுப்பு பஸ்ட் லீடர், இது செகண்ட் லீடர்” தான்தான் லீடர், அவள் இல்லை. அவள் எனக்கு அசிஸ்டெண்ட்தான் என்பதை சொல்லாமல் சொல்லும் வித்தை அந்தக் குழந்தைக்கு வாய்த்திருக்கிறது. இதுவும்கூட தலைமைப் பண்பின் ஒரு கூறுதான்.
”சொல்லுங்க பஸ்ட் லீடர்”
என்னை அறியாமலே புன்னகை இன்னும் அதிகமாய் விரிகிறது.
“சார் இல்லாதப்ப பஸ்ட் லீடர்தான் சார் இடத்துல இருந்து சத்தம்போடாம பார்த்துக்கனும்னு எங்க சார் சொன்னாங்க. சாரும் இல்லாம பஸ்ட் லீடரும் இல்லைனா மட்டும்தான் செகண்ட் லீடர் பேரெழுதனும்னு சொன்னாங்க”
”சரிங்க பஸ்ட் லீடர். அத யாரு இல்லேனா இப்ப?”
“பசங்க எங்களுக்கு அடங்கவே மாட்டேங்கறாங்க. அடிச்சுக்கறாங்க. என்ன பஸ்ட் லீடர்ல இருந்தும் அத செகண்ட் லீடர்ல இருந்து எடுத்துடுங்க”
“ஏன் செகண்ட் லீடர் பேசவே மாட்டேங்கறாங்க?”
“பஸ்ட் லீடர் இருந்தா பஸ்ட் லீடர்தான் பேசனும்” எனக்கு சன்னமாக சிரிப்பு வந்துவிட்டது.
‘உங்க க்ளாஸ் சார்ட போய் சொல்லுங்க?”
“சார்தான் உங்களப் போய் பார்க்கச் சொன்னார்”
செல்வகுமார் பந்தை நம்மிடம் எறிந்துவிட்டு தப்பிக்கப் பார்க்கிறார் என்பது புரிகிறது.
அதற்குள் அவள் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர்
அவளை அருகே அழைத்து தலையை வருடியவாறே,
”பஸ்ட் லீடர் அழக்கூடாது. யாரு அடங்கலன்னு சொல்லு அவன பிரிச்சி எடுத்துடலாம்”
”கருணைராஜா AV, அஜீத் AV AV”
”கருணைராஜா AV என்றால் கருணை ராஜா அடங்கவில்லை என்று புரிகிறது. அது என்னங்க லீடர் அஜீத் AV AV?”
“அஜீத் அடங்கவில்லை அடங்க வில்லை”
“புரியல”
பேசறவங்க பேரெல்லாம் போர்டுல எழுதியிருப்பேனா. அதுல கருணைராஜா பேரும் இருதுச்சுன்னா அவன் அவம்பேர அழிச்சுடுவான். அதனால அவன் AV.“
“அஜீத் மட்டும் ஏன் AV AV?”
“அதுல அவன் பேரும் இருந்துச்சுன்னா அஜீத் எல்லார் பேரையும் அழிச்சுடுவான். அதனால அவன் AV AV”
சத்தமாய் சிரித்து விட்டேன். அந்தக் குழந்தையை அருகில் இழுத்து அணைத்துக் கொள்கிறேன்.
“இங்கே வா சாமி. வெளியே எத்தனை மரம் இருக்கிறது என்று பார்”
வெராண்டாவரை போய் எண்ணிப் பார்த்துவிட்டு ’ஆறு’ என்கிறாள்.
அதில் எந்த மரத்தில் கருணைராஜாவைக் கட்டி வைக்கலாம் என்று கேட்டதும் மீண்டும் வெராண்டா போய் பார்த்துவிட்டு வந்து ’அந்த மொதோ வேப்ப மரத்துல’ என்கிறாள். ’சரி அஜீத்தை எந்த மரத்துல கட்டலாம்?’, அவனையும் அதே மரத்துல கட்டலாம் என்கிறாள்.
”அது எப்படி பாப்பா ரெண்டு பேரையும் ஒரே மரத்துல கட்டிவச்சா பேசிக்கிட்டே இருப்பாங்களே” என்று சொன்னதும் மீண்உம் வெளியே போய் பார்த்துவிட்டு வந்து ‘அவனை மூன்றாவது மரத்துல கட்டலாம்’ என்கிறாள்.
சரி இப்போது கயிறு இல்லை என்றும் நாளை வீட்டிலி இருந்து கயிறு கொண்டு வந்து மரத்துல கட்டி வச்சு தோள உரிச்சு எடுத்துடலாம் என்று ஒரு வழியாக சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தேன்.
அடுத்த நாள் வருகிறது அந்த இரு குழந்தைகளையும் எப்படி சமாளிப்பது என்று தெரியாதவனாக பள்ளிக்கு போகிறேன் அந்த இரண்டு குழந்தைகளையும் அழைத்து வரச் சொல்லலாம் என்று நினைக்கிற போது அந்த இரண்டு குழந்தைகளும் என் அறைக்கு வருகிறார்கள்.
நான் சிரித்தபடியே பஸ்ட் லீடர், அத ரெண்டு கழுதைகளின் கட்டி போட்டுடலாம். இன்னைக்கி கயிறு எடுத்துட்டு வரல. நாளைக்கு எடுத்துட்டு வந்து விடுகிறேன் என்று சொல்கிறேன்.
அந்தக் குழந்தைகள் சிரித்தபடியே
”அவங்களை கட்டி போட வேணாம் சார்”
“ஏங்க பஸ்ட் லீடர்?”
“அவிங்க எங்களுக்கு ப்ரண்ட் ஆயிட்டாய்ங்க”
“ஆஹா”
“நாளைக்கு மீனாவையும் முருகனையும் கட்டிப் போடுங்க சார்”
”இவங்கள ஏன் நேத்து சொல்லல?”
”ரெண்டு பேர சொன்னப்பவே போரடிச்சுது. அதான் சொல்லல”
சிரித்துக் கொண்டே, “மீனாவையும் முருகனையும் நாளைக்கு பிரிச்சு எடுத்துடலாம்”
சிரித்துக் கொண்டே ஓடி விட்டார்கள்.
எனக்குத் தெரியும் நாளைக்குள் அவர்களும் ப்ரண்டாயிடுவாங்க.
குழந்தைகள் தினமும் தினமும் என்னை ஆசிர்வதித்தபடியே இருக்கிறார்கள்
நன்றி: வண்ணக்கதிர்
29.07.2018

2 comments:

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...