Saturday, November 23, 2013

தேவியர் இல்லம்


ஆயிரத்து இருநூறு மதிப்பெண்களுக்கு ஆயிரத்தி இருநூறி ஐம்பது பெற்றுவிட மாட்டானா தன் பிள்ளை என்று ஏங்குகிற பெற்றோர்களைத்தான் பார்க்க முடிகிறது. இந்தப் பொது ஆசை கல்வியை எந்த அளவு கீழே கொண்டுபோய் தள்ளுகிறது என்பதை அவர்களில் பெரும்பாலோர் கொஞ்சமும் அறிந்திருக்க நியாயமில்லை.

இத்தகைய சூழலில் “ ஏன் என் பிள்ளைகளை மதிப்பெண்களைக் கொண்டு அளவிடுகிறீர்கள்?” என்று ஒரு தந்தை கேட்கிறார் என்பது ஆச்சரியத்தை மட்டுமல்ல மகிழ்ச்சியையும் சேர்த்தே நம்மிடம் அழைத்து வருகிறது.

குறைவான மதிப்பெண்களைப் பெறுகிற குழந்தை ஒருவனின் தந்தை இப்படி கோவப் படுகிறார் என்றால் ஆச்சிரியப் படுவதற்கு அதில் எதுவும் இல்லை. ஆனால் எண்ணூறுக்கு எழுநூற்றி எண்பது பெற்றிருக்கும் ஒரு குழந்தையின் தந்தை மதிப்பெண் பட்டியலை கையில் வைத்துக் கொண்டு உரத்தக் குரலெடுத்து இப்படி கேட்கிறார் என்றால் அவரைக் கொண்டாட வேண்டாமா?

அதுவும் அவருக்கு வலை ஒன்றிருந்து அதில் கல்வி குறித்து அவரளவில் நியாயம் என பட்டவற்றை வெளிப்படையாக எழுதுகிறார் என்றால் அவரைப் படிப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றை நாம் இயங்கிக் கொண்டிருக்கும் தளங்களில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்கிற நியாயமான ஆசையில்தான் அவரது வலைதளத்தை அறிமுகம் செய்கிறேன்.

அவர் ஜோதிஜி. அவரது வலை “ தேவியர் இல்லம்”

நாள் முழுக்க விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு குழந்தையிடம் “ ஏண்டா, படிக்கலையா?” என்று கேட்டால் “நாளைக்கு எதுவும் டெஸ்ட் இல்லை” என்று சொல்வான். இதை சொல்லிவிட்டு ஜோதிஜி சொல்கிறார், “ பரிட்சைகள்தான் பிள்ளைகளை படிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன”

இதற்குள் போவதற்கு முன் ஒரு விஷயத்தை சொல்லிவிட வேண்டும். இப்போதெல்லாம் குழந்தைகளுக்கு டெஸ்ட் இல்லாத நாட்கள் அபூர்வமானவை. ஒவ்வொரு நாளும் நான்கைந்து டெஸ்டுகள் அவர்களுக்கு. ஆக, குழந்தைகள் விளையாடுகிறார்கள் என்றால் அவர்களுக்கு அடுத்தநாள் டெஸ்ட்  இல்லை என்று அர்த்தம். இதைக் கொஞ்சம் மாற்றிச் சொன்னால் டெஸ்ட் இல்லை என்றால்தான் குழந்தைகள் விளையாட முடியும். எனில் இன்றைய சூழலில் குழந்தைகள் எப்போதாவதுதான் விளையாட முடியும் . எனில் “மாலை முழுதும் விளையாட்டு” என்ற பாரதியின் கனவு பொய்த்துப் போகாதா என்ற ஆதங்கத்தோடு இவரது வலை விவாதிக்கிறது.

பரிட்சைக்காவும், பிரகாசமான எதிர் காலத்திற்காகவும்தான் இன்றைக்கு கல்வி என்றாகிப் போனதே என்கிற கவலையை பகிர்வதோடு பிரகாசம் என்பதுகூட உடனடி வேலை வாய்ப்பு என்கிற அளவில் சுறுங்கிப் போனதே என்றும் கவலைப் படுகிற வலையாக தேவியர் இல்லம் இருக்கிறது.

மனிதர்களை உருவாக்க வேண்டிய கல்வி ஊழியக்காரர்களை உருவாக்குவதோடு சுறுங்கிப் போகிறதே என்பதில் அவருக்குள்ள அக்கறை நியாயமாகவே படுகிறது.

பாடத் திட்டங்களின் கட்டமைப்பு குறித்தும் இந்த வலை சன்னமாக பேசுகிறது. பாடத்திட்டத்திற்கு அப்பால் பாடங்கள் போதிக்கப் படுவதில்லை என்றும் ஜோதிஜி இந்த வலையில் கவலைப் படுகிறார்.

ஒரு முறை பெரியார்தாசனும் அவரது பேத்தியும் வெளியே சென்றிருக்கிறார்கள். ஒரு பேருந்தைப் பார்த்ததும் குழந்தைக் கேட்டிருக்கிறாள்,

“ இது என்ன தாத்தா?”

“ பஸ்”

“ பஸ்னா”

“இதுலதான் ஜனங்க எல்லாம் ஓரிடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு போவாங்க”

“ ஜனங்கன்னா”

“ நீயும் நானும்தான்”

“ நான் ?”

“நீ”

“நீ னா?”

“நான்”

”நான் னா நீங்கற நீ னாநாங்கற லூசா நீ “ என்றிருக்கிறாள்.

இப்படி கேள்வி கேட்கும் குழந்தைகளைத்தான் “ ஏய் சத்தம் போடாத. கம்முன்னு உக்காருங்கற பள்ளியில கொண்டு போய் தள்ளிடறோம் என்பார் பெரியார் தாசன்.

அதே ஆதங்கம் இந்த வலையெங்கும் தென்படுகிறது. குழந்தைகளை பேசவிடாமலும் கேள்வி கேட்க விடாமலும் மனனம் செய்து வாந்தி எடுக்க வைக்கும் இன்றைய கல்வி முறையை ஏறத்தாழ இந்த வலையின் அனைத்து பக்கங்கங்களிலும் சபித்தவாறே பயணிக்கிறார் ஜோதிஜி.

போக ஒவ்வொரு தேர்வு முடிந்ததும் தேர்ச்சி அறிக்கையில் கையொப்பமிட பெற்ரோரை பள்ளிக்கு வரச் சொல்வார்கள். அது பல இடங்களில் செம காமடியாக இருக்கும்.எனக்கே ஒரு முறை இப்படிப் பட்ட அனுபவம் நேர்ந்தது.

கிஷோர் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது அவனது ஆங்கில ஆசிரியரைப் பார்க்க வரிசையில் ஒரு ஆளாய் நின்றிருந்தேன். 188 மதிப்பெண்கள் எடுத்திருந்தான். அவனது ஆசிரியர் ஒரு இளைஞர். எனக்கு பாடமே நடத்தினார். ஆறு மாதங்களாக 12 ஆம் வகுப்பிற்கு ஆங்கிலம் நடத்தும் அவர் 22 ஆண்டுகளாக ( அதே பள்ளியில் இரண்டு ஆண்டுகள்) 12 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு ஆங்கிலம் நடத்தும் எனக்கு வகுப்பு எடுக்க வேண்டிய சூழல். எதுவும் பேசாமல் சரிங்க சார் என்று சொல்லிவிட்டு கையொப்பமிட்டுவிட்டு வந்தேன்.

இது கூட பரவாயில்லை. பெற்ரோர் கூட்டம் என்பார்கள். ஆனால் தாயார் போனால் அப்பா இல்லையா என்பார்கள். ஏன் தாய் என்பவள் பெற்றவள் இல்லையா?

என்மகள் என் மனைவி வேலை பார்க்கும் பள்ளியில்தான் படிக்கிறாள். அவளது தேர்ச்சி அறிக்கையில் நாந்தான் கையொப்பமிட வேண்டும். “அம்மாவிடம் வாங்கிக்க என்றால் சிஸ்டர் திட்டுவாங்க என்கிறாள்.

தலைமை ஆசிரியை உள்ளிட்டு எல்லா ஆசிரியர்களும் பெண்களாகவே இருக்கும் ஒரு பள்ளியிலேயே இதுதான் நிலைமை எனில் எங்கு சென்று முட்டிக் கொள்வது.

இத்தகைய கேவலமான ஆணாதிக்க மனோபாவத்தை எதிர்த்தும் அவர் இன்னும் எழுதுவார் என்றே எதிர் பார்க்கிறேன்.

சேவை என்ற நிலையிலிருந்து வணைகமாகிப் போயிருக்கிறது இன்றைய கல்வி. ஏறத்தாழ மளிகைக் கடையில் துவரம்பருப்பு வாங்குவது போல் கல்விக் கடையில் கவ்வி வாங்க வேண்டிய சூழல். இங்கு ஒரு ஆசிரியரின் நிலை என்பது ரேக்கில் இருக்கும் பருப்பு பொட்டலத்தை எடுத்து தருவது மட்டும்தான். இதை இன்னும் கொஞ்சம் ஆழமான அளவில் இவர் புரிந்தெழுத வேண்டும் என்பது நேயர் விருப்பம்.

இந்த வலையில் நான் முக்கியமானதாகக் கருதும் இன்னொரு பதிவு  “தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார்கள்” என்பது ஆகும். இன்றைய ஆங்கில வழிக் கல்வி எப்படி பாட்டியையும் பேரப் பிள்ளைகளையும் அந்நியப் படுத்துகிறது என்பதை அழகாக விளக்குகிறது.

மருத்துவம் குறித்து, வவ்வால் பறவையா விலங்கா என்பது குறித்து இப்படி ஏராளம் இருக்கிறது. கல்வியை மட்டுமே நான் எடுத்துக் கொண்டேன்.

அவசியம் பார்க்க வேண்டிய வலை. பாருங்கள்
http://deviyar-illam.blogspot.in/

நன்றி : புதிய தரிசனம்

14 comments:

  1. எனது இனிய நண்பரின் தளத்தை சிறப்பித்தமைக்கு நன்றி ஐயா...

    ReplyDelete
  2. ///பாடத்திட்டத்திற்கு அப்பால் பாடங்கள் போதிக்கப் படுவதில்லை ///
    தோழரே பாடத்திட்டங்கள் கூட முழுமையாய் போதிக்கப் படுவதில்லை.
    மாணவர்கள் தேர்வில் வெற்றிபெற என்னத் தேவையோ அவற்றை மட்டும் போதித்தால் போதும் என்கிற காலம் இது.
    நேதாஜி அவரகளின் வலை அறிமுகத்திற்கு நன்றி தோழரே. இதோ செல்கின்றேன் அவரது வலைத் தளத்திற்கு

    ReplyDelete
  3. அருமையான அறிமுகம் ஐயா..
    கண்டிப்பாக படிக்கிறேன் :)

    ReplyDelete
  4. மு.கோபி சரபோஜிNovember 24, 2013 at 5:08 AM

    இன்றைய கல்வி முறை,கற்பிக்கப்படும் முறை,கற்றுக்கொள்ளும் முறை மூன்றுமே இன்னும் முன்னோக்கி நகர வேண்டி இருக்கிறது.மாணவ ஆசிரிய உறவு அதன் மூலம் ஆசிரியர்களின் செயல்பாடு எல்லாமே மாணவர்களை மாற்றங்களை நோக்கி நகர்த்தவில்லை என்பது இன்றைய நிஜம்.........


    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர். உங்களது புத்தகங்கள் குறித்தும் எழுத வேண்டும்

      Delete
  5. அனைவருக்கும் புரியும்படியான அவரின் எழுத்து பாணியைப்போலவே அவரும் மிக எளியமையானவர். இந்திய சுதந்திர வரலாற்றை மறைக்கப்பட்ட உண்மைகள் என்ற தலைப்பில் (Word pross)மிக சிறப்பாக படைத்துள்ளார்.

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...