Wednesday, October 5, 2022

சுட்டதற்காக துப்பாக்கி மீது ஆத்திரப்படலாமா

 1947 ஆகஸ்ட் 15 நள்ளிரவு

உலகமே இந்திய விடுதலையைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது
பூனேவிலும் 500 பேர் கூடி இருக்கிறார்கள்
அவர்களும் கொடி ஏற்றுகிறார்கள்
ஆனால் அவர்கள் ஏற்றியது ஸ்வஸ்திக் கொடி
அவர்கள் முன்னால் கோட்சே வருகிறான்
“இந்தியப் பிரிவினை என்பது கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு துன்பங்களைத் தந்துள்ள பேரழிவு.
இதைச் செய்தது காங்கிரஸ். அதிலும் குறிப்பாக அதன் தலைவர் காந்திஜி”
கோட்சே ஒரு பத்திரிக்கையாளன் என்பது நம்மில் எத்தனைபேருக்குத் தெரியும் என்பது அய்யமாக இருக்கிறது
”அக்ரானி”, “இந்துராஷ்டிரா” ஆகிய இரண்டு பத்திரிக்கைகளை அவன் வெவ்வேறு காலகட்டங்களில் நடத்தி வந்தான்
காந்தியார் கொலை செய்யப்படும் காலத்தில் அவன் “இந்துராஷ்டிரா” இதழின் ஆசிரியனாக இருந்தான்
1947 ஆகஸ்ட் 15 நாளிட்ட இந்துராஷ்டிரா தலையங்கம் எழுதப்படாமல் அந்த இடம் கட்டம் கட்டப்பட்டு வெள்ளையாக விடப்பட்டிருந்தது
1947 நவம்பர் ஒன்று
“இந்துராஷ்டிரா” இதழின் பங்குதாரர்கள் கூட்டம் நடக்கிறது
அதன் ஆசிரியரான கோட்சே பேசுகிறான்
“தனது பிணத்தின் மீதுதான் இந்தியாவைப் பிளக்க முடியும் என்று காந்தி கூறினார்.
இந்தியா பிளக்கப்பட்டுவிட்டது
இன்னும் காந்தி உயிரோடு இருக்கிறார்” (தோழர் அருணனின் “கோட்சேயின் குருமார்கள்” பக்கம் 11)
இதன் பொருள் என்ன? இதை கவனித்து உரிய நடவடிக்கை எடுத்திருந்தாலே காந்தியார் இன்னும் கொஞ்சம் காலத்திற்கு உயிரோடு இருந்திருப்பார்
”நல்லவராக வாழ்வதும்கூட மிகவும் ஆபத்தானது”
என்று காந்தியாரின் இறப்பு செய்தியை கேட்ட மாத்திரத்தில் பெர்னாட்ஷா கூறிய செய்தியை
ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பதிப்பித்த
“காந்தியார் கொலை - அதிர்ச்சியூட்டும் தகவல்கள்”
என்ற நூலின் 97 ஆவது பக்கத்தில் பார்க்கிறோம்
இனி இந்தக் கட்டுரையில் (அந்த அளவிற்கு இது நகரும் பட்சத்தில்) பக்க எண் என்று மட்டுமே தருகிறேன். அது மேல்காண் நூலின் குறிப்பிட்ட பக்கம் என்று கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்
ஒரு மகத்தான மனிதனின் பிறந்த நாளில் அவரது மரணம் குறித்தே நாம் தொடங்க வேண்டிய சூழல் இருக்கிறது
இந்த சூழலுக்கு நம்மை அவர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள் என்கிற வகையில் அவர்களது வளர்ச்சியை
அதுவும் 2014 இல் ஒன்றியத்தை அவர்கள் கைப்பற்றிய பிறகு அவர்களது அசர வளர்ச்சியை நாம் ஒத்துக் கொள்ள வேண்டும்
அவர்களுக்கான எதிர்வினையை நாம் போதுமான அளவு தரவில்லை என்பதையும் நாம் ஏற்க வேண்டும்
அப்போதுதான் நாம் செய்ய வேண்டியதை இனியாவது சரியாக செய்ய இயலும்
காந்தியைக் கொன்றது கோட்சே என்ற தனி மனிதன் அல்ல
அவரைக் கொன்ற கோட்சே ஒரு கூட்டத்தின் பிரதிநிதி
அந்தக் கூட்டத்தை இயக்கியது ஒரு மிகக் கொடிய மதப் பாசிசத்தின் பிரதிநிதி
ஆக,
காந்தியைக் கொன்றது ஒரு சித்தாந்தம்
இதை காந்தி கொல்லப்பட்டபோதே சரியாகப் புரிந்து கொண்டவர் தந்தை பெரியார்
ஒரு கொலையை செய்திருக்கிறார்கள்
உலகமே அதிர்ந்த ஒரு கொலையை செய்திருக்கிறார்கள்
கையும் களவுமாகப் பிடிபட்டிருக்கிறார்கள்
ஆக,
தாங்கள் செய்த ஒரு மகா மனிதனின் கொலையை
கொலையாளியை கையில் வைத்துக் கொண்டு தங்களை இந்த அளவிற்கு வளர்த்துக் கொண்டு
0210.2022 அன்று அமைதி ஊர்வலம் நடத்த அனுமதி கோருகிற தைரியத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்பதை வெறும் தற்செயலான வளர்ச்சி என்று கொள்வோமானால் நாம் இன்னும் பின்னடைவுகளை சந்திக்க நேரும்
அவர்கள் அனுமதி கேட்கும் தைரியத்தைப் பெற்றிருப்பது கண்டு அதிர்ச்சியுற்றாலும்
“அவர்கள் அவர்களது சீருடையோடு தெருவிற்கு வருகிறார்கள்
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு
அதோ வருகிறார்களே அவர்கள்தான் காந்தியைக் கொன்றவர்கள்
அவர்கள்தான் காமராசரைக் கொன்றவர்கள்
அவர்கள்தான் எல்லோருக்குமான கல்விக்கு எதிராக நிற்பவர்கள்”
என்பதை நம் மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்று சரியாகக் கூறி இருக்கிறார் தோழர் Thirumurugan Gandhi
இதை நாம் முறையாக இதுவரை செய்யவில்லை
“பிரிவினையின்போது இந்து அகதிகளின் துயரைப் பாராது, இந்த நாட்டிலேயே தங்கிவிட்ட முஸ்லிம்களின்மேல் காந்தியார் பரிவு காட்டினார்” என்றும்
“பாரத மாதாவைக் காப்பாற்ருவதற்கு காந்தியைக் கொல்வதைத் தவிர வேறு வழி இல்லை, அவரைக் கொன்றது சரியே” என்றும்
அவர்கள் காந்தியாரின்மீதான தாக்குதல்களைத் தொடுத்தபோது
காந்தியர்கள் தம் மறு கன்னத்தைத் திருப்பிக் காட்டியவாறே இருந்தனர்”
என்று துசார் ஏ. காந்தி கூறுவதை (பக்கம் 83) நம்மால் மறுக்க முடியாது
காந்தியைக் கொன்றவர்கள் காந்தியின் பிறந்த நாளைக் கையெடுக்க முன் வந்ததும் தமிழகத்தில் அதை முதலில் எதிர்கொண்டவர் தோழர் திருமா அவர்கள்
அக்டோபர் 02, 2022 அன்று தங்கள் கட்சி தமிழகம் முழுவதும் அமைதிப் பேரணி நடத்தும் என்றும் அறிவித்தார்
காந்திக்கு ஆதரவாக திருமா வரலாமா?
காந்தியே சனாதனத்தை ஏற்றவராயிற்றே
திருமா சனாதனத்தை எதிர்ப்பவராயிற்றே
எரவாடா மறந்துபோயிற்றா திருமாவிற்கு
என்றெல்லாம் நமது பக்கம் இருந்தும்
திருமா தீயசக்தி என்று திரு H.ராஜாவிடமிருந்தும் குரல்கள் கிளம்பின
எதையும் பொருட்படுத்தாமல் திருமாவின் முன்னெடுப்பை வரவேற்று இரண்டு பொது உடமைக் கட்சிகளும் அவரோடு இணைந்தன
மே 17 இயக்கம் அதில் தன்னையும் இணைத்துக் கொள்ளும் என்று தோழர் திருமுருகன் காந்தி அறிவித்தார்
”மனிதச் சங்கிலி”யாக மாறியது
இரண்டையும் தடுத்திருக்கிறது மாநில அரசு
இரண்டிற்கும் தடை நியாயமா? என்பது பற்றி பிறகு பேசுவோம்
ஏன் தோழர் திருமா காந்தியைக் கையில் எடுக்கிறார்?
”வாழ்ந்த காந்தி வேறு, செத்த காந்தி வேறு” என்று தந்தை பெரியார் சொன்னதை அவர் மிகச் சரியாக உள்வாங்கி இருக்கிறார்
காந்தி வாழும்போது வர்ணாசிரமத்தை ஏற்கிறவராகவே இருந்தார் என்பது உண்மை
அதை அவர் நம்பினார்
தான் நம்பிய ஒன்றை அவர் எடுத்து வைத்தார்
அது தவறு என்று பட்ட மாத்திரத்தில் அவர் தன்னை மாற்றிக் கொண்டார்
அப்படியாக அவர் மாறியதுதான் அவரது கொலைக்கான காரணங்களுள் முக்கியமானது
அப்போது ஓமாந்தூரார் தலைமையிலான காங்கிரச் ஆட்சி
அவரது ஆட்சியை ”தாடி இல்லாத ராமசாமியின் ஆட்சி என்றும்
பார்ப்பனர்களுக்கு உரிய கல்வி மறுக்கப்படுவதாகவும்
“சுதந்திரா” பத்திரிக்கையிலும் “THE HINDU" விலும் எழுதுகிறார்கள்
இதுகுறித்தும் “வகுப்புவாரி” முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும் காந்தியிடம் முறையிடுகிறார்கள்
இதுகுறித்து ஓமாந்தூராரிடம் காந்தியார் விசாரிக்கிறார்
ஓமாந்தூரார் மிகத் தெளிவான விளக்கத்தை அளிக்கிறார்
பார்ப்பனர்களிடமிருந்து எதையும் பிடுங்கவில்லை
அவர்கள் முழுவதையும் அபகரித்து வைத்துள்ள நிலையில் மற்றவர்கள் தமக்கானதை ஓரளவேனும் பெறுவதற்கான முயற்சியே ”வகுப்புவாரிமுறை” என்பதை விளக்குகிறார்
காந்தியார் புரிந்துகொள்கிறார்
பார்ப்பனர்களைப் பார்த்து
“வேதம் ஓதுதல்தானே வேதியர்க்கழகு
தர்பையும் பஞ்சாங்கமும் பிடிக்க வேண்டிய நீங்கள் ஏன் சனாதனத்தையும் வைதிக நெறிகளையும் விட்டுவிடு ச்டெதாஸ்கோப்பையும் டி-ஸ்கொயரையும் எடுக்க விரும்புகிறீர்கள் இது நியாயம் அல்ல”
என்கிறார்
07.10.1947 அன்று “இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு” என்கிறார்
அவர் உயிரோடு இருந்தால் இந்தியா சுயமரியாதை நாடாக மாறிவிடும் என்று பயந்தவர்கள் காந்தியை அவர்கள் சுட்டுக் கொல்கிறார்கள் (பக்கங்கள்1X மற்றும்X)
காந்தியாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நன்னிலம் அருகே உள்ள சன்னாநல்லூரில் பெரியார் பேசுகிறார்
அப்போது அன்றைக்கு இளைஞராக இருந்த கலைஞர் கொஞ்சம் கோவமாக எதையோ பேச குறுக்கிட்ட பெரியார்
“சுட்டதற்காக துப்பாக்கி மீது ஆத்திரப்படலாமா?” என்று ஆற்றுப்படுத்துகிறார்
ஆமாம் துப்பாக்கிக்கு பின்னால் உள்ள சித்தாந்தத்தின் அரசியலை பேசுவோம்
உரக்கப் பேசுவோம்
ஒன்று சேர்ந்து இன்னும் இன்னுமாய் உரக்கப் பேசுவோம்

அப்ப யாரு படிக்க சொல்றீங்களோ அவங்களே படிச்சுக்கோங்க

 திருச்சி பால்பண்ணை சங்கீதாஸ்

அம்மா ஸ்ட்ராபெர்ரிம்மா
ப்ளீஸ்மா
யாரு ஸ்ட்ராபெரிஸ் கேக்கறாங்களோ அவங்களே வாங்கிக்க வேண்டியதுதான்
அப்ப யாரு படிக்க சொல்றீங்களோ அவங்களே படிச்சுக்கோங்க
டேய்...

யார் காங்கிரசின் தலைவர் என்பது காங்கிரசின் வேலை

 காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் நடக்க இருக்கிறது

தேர்தலில் போட்டியும் இருக்கிறது
போட்டியில் திரு மல்லிகார்ஜுனே அவர்களும் போட்டியிடுகிறார்
இதுவெல்லாம் அவர்களது உட்கட்சி விஷயங்கள்
இந்த நிலை காங்கிரஸ் கட்சியில் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடும்
அந்த வகையில் காங்கிரஸ் உத்வேகம் பெறுவது இந்த நாட்டுக்கும் நல்லதே
தேர்தலில் போட்டி இருக்கிறது என்ற வகையில் போட்டியாளர்கள்
ஏன் தான் வெற்றிபெற வேண்டும் என்றும்
ஏன் தன்னை எதிர்த்து போட்டி இடுபவர் தோல்வி அடைய வேண்டும் என்றும் கட்சி வாக்காளர்களிடம் பிரச்சாரம் செய்வது இயல்பானது
அவர் யார், இவர் யார்
யார் கட்சிக்குத் தேவை என்று அந்தக் கட்சியனர் கூடி விவாதிப்பதும் புரிந்துகொள்ளக் கூடிய ஒன்று
காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக யார் வந்தால் நமக்கு வசதி என்று மற்ற கட்சிகள்
குறிப்பாக பாஜக எதிர்பார்ப்பதையும் புரிந்துகொள்ள முடியும்
யார் காங்கிரசின் தலைவராக வரவேண்டும் என்று கார்பரேட் முதலாளிகள் விரும்புவதும் இயல்புதான்
யார் வந்தால் பாஜக மதவெறி பாசிச எதிர்ப்பு வலுப்படும் என்ற கணக்கை பொதுமக்கள் போடுவதும் ஏற்கக்கூடியதுதான்
இந்தி எழுத்தாளர் ஆதேஜ் ராவல் காங்கிரஸ் கட்சியின் தேர்தலில் திரு மல்லிகார்ஜுனே போட்டியிடுவது குறித்து எழுத வரும்போது
”கருப்புக் குதிரையைவிட கருப்பானவர் காங்கிரஸ் கட்சித் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடுகிறார்”
என்று எழுதி உள்ளதைக் கண்டித்து ஆசிரியர் வீரமணி 02.10.2022 விடுதலையில் எழுதி உள்ளார்
பிரச்சினை எழுந்ததும்
குதிரை பேரம் நடக்கிறது,
கருப்பு பணம் விளையாடுகிறது
அதைப் பற்றிதான் எழுதினேன் என்று சமாளிக்க முயன்று அம்பலப்பட்டு நிற்கிறார்
நானொன்றும் காங்கிரஸ்காரன் அல்ல
ஆனாலும்
அதேஜ் ராவலின் குரல் சனாதனத்தின் குரல்
காங்கிரசில் யார் வரவேண்டும் என்பதற்கு இவருக்கு காரணம் இருக்கலாம்
அதுகுறித்து எழுதலாம்
ஆனால் மல்லிகார்ஜுனே கருப்பு நிறத்தவர்
ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவர்
ஆகவே அதை இவர் கிண்டல் செய்வார் என்றால்
காங்கிரசிற்கு உயர்சாதியை சார்ந்தவர், வெள்ளை நிறத்தவர்தான் வரவேண்டும் என்ற இவரது சனாதனப் புத்தி முந்திரிக்கொட்டையைவிட வேகமாக முன்னுக்கு வந்து நிற்கிறது
இவர் கருப்பு நிறத்தவர்
ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்பது மட்டுமல்ல
அவர் சனாதனத்திற்கு எதிராகவும் மதச்சார்பின்மைக்கு ஆதரவாகவும் தொடர்ந்து பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் குரல் கொடுப்பவர்
அதில் இரண்டு சம்பவங்களையும் ஆசிரியர் தருகிறார்
27.11.2015 அன்று பாராளுமன்றத்தில்
மதச்சார்பின்மை, சமதர்மம்” ஆகியவை அம்பேத்கார் அறியாதவை என்றும்
அரசமைப்பு சட்டத்தின் 42 வது திருத்தமாக அவை சேர்க்கப்பட்டதாகவும்
ஆகவே ”மதச்சார்பின்மை” என்ற வார்த்தையையே ஒழிக்க வேண்டும் என்று
ராஜ்நாத்சிங் பேசியவுடன் எழுந்த மல்லிகார்ஜுனே
அந்த இரண்டு வார்த்தைகளும் அம்பேத்கார் கொண்டுவர நினைத்த வார்த்தைகள் என்றும்
அவர்கள் தடுத்துவிட்டதாகவும் கூறியதோடு நில்லாமல்
“நீங்கள் ஆரியர்கள், வேறு நாடுகளில் இருந்து வந்தவர்கள்
நாங்கள் 5000 ஆண்டுகளாக இங்கு வசிக்கிறோம். பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகிறோம். ஆனாலும் இங்குதான் வசிப்போம்”
என்றும் கூறுகிறார்
நான் ஆரியன் அல்ல, இந்த மண்ணின் மகன்” என்று மல்லிகார்ஜுனே பேசியதுதான் அவர்களின் கோவத்திற்கு காரணம்
மல்லிகார்ஜுனே ஆரியன் அல்ல
அவர் ஒடுக்கப்பட்ட பிரிவை சேர்ந்தவர்
அதுமட்டும் அல்ல
அவர் அதை உணர்ந்தவராகவும்
அதற்கு எதிராடுபவராகவும் இருக்கிறார்
ஆகவே அவர் காங்கிரசின் தலைவராகக் கூடாது என்று காங்கிரசிற்கு வெளியே இருக்கும் ஆரியர்கள் கத்துகிறார்கள்
யார் காங்கிரசின் தலைவர் என்பது காங்கிரசின் வேலை
மல்லிகார்ஜுனே வெற்றி பெறலாம்
தோற்கலாம்
தோற்றால்
அது இந்தக் காரணத்தினால் என்று இருக்கக் கூடாது
அவ்வளவுதான்
#சாமங்கவிய 50 நிமிடங்கள்
03.10.2022

இது எமது வேலை

 இது எங்கள் வேலை

**********************
பெரும்பான்மை ஊர்களில் உள்ளது போலவே திருவள்ளூர் மாவட்டம் தோக்காமூர் கிராமத்திலும் பட்டியலின மக்களுக்கான காலனி இருக்கிறது
அங்கு வாழும் மக்களுக்கு எந்தவிதமான சொத்தும் இல்லை
L வடிவிலான அந்தக் காலனியில் இருந்த இடமும் அவர்களுக்குப் போதாததாக இருந்திருக்கிறது
குடும்பங்கள் வளர வளர இது தவிர்க்க இயலாததாக மாறுவதும் இயற்கை
சொந்தமாக மனை வாங்கி வீடு கட்டுவதற்கு வசதி இல்லை
வசதியே இருந்தாலும் குடியானத் தெருவில் இவர்களால் மனையும் வாங்க இயலாது
எனவே பக்கத்தில் இருந்த பொறம்போக்கு நிலம் என்று இவர்கள் கருதிய நிலத்தில் சிலர் கொட்டகை அமைத்து தங்கியுள்ளனர்
அது அந்தப் பகுதியின் ஆதிக்க சாதியினரை எரிச்சல்பட வைத்திருக்கிறது
2015 இல் அவர்கள் அது திரௌபதை அம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலம் என்றும்
அதை பட்டியல் இனத்தவர் பயன்படுத்தக்கூடாது என்றும் கூறி கொட்டகைகளை பிரித்து எறிந்திருக்கின்றனர்
கோயில் நிலத்திற்குள் பட்டியல் இனத்தவர் நுழையக்கூடாது என்பதற்காக 10 அடி உயரத்திற்கு 90 மீட்டர் நீளத்தில் தடுப்புச் சுவர் கட்டிவிட்டனர்
இது கேள்விபட்டு
தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் CPM கட்சியும் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு
வட்டாட்சியரையும் சந்திக்கின்றனர்
கட்டப்பட்டுள்ள தடுப்புச்சுவர் தீண்டாமைச் சுவர்தான் என்றும் அது இடிக்கப்பட வேண்டும் என்றும் மனு கொடுக்கின்றனர்
தொடர்ந்து போராடவும் செய்கின்றனர்
CPM கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மாலியும் சின்னத்துரையும் தொடர்ந்து மக்களை சந்திப்பதும் அதிகாரிகளை சந்திப்பதுமாக இருக்கின்றனர்
2022 மே மாதத்தில் திருவள்ளூரில் ஒரு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடக்கிறது
தோழர் G.ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்துகிறார்
அதனைத் தொடர்ந்து CPM மாநிலச் செயலாளர் தோழர் கே. பாலகிருஷ்ணன் முதல்வருக்கு கடிதம் எழுதுகிறார்
தோக்கமூர் தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட வேண்டும் என்றும்
இல்லையெனில்
அக்டோபர் 06 ஆம் தேதியன்று ஒரு பெரும் போராட்டத்திற்கான தேதியை குறிக்க நேரிடும் என்றும் கூறுகிறார்
முதல்வரின் கவனத்திற்கு இந்தக் கடிதம் போனதும்
0310.2022 அன்று அதிகாலை பலத்த போலிஸ் பாதுகாப்போடு தோக்காமூர் தீண்டாமைச் சுவர் இடிக்கப் படுகிறது
ஆனாலும் காலனி மக்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள சிமெண்ட் போஸ்ட்களை அகற்ற வேண்டும்
அந்த மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்
அச்சம் நீங்கும்வரை போலிஸ் பாதுகாப்பு தரவேண்டும்
என்ற கோரிக்கைகள் மிச்சம் இருப்பதாகவும்
தொடர்ந்து களத்தில் அதற்காக கட்சியும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் நிற்கும் என்றும் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் தோழர் கோபால் கூறியுள்ளதாக 04.10.2022 தீக்கதிர் கூறுகிறது
தீக்கதிர் தவிர எத்தனைப் பத்திரிக்கைகள் இந்த செய்தியை உள்ளபடி பிரசுரித்துள்ளன என்று தெரியவில்லை
இது நமது வேலை
தொடர்ந்து செய்வோம்
#சாமங்கவிய ஒரு மணி 43 நிமிடங்கள்
04.10.2022

அரசியலேகூட ஒரு காரணமாக இருக்கலாம்

 அன்பிற்குரிய முதல்வருக்கு,

வணக்கம்
1) சாதி, மதம், இனம், பால் போன்ற எந்தப் பாகுபாடுமற்ற உலக சமூகத்தை உருவாக்குவது
2) மதம், அறிவியல் மற்றும் சித்தாந்தங்களை ஒப்பாய்வது
3) இயற்கையின் பெருவெளி அதன்மீதான மனிதனின் உறவு மற்றும் அதிகாரம் ஆகியவற்றை தெளிவுபடுத்த மேற்கொள்ளப்படும் ஆய்வுகளை ஊக்குவிப்பது
போன்ற குறிக்கோள்களோடு 17.11.1875 அன்று தியாசபிகல் சபை தோற்றுவிக்கப்படுகிறது
அதனை அமைத்தவர்களில் ஒருவரான எலனா ப்ளாத்வஸ்கி சென்னை வந்து அதன் கிளை ஒன்றினை சென்னை அடையாறில் நிறுவுகிறார்
அது பிரம்மஞான சபை என்று அறியப்படுகிறது
அந்த அமைப்பின்மீதான நமது கருத்துகளை முரண்பாடுகளை சொல்வதற்கான பதிவு அல்ல இது
அந்த அமைப்பை நிறுவியவர்களுள் ஒருவரான எலனா ப்ளாத்வஸ்கி
தியாசபிகல் சபையை நிறுவுவதற்கு தம்மை உந்தியது வள்ளலாரும் அவரது சமரச சுத்த சன்மார்க்க சங்கமும்தான் என்கிறார்
19 ஆம் நூற்றாண்டில் எழுந்த மாபெரும் இயக்கங்களில்
ராம் மோகன்ராயின் பிரம்ம சமாஜம் முதல் இடம் என்றும்
அதற்கு அடுத்த இடத்தில்
வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்க சங்கம்தான் என்றும் ம.பொ.சி கூறுவதாக
தனது “விடுதலைத் தழும்புகள்” நூலில் வைத்திருக்கிறார் சு.பொ.அகத்தியலிங்கம்
பிரம்மஞான சபை உருவாவதற்கு காரணமாயிருந்த வள்ளலாரும் சமரச சுத்த சன்மார்க்க சங்கமும்
பிரம்மஞான சபை அளவிற்கும் இந்தியாவில் அறியப்படாமல் போனதேன்?
விவேகானந்தர் அறியப்படும் அளவிற்கு வள்ளலாரும் அவரது இயக்கமும் ஏன் அறியப்படவில்லை
நிறைய காரணங்கள் இருக்கலாம்
"கடுமை நிறைந்த ஆட்சி கடிது ஒழிக"
என்று அரசியல் பேசியவர் என்ற வகையில்
அரசியலேகூட ஒரு காரணமாக இருக்கலாம்
அவைகடந்து மொழியை அதற்கான காரணங்களுள் ஒன்றாக நாம் பார்க்க வேண்டும் என்று கூறுகிறேன்
பிரம்மஞான சபையும் விவேகானந்தரும் இவ்வளவு அறியப்பட்டதற்கு அவர்களது எழுத்துக்களும் உரையும் ஆங்கிலத்திலும் இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் கொண்டுபோகப்பட்டதும்
அவர்களைப் பற்றியும் அவர்களது இயக்கங்கள் பற்றியும் இந்த மொழிகளில் ஏராளம் வந்ததும்தான் என்பதை தங்களாது கவனத்திற்கு கொண்டு வருவது அவசியம்
வள்ளாலார் விஷயத்தில் இதை செய்யத் தவறி இருக்கிறோம்
இதை வள்ளலார் விஷயத்திலும் என்று கொள்ள வேண்டும் மரியாதைக்குரிய முதல்வர் அவர்களே
இன்று வள்ளலாரது இருநூறாவது வருடம் தொடங்குகிறது
என் பிரியத்திற்குரிய முதல்வர் அவர்களே
அரசு இதைக் கொண்டாடுவதோடு
வள்ளலாரின் படைப்புகளை, வள்ளலாரை இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் கொண்டு போவதற்கான முயற்சியை செய்ய வேண்டும்
உங்களால் இதை செய்ய முடியும்
செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் அதற்காக உங்களுக்கு நன்றி சொல்லி முடிக்கிறேன்
அன்புடன்,
இரா.எட்வின்
05.10.2022

முதல்வருக்கு ஒரு போஸ்ட் கார்ட்


அன்பின் சார்,
வணக்கம்
இந்தியப் பொது உடமைக் கட்சியின் கேரள மாநாட்டு உரையினை சிலிர்ப்போடு கேட்டேன்
உங்கள் கைகளைப் பற்றிக் கொள்கிறேன்
ஒன்றிய அரசின் கல்விக் கொள்கை குறித்தும் அதற்கு எதிராட வேண்டிய அவசியம் குறித்துமான உங்கள் உரையின் பகுதியை இரண்டு மூன்றுமுறை கேட்டேன்
“புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்”
நமது பள்ளிக் கல்வித் துறையாலும் நடத்தப்பட இருப்பதாக அறிகிறேன்
இந்தப் பெயரே “திணிப்பு” தானே சார்
ஏற்கனவே எழுத்தறிவில்லாத முதியவர்களுக்கான பள்ளி சாரா மற்றும் முதியோர் கல்வியெல்லாம் நம்மிடம் உண்டே சார்
60 விழுக்காடு நாம் கொடுத்து பாரதம் என்பதை ஏற்க வேண்டுமா?
போக
ஒன்றிய அரசு என்றே விளிக்க வேண்டும் என்பதை அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் சொல்லுங்கள்
கல்வி உங்கள் ஆட்சியிலும் மையப்படுகிறது என்பதையும் சனாதனத்தின் பக்கம் சாய்வதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதையும் கேட்டுக் கொள்கிறேன்
அன்புடன்,
இரா.எட்வின்
03.10.2022

Thursday, September 15, 2022

காலை உணவு என்பது இடைக்கால நிவாரணம்

 


ஒருமுறைஅண்ணன் எஸ்.அறிவுமணி எழுதினார்
“தாயே
தாலாட்டை நிறுத்து
பசிக்கிறபோது
எப்படித் தூங்குவது?
தந்தையே
அறிவுரையை நிறுத்து
பசிக்கிறபோது
எப்படிக் கேட்பது?
ஆசானே
பாடத்தை நிறுத்து
பசிக்கிறபோது
எப்படிப் படிப்பது?
எல்லோரும்
எல்லாவற்றையும் நிறுத்துங்கள்
முதலில் என் பசிக்கு பதில் சொல்லுங்கள் ”
நினைவில் வைத்து எழுதியது
கொஞ்சம் அப்படி இப்படி இருக்கலாம்
காலையில் பட்டினியோடு பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம்
அதற்கான காரணங்களும் அதிகம்
கூட்டுவழிபாட்டுக் கூட்டத்தில் நிற்கமுடியாமல் சரியும் குழந்தைகளின் எண்ணிக்கை சொல்லி மாளாது
காரணங்களைக் கண்டடைந்து களைவது மக்களரசின் இலக்கு
காலை உணவு என்பது இடைக்கால நிவாரணம்
ஆமாம்,
பசிக்கிறபோது எப்படிப் படிப்பான்?
கைப்பற்றிக் கொள்கிறேன் ஸ்டாலின் சார்
இதை மேல்நிலைப் பள்ளிவரை விரிவு செய்யுங்கள்
சத்துணவின் ஒரு பகுதி ஆக்குங்கள்
ஊழியர்களது சம்பளத்தை நியாயமான அளவில் உயர்த்துங்கள்

கெடுத்துச் செத்தது

 



உன்னை மொய்க்கும் ஏராளக் கனவுகளில்
ஏதேனுமொன்றில் நுழைவதென்ற என் திட்டத்தை
கெடுத்துச் செத்தது
உனைக் கடித்த கொசு

Wednesday, September 14, 2022

எந்தப் பெயரில் கடை நடத்தலாம்?

 



காரமடை தந்தை பெரியார் உணவகம் மதவெறியர்களால் தாக்கப்பட்டது குறித்து அந்தக் கடையின் உரிமையாளர் திரு பிரபாகரன் அவர்களோடான பிள்ளை மில்டனின் நேர்காணலை “பேரலை”யில் பார்க்க வாய்த்தது
மனுஷன் தெளிவாக இருக்கிறார்
அந்த உரையாடலின் ஓரிடத்தில் அந்தக் கும்பல் தன்னிடம் பேசியதைக் கூறுகிறார்
இனி இப்படி நடக்காது என்றும்
இந்த ஒருமுறை மன்னித்துவிடுமாறும்
வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொண்டால்
கடையை யாரும் தாக்காமல் தாங்கள் பார்த்துக் கொள்வதாகக் கூறியதையும் பதிகிறார்
இவர்களைத் தவிர வேறு யார் இதுமாதிரிக் காரியங்களை செய்துவிட முடியும்
ஒருவர்,
எந்தப் பெயரில் கடை நடத்தலாம்?
என்ன விற்கலாம்?
என்பதையெல்லாம் தீர்மானிக்கிற அதிகாரம் அவரவர் உரிமை
இதில் உள்நுழைகிற உரிமை நாம் உள்ளிட்டு யாருக்கும் இல்லை

இன்னும் கொஞ்சம் கூடுதலாய் கவலைப் படுகிறோம்



கோவாவிலும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவிற்கு தாவியுள்ளார்கள் என்பதில் பகடி செய்ய ஏதும் இல்லை
இது ஜனநாயகத்தின் மீது
மக்கள் அளிக்கும் தீர்ப்பின் மீது
நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் கவலைப்பட வேண்டிய விஷயம்
கவலைப் படுகிறோம்
இதுகுறித்து காங்கிரஸ் கவலைப்படாதது குறித்து இன்னும் கொஞ்சம் கூடுதலாய் கவலைப் படுகிறோம்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...