அன்பிற்குரிய முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு,
வணக்கம்
இடைநிலைக் கல்வி இறுதித் தேர்வில் குழந்தைகளை ஐநூறு மதிப்பெண்ணிற்கு ஐநூறு மதிப்பெண் எடுக்க வைத்திருக்கிறோம்
மேல்நிலைக் கல்வி இறுதித் தேர்வில் குழந்த்சிகளை அறுநூறு மதிப்பெண்ணிற்கு அறுநூறு மதிப்பெண் எடுக்க வைத்திருக்கிறோம்
மகிழ்ச்சிதான்
தைவானிற்கு நமது குழந்தைகள் (அரசு பள்ளியில் படித்த ஏழைக் குழந்தைகள்) ஜெயஸ்ரீ மற்றும் ஜெயலெட்சுமி இருவரும் இளநிலைக் கல்வியைப் படிப்பதற்காக செல்வதாக இன்றைய தீக்கதிர் கூறுகிறது
பெரு மகிழ்ச்சி
நாங்குநேரியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் சின்னத்துரை என்ற குழந்தையையும் பத்தாம் வகுப்பு படிக்கும் அவனது சகோதரி செல்வியையும்
ஐந்தாறு குழந்தைகள் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிச் சாய்த்துவிட்டு திரும்பி இருக்கிறார்கள்
அரிவாள்களோடு வந்து வெட்டிவிட்டு சென்று பிடிபட்டிருக்கிற யாரையும் சிறைக்கு அனுப்ப இயலாது
அவர்கள் அனைவரும் 17 வயதிற்குட்பட்ட குழந்தைகள்
விளையாடு பொருட்களோடு திரிய வேண்டிய குழந்தைகள்
இவர்கள் கைகளில் அரிவாளைக் கொடுத்த கொடுத்த சக்தி எது?
அதைத் தேடிக் கண்டடைந்து
அதை இல்லாமல் செய்ய வேண்டியதுதான் நமது முதல் வேலையாக இருக்க வேண்டும் முதல்வர் சார்
அவர்கள் வெட்டுவதை நேரில் பார்த்த பெரியவர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கிறார்
எனில்,
வெட்டியது மட்டுமல்ல,
அவர்கள் கண்களில் இருந்த வெறி
அவர்கள் செயலில் தெரித்த வெறி
அவர்கள் அப்போது பயன்படுத்திய சொற்களின் பின்னிருந்த வெறித்தனம்
இவை எல்லாம் சேர்ந்துதான் அவருக்கு மாரடைப்பைத் தந்திருக்க வேண்டும்
இதற்கெல்லாம் என்ன காரணம் என் அன்பிற்குரிய ஸ்டாலின் சார்?
சாதி
சின்னத்துரையை முன் மாதிரியாகக் கொள்ளுமாறு குழந்தைகளிடம் ஆசிரியர்கள் கூறியிருக்கிறார்கள்
எங்களுக்கு அவன் முன் மாதிரியா? என்று கொதித்திருக்கிறார்கள்
வெட்டுப்பட்ட சின்னத்துரை ஒன்றும் மனு கொடுத்து பட்டியல் இனத்தைச் சார்ந்த அந்தப் பெற்றோருக்குப் பிள்ளையாகப் பிறக்கவில்லை
இவர்களும் யாருக்கும் மனு கொடுத்து அந்தந்த இடைச்சாதி பெற்றோருக்குப் பிள்ளைகளாகப் பிறக்கவில்லை
அவனவன் அந்தந்தப் பிரிவில் பிறந்தது அவனவன் விருப்பப்படி அல்ல
அந்தப் பிரிவுகளே கேவலமானவை ஆகும்
எந்தக் குழந்தையும் கேவலத்தை ஏற்பவர்கள் இல்லை
அப்புறம் எப்படி இவர்கள் அரிவாள் எடுக்கிறார்கள்?
கேவலத்தைப் புனிதம் என்றும் பெருமை என்றும் குழந்தைப் பருவத்தில் இருந்து நிலாவைக் காட்டி இவர்களுக்கு ஊட்டி வளர்த்திருக்கிறார்கள்
நாம் செய்ய வேண்டியது
இதை உடைக்க வேண்டும்
எப்படி உடைப்பது?
நாமும் இது கேவலம் என்பதை
இது அறத்திற்கு எதிரானது என்பதை
நிலாவைக் காட்டி குழந்தைக்கு சோறூட்டுவதுபோல ஊட்ட வேண்டும்
அதற்கான பாடத்திட்டம் அவசியம்
என் பிரியத்திற்குரிய முதல்வர் அவர்களே,
அந்தக் குழந்தை பள்ளிக்குப் போக அச்சமாக இருக்கிறது எனவே தான் பள்ளிக்கு போகவில்லை என்று தாத்தாவிடமும் அம்மாவிடமும் அழுதிருக்கிறான்
அவர்கள் ஆசிரியர்களிடம் முறை இட்டிருக்கிறார்கள்
எனில்,
ஆசிரியர்கள் இது குறித்து குழந்தைகளிடம் பேசியிருப்பார்கள்
எனில்
இவை அனைத்தையும் ஏற்கிற மனநிலை அந்தப் பிள்ளைகளுக்கு இல்லை
ஏன்?
பிறகு என்ன செய்யலாம்?
வெறியேறிக் கிடக்கிறார்கள் என்று விட்டுவிடலாமா சார்?
கூடாது
அவர்கள் புரிந்துகொள்ளுகிற மொழியை நாம் கற்க வேண்டும்
இவர்களை JJ போர்டில் நிறுத்தி சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்புவதால் மட்டும் இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடாது
அதைச் செய்யவும் வேண்டும்
என்ன செய்யலாம் என்பதைக் கூடிப் பேச வேண்டும் சார் முதலில்
சனாதனத்தை எதிர்க்கும் நம்மிடமும்
சனாதனத்திற்கு எதிராகக் களமாடும் நம்மிடமும்
சனாதனத்திடம் சமர் செய்யும் போக்கு இருக்கிறது சார்
இருக்கிறது சார்
இல்லாவிட்டால்
பெரம்பலூர் பொதுத் தொகுதியானதும் ஆ.ராசாவை பெரம்பலூரில் இருந்து நீலகிரிக்கு அனுப்புவோமா?
குழந்தைகள் சனாதனத்திற்கு பலியாவதை தடுக்க வேண்டுமெனில்
அதற்கு,
நாம் சனாதனத்திடம் சமரசம் செய்யக்கூடாது சார்
புரியும் உங்களுக்கு
கூப்பிடுங்கள்
வந்து உங்களோடு உரையாடக் காத்திருக்கிறோம்
சொல்லுங்கள் செய்யக் காத்திருக்கிறோம்
அன்பும் முத்தமும் முதல்வர் சார்
அன்புடன்,
இரா.எட்வின்
12.08.2023
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்