Saturday, July 28, 2018

20.07.2018

இது நிச்சயமாக ராகுலின் தினம்.
எனில், நிச்சயமாக இது காங்கிரசின் தினம்.
ஆமாம், இன்று பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி அவர்களின் உரையானது பிரதமர் மோடி அவர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க இயலாத ஒரு உரையாக இருந்தது. உண்மையை சொல்லப்போனால் காங்கிரஸ்காரர்களே பாராளுமன்றத்தை ராகுல் இப்படி தெறிக்கவிடுவார் என்று கனவிலும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். திருமதி சோனியா பூரிப்பின் உச்சத்திற்கே சென்றிருப்பார். தொடர்ந்து தோற்றுக் கொண்டு இருந்த பிள்ளை. 'சிறுபிள்ளை ஒருபோதும் வெள்ளாமையைக் கொண்டு வந்து சேர்க்கப் போவதில்லை' என்றும் கட்சிக்கு உள்ளும் வெளியும் இருந்து வரும் நக்கல் கலந்த விமர்சனங்களைக் கேட்டுக் கேட்டு நொந்துபோயிருந்த அந்தத் தாய்க்கு “இன்றை” பரிசளித்திருக்கிறார் ராகுல்.
ஆனால் நமக்கு அப்படி இல்லை. தோழர் ஜோதிமணியுடனான உரையாடல்கள் ஊடகங்களின் வழியாக நாம் அறிகிற சராசரி ஆளுமை அல்ல ராகுல் என்பதை உணர்த்திக் கொண்டே இருந்தன. அதை Kaakkai Cirakinile வில் எத்தனையோ முறை எழுத நினைத்து தட்டிப் போயிருக்கிறது. அதை அவர் இன்று வெளிப்படுத்தி இருக்கிறார்.
முப்பது ஆண்டுகளாக உரையாற்றிக் கொண்டிருப்பவன் என்ற முறையில் அவரது உரையின் செறிவும் உடல்மொழியும் மிகத் தேர்ந்த ஒரு தலைவனுக்குரியது என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது.
பாதி அவைக்கும் மேல் பெருங்குரலெடுத்து இவரது உரைக்கெதிராக கூச்சலிட்டுக் கொண்டிருக்கும்போது எங்கு நிறுத்த வேண்டுமோ அங்கு நிறுத்தி எவ்வளவு நிறுத்த வேண்டுமோ அவ்வளவு நிறுத்தி அந்தப் பெருங்கூச்சலை தவிடுபொடி ஆக்கியிருக்கிறார் ராகுல்.
அனைத்தையும் பேச முயன்று வெற்றி பெற்றிருக்கிறார்.
ஆணவத்தின் உச்சியிலேயே எப்போதும் அமர்ந்திருக்கும் மோடியை மோதி நொறுக்கிப் பொடியாக்கி தேசத்தின் எட்டுத் திக்கிலும் ஊதித் தள்ளியிருக்கிறார். ஒவ்வொரு மேடையிலும் அழுவார் பொய் சொல்வார் கைகளை விரித்து கதை சொல்வார் மோடி. அவற்றின் எந்த ஒரு புள்ளியிலும் உண்மை இருக்காது. ஆனால் இன்றைக்கு மோடியின் முகத்தில் தெரிந்த பதட்டம் உண்மையானது. இந்த வகையில் மோடியின் உண்மையான முகத்தை உலகுக்கு காட்டிய ராகுலை தேசமே கொண்டாடுகிறது.
தன் கண்களைப் பார்க்கிற தைரியம் பிரதமருக்கு இல்லை என்று ராகுல் கூறியது ரசனை கலந்த அரசியல் தெறிப்பு.
வழக்கமாக கைகளை நீட்டி ஆவேசமாக எதையாவது பேசும் திருமதி நிர்மலாவை அவர் நேர்கொண்டதும் பதறிப்போன நிர்மலா அதே கைநீட்டலோடு ராகுலை எதிர்கொள்ள முயன்றதும் கண்கொள்ளாக் காட்சிகள்.
வழக்கமாக பாரதிய ஜனதாக் கட்சி தாக்குதலை நிகழ்த்தும் காங்கிரஸ் தற்காத்தலை நிகழ்த்தும். இன்று அது தலை கீழாக மாறியிருக்கிறது.
திருமதி நிர்மலாவை இவ்வளவு பதறிக் கதற வைத்த்தற்காக ராகுலுக்கு தமிழ் மண்ணின் சிறப்பு நன்றி.
எல்லாம் போக ராகுல் எவற்றை எல்லாம் சாடினாரோ அதே சாடல்களுக்கு கடந்த கால காங்கிரசும் தகுதி பெற்றதே.
நான் விரும்புகிறேனோ இல்லையோ யார் விரும்புகிறார்களோ இல்லையோ இந்த நாடு ஒருநாள் ராகுலின் கைகளுக்குள் வரும். அப்போது இந்த சாடல்களுக்கு அப்பாற்பட்ட ஒரு ஆட்சியைத் தர வேண்டும்.
இது ராகுலின் தினம்.
இது காங்கிரசின் தினம்.
இதை எதிர்க் கட்சிகளின் தினமாகவும் மாற்ற வேண்டும்.
காங்கிரசும் எதிர்க் கட்சிகளும் இன்றை தமதாக்கிக் கொண்டால் தேசம் கொஞ்சம் பிழைக்கும்.
அன்பும் முத்தமும் நன்றியும் ராகுல்
#சாமங்கவிய 23 நிமிடங்கள் இருந்தபொழுது

2 comments:

  1. யாருமே எதிர்பார்க்காதப் பேச்சுதான் தோழர்

    ReplyDelete
    Replies
    1. ஆரோக்கியமான விஷயம் தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...