Monday, March 3, 2014

அம்மாக்களுக்கே அது சாத்தியம்.



ஆசிரியர் அறையில் எல்லோரும் தாள் திருத்திக் கொண்டிருந்தோம்.

ஆறாம் வகுப்பு படிக்கும் குழந்தை ஒருத்தி தன்னை ஒரு பையன் கல்லால் அடித்துவிட்டான் என்ற புகாரோடும் ஒரு கல்லோடும் என்னிடம் வந்தாள்.

“ சார், எத்தன வாட்டி சொன்னாலும் கேக்காம இந்தக் கல்லாலேயே அடிக்கிறான் சார்”

நெசத்துக்குமே சின்னக் குழந்தைகளின் பிர்ச்சினைகளை சச்சரவுகளை தீர்த்து வைப்பதில் எனக்கு கொஞ்சமும் போதாது. எனவே அதிலிருந்து கழட்டிக் கொள்ள விரும்பினேன்.

“ உங்க க்ளாஸ் சார் யாருப்பா?”

“செல்வக்குமார் சார்”

“சரி , அப்ப அவர்கிட்ட போய் சொல்லுடா. இதுக்கு ஏன் என்கிட்ட வந்த?”

“செல்வகுமார் சார்தான் உங்ககிட்ட போய் சொல்ல சொன்னார்”

செல்வகுமாரும் எனது மாணவன்தான். ஏதோ திட்டத்தோடுதான் அனுப்பியிருக்கிறான் என்று ஒரு புன்னகையோடு நினைத்தவன்,

சரி சரி வகுப்புக்கு போயி அந்தப் பையன வரச் சொல்லு. ரெண்டு போட்டு அனுப்பறேன் என்று சொன்னவன் என்ன தோன்றியதோ தெரியவில்லை ”இங்க கொஞ்சம் வாயேன்” என்றேன்.

வந்தாள்.

“அந்தக் கல்லக் கொடு”

கொடுத்தாள்.

ஒரு புளியங்கொட்டையைவிட சற்று பெரியதாய் இருந்தது.

“ இதாலதான் அடித்தானா?”

“ஆமாம் சார்”

“சரி, இந்தக் கல்ல யாராவது ஒரு சார் மேல வீசச் சொன்னா எந்த சார் மேல வீசுவ?”

“எந்த சார் மேலேயும் வீச மாட்டேன் சார்”

“ சும்மா சொல்லுடா. யாரும் அடிக்க மாட்டாங்க”

 “ சத்தியமா யார் மேலேயும் போட மாட்டேங்க சார்”

அதற்குள் இந்த விளையாட்டு பிடித்துப் போகவே எல்லோரும் ஆளாளுக்கு கேட்க ஆரம்பித்து விட்டார்கள். சேவியர் ஒரு படி மேலே போய் சொன்னா சாக்லேட் வாங்கித் தருவதாகவே சொன்னான்.


‘ யார் மேலேயும் போட மாட்டேன் சார்”

கனகராஜ் சாரை தனது பையனது படிப்பு சம்பந்தமாக பார்க்க வந்திருந்த ஒரு மாணவனின் அம்மா உள் புகுந்தார்.

“ இப்ப இந்தக் குட்டி எந்த சார் மேல கல்லப் போடுவான்னு தெரிஞ்சுக்கனும். அவ்வளவுதானே சார்?”

“ஆமாம்”:

“இங்க வாடா பாப்பா”

போனாள்.

“ உனக்கு யார ரொம்பப் பிடிக்கும்?”

“ எங்க அப்பாவ”

“பாப்பாக்கு எந்த சாமிய ரொம்பப் பிடிக்கும்?”

“ மாரியாயி”

“ சரி இப்ப மாரியாயி வந்து இந்தக் கல்ல ஒரு சார் மேல போடுன்னா என்ன செய்வ?”

“ போட மாட்டேன்”

“சரி, யார் மேலயாச்சும் போடலைனா உன் கண்ணையும் உங்க அப்பா கண்ணையும் புடுங்கிடுவேன்னு மாரியாயி சொன்னா என்னா செய்வ?”

பேசாமல் நின்றாள்.

“ மாரியாயி சொன்னத செய்யிலைனா ரெண்டு பேத்து கண்ணையும் பறிச்சிடும். ரொம்ப கோவக்கார சாமி. சொல்லு எந்த சாரு மேல போடுவ?”

மிகவும் தயங்கித் தயங்கி “ இந்த சார் மேல தான் என்று சொல்லிக் கொண்டே என்னை நோக்கி கை நீட்டினாள்”

எல்லோரும் சிரித்தோம். சேவியர் கொஞ்சம் அதிகமாக சிரித்தான்.

“எல்லாம் கேக்கற விதத்துல இருக்கு சார்”

ஆமாம் பிள்ளைகளிடம் கறக்க செரிவான கேள்விகள் அவசியம்.

அம்மாக்களுக்கே அது சாத்தியம்.

2 comments:

  1. முடிவு வரிகள் இரண்டும் 100% உண்மைகள்...

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...