Monday, March 3, 2014

“ எதற்கும் உதவாத ஓராளும் எங்கும் இருக்க மாட்டான்”


சரியாக நினைவில் இல்லை. அநேகமாக சென்ற வெள்ளி என்று நினைக்கிறேன்.

அதில் ஒன்றும் பிரச்சினையும் இல்லை. எனவே அதில் நின்று குழம்பாமல் நகர்கிறேன்.

நானும் நண்பர் அன்பழகனும் சமயபுரம் சுங்கச் சாவடியில் (தோல் பிளாசா) நின்று கொண்டிருந்தோம். பேருந்து நிலையத்தில் நிற்காமல் வரும் பேருந்துகளும் இங்கு கண்டிப்பாக நின்றே போக வேண்டும் என்பதாலேயே சிலர் இந்த சுங்க வரி ஏற்பாட்டிற்கு ரசிகர்களாய் மாறிப் போயிருக்கிறார்கள்.

அந்த நேரம் பார்த்து எங்களிடம் மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் படித்த மாணவன் ஒருவன் ஒரு புன்னகையோடு எங்களை நோக்கி வந்தான்.

நான்கு பாடங்களில் தேர்ச்சி பெறாதவன். அவ்வளவாய் படிக்க மாட்டான் என்பதால் அவன் ஒன்றும் தெரியாத மக்கு என்பதாகத்தான் பள்ளியின் பொதுப் புத்தியில் பதிந்து போயிருந்தது.

வணங்கினான்.

வணங்கினோம்.

”என்னங்க சார் இந்தப் பக்கம் ப்ளாட் ஏதும் வாங்கிப் போட்டிருக்கீங்களா சார்?”

விட்டால் எங்கே தேர்ச்சி பெறாத தாள்களின் நிலை குறித்து கேட்டு விடுவோமோ என்ற பயத்தில் பிள்ளை முந்துகிறான் என்றே பட்டது.

“ எங்கப்பா இங்கல்லாம் வாங்குறது? ஏதேனும் ஒதுக்குப் புறமான கிராமத்தில் வாங்கினால்தான் உண்டு.”

“ஏன் சார் நகர்ப் புறத்தில் இப்படி ஜனங்கள் குவிகிறார்கள்?”

“பொழப்பு அங்கதானேப்பா கிடைக்குது”

” அது என்னவோ நெசம்தான் சார். பொழைக்கிறதுக்காக 10000 பேர் ஒரு நகரத்துக்கு வந்தா அவர்களது மளிகை, காய்கறி, பொழுதுபோக்கு, லாண்டரி, தேநீர்க் கடை, என்பது போல இன்னும் ஒரு 2000 பேர் குடியேற வேண்டி வருதே சார்”

“ஆமாம்பா”

ஆச்சரியம் தொற்றிக் கொள்ள வியப்பின் உச்சியில் நின்று அவனைக் கவனித்தேன்.

”ஜப்பான்லயும் இந்தப் பிரச்சினை வந்திருக்கு சார்”

“ம்...”

” அவன் புல்லட் ரயில் கொண்டு திறமையா ஜமாலிச்சிருக்கான் சார்”

உறை நிலைக்கு கிட்டத் தட்ட அருகில் சேர்ந்திருந்தேன்.

தொடர்ந்தான்,

”புல்லட் ரயில் 600 கிலோ மீட்டர் வேகத்துல போகும் சார்”

”ம்...”

“ அத இங்க கொண்டு வந்தா மதுரைலிருந்து சென்னைக்கு ஒரு மணி நேரம்தான். திருச்சி , விழுப்புரம் போன்ற முக்கிய இடங்களில் நின்று போனால் ஒன்றரை மணி நேரம்தான்”

“ம்...”

“ அப்புறம் ஏன் சார் சென்னையில் போய் குவியப் போகிறான்”

அசந்து போனேன். இதில் சாத்தியக் கூறுகள் குறித்து விவாதிக்க நிறைய இருந்தாலும் யோசிக்கவே வைத்தான்.

இவனையா மக்கு என்று கொண் டிருந்தோம்.

இவனைப் போன்ற பிள்ளைகளிடம் மனது விட்டுப் பேசினாலே நிறைய பிரச்சினைகள் தீர்ந்து போகும்.

கை குலுக்கினேன்.

எதற்கென்று விளங்கியதோ என்னவோ அவனும் சிரித்துக் கொண்டே கை குலுக்கினான்.

பேருந்து வந்தது.

கிளம்பினோம்.

1600 களின் துவக்கத்தில் கொமேனியஸ் சொன்னது உயிர்ப்போடு அசையில் வந்தது,

“ எதற்கும் உதவாத ஓராளும் எங்கும் இருக்க மாட்டான்”

2 comments:

  1. கண்டிப்பாக... படிப்பு / அனுபவம் வேறு வேறு...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தனபால்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...